என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெண் விவகாரத்தில் பெயிண்டரை காரில் கடத்திய 5 வாலிபர்கள் கைது
- கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்ததோடு, 5 பேரையும் சிறையில் அடைத்தனர்.
- தினேஷ் மீது கொலை வழக்கு உள்ளது. மேலும் ஒரு வழக்கில் அவர் தேடப்படும் குற்றவாளியாக இருந்து வந்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் குலவணிகர்புரம் யாதவர் தெருவை சேர்ந்தவர் செந்தில் ஆறுமுகம்(வயது 28). பெயிண்டர்.
இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் அவரது சகோதரர் முத்து பெருமாளை தேடி உள்ளனர். அவர் அங்கு இல்லாததால் செந்தில் ஆறுமுகத்தை அந்த கும்பல் தாக்கி காரில் கடத்தி சென்றது.
இதுதொடர்பாக அவரது பெற்றோர் மேலப்பாளையம் போலீசில் புகார் அளித்தனர். உடனே போலீசார் சோதனை சாவடிகளில் இருக்கும் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததோடு, மாநகர பகுதியில் வாகன சோதனையிலும் ஈடுபட்டனர்.
அப்போது மேலப்பாளையம் பகுதியில் வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் இருந்த 5 பேரிடமும் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர்கள் 5 பேரும் செந்தில் ஆறுமுகத்தை கடத்தியது தெரியவந்தது.
இதையடுத்து 5 பேரையும் அழைத்து வந்து நடத்திய விசாரணையில், அவர்கள் ரெட்டியார்பட்டி எஸ்.ஆர்.புரத்தை சேர்ந்த தினேஷ்(26), சுரேஷ்(21), குலவணிகர்புரம் யாதவர் தெருவை சேர்ந்த மச்சகண்ணன், சபரிநாதன்(27), கே.டி.சி. நகரை சேர்ந்த இசக்கிராஜா(32) ஆகியோர் என்பதும், பெண் விவகாரத்தில் கடத்தியதும் தெரியவந்தது.
இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்ததோடு, 5 பேரையும் சிறையில் அடைத்தனர்.
இதில் தினேஷ் மீது கொலை வழக்கு உள்ளது. மேலும் ஒரு வழக்கில் அவர் தேடப்படும் குற்றவாளியாக இருந்து வந்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.






