என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • எடப்பாடி பழனிசாமி தலைமையில் அடுத்த மாதம் 20-ந்தேதி பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெறுகிறது.
    • மாநாட்டில் கலந்து கொள்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேச ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மதுரை வலையங்குளம், எழுச்சி மாநாடு திடலில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 20-ந்தேதி பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த வரலாற்று சிறப்புமிக்க எழுச்சி மாநாட்டில், நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பெருந் திரளாக கலந்து கொள்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் நாளை மறுநாள் (வெள்ளிக் கிழமை) காலை 10.30 மணிக்கு வண்ணார் பேட்டை ஸ்ரீலட்சுமி காயத்ரி ஓட்டலில் நடை பெறுகிறது.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகி கள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

    எனவே பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வார்டு, கிளைக்கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • அனைத்து வகை நகர பஸ்களிலும் பள்ளி மாணவர்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
    • ஆய்வாளர்கள் மற்றும் அலுவலர்கள் மூலமாக இவை கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மண்டல போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் மகேந்திரகுமார் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், நெல்லை கோட்ட பஸ்கள் இயக்க பகுதியான நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பள்ளிக்கு செல்லும் மாணவ- மாணவிகள் பாதுகாப்பாக குறித்த நேரத்தில் பள்ளிக்கு சென்று வருவதற்கு வசதியாக நெல்லை கோட்டத்தில் இருந்து இயக்கப்படும் அனைத்து வகை நகர பஸ்களிலும் (சாதாரண, எல்.எஸ்.எஸ் மற்றும் சொகுசு பஸ்கள்) பயணம் செய்ய அனுமதிக்கப் படுகின்றனர். இதனை ஆய்வாளர்கள் மற்றும் அலுவலர்கள் மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மண்புழு இயற்கை உரமிட்டு கீரை, தர்பூசணி மற்றும் காய்கறி வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
    • அவ்வாறு உற்பத்தி செய்யப்பட்ட கீரை, காய்கறி, பழங்களை அங்கன்வாடி குழந்தைகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நெல்லை:

    பாளை யூனியன் கீழநத்தம் ஊராட்சியில் பசுமை முன்மாதிரி கிராமத்தை உருவாக்கும் முயற்சியில் மக்கும் குப்பைகளை கொண்டு மண்புழு இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. மேலும் மண்புழு இயற்கை உரமிட்டு கீரை, தர்பூசணி மற்றும் காய்கறி வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

    அவ்வாறு உற்பத்தி செய்யப்பட்ட கீரை, காய்கறி, பழங்களை அங்கன்வாடி குழந்தைகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவி அனுராதா ரவிமுருகன் கலந்து கொண்டு ஊராட்சிக்கு உட்பட்ட மேலூர், வடக்கூர், கே.டி.சி. நகர் பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு நேரடியாக சென்று கீரை, தர்ப்பூசணிகளை வழங்கினார்.

    அப்போது ஊராட்சி செயலர் சுபாஷ், வார்டு உறுப்பினர்கள் பலவேசம், இசக்கி பாண்டி, ராஜாமணி, மக்கள் நலப்பணியாளர் மாரியம்மாள், பணித்தள பொறுப்பாளர் சோபனா, அங்கன்வாடி ஆசிரியைகள் சீதாலட்சுமி, ராஜலட்சுமி, களத்தி உதவியாளர்கள் ரோஸ்லின், காவேரி, பாளை மத்திய ஒன்றிய தி.மு.க. ஆதி திராவிடர் நல அணி அமைப்பாளர் செல்லப்பா மற்றும் அங்கன்வாடி குழந்தைகளின் பெற்றோர் கலந்து கொண்டனர்.

    • ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் மாவட்ட துணைச்செயலாளர் சேது ராமலிங்கம் தலைமை தாங்கி பேசினார்.
    • ஆர்ப்பாட்டத்தில் அம்பை ஒன்றிய செயலாளர் முருகன், நெல்லை மண்டல செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் ஒன்றிய அரசை கண்டித்து கோஷமிட்டனர்.

    வள்ளியூர்:

    மணிப்பூர் மாநிலத்தில் கலவரத்தை கட்டுப்படுத்த தவறியதாக மாநிலத்தில் ஆளுகின்ற பா.ஜனதா அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நெல்லை மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வள்ளியூர் காமராஜர் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் மாவட்ட துணைச்செயலாளர் சேது ராமலிங்கம் தலைமை தாங்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் அம்பை ஒன்றிய செயலாளர் முருகன், நெல்லை மண்டல செயலாளர் கிருஷ்ணன், வங்கி ஊழியர் சங்க தலைவர் ரெங்கன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் உடையப்பன், தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஏஸ்.ஏ.பி.பாலன், ராதாபுரம் வட்டார விவசாயிகள் சங்க செயலாளர் கலைமுருகன், வேம்பு சுப்பையா, சந்தானமுத்து, சாந்தி உள்ளிட்டோர் ஒன்றிய அரசை கண்டித்து கோஷ மிட்டனர்.

    • சம்பவத்தன்று ஐகோர்ட்ராஜா தனது மனைவி மஞ்சம்மா தேவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
    • தேனி மாவட்டம், வடுகப்பட்டியை சேர்ந்த கலைச்செல்வன் (20) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், ஐகோர்ட் ராஜா சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    களக்காடு:

    நாங்குநேரி ஆர்.ஆர்.நகரை சேர்ந்தவர் கந்தையா மகன் ஐகோர்ட்ராஜா (வயது38). கார் டிரைவர். சம்பவத்தன்று இவர் தனது மனைவி மஞ்சம்மா தேவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். நாங்குநேரி-நாகர்கோவில் நான்குவழிச்சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே வந்த போது, எதிரே தேனி மாவட்டம், வடுகப்பட்டியை சேர்ந்த கலைச்செல்வன் (20) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், ஐகோர்ட் ராஜா சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ஐகோர்ட் ராஜாவும், அவரது மனைவி மஞ்சம்மா தேவியும் படுகாயமடைந்தனர். அக்கம், பக்கத்தினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து அவர்கள் மேல் சிகிச்சைக்காக நெல்லை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுபற்றி நாங்குநேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த கலைச்செல்வன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போர்ட் லிப்ட் உதவியுடன் உயரத்தில் நின்றபடி அரியகுமார் கண்ணாடி மாட்டிக்கொண்டிருந்தார்.
    • லிப்ட் ஆபரேட்டரான மதுரை சூரப்பாளையத்தை சேர்ந்த பாஸ்கர் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    மதுரை மாவட்டம் பறவை பகுதியை சேர்ந்தவர் அரியகுமார் (வயது 33). இவர் தனியார் நிறுவனங்களில் கண்ணாடி மாட்டும் தொழிலை ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறார்.

    கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் புதிய பிளான்ட் அமைக்கும் பணிக்காக இவர் கண்ணாடி மாட்டுவதற்கு சென்று இருந்தார்.

    இன்று அதிகாலை போர்ட் லிப்ட் உதவியுடன் உயரத்தில் நின்றபடி அவர் கண்ணாடி மாட்டிக்கொண்டிருந்தார். அப்போது லிப்ட் ஆபரேட்டரை உபகரணம் எடுத்து வருமாறு கூறியுள்ளார்.

    இதையடுத்து லிப்ட்டை ஆப் செய்யாமல் அவர் இறங்கி சென்று விட்டார். அப்போது எதிர்பாராத விதமாக லிப்ட் மேல் நோக்கி உயர்ந்துள்ளது. இதில் அதன் மேல் பகுதியில் அமர்ந்திருந்த அரிய குமார் காங்கிரிட் மேற்கூரையில் நடுவில் சிக்கி தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    தகவல் அறிந்த கங்கைகொண்டான் போலீசார் அங்கு விரைந்து சென்று அரியகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக லிப்ட் ஆபரேட்டரான மதுரை சூரப்பாளையத்தை சேர்ந்த பாஸ்கர் (26) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஜூலை மாதத்தின் கடைசி வாரத்தில் 4 வந்தே பாரத் ரெயில்கள் புதிதாக இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • ரெயில்கள் பகல் நேரத்தில் இயக்கப்படும் என்பதால் பயணிகள் கூட்டம் சற்று குறைவாக இருக்கும் என்று ரெயில்வே நிர்வாகம் கருதுகிறது.

    நெல்லை:

    இந்திய ரெயில்வே துறையை மேம்படுத்த ரெயில்வே அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், அதி நவீன சொகுசு வசதிகள் கொண்ட வந்தே பாரத் ரெயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் சென்னை-கோவை இடையே வந்தே பாரத் ரெயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த ரெயிலுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், தொடர்ந்து சென்னையில் இருந்து மதுரைக்கு வந்தே பாரத் இயங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த ரெயிலை நெல்லை வரை நீட்டிக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    அதையேற்று சென்னை-நெல்லை இடையே வந்தே பாரத் ரெயில் இயக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை ரெயில்வே துறையினர் மேற்கொண்டனர். சமீபத்தில் நெல்லை-நாகர்கோவில் இடையேயான அகலப்பாதை பணிகளை ஆய்வு செய்த தென்னக ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் கூறுகையில், வந்தே பாரத் ரெயில் அக்டோபர் மாதத்தில் சென்னையில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படும். இதற்காக சந்திப்பு ரெயில் நிலையத்தில் மின்மயமாக்கல் பணிகள், வந்தே பாரத் பெட்டிகளை பராமரிக்க தேவையான பிட்லைன் பணிகள் துரிதமாக முடிக்கப்பட்டு வருகிறது என்றார்.

    இந்நிலையில் ரெயில்வே துறை சார்பில் புதிய அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஜூலை மாதத்தின் கடைசி வாரத்தில் 4 வந்தே பாரத் ரெயில்கள் புதிதாக இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது டெல்லி-சண்டிகருக்கும் (243 கிலோ மீட்டர் தூரம்), சென்னையில் இருந்து 622 கிலோமீட்டர் தூரம் கொண்ட நெல்லைக்கும், குவாலியரில் இருந்து 432 கிலோ மீட்டர் தூரத்தில் போபாலுக்கும், லக்னோவில் இருந்து பிரயாக்ராஜ்க்கும் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    இந்த ரெயில்கள் பகல் நேரத்தில் இயக்கப்படும் என்பதால் பயணிகள் கூட்டம் சற்று குறைவாக இருக்கும் என்று ரெயில்வே நிர்வாகம் கருதுகிறது. இதனால் 16 பெட்டிகளுக்கு பதிலாக 8 பெட்டிகளுடன் வந்தே பாரத் ரெயிலானது இயக்கப்பட உள்ளது.

    சென்னையில் இருந்து நெல்லைக்கு இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரெயில் 8 பெட்டிகளை கொண்டிருக்கும். இதில் 1 பெட்டி வி.ஐ.பி.களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 2 புறமும் தலா 2 இருக்கைகள் அமைந்திருக்கும். அதேபோல் மீதமுள்ள 7 பெட்டிகளில் ஒருபுறம் 3 இருக்கைகளும், மற்றொரு புறம் 2 இருக்கைகளும் என ஒரு வரிசையில் 5 அல்லது 6 இருக்கைகள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த ரெயிலில் ஒரே நேரத்தில் மொத்தம் 552 பயணிகள் பயணிக்க முடியும் எனவும், இதில் காத்திருப்பு பட்டியல் உள்ளிட்ட வசதிகள் கிடையாது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் வி.ஐ.பி. பெட்டியில் பயணம் செய்ய தனிநபர் ஒருவருக்கு ரூ.2,800 முதல் ரூ.3 ஆயிரம் வரை கட்டணமாக நிர்ணயிக்கப்பட உள்ளது. மற்ற பெட்டிகளில் பயணம் செய்ய தனிநபர் ஒருவருக்கு ரூ.1,200 முதல் ரூ.1,300 வரை வசூலிக்கப்பட உள்ளது.

    இந்த ரெயில் காலை 6 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு மதியம் 2 மணிக்கு சென்னை சென்றடையும். மறுமார்க்கமாக சென்னையில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு, இரவு 10.30 மணிக்கு நெல்லை வந்தடையும் வகையில் இயக்கப்பட உள்ளது.

    இதுகுறித்து ரெயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் பாண்டியராஜா கூறுகையில், பயண நேரத்தை பெரிதும் குறைப்பதோடு, சொகுசு வசதிகளும் இருப்பதால் வந்தே பாரத் ரெயில் சேவை பயணிகள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது. தற்போது நெல்லைக்கு சென்னையில் இருந்து வந்தே பாரத் ரெயில் இந்த மாதமே இயக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளதால், தென்மாவட்ட மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    வழக்கமாக நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை சென்றடைய 10 மணி நேரம் 10 நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறது. தற்போது வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டால் 8 மணி நேரத்திற்குள் சென்றடையும். இதனால் பயண நேரம் 2 மணி நேரம் முதல் 2.30 மணி நேரம் வரை மிச்சமாகும். குறிப்பிட்ட நிறுத்தங்களில் மட்டும் வந்தே பாரத் நின்று சென்றால் கூடுதல் நேரம் மிச்சமாகும் என்றார்.

    • கோவை கிங்ஸ் அணி 2-வது முறையாக டி.என்.பி.எல். கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.
    • தனது முதல் இறுதி ஆட்டத்திலேயே சாம்பியன் பட்டம் வெல்லும் வேட்கையில் நெல்லை அணி உள்ளது.

    நெல்லை:

    7-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 12-ம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டியின் பிளே ஆப் சுற்று போட்டிகள் கடந்த 7-ம் தேதி தொடங்கியது. அன்று நடந்த முதல் தகுதிச்சுற்றில் (குவாலிபயர் -1) கோவை கிங்ஸ் அணி 30 ரன் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. சனிக்கிழமை நடந்த வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் 4 ரன் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்சை தோற்கடித்தது.

    நெல்லையில் நடந்த 2-வது தகுதிச்சுற்றில் (குவாலிபயர்-2) நெல்லை ராயல் கிங்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

    இந்நிலையில், டி.என்.பி.எல். இறுதிப்போட்டி நெல்லையில் இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கிறது. இதில் ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ், அருண் கார்த்திக் தலைமையிலான நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. டி.என்.பி.எல். கோப்பையைக் கைப்பற்றப் போவது கோவையா, நெல்லையா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் சமபலம் வாய்ந்தவை என்பதால் இறுதிப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்.

    கோவை கிங்ஸ் அணி 2-வது முறையாக டி.என்.பி.எல். கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி கடந்த ஆண்டு சேப்பாக் சூப்பர் கில்லீசுடன் இணைந்து கூட்டாக சாம்பியன் பட்டம் பெற்றது.

    கோவை அணி லீக் ஆட்டத்தில் நெல்லையிடம் 181 ரன் குவித்தும் தோல்வியை தழுவியது. அதற்கு இறுதிப்போட்டியில் பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயம் கோவை கிங்சுக்கு இருக்கிறது. அந்த அணி இந்த தொடரில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே தோற்று இருந்தது. தனது முதல் இறுதி ஆட்டத்திலேயே சாம்பியன் பட்டம் வெல்லும் வேட்கையில் நெல்லை ராயல் கிங்ஸ் உள்ளது. கோவையை லீக் ஆட்டத்தில் வென்றுள்ளதால் நெல்லை அணி நம்பிக்கையுடன் விளையாடும். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு நெல்லை ராயல் கிங்சுக்கு கூடுதல் பலமாகும்.

    • காவல்துறை அதிகாரிகளுக்கு அதிக மன உளைச்சல் உள்ளது.
    • காவல்துறைக்கு சுதந்திரமாக செயல்பட முழு அதிகாரத்தை வழங்க வேண்டும்.

    நெல்லை:

    பா.ஜனதா சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. இன்று நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பொது சிவில் சட்டம் எல்லோருக்கும் வேண்டும். உங்களுக்கு ஒரு சட்டம், எனக்கு ஒரு சட்டம் என்பது ஏற்புடையதாக இருக்காது. பொது சிவில் சட்டம் நாட்டில் கண்டிப்பாக தேவை.

    பா.ஜ.க. தலைவர்கள் எங்களுடன் கூட்டணி குறித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று ஓ.பி.எஸ். தெரிவிப்பதாக கூறுகின்றனர்.

    தேர்தல் காலங்களில் எங்களோடு இருந்தவர்களை நாங்கள் நினைத்துப் பார்ப்போம் என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை சொல்லியுள்ளார். ஆனால் ஓ.பி.எஸ். சொல்வது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியை கலைக்க போவதாக யாரும் இதுவரை சொல்லவில்லை. ஆட்சி கலைப்பது தொடர்பான வார்த்தையை முதலமைச்சர் பயன்படுத்தி இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

    காவல்துறை அதிகாரிகளுக்கு அதிக மன உளைச்சல் உள்ளது. அவர்களின் மன உளைச்சலை குறைப்பதற்கு முதலமைச்சர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறைக்கு சுதந்திரமாக செயல்பட முழு அதிகாரத்தை வழங்க வேண்டும்.

    ஆட்சிக்கு வந்தவுடன் முதல் நாளில் இருந்து மகளிர் உதவித்தொகை ரூ. 1000 வழங்கப்படும் என தெரிவித்தார்கள். இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்ற பிறகு அண்ணா பிறந்த நாளில் கொடுக்கப் போகிறோம் என சொல்லி உள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு மகளிர் உரிமைத்தொகை கொடுப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். மகளிர் உரிமைத்தொகையை அனைத்து மகளிர்க்கும் கொடுக்க வேண்டும்.

    பொது மக்கள் மகளிர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த திட்டம் பெயரளவில் தான் செயல்படுத்தப்படும். பாராளுமன்ற தேர்தல் நிறைவு பெற்றபின் இந்த திட்டம் நிறுத்தப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தி.மு.க. சார்பில் டி.பி.எம். மைதீன்கான் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • பொதுமக்களுக்கு மதிய உணவை தச்சை கணேசராஜா வழங்கினார்.

    நெல்லை:

    சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் பிறந்த நாளையொட்டி இன்று பாளை தெற்கு பஜாரில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    தி.மு.க.

    நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம். மைதீன்கான் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இதில் ஞானதிரவியம் எம்.பி., மூத்த முன்னோடி சீதாராமன், நெசவாளர் அணி பெருமாள், மேயர் சரவணன், முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், பகுதி செயலாளர் தச்சை சுப்பிரமணியன், மத்திய மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் முகமது மீரான் மைதீன், மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் அலிப் மீரான், முன்னாள் மாவட்ட பொருளாளர் அருண் குமார், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் கண்ணன், பேட்டை பகுதி இளைஞரணி மணிகண்டன், வீரபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தலைமையில் துணை மேயர் ராஜூ, மத்திய மாவட்ட துணை செயலாளர் எஸ்.வி. சுரேஷ், கவுன்சிலர்கள் கிட்டு, பேச்சியம்மாள், சங்கர், அலி ஷேக் மன்சூர், வக்கீல் தினேஷ், மண்டல தலைவர் பிரான்சிஸ், பொறியாளர் அணி சாய், தகவல் தொழில் நுட்ப பிரிவு காசிமணி மற்றும் பலர் மாலை அணி வித்து மரியாதை செலுத்தி னர்.

    அ.தி.மு.க

    நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் தச்சை கணேச ராஜா தலைமையில் நிர்வாகி கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இதில் அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், அவை தலைவர் பரணி சங்கரலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன், மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர் முத்தையா, முன்னாள் துணை மேயர் ஜெகநாதன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, மாவட்ட

    எம்.ஜி.ஆர். மன்ற செயலா ளர் பெரிய பெருமாள், முன்னாள் எம்.பி. சவுந்தர் ராஜன், மாநில எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் கல்லூர் வேலாயுதம், பொதுக்குழு உறுப்பினர் கங்கை வசந்தி, இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் முத்து பாண்டியன், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செய லாளர் சிவந்தி மகா ராஜேந்திரன்,

    ஒன்றிய செயலாளர்கள் முத்துக்குட்டி பாண்டி யன், மருதூர் ராமசுப்பிர மணியன், பகுதி செய லாளர்கள் திருத்து சின்ன துரை, சிந்து முருகன், ஜெனி, சண்முக குமார், காந்தி வெங்கடாசலம், துணை செயலாளர் மாரிசன், கவுன்சிலர் சந்திர சேகர், முன்னாள் அரசு வக்கீல் அன்பு அங்கப்பன், பாளை பகுதி மாணவரணி செயலாளர் ஜெய்சன் புஷ்ப ராஜ், மாவட்ட பிரதிநிதி ஈஸ்வரி கிருஷ்ணன், வக்கீல் ஜெயபாலன், மேலப்பா ளையம் பகுதி இளைஞர் பாசறை சம்சு சுல்தான், நிர்வாகிகள் சீனி முகம்மது சேட், நத்தம் வெள்ளப் பாண்டி, மணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து அ.தி.மு.க. வட்ட செயலாளர் முத்துக்குமார் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு மதிய உணவை தச்சை கணேசராஜா வழங்கி தொடங்கி வைத்தார்.

    காங்கிரஸ்

    நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் மாலை அணி வித்து மரியாதை செலுத்தி னார்.

    இதில் பொருளாளர் ராஜேஷ் முருகன், பொதுக் குழு உறுப்பினர்கள் கவி பாண்டியன், சொக்கலிங்க குமார், துணை தலைவர் மாரியப்பன், மண்டல தலைவர் முகமது அனஸ் ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    பா.ஜனதா

    நெல்லை வடக்கு மாவட்ட பா.ஜனதா சார்பில் மாவட்ட தலைவர் தயா சங்கர் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., செயற்குழு உறுப்பினர் மகாராஜன், மாநில இளைஞரணி துணைத் தலைவர் நயினார் பாலாஜி, மாவட்ட பொதுச் செயலாளர்கள் முத்து பலவேசம், வேல் ஆறுமுகம், சுரேஷ், மாவட்ட செயலாளர் நாகராஜன், வெங்கடா ஜலபதி மற்றும் நிர்வாகிகள் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஓட்டல் கல்லாப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ.1.80 லட்சம் திருட்டுப் போனது குறித்து போலீசில் புகார் செய்யபபட்டது.
    • பணத்தை திருடியதை ஷாஜி அலி விசாரணையின் போது ஒப்புக்கொண்டார்.

    நெல்லை:

    நெல்லை புதிய பஸ் நிலையம் எதிரே பிரபல பிரியாணி ஓட்டல் ஒன்று உள்ளது. இதில் ஊழியராக ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியை சேர்ந்த ஷாஜி அலி (வயது 25) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று அந்த ஓட்டலில் கல்லாப்பெட்டி யில் வைக்கப்பட்டிருந்த ரூ.1.80 லட்சம் திருட்டுப் போனது.

    இதுகுறித்து ஓட்டல் நிர்வாகியான திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை யை சேர்ந்த வள்ளி பாரதி ராஜா (27) என்பவர் பெருமாள்புரம் போலீசில் புகார் செய்தார்.

    மேலும் அவர் ஷாஜி அலி மீது சந்தேகம் இருப்பதாக போலீசில் தெரிவித்தார். அவரது புகாரின் பேரில் போலீசார் ஷாஜி அலியிடம் விசாரணை நடத்தினர். அப்போது பணத்தை திருடியதை அவர் ஒப்புக்கொண்டார்.

    இதையடுத்து அவரிடம் இருந்து ரூ.76 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷாஜி அலியை கைது செய்தனர்.

    • கடந்த மாதம் 27 -ந்தேதி முதல் பல்வேறு விழிப்புணர்வு பணிகளும், சேவைப் பணிகளும் நடைபெற்று வருகிறது.
    • செவிலியர், மருத்துவர்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் பேரணியில் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    1987 -ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஜூலை 11 -ந்தேதியை உலக மக்கள் தொகை நாளாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது.

    பல்வேறு விழிப்புணர்வு பணி

    இந்த வருடம் சுதந்திர அமுதப் பெருவிழாவை கொண்டாடி மகிழ்வோம், குடும்ப நல உறுதி மொழியினை ஏற்று வளம் பெறுவோம் என்ற கருப்பொருளை அடிப்படை யாகக் கொண்டு கடந்த மாதம் 27 -ந்தேதி முதல் பல்வேறு விழிப்புணர்வு பணிகளும், சேவைப் பணிகளும் நடைபெற்று வருகிறது.

    வருகிற 24-ந் தேதி வரை இந்த விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெற உள்ள நிலையில் நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்கள் தொகை தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பேரணி நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

    மாணவிகள்-செவிலியர்கள்

    இதில் கல்லூரி மாணவிகள், செவிலியர், மருத்துவர்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் பேரணியாக சென்றனர்.

    பேரணியை நெல்லை மாவட்ட உதவி கலெக்டர் கோகுல் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தொடங்கிய பேரணி பாளையங்கோட்டை தாலுகா அலுவலகம், ஆர்.டி.ஓ. அலுவலகம் வழியாக மீண்டும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நிறைவு பெற்றது. பேரணியை தொடர்ந்து மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் சுகாதார துறையுடன் இணைந்து செயல்பட்டு வரும் விழிப்புணர்வு பிரசார வாகனமும் தொடங்கி வைக்கப்பட்டது.

    ×