என் மலர்
திருநெல்வேலி
- சுதந்திர தினத்தையொட்டி அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
- துணியால் ஆன ஒரு கொடி ரூ.25-க்கு விற்பனை செய்யப்பட்டது.
நெல்லை:
சுதந்திர தினவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் அரசு அலுவ லகங்கள், பள்ளி, கல்லூரிகள், வணிக நிறுவனங்களில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்படுவது வழக்கம். வருகிற 15-ந்தேதி நாடு முழுவதும் சுதந்திர தினவிழா உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது.
தபால் நிலையத்தில் விற்பனை
சுதந்திர தினத்தையொட்டி அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து பொதுமக்களும் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றுவதற்கு தயாராகி வருகிறார்கள். இதையொட்டி நெல்லை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தேசிய கொடிகள் விற்பனைக்காக குவிந்துள்ளது. அதனை பொதுமக்களும், வியாபாரி களும், மாணவ-மாணவிகள் என அனைத்து தரப்பினரும் வாங்கி செல்கின்றனர்.
இந்நிலையில் பாளை தலைமை தபால் நிலையத்தில் தேசிய கொடிகள் விற்பனை தொடங்கி உள்ளது. இதற்காக இன்று 1,,400 தேசிய கொடிகள் வந்தது. துணியால் ஆன ஒரு கொடி ரூ.25-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதனை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.
இ-போஸ் வசதி
இந்த விற்பனையை முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சிவாஜிகணேசன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வணிகவரி அதிகாரி ராஜேந்திர போஸ் மற்றும் அண்ணாமலை, ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே தேசிய கொடியை வாங்குவதற்காக இ-போஸ்ட் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் விண்ணப்பித்தால் தபால் அலுவலக ஊழியர்கள் நேரில் சென்று வீடுகளில் தேசிய கொடியை வழங்குவார்கள். கடந்த ஆண்டு தபால் அலுவலகங்களில் தேசிய கொடி விற்பனை பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இந்தாண்டு தேசிய கொடி விற்பனை மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது.
- ராகுல்காந்தியின் எம்.பி. பதவி தகுதி நீக்கத்தை ரத்து செய்து மக்களவை செயலகம் அறிக்கை வெளியிட்டது.
- 136 நாட்களுக்கு பிறகு ராகுல்காந்தி மீண்டும் எம்.பி. பதவி பெற்றதையடுத்து காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
நெல்லை:
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு நிறுத்தி வைத்ததை தொடர்ந்து அவரது எம்.பி. பதவி தகுதி நீக்கத்தை ரத்து செய்து மக்களவை செயலகம் அறிக்கை வெளியிட்டது. அதனால் 136 நாட்களுக்கு பிறகு ராகுல்காந்தி மீண்டும் எம்.பி. பதவியை பெற்றார். இதனால் நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் களக்காடு, மாவடியில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கும், காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினார். நிகழ்ச்சியில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் மாவட்ட வட்டார கிராம கமிட்டி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- கிராமப்புறங்களில் தடுப்பூசி போடுவது குறித்து இன்னமும் விழிப்புணர்வு இல்லாமலேயே இருந்து வருகிறது.
- குழந்தைகளுக்கு போலியோ உள்ளிட்ட நோய்கள் தாக்காமல் இருப்பதற்காக தடுப்பூசி போடுவது அவசியம்.
நெல்லை:
கடுமையான நோய்களுக்கு குழந்தைகள் உள்ளாகி விடாமல் இருப்பதற்காக தமிழகத்தில் கால அட்டவணைகளின் படி குழந்தை களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இத்தகைய தடுப்பூசிகள் போடப்படுவதன் காரண மாக அவர்களுக்கு தட்டம்மை, போலியோ உள்ளிட்ட பல்வேறு நோய்கள் வருவதை தடுக்க லாம்.
இதற்காக தமிழக அரசு, பிறந்தது முதல் 5 வயது வரையிலான குழந்தை களுக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும் தடுப்பூசி போட்டு வருகிறது. எனினும் கிராமப்புறங்களில் தடுப்பூசி போடுவது குறித்து இன்னமும் விழிப்புணர்வு இல்லாமலேயே இருந்து வருகிறது.
கிராமப்புற மகளுக்கு தடுப்பூசியின் அவசியத்தை உணர்த்தும் வகையில் அனைத்து துணை சுகாதார நிலையங்களிலும் வாரந்தோறும் புதன்கிழமை சுகாதாரத்துறை சார்பில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு பணியில் செவிலியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனாலும் பணிச்சுமை காரணமாக அந்தந்த பகுதிக்கு உட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு உள்ளதா? என்ற விவரத்தை செவிலியர்கள் சரியாக கணக்கிடாமல் விட்டு விடு கின்றனர்.
இதனை ஈடு கட்டும் வகையில் நேற்று முதல் வருகிற 12-ந் தேதி வரை ஒரு வாரத்துக்கு விடுபட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தமிழக அரசு செயல்படுத்தி உள்ளது.
அதன்படி நெல்லை மாவட்டத்திலும் சுமார் 200-க்கும் மேற்பட்ட முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு விடுபட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது.
இது குறித்து நெல்லை மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ராஜேந்திரன் கூறியதாவது:-
குழந்தைகளுக்கு போலியோ உள்ளிட்ட நோய்கள் தாக்காமல் இருப்பதற்காக தடுப்பூசி போடுவது அவசியம். வழக்கமாக தடுப்பூசி போடப்பட்டு வந்தாலும், பல்வேறு காரணங்களால் விடுபட்டவர்களுக்கு தற்போது தமிழக அரசு ஒரு வாய்ப்பு வழங்கி உள்ளது. அதன்படி நெல்லை மாவட்டத்தில் தடுப்பூசி போடாமல் விடுபட்டவர்கள் விவரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளது.
மாவட்டத்தில் அதாவது மாநகராட்சி நகர் புறம் மற்றும் கிராமப்புறங்களை சேர்த்து இதுவரை 3,222 குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படவில்லை என்பது கணக்கிடப்பட்டுள்ளது.
இதே போல் 500 கர்ப்பிணி பெண்களுக்கும் தடுப்பூசி போடப்படாமல் இருக்கிறது. அவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக நாள் ஒன்றுக்கு 200 முதல் 225 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சராசரியாக ஒரு வாரத்தில் 6 நாட்களில் 1200 முகாம்கள் அமைக்கப்பட்டு விடுபட்டவர்கள் அனை வருக்கும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.
இதனை கிராமப்புற கர்ப்பிணிகள், குழந்தைகள் அனைவருக்கும் கொண்டு போய் சேர்க்க வேண்டியது அந்தந்த பகுதி சுகாதார நிலையங்களில் பணிபுரியும் செவிலியர்களின் கடமை ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாவடி ஆர்ச்விளை தெருவை சேர்ந்த சுவாமிதாஸ் மகன் தீபக் பட்டாசு வெடித்ததை தட்டிக் கேட்டார்.
- இதில் ஏற்பட்ட தகராறில் மாவடி வடக்குத்தெருவை சேர்ந்த ராபீன் , பிராங்ளின் ஆகியோர் தீபக்கை கல்லால் தாக்கினர்.
களக்காடு:
ராகுல்காந்தி எம்.பி. பதவி தகுதி நீக்கம் ரத்து செய்யப்பட்டு, அவர் மீண்டும் பாராளுமன்றத்திற்குள் சென்றதை அடுத்து களக்காடு அருகில் உள்ள மாவடி பஸ் நிறுத்தம் அருகே காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மாவடி ஆர்ச்விளை தெருவை சேர்ந்த சுவாமிதாஸ் மகன் தீபக் (வயது32) பட்டாசு வெடித்ததை தட்டிக் கேட்டார்.
இதில் ஏற்பட்ட தகராறில் மாவடி வடக்குத்தெருவை சேர்ந்த நவநீதன் மகன் ராபீன் (28), ரெத்தினம் மகன் பிராங்ளின் (46) ஆகியோர் தீபக்கை கல்லால் தாக்கினர். இதுபோல தீபக் ராபீனை கீழே தள்ளினார். இந்த மோதலில் தீபக், ராபீன் காயமடைந்தனர். இதுகுறித்து இருவரும் திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ராபீன், பிராங்ளின், தீபக்கை கைது செய்தனர்.
- திருக்குறுங்குடி திருமலை நம்பி கோவில் வனப்பகுதியில் வனத்துறை சார்பில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- இதையொட்டி வருகிற 10, 11-ந்தேதி ஆகிய 2 நாட்கள் மட்டும் திருமலைநம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
களக்காடு:
திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் அடர்ந்த வனப்பகுதியில் திருமலைநம்பி கோவில் உள்ளது.
2 நாட்கள் தடை
இக்கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த கோயிலில் தமிழ்மாத முதல் மற்றும் கடைசி சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் திருக்குறுங்குடி திருமலை நம்பி கோவில் வனப்பகுதியில் வனத்துறை சார்பில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி வரும் 10-ந்தேதி (வியாழக்கிழமை), 11-ந்தேதி (வெள்ளிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் மட்டும் திருமலைநம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
சுற்றுலா பயணிகள்
ஆனால் திருக்குறுங்குடி வனத்துறை சோதனை சாவடி அருகே உள்ள ஆற்றில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும், 12-ந் தேதி (சனிக்கிழமை) முதல் திருமலைநம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் திருக்குறுங்குடி வனசரகர் யோ கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
- கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் யூடியூப் பார்த்து பெட்ரோல் குண்டு தயார் செய்தது தெரியவந்தது.
- செல்போனில் வேறு ஏதேனும் வீடியோக்கள் உள்ளதா? என்பதை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
வள்ளியூர்:
நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியை சேர்ந்த 3 பேர் சமூக வலைதளமான யூ-டியூப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
மேலும் அதனை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வீடியோவாக பதிவேற்றம் செய்துள்ளனர். அந்த வீடியோவில் பெட்ரோல் குண்டுகளை சுவற்றில் வீசி அவர்கள் வீசி ஒத்திகை பார்ப்பது போல் காட்சிகள் பதிவிடப்பட்டிருந்தது.
மேலும் பின்னணியில் ஒரு பாடல் அதில் ஒலிக்க, கையில் அரிவாளுடன் 3 பேரும் நடனம் ஆடிய காட்சிகள் இடம்பெற்று இருந்தது.
இது தொடர்பாக வள்ளியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள் வள்ளியூர் கீழ தெருவை சேர்ந்த இசக்கியப்பன் (25), சரவணன் (19) என்பதும் மற்றும் ஒரு சிறுவன் என்பது தெரியவந்தது.
இந்த சம்பவத்தில் மேலும் ஒரு சிறுவனுக்கு தொடர்பு இருப்பதும், அவன் தப்பி ஓடியதும் தெரியவந்தது. அந்த சிறுவனை போலீசார் தேடி வருகிறார்கள்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் யூடியூப் பார்த்து பெட்ரோல் குண்டு தயார் செய்தது தெரியவந்தது.
பின்னர் தாங்கள் தயாரித்த பெட்ரோல் குண்டுகளை வீசி ஒத்திகை பார்த்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். அப்போது தான் போலீசில் சிக்கி உள்ளனர்.
அவர்களது செல்போனில் வேறு ஏதேனும் வீடியோக்கள் உள்ளதா? என்பதை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
- வள்ளியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
- செல்போனில் ஏதேனும் வீடியோக்கள் உள்ளதா? என்பதை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் உள்பட 3 பேர் சமூக வலைதளமான யூ-டியூப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டனர்.
மேலும் அதனை தங்களது முகநூல் பக்கத்தில் ரீல்ஸ் வீடியோவாக பதிவு செய்திருந்தனர். அந்த வீடியோவில் பெட்ரோல் குண்டு ஒன்றை வீசி அவர்கள் வீசி ஒத்திகை பார்ப்பது போல் காட்சிகள் பதிவிடப்பட்டிருந்தது. மேலும் சமுதாய ரீதியிலான ஒரு பாடல் அதில் ஒலிக்க, கையில் அரிவாளுடன் 3 பேரும் நடனம் ஆடிய வீடியோவும் இருந்தது.
இது தொடர்பாக வள்ளியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வாலிபர்கள் யூடியூப் பார்த்து பெட்ரோல் குண்டு மற்றும் நாட்டு வெடிகுண்டுகள் தயார் செய்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர்களது செல்போனில் ஏதேனும் வீடியோக்கள் உள்ளதா? என்பதை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
- நெல்லை மாவட்டத்தில் விவசாயத்துக்கு தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது.
- விவசாயிகளின் கோரிக்கைகள் முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு விரைவில் நல்ல செய்தி வரும்.
நெல்லை:
நெல்லையில் சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது:-
உலகம் இருக்கும் வரையில் தமிழக மக்களுக்காக கருணாநிதி செய்த பணிகள் பேசப்படும்.
நெல்லை மத்திய மாவட்ட அலுவலகத்தில் சென்னை கடற்கரையில் அண்ணாவின் அருகில் கலைஞர் துயில் கொள்ளும் நினைவகம் போன்று மாதிரி நினைவகம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் விவசாயத்துக்கு தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. இதுதொடர்பாக மாவட்ட கலெக்டருடன் ஆலோசனை நடத்தப்பட்டு இருக்கிறது. நெல்லை மாவட்டத்தை, வறட்சி மாவட்டமாக அறிவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை கலெக்டர் மேற்கொண்டு வருகிறார். விவசாயிகளின் கோரிக்கைகள் முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு விரைவில் நல்ல செய்தி வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
+2
- அலவந்தான்குளத்தை சேர்ந்த ஒருவர் அந்த கிணற்றில் தனி மோட்டார் அமைத்து அவரது கிராமத்திற்கு தண்ணீர் கொண்டு செல்கிறார்.
- வறட்சியான காலங்களில் வடக்கு பத்தினிப்பாறை கிராம பகுதியில் கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது என மனுவில் கூறப்பட்டிருந்தது.
நெல்லை:
பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து பொதுமக்கள் வந்து மனு கொடுத்தனர்.
காலிக்குடங்களுடன் திரண்ட மக்கள்
மானூர் யூனியன் பல்லிக்கோட்டை பஞ்சாயத்திற்குட்பட்ட திருத்து கிராமத்தை சுமார் 500 பேர் காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். இதனால் வாசல் பகுதியில் கடும் நெருக்கடி ஏற்பட்டது. பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் கூறியிருந்ததாவது:-
பல்லிக்கோட்டை பஞ்சாத்தில் அலவந்தான்கும், பல்லிக்கோட்டை, நெல்லை திருத்து ஆகிய 3 கிராமங்கள் உள்ளது. இவர்களின் குடிநீர் தேவைக்காக கடந்த 2004-ம் ஆண்டு ஊராட்சி மன்ற தலைவர் ஏற்பாட்டில் ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு அதன் மூலம் 3 கிராமங்களுக்கும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அலவந்தான்குளத்தை சேர்ந்த ஒருவர் அந்த கிணற்றில் தனி மோட்டார் அமைத்து அவரது கிராமத்திற்கு தண்ணீர் கொண்டு செல்கிறார். இதனால் மற்ற 2 கிராமத்தினர் பாதிக்கப்படுகின்றனர். எனவே இது குறித்து நடவ டிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
முனைஞ்சிப்பட்டி இந்திரா குடியிருப்பு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் வந்து கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் 20 நாட்களாக குடிநீர் வழங்கவில்லை. எனவே சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
நாங்குநேரி தாலுகா தோட்டாக்குடி பஞ்சாயத்து வடக்கு பத்தினிப்பாறை கிராமத்தை சேர்ந்தவர்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் 2 சமூகத்தை சேர்ந்த 200 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். வறட்சியான காலங்களில் எங்கள் பகுதியில் கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.
இது தொடர்பாக பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எங்கள் பகுதியில் உள்ள மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. அதேபோல் பைப்லைன் அமைத்து 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. எனவே இரண்டு சமூகத்தினருக்கும் தனித்தனியாக தண்ணீர் தொட்டி அமைத்து தர வேண்டும் என கூறியிருந்தனர்.
- நினைவாலயத்தில் மத்திய மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் மைதீன்கான் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
- நிகழ்ச்சியின்போது சபாநாயகர் அப்பாவு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நெல்லை:
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவு தினத்தையொட்டி நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் சென்னையில் அமைக்கப் பட்டுள்ளது போன்று மாதிரி கலைஞர் நினைவாலயம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நினைவாலயத்தில் மத்திய மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் மைதீன்கான் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
அதேபோல் வெயிலுக்கு இதமாக சர்பத் உள்ளிட்ட குளிர்பானங்களும் வழங்கப்பட்டன.
தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பா ளராக சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு கலைஞர் மாதிரி நினைவாலயத்தில் அலங்கரித்து வைக்கப் பட்டிருந்த கருணாநிதி உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் மேயர் சரவணன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மாலை ராஜா, லட்சுமணன், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், மாநில மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் விஜிலா சத்யானந்த், மத்திய மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, ஒன்றிய செயலாளர் அருள்மணி, பகுதி செயலாளர்கள் அண்டன் செல்லத்துரை, தச்சை சுப்பிரமணியன், கவுன்சிலர்கள் நித்திய பாலையா, வில்சன் மணித்துரை, பவுல்ராஜ், சுந்தர், கருப்பசாமி கோட்டையப்பன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மீரான் மைதீன், முன்னாள் மாவட்ட பொருளாளர் அருண்குமார், மாவட்ட துணை அமைப்பாளர் மாயா, முன்னாள் கவுன்சிலர் நவநீதன் மற்றும் நிர்வாகிகள் ஆறுமுகராஜா, வீரபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை சபாநாயகர் அப்பாவு வழங்கினார். அப்போது நெல்லை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வாய்ப்பு உள்ளதா? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சபாநாயகர் அப்பாவு பதில் அளிக்கையில், இதுதொடர்பாக ஏற்கனவே மாவட்ட கலெக்டரிடம் பேசி உள்ளேன். அவரும் அதற்கான நடவடிக்கை களை எடுத்து வருகிறார். விரைவில் நீங்கள் எதிர்பார்க்கும் நல்ல செய்தி வரும் என்றார்.
- கார் சாகுபடிக்காக அணைகளில் இருந்து 4 கால்வாய்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
- அக்டோபர் 31-ந் தேதி வரை தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நெல்லை:
பகுஜன் சமாஜ் கட்சியினர் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
மானூர் தாலுகா தென்கலம் காமராஜர் நகர், நல்லம்மாள்புரம், தென்கலம் புதூர், புளியங்கொட்டாரம் உள்ளிட்ட பகுதிகளில் பல ஆண்டுகளாக கிராம மக்கள் வசித்து வருகிறார்கள்.
ஆனால் இந்த இடம் நெல்லையப்பர் கோவிலுக்கு சொந்தமானது என கூறி அதனை காலி செய்ய மாவட்ட நிர்வாகம் நெறுக்கடி கொடுக்கிறது. எனவே அங்கு அப்பகுதிபொதுமக்கள் தொடர்ந்து வசிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
தமிழ்நாடு விவசாய சங்க அம்பை, சேரன்மகாதேவி ஒன்றிய குழு சார்பில் நிர்வாகிகள் கொடுத்த மனுவில், கார் சாகுபடிக்காக பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகிய அணைகளில் இருந்து 4 கால்வாய்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அந்த வகையில் நதியுன்னி கால்வாய், வடக்கு மற்றும் தெற்கு கோடைமேல் அழகியான் கால்வாய், கனடியான் கால்வாய் ஆகியவற்றிக்கு கடந்த 19-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. அக்டோபர் 31-ந் தேதி வரை தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் 30 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் நடவு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் அரசியல் கட்சி பிரமுகர்கள் அழுத்தம் காரணமாக கோடகன் கால்வாய்க்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் எங்கள் பகுதியில் தண்ணீர் இன்றி நடவு செய்த பயிர்கள் கருகும் நிலை உள்ளது. எனவே கோடகன் கால்வாய்க்கு தண்ணீர் திறக்க கூடாது என்று கூறப்பட்டிருந்தது.
மேலப்பாளையம் ஆமீன்பு ரம் மதரசா முத்தவல்லிகள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் அனுமதி இன்றி சட்டவிரோதமாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்த்தின் கட்டுமானப்பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும் என கூறப்பட்டிந்தது.
- ஆழமான பகுதிக்கு சென்ற கோமதிநாயகம் ஆற்றில் மூழ்கி மாயமானார்.
- அம்பை தாமிரபரணி ஆற்றில் கடந்த ஒரு மாதத்தில் 6 பேர் இறந்துள்ளனர்.
சிங்கை:
சங்கரன்கோவிலை சேர்ந்த தொழிலாளி கோமதிநாயகம் (வயது 40) என்பவர் தனது உறவினர்கள் சுமார் 40 பேருடன் நேற்று அம்பை தாமிரபரணி ஆற்றுக்கு குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்ற கோமதிநாயகம் திடீரென ஆற்றில் மூழ்கி மாயமானார்.
இது குறித்து தகவலறிந்ததும் தீயணை ப்புத்துறையினர் விரைந்து சென்று நேற்று இரவு வரை அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று காலை மீண்டும் தேடும் பணியை தொடங்கினர்.
அப்போது கோமதி நாயகம் சடலமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றிய அம்பை போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக அப்பகுதியினர் கூறும்போது, அம்பை தாமிரபரணி ஆற்றில் இதுவரை கடந்த ஒரு மாதத்தில் இளம்பெண்கள், இளைஞர்கள் உள்பட கோமதிநாயகத்துடன் சேர்த்து 6 பேர் இறந்துள்ளனர். தாமிர பரணி ஆற்றுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக குளிக்கவும், ஆழமான பகுதியில் அறிவிப்பு பலகைகள் வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.






