என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வள்ளியூரில் நாட்டு வெடிகுண்டு வீசி வீடியோ வெளியிட்ட 3 பேர் கைது
- வள்ளியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
- செல்போனில் ஏதேனும் வீடியோக்கள் உள்ளதா? என்பதை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் உள்பட 3 பேர் சமூக வலைதளமான யூ-டியூப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டனர்.
மேலும் அதனை தங்களது முகநூல் பக்கத்தில் ரீல்ஸ் வீடியோவாக பதிவு செய்திருந்தனர். அந்த வீடியோவில் பெட்ரோல் குண்டு ஒன்றை வீசி அவர்கள் வீசி ஒத்திகை பார்ப்பது போல் காட்சிகள் பதிவிடப்பட்டிருந்தது. மேலும் சமுதாய ரீதியிலான ஒரு பாடல் அதில் ஒலிக்க, கையில் அரிவாளுடன் 3 பேரும் நடனம் ஆடிய வீடியோவும் இருந்தது.
இது தொடர்பாக வள்ளியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வாலிபர்கள் யூடியூப் பார்த்து பெட்ரோல் குண்டு மற்றும் நாட்டு வெடிகுண்டுகள் தயார் செய்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர்களது செல்போனில் ஏதேனும் வீடியோக்கள் உள்ளதா? என்பதை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.






