என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • திருமங்கலம் பகுதியில் அ.தி.மு.க. தொண்டர் சுயம்புலிங்கம் விபத்தில் சிக்கி காயம் அடைந்தார்.
    • தற்போது சுயம்புலிங்கம் கூடங்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    வள்ளியூர்:

    மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. பொன்விழா எழுச்சி மாநாட்டில் நெல்லை மாவட்டத்தில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    விபத்தில் சிக்கி காயம்

    இந்த நிலையில் மாநாடு முடிவடைந்து வரும் வழியில் மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் கூடங்குளத்தை சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர் சுயம்புலிங்கம் என்பவர் விபத்தில் சிக்கி காயம் அடைந்தார்.

    காயம் அடைந்த அவருக்கு மதுரை திருமங்கலத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    உதவித்தொகை

    தற்போது கூடங்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    அவருக்கு முன்னாள் எம்.பி.யும், நெல்லை மாவட்ட பொருளாளருமான சவுந்திரராஜன் மருத்துவ மனைக்கு நேரில் சென்று சுயம்புலிங்கத்திற்கு ஆறுதல் தெரிவித்து மருத்துவ உதவி தொகையை வழங்கினார்.

    உடன் ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் அந்தோணி அமலா ராஜா, கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், ராதாபுரம் ஒன்றிய பொருளாளர் துரை ராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் சுரேஷ் குமார் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.

    • முத்துகிருஷ்ணன் தற்போது விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
    • தாமரைசெல்வி அருகே வந்த போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியது.

    நெல்லை:

    பாளை ரெட்டியார்பட்டியை அடுத்த இட்டேரி அருகே உள்ள உன்னங்குளம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் மாசானமுத்து (வயது65). விவசாயி. இவரது மகன் முத்துகிருஷ்ணன் (29). இவர் சென்னையில் வேலை பார்த்து வருகிறார்.

    தற்போது விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார். நேற்று மாலை அவரை சென்னைக்கு அனுப்பி வைக்க சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு தந்தை-மகன் இருவரும் மோட்டார் சைக்கிளில் வந்தனர். இட்டேரி அடுத்த தாமரைசெல்வி அருகே வந்து கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியதில் பின்னால் அமர்ந்திருந்த மாசானமுத்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார்.

    அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே மாசானமுத்து இறந்தார். இது குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கல்லூரி செயலர் வி.பி.ராமநாதன் தலைமை தாங்கி மாணவர்களுக்கு நாட்டு நலப்பணித்திட்டம் தொடர்பான நன்மைகள் குறித்து பேசினார்
    • நடப்பு ஆண்டுக்கான நாட்டு நலப்பணி திட்டம் கூறித்து ராஜ ராஜேஸ்வரி எடுத்துரைத்தார்.

    வள்ளியூர்:

    நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் குறித்த அறிமுக விழா நடைபெற்றது.

    கல்லூரி செயலர் வி.பி.ராமநாதன் தலைமை தாங்கி மாணவர்களுக்கு நாட்டு நலப்பணித்திட்டம் தொடர்பான நன்மைகள் குறித்து பேசினார் கல்லூரிக்குழு உறுப்பினர் எஸ்.கே.டி.பி. காமராஜ், கல்லூரி முதல்வர் ராஜன் ஆகியோர் நாடார் நாட்டு நலப்பணி திட்டத்தின் நோக்கம், மாணவர்களின் பங்கு குறித்து பேசினர்.

    பொருளாதாரத்துறை தலைவர் ராஜேந்திரன் ரவிக்குமார் தனது கடந்த கால அனுபவங்களை மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டார். நடப்பு ஆண்டுக்கான நாட்டு நலப்பணி திட்டம் கூறித்து ராஜ ராஜேஸ்வரி எடுத்துரைத்தார். தாவரவியல் துறை பேராசிரியர் ஹரி கிருஷ்ணன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அணி எண் 35 மற்றும் 37-ஐ சேர்ந்த திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.

    • கடந்த சில ஆண்டுகளாக 2 தரப்பினருக்கும் இடையே இடப்பிரச்சினை இருந்து வந்துள்ளது.
    • வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து செங்கையாவை போலீசார் கைது செய்தனர்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த தேவர்குளம் அருகே உள்ள வன்னிக்கோனேந்தலை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மனைவி வள்ளித்தாய் (வயது 63). இவர்களது மகன் தமிழ்செல்வம்.

    இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அண்ணாதுரை இறந்துவிட்டார். இதனால் வள்ளித்தாய் மட்டும் கூவாச்சிப்பட்டி செல்லும் சாலையில் உள்ள வடக்கு தெருவில் தனியாக வசித்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று வள்ளித்தாய் வீட்டில் மர்மமான இறந்து கிடப்பதாக தேவர்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு விரைந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    அவர் இறப்பதற்கு முன்பாக வரை அக்கம் பக்கத்தினரிடம் நன்றாக பேசி வந்துள்ளார். இந்நிலையில் அவர் திடீரென இறந்து கிடந்ததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும் அவரது உடலை பார்த்தபோது தலை உள்ளிட்ட சில இடங்களில் காயம் ஏற்பட்டிருந்தது. இதனால் அவர் அடித்துக்கொலை செய்யப்பட்டிருக்கலாமா? என்ற கோணத்தில் போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    விசாரணையில், வள்ளித்தாய் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் தொழிலாளியான செங்கையா(வயது 60) என்பவர் அவரை அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

    கடந்த சில ஆண்டுகளாக 2 தரப்பினருக்கும் இடையே இடப்பிரச்சினை இருந்து வந்துள்ளது. அவர்களது வீட்டிற்கு இடையே உள்ள காலியிடம் தொடர்பாக எழுந்த பிரச்சினையில் செங்கையா ஆத்திரம் அடைந்துள்ளார். இதனால் வள்ளித்தாய் வீட்டுக்கு சென்ற செங்கையா, அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

    வாக்குவாதம் முற்றியதில், அங்கு கிடந்த உலக்கையால் வள்ளித்தாயை செங்கையா தாக்கி உள்ளார். இதில் அவர் சரிந்து கீழே விழுந்து இறந்துவிட்டார். உடனே ஒன்றும் தெரியாதது போல் செங்கையா தனது வீட்டுக்கு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து செங்கையாவை போலீசார் கைது செய்தனர்.

    • மையவாடியில் தேவலோக தெருவில் பெரிய வாசலும், கிருபாகரன் தெரு முடிவில் ஒரு வாசலும் உள்ளது.
    • பேட்டை 18, 19, மற்றும் 20-வது வார்டுகளில் நாய் தொல்லை அதிகமாக உள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் துணை மேயர் ராஜூ, கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர்.

    8 ஜமாத்தார்கள் மனு

    பாளை மிலிட்டரி லைன் பள்ளிவாசல் சுன்னத் ஜமாத் நிர்வாகிகள் தலைமையில் 8 ஜமாத்தார்கள் திரண்டு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    பாளை மண்டலம் 21-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்ளது. இதில் இருந்து சுமார் அரை கிலோமீட்டர் தூரத்தில் தேவலோக தெருவின் முடிவில் மையவாடி அமைந்துள்ளது. சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இந்த பகுதியானது அடக்க ஸ்தலமாக கடந்த 100 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    இதற்காக மையவாடியில் தேவலோக தெருவில் பெரிய வாசலும், கிருபாகரன் தெரு முடிவில் ஒரு வாசலும் உள்ளது. இந்த பகுதியில் 10 அடி அகலத்தில் பொது நடைபாதை இருந்தது. தற்போது அதனை ஆக்கிரமித்து விட்டனர். இதனால் அந்த வழியாக பிரேதத்தை ஊர்வலமாக எடுத்து செல்ல ஆக்கிரமிப்புகள் இடையூறாக உள்ளது. நாங்கள் வாய்மொழியாக அவர்களிடம் தெரிவித்தும் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. எனவே இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி தர கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    நாய் தொல்லை

    எஸ்.டி.பி ஐ கட்சியின் நெல்லை தொகுதி தலைவர் முகம்மது அசனார், வார்டு நிர்வாகி ரசூல் ஆகியோர் துணை மேயர் ராஜுவிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நெல்லையை அடுத்த பேட்டை 18, 19, மற்றும் 20-வது வார்டுகளில் நாய் தொல்லை அதிகமாக உள்ளது. முகமது நயினார் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த 2 குழந்தைகள் உள்ளிட்ட 6 பேரை அந்த பகுதியில் உலாவி வரும் வெறிநாய் ஒன்று கடித்து விட்டது. இதன் காரணமாக பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக 6 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ரஹ்மான் பேட்டை பகுதியில் வீதியில் சுற்றி திரிந்த 6-க்கும் மேற்பட்ட ஆடுகளையும் கடித்துள்ளது. எனவே பொது மக்களின் நலன் கருதி நெல்லை பேட்டை பகுதியில் பொது மக்களின் உயிருக்கு அச்சமூட்டும் வகையில் சுற்றி திரியும் வெறிநாய்களை பிடிக்க சுகாதார துறைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    • நெல்லை வண்ணார்பேட்டையில் இன்று நீட் தேர்வை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • நீட் தேர்வினால் இதுவரை 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

    நெல்லை:

    திராவிடர் கழகத்தின் திராவிட மாணவர் கழகம் மற்றும் திராவிட கழக இளைஞரணி சார்பில் நீட் தேர்வை எதிர்த்து நெல்லை வண்ணார்பேட்டையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட மாணவர் அணி தலைவர் சூர்யா தலைமை தாங்கினார்.

    மாவட்ட இளைஞரணி தலைவர் வீரபாண்டிய கட்டபொம்மன் வரவேற்றார். மாவட்ட காப்பாளர்கள் காசி, வேலாயுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் வேல்முருகன் தொடக்க உரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக சுப சோமசுந்தரம் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் கல்வியாளர் ராஜவர்மன், மாவட்ட தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஆர்ப்பாட்டத்தின் போது நீட் தேர்வினால் இதுவரை 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். எனவே மத்திய அரசு உடனடியாக இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    • பார்வதி நாதன் ஆதிபராசக்தி நகரில் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
    • சக நண்பர் ஒருவர் மது அருந்துவதற்கு பார்வதி நாதனை அழைத்துள்ளார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கிருஷ்ணாபுரத்தை அடுத்த மேட்டுக்குடி பகுதியை சேர்ந்தவர் பார்வதி நாதன்(வயது 22). பெயிண்டிங் தொழிலாளி.

    வெட்டிக்கொலை

    நேற்று இரவு அவர் பெங்களூருவிற்கு வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். இந்நிலையில் சிறிது நேரத்தில் அவர் கிருஷ்ணாபுரம் அருகே உள்ள ஆதிபராசக்தி நகரில் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவல் அறிந்து அவரது உறவினர்கள் அங்கு விரைந்து சென்றனர்.

    உடனடியாக சிவந்திபட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று பார்வதிநாதன் உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் சிவகளை வழக்குப்பதிவு செய்து பார்வதிநாதனை கொலை செய்த கும்பல் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    முன்விரோதம்

    பார்வதிநாதனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அடிக்கடி அவர் தனது நண்பர்களுடன் சுற்றித்திரிந்து வந்துள்ளார். இதனால் வெளியூருக்கு வேலைக்கு செல்லும்படி அவரது தாயார் வேலா கேட்டுக்கொண்டதற்கு இணங்க பார்வதி நாதன் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

    அவர் பாளை கிருஷ்ணா புரம் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது சக நண்பர் ஒருவர் மது அருந்துவதற்கு அவரை அழைத்துள்ளார். உடனே பார்வதிநாதன் ஆதிபராசக்தி நகர் பகுதியில் உள்ள மதுபான கடைக்கு சென்று மது பாட்டில்களை வாங்கி விட்டு வந்துள்ளார். அவ்வாறு வரும் வழியில் மறைந்திருந்த ஒரு கும்பல் அவரை வெட்டிக்கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    ஏற்கனவே பார்வதிநாதன் மற்றும் அவரது நண்பர்க ளுக்கு இடையே மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போன் உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்ற விவகாரம் தொடர் பாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்த விவகா ரத்தில் பார்வதிநாதனின் நண்பர்கள் சிவந்திபட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

    இந்த சம்பவத்தில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக பார்வதி நாதன் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொலையாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர் சிவகளை தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடு பட்டு வருகின்றனர். இதனை யொட்டி ஏராளமான போலீ சார் அங்கு பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • சம்பவத்தன்று சுடலைமுத்து கீழப்பத்தை வயலில் தனது ஆடுகளை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.
    • திரும்பி வந்து பார்த்த போது 2 ஆடுகளை காணவில்லை. மர்ம நபர்கள் ஆடுகளை திருடி சென்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள மேலக்கருவேலங்குளத்தை சேர்ந்தவர் நம்பி மகன் சுடலைமுத்து (வயது63). இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று அவர் கீழப்பத்தை வயலில் தனது ஆடுகளை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்த போது 2 ஆடுகளை காண வில்லை. மர்ம நபர்கள் ஆடு களை திருடி சென்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஆடு கள் திருடிய மர்ம நபர் களை தேடி வருகின்றனர்.

    • கோவில் முன்மண்டபத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அம்மன் சிலை முன்பு பெண்கள் சுலோகங்கள் சொல்லி வழிபாடு செய்தனர்.
    • இன்று மாலை 1008 திருவிளக்குபூஜை, சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை, சுடலை ஆண்டவர் இந்து மறுமலர்ச்சி மன்றம் சார்பில் மெகா மியூசிக் நைட் இன்னிசை கச்சேரி நடக்கிறது.

    திசையன்விளை:

    திசையன்விளை வடக்குத்தெரு சுடலை ஆண்டவர் கோவில் கொடை விழா நடந்து வருகிறது. 2-ம் நாள் கொடைவிழாவான நேற்று இரவு சுடலை ஆண்டவர் மகளிர் சேவா சங்கம் சார்பில் 1008 சுமங்கலி பூஜை நடந்தது.

    கோவில் நிர்வாகி சேம்பர்செல்வராஜ் தலைமை யில் திசையன்விளை பேரூராட்சி தலைவரும், அ.தி.மு.க. அமைப்பு செயலாளருமான வக்கீல் ஏ.கே.சீனிவாசன் மாங்கல்ய பொருட்கள் அடங்கியதாம்பூலத்தை கொடுத்து சுமங்கலி பூஜையை தொடங்கிவைத்தார்.

    கோவில் முன்மண்டபத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அம்மன் சிலை முன்பு பெண்கள் சுலோகங்கள் சொல்லி வழிபாடு செய்தனர். விழாவில் தொழில் அதிபர்கள் தங்கையா கணேசன், கே.டி.பி.ஆர்.திவாகர், பாஸ்கர், திசையன்விளை பேரூராட்சி முன்னாள் தலைவர் புஸ்ப லெட்சுமி கனகராஜ், கடை வியா பாரிகள் சங்க செயலாளர் ஜெயராமன், வக்கீல் பழனி சங்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்

    கொடைவிழாவில் இன்று மாலை 1008 திருவிளக்குபூஜை, சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை, சுடலை ஆண்டவர் இந்து மறுமலர்ச்சி மன்றம் சார்பில் மெகா மியூசிக் நைட் இன்னிசை கச்சேரி நடக்கிறது. விழா தொடர்ந்து 25-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை நடக்கிறது. ஏற்பாடு களை கோவில் நிர்வாகி சேம்பர்செல்வராஜ் செய்துள்ளார்.

    • சிவகுமார் ஊச்சிகுளம் அருகே சென்ற போது சாலையோர உள்ள மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது.
    • இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சிவகுமாரை அக்கம், பக்கத்தினர் மீட்டு களக்காடு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள ஊச்சிகுளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சிவகுமார் (வயது47). தொழிலாளி. இவர் சம்ப வத்தன்று களக்காட்டிற்கு வந்து விட்டு, ஊருக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி கொண்டி ருந்தார். ஊச்சிகுளம் அருகே சென்ற போது சாலையோர முள்ள மின் கம்பத்தில் மோ ட்டார் சைக்கிள் மோதியது.

    இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சிவகுமாரை அக்கம், பக்கத்தினர் மீட்டு களக்காடு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பச்சமால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நெல்லை மாவட்டத்திற்கு வந்த அண்ணாமலை, கடந்த 19-ந்தேதி பாளையில் நடைபயணம் மேற்கொண்டார்.
    • காந்திமதி யானையிடம் அண்ணாமலை ஆசிர்வாதம் பெற்றார்.

    நெல்லை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' என்ற தலைப்பில் தமிழகத்தில் பல்வேறு தொகுதிகளில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

    கடந்த மாதம் 28-ந்தேதி ராமேஸ்வரத்தில் தனது முதல் கட்ட நடைபயணத்தை தொடங்கினார். தொடர்ந்து ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நடைபயணம் மேற்கொண்டாா். அப்போது மத்திய பா.ஜனதா அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை மக்களுக்கு எடுத்துரைத்தார்.

    தொடர்ந்து நெல்லை மாவட்டத்திற்கு வந்த அண்ணாமலை, கடந்த 19-ந்தேதி பாளையில் நடைபயணம் மேற்கொண்டார். மறுநாள் வள்ளியூர், களக்காடு பகுதிகளில் நடைபயணம் மேற்கொண்ட அண்ணாமலை, நேற்று ஓய்வெடுத்தார்.

    இந்நிலையில் இன்று மாலை நெல்லை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட டவுனில் நடைபயணம் மேற்கொள்கிறார். இந்த நடைபயணத்தில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் கலந்து கொள்கிறார். இந்த நடைபயணமானது பேட்டை பாறையடியில் தொடங்கி தொண்டர் சன்னதி, நயினார்குளம் சாலை, சொக்கப்பனை முக்கு வழியாக வாகையடி முனையை அடைகிறது. அங்கு மாலையில் திறந்த வேனில் நின்றபடி அண்ணாமலை பேசுகிறார்.

    இத்துடன் அவரது முதல்கட்ட நடைபயணம் முடிவடைகிறது. இன்றுடன் சேர்த்து மொத்தம் 22 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டுள்ள அண்ணாமலை 42 தொகுதிகளில் மக்களை சந்தித்துள்ளார். அவரது 2-ம் கட்ட நடைபயணம் வருகிற 3-ந்தேதி தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் தொடங்குகிறது.

    இந்நிலையில் இன்று காலை அண்ணாமலை நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது அங்கு காந்திமதி யானையிடம் அவர் ஆசிர்வாதம் பெற்றார். தொடர்ந்து கோவிலில் உள்ளே அமைந்துள்ள கோசாலையை பார்வையிட்டார்.

    பின்னர் அண்ணாமலை, டவுன் ஆர்ச் பகுதியில் பழமையான ஒரு ஓட்டலில் அமர்ந்து சாப்பிட்டார். இந்த நிகழ்வுகளின்போது பா.ஜனதா சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். அப்போது அந்த பகுதியில் சென்ற பொதுமக்கள் அண்ணாமலையுடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.

    • பா.ஜ.க. மாநில இளைஞரணி துணைத் தலைவர் நயினார் பாலாஜி பெயரில் வழிநெடுகிலும் பேனர், பதாகைகள் வைக்கப்பட்டது.
    • நயினார் பாலாஜி தலைமையில் பா.ஜ.க. தொண்டர்கள் எஸ்.என். ஹைரோட்டில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    நெல்லை:

    பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் கடந்த மாதம் 28-ந்தேதி தொடங்கிய முதல் கட்ட நடைபயணம் இன்றுடன் நிறைவடைகிறது.

    இன்று மாலை நெல்லைபேட்டை பாறையடி காலனியில் இருந்து தொண்டர் சன்னதி வழியாக டவுன் ஆர்ச் வரை அண்ணாமலை நடைபயணம் செல்கிறார். இதில் சிறப்பு விருந்தினராக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மந்திரி பூபேந்திர யாதவ் கலந்து கொள்கிறார்.

    இதையொட்டி அண்ணாமலை மற்றும் மத்திய மந்திரியை வரவேற்று டவுன் எஸ்.என். ஹைரோடு பகுதியில் பா.ஜ.க. மாநில இளைஞரணி துணைத் தலைவர் நயினார் பாலாஜி பெயரில் வழிநெடுகிலும் பேனர், பதாகைகள் வைக்கப்பட்டது.

    இதையறிந்த போலீஸ் உதவி கமிஷனர்கள் ஆவுடையப்பன், காமேஸ்வரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் டவுன் பகுதிக்கு சென்று, அனுமதியின்றி பேனர்கள் வைக்கப்பட்டு இருப்பதாக கூறி அதனை அகற்ற உத்தரவிட்டனர். அதன் பேரில் அங்குள்ள ஒரு பேனரை போலீசார் அகற்றினர்.

    இதையறிந்த நயினார் பாலாஜி தலைமையில் பா.ஜ.க. தொண்டர்கள் எஸ்.என். ஹைரோட்டில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    சம்பவ இடத்திற்கு போலீஸ் உதவி கமிஷனர்கள் ஆவுடையப்பன், காமேஸ்வரன் ஆகியோர் சென்று பா.ஜ.க.வினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அனுமதி இல்லாமல் பதாகைகள் வைக்கப்பட்டு உள்ளது. இதற்கு உரிய முறையில் அனுமதி வாங்க வேண்டும். இல்லையென்றால் அதனை அகற்றுவோம் என போலீசார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மறியலை கைவிட்டு பேனர்களுக்கு அனுமதி வாங்கும் ஏற்பாடுகளை தொடங்கினர்.

    ×