என் மலர்
திருநெல்வேலி
- இணை பேராசிரியர் ரஜினிமாலா வறட்சி மேலாண்மை தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார்.
- வேளாண்மை அலுவலர் மணி சிறுதானியங்களின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
சேரன்மகாதேவி:
சேரன்மகாதேவி வட்டாரம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் மாநில வேளாண் வளர்ச்சி திட்ட வழிகாட்டுதலின் படி உலகன்குளம் கிராமத்தில் கிராம வேளாண் முன்னேற்றக் குழுவிற்கான பயிற்சி சேரன்மகாதேவி ஒன்றிய தலைவர் பூங்கோதைகுமார் தலைமையில் நடத்தப்பட்டது.
சேரன்மகாதேவி வேளாண்மை உதவி இயக்குநர் உமாமகேஸ்வரி, விவசாயிகள் மற்றும் சகோதர துறை சார்ந்த அலுவலர்களை வரவேற்று பேசினார்.அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலையம் இணை பேராசிரியர் ரஜினிமாலா மண் பரிசோதனை, விதைநேர்த்தி, விதை கடினபடுத்துதல், வறட்சி மேலாண்மை தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார். தோட்டக்கலை உதவி இயக்குநர் பாலன், வேளாண் பொறியியல்துறை உதவி பொறியாளர் சண்முகசுந்தரம், வேளாண் வணிகம் மற்றும் வேளாண் விற்பனைத்துறை உதவி வேளாண்மை அலுவலர் விக்னேஷ் ஆகியோர் துறைசார்ந்த திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர்.
வேளாண்மை அலுவலர் மணி சிறுதானியங்களின் முக்கியத்துவம் குறித்தும், துணை வேளாண்மை அலுவலர் வரதராஜன் கிசான் கடன் அட்டை குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர். முடிவில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் சதிஷ்குமார் நன்றி கூறினார்.
இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர்கள் சேக் முகமது அலி, சக்தி, கணேசன், தமிழரசன், கலா, கார்த்திகா மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் கார்த்திகேயன் ஆகியோர் செய்திருந்தனர்.
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மாவட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தின் சார்பில் வண்ணார்பேட்டையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- அரசு போக்குவரத்து சங்க பொதுச்செயலாளர் ஜோதி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
நெல்லை:
புதிய மோட்டார் வாகன சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த கூடாது, தொழிலாளர்களை பாதிக்கின்ற ஆன்லைன் அபராதத்தை கைவிட வேண்டும், நலவாரிய நிதியில் இருந்து ஆட்டோ தொழிலாளர்க ளுக்கு ரூ.4 லட்சத்தில் வீடு கட்டும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஆட்டோ ஓட்டுநர்க ளுக்கு நலவாரிய ஓய்வூதிய தொகையை ரூ.3 ஆயிரமாக வழங்கிட வேண்டும், ஆன்லைன் பதிவை எளிமைப்படுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மாவட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தின் சார்பில் வண்ணார்பேட்டையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முருகன் தலைமையில் ஆட்டோ சங்கத்தின் மாவட்ட துணை தலைவர்கள் காமராஜ், செல்வன் என்ற சற்குணம், அண்ணாதுரை, நகர செயலாளர் சாகுல், மாவட்ட துணைச் செயலாளர் ஷாஜகான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வக்கீல் ராஜசேகரன், பீடி சங்க மாவட்ட தலைவர் சரவண பெருமாள், அரசு போக்குவரத்து சங்க பொதுச் செயலாளர் ஜோதி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். நெல்லை மாவட்டம் மற்றும் மாநகர பகுதியில் சேர்ந்த ஏராளமான ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
- ஏர்வாடி அருகே கீழக்கட்டளை கிராமத்தில் அமைந்துள்ள மேல்நாட்டு பெருமாள் சுடலை ஆண்டவர் கோவில் கொடைவிழா இன்று மாலை தொடங்குகிறது.
- விழாவின் தொடக்கமாக மாலை 5 மணிக்கு தீர்த்தம் எடுத்து வருதல், கொடி அழைப்பு, கணபதி ஹோமம், இரவு 7.30 மணிக்கு கும்பம் ஏற்றுதல் நடக்கிறது.
ஏர்வாடி:
நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே கீழக்கட்டளை கிராமத்தில் அமைந்துள்ள மேல்நாட்டு பெருமாள் சுடலை ஆண்டவர் கோவில் கொடைவிழா இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. விழாவின் தொடக்கமாக மாலை 5 மணிக்கு தீர்த்தம் எடுத்து வருதல், கொடி அழைப்பு, கணபதி ஹோமம், இரவு 7.30 மணிக்கு கும்பம் ஏற்றுதல் நடக்கிறது. இரவு 8 மணிக்கு அன்னதானம், 9 மணிக்கு கணியான் நிகழ்ச்சி, நள்ளிரவு 2 மணிக்கு சாஸ்தா பிறப்பு நடக்கிறது.
தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு அன்னதானம், 9 மணிக்கு கணியான் நிகழ்ச்சி, மதியம் 12 மணிக்கு மதியக்கொடை, மதியம் 1 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. பின்னர் மாலை 4 மணிக்கு பெருமாளுக்கு பால் வைத்தல், 6 மணிக்கு கணியான் நிகழ்ச்சி, இரவு 8 மணிக்கு அன்னதானம், 9 மணிக்கு கரகாட்டம் நிகழ்ச்சி நடக்கிறது.
தொடர்ந்து 10 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, பின்னர் பொங்கல் வைத்தல் நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு சாமக்கொடை நடைபெறுகிறது. நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு சுவாமி வீதி உலா வருதல், 10 மணிக்கு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதல் நடக்கிறது. கொடை விழாவுக்கான ஏற்பாடுகளை கீழக்கட்டளை ஊர்பொதுமக்கள் செய்து உள்ளனர்.
- உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் ஷிவ் நகரை சேர்ந்தவர் சுரேஷ் பிரசாத் மிஸ்ரா(வயது 70). ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர்.
- நேற்று ராமேஸ்வரத்திற்கு வந்த சுரேஷ் பிரசாத் மிஸ்ரா உள்ளிட்டவர்கள் இரவில் கன்னியாகுமரிக்கு செல்ல முடிவு செய்துள்ளனர்.
நெல்லை:
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் ஷிவ் நகரை சேர்ந்தவர் சுரேஷ் பிரசாத் மிஸ்ரா(வயது 70). ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர். இவர் தனது மனைவி மற்றும் உறவினர்கள் 21 பேருடன் சுற்றுலா புறப்பட்டுள்ளார். நேற்று ராமேஸ்வரத்திற்கு வந்த அவர்கள் இரவில் கன்னியாகுமரிக்கு செல்ல முடிவு செய்துள்ளனர்.
இதற்காக வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்படும் ராமேஸ்வரம்-குமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று இரவு அவர்கள் ராமநாதபுரத்தில் இருந்து ஏறியுள்ளனர். அப்போது பிரசாத் மிஸ்ரா மட்டும் தனது மனைவியுடன் தனி பெட்டியில் பயணம் செய்துள்ளார். இன்று அதிகாலை 2 மணியளவில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு ரெயில் வந்தடைந்தது.
அப்போது, நாகர்கோவில் ரெயில் நிலையம் வந்துவிட்டதாக நினைத்து தம்பதி கீழே இறங்கி விட்டனர். உடனே அங்கிருந்த ரெயில்வே போலீசார் விபரத்தை கூறவே, மீண்டும் தம்பதி தாங்கள் வந்த ரெயிலில் ஏற முயன்றுள்ளனர். ஆனால் அதற்குள் ரெயில் புறப்பட்டு விட்டதால் எதிர்பாராதவிதமாக பிரசாத் மிஸ்ரா நடைமேடைக்கும், ரெயிலுக்கும் இடையே விழுந்தார்.
இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்த போலீசார் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பாளை சாரதா மகளிர் கல்லூரியில் கணித துறையின் ஸ்ரீநிவாச ராமானுஜன் மன்றம் சார்பில் சிறப்பு சொற்பொழிவு நடந்தது.
- கணிதவியல் துறை உதவி பேராசிரியை லிங்கேஸ்வரி விருந்தினர் குறித்து அறிமுக உரையாற்றினார்.
நெல்லை:
பாளை சாரதா மகளிர் கல்லூரியில் கணித துறையின் ஸ்ரீநிவாச ராமானுஜன் மன்றம் சார்பில் சிறப்பு சொற்பொழிவு, கல்லூரி செயலர் யதீஸ்வரி சரவண பவப்ரியா அம்பா ஆசியுடன், கல்லூரி இயக்குனர் பேராசிரியர் சந்திர சேகரன் வழிகாட்டுதலின்படி, கல்லூரி முதல்வர் கமலா தலைமையில் நடந்தது. கணிதவியல் துறை தலைவர் ரேவதி வரவேற்று பேசினார்.
கணிதவியல் துறை உதவி பேராசிரியை லிங்கேஸ்வரி விருந்தினர் குறித்து அறிமுக உரையாற்றினார். தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி கல்லூரி (சுயநிதி பிரிவு) கணிதவியல் துறையின் தலைவர் முத்துகுமாரி சிறப்புரையாற்றினார். முதுகலை 2-ம் ஆண்டு கணிதவியல் துறை மாணவி திவ்யா நன்றி கூறினார்.
- களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் காளிராஜ். இவரது மனைவி மகேஷ்வரி(வயது 40). இவர்களுக்கு 2 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர்.
- மகேஷ்வரி மகளிர் சுய உதவிக்குழு தலைவியாக இருந்து வந்தார்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் காளிராஜ். இவரது மனைவி மகேஷ்வரி(வயது 40). இவர்களுக்கு 2 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர்.
காளிராஜ் மற்றும் அவரது 2 மகன்கள் மாற்றுத்திறனாளிகள் ஆவர். மகேஷ்வரி மகளிர் சுய உதவிக்குழு தலைவியாக இருந்து வந்தார். இந்நிலையில் அவருக்கும், அவரது மகன்களில் ஒருவருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களை மகேஷ்வரியின் தாயார் செல்வக்கனி கவனித்து வந்தார்.
அதே நேரத்தில் குழுவின் மூலம் வாங்கி கொடுத்த பணத்தை சிலர் கட்டாமல் இருந்ததாகவும், அதனாலும் மகேஷ்வரி மன அழுத்தத்திற்கு ஆளானதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று வீட்டில் தனி அறைக்குள் சென்ற மகேஷ்வரி, தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
உடனே அக்கம்பக்க த்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர். பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மகேஷ்வரி பரிதாபமாக இறந்தார். vஇதுகுறித்து களக்காடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அத ன்பேரில் இன்ஸ்பெக்டர் பச்சைமால் வழக்குப்பதிவு செய்து மகேஷ்வரி தற்கொலை குறித்து விசாரித்து வருகின்றனர்.
- ஐமீன்சிங்கம்பட்டி கிராமத்தில் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளில் குடற்புழுநீக்கம் செயல்விளக்கம் செய்து காட்டபட்டது.
- ஆடுகளுக்கு சாண பரிசோதனை செய்து உருளை புழுக்களின் தாக்கம் அதிகமாக இருந்தால் குடற்புழு நீக்கம் செய்யலாம்.
அம்பை:
அம்பாசமுத்திரம் வட்டாரம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத்திட்டத்தின் (சீப்பர்ஸ்) கீழ் ஐமீன்சிங்கம்பட்டி கிராமத்தில் அம்பாசமுத்திர வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கற்பகராஜ்குமார் வழிகாட்டுதலின்படி, விவசாயி ராக்சமுத்து ஆட்டுகொட்டகையில் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளில் குடற்புழுநீக்கம் செயல்விளக்கம் செய்து காட்டபட்டது.
சிங்கம்பட்டி உதவி கால்நடை மருத்துவர் தேவிகா பேசுகையில், மழைக்காலங்களில் ஆடுகளில் குடற்புழுக்கள் மற்றும் உண்ணிகளால் ஏற்படும் பொருளாதார இழப்பை தடுக்க குடற்புழு மற்றும் உண்ணி நீக்கம் செய்ய வேண்டும்.
ஆடுகளுக்கு சாண பரிசோதனை செய்து உருளை புழுக்களின் தாக்கம் அதிகமாக இருந்தால் குடற்புழு நீக்கம் செய்யலாம். ஆடுகளுக்கு மருந்துக் குளியல் அளிக்கும் அன்று இருமடங்கு அடர்த்தியுள்ள உண்ணி நீக்க மருந்தை ஆடுகள் அடைக்கும் கொட்டகைகளின் உட்புற சுவர் மற்றும் சுற்றுபுறத்தின் தரைகளிலும் தெளித்து அங்குள்ள உண்ணிகளை ஒழித்தால் உண்ணிகளின் தாக்குதலை தவர்க்கலாம் என்றார். விவசாயி ராக்சமுத்துவிற்கு வயலில் உண்ணி மற்றும் குடற்புழு நீக்க மருந்துகள் மூலம் ஆடுகளுக்கு செயல்விளக்கம் செய்து காட்டப்பட்டது.
இதற்கான ஏற்படுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஈழவேணி, உதவி வேளாண்மை அலுவலர் விஜயலெட்சுமி மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் தங்கசரவணன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் செய்திருந்தனர்.
- தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூர் கிராமம் உள்ளது. இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
- பஸ்சில் கூட்டம் அதிகமாக இருப்பதாக கூறி காலை மற்றும் மாலை வேளைகளில் கல்லூரிக்கு செல்லும் மாணவிகளை ஏற்றாமல் செல்லும் சூழ்நிலை இருப்பதாக பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர்.
நெல்லை:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூர் கிராமம் உள்ளது. இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு அண்டை கிராமங்களான கண்டபட்டி, இலந்தைகுளம், உடையாம்புளி, காத்தபுரம், நாலங்குறிச்சி, ஓடைமறிச்சான், புதுப்பட்டி, காசிநாதபுரம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து மாணவ-மாணவிகள் வந்து செல்கின்றனர்.
இவர்களில் பெரும்பாலானோர் பள்ளி படிப்பை முடித்து நெல்லையை அடுத்த பேட்டையில் உள்ள ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் மேல்படிப்புக்காக சேர்கின்றனர். இவர்கள் தினமும் கல்லூரிக்கு சென்றுவர வசதியாக காலை 8 மணி அளவில் காசிநாதபுரத்தில் இருந்து மருதம்புத்தூர், உடையாம்புளி, மாறாந்தை வழியாக சீதபற்பநல்லூர், பேட்டை, டவுன் பொருட்காட்சிதிடல் வரையிலும் அரசு பஸ் ஒன்று இயக்கப்பட்டு வருகிறது.
இந்த பஸ் மதியம் 1 மணி, மாலை 6.30 மணி, இரவு 9 மணி என மொத்தம் 4 வேளைகளில் டவுனில் இருந்து காசிநாதபுரத்திற்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் மூலமாக கல்லூரி மாணவ-மாணவிகள் மட்டுமல்லாது வேலைக்காக கிராமப்புறங்களில் இருந்து வரும் நடுத்தர குடும்பத்தினர் அதிகமாக பயன்பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இந்த பஸ்சில் கூட்டம் அதிகமாக இருப்பதாக கூறி காலை மற்றும் மாலை வேளைகளில் கல்லூரிக்கு செல்லும் மாணவிகளை ஏற்றாமல் செல்லும் அவலம் இருப்பதாக பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர். சில நேரங்களில் இடைப்பட்ட பகுதிகளில் இறக்கி விட்டு செல்வதாகவும் அவர்கள் புகார் கூறுகின்றனர்.
இதனை சரி செய்ய மாவட்ட நிர்வாகம் மற்றும் போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த பஸ்சில் கூட்டத்தை சமாளிக்க உடையாம்புளி வரை இயக்கப்படும் பஸ்சை மருதம்புத்தூருக்கு நீட்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஆலங்குளம் ஒன்றிய கவுன்சிலரும், தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. மகளிரணி அமைப்பாளருமான சங்கீதா சுதாகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலனுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அதில், நெல்லையில் இருந்து ராணி அண்ணா கல்லூரி வழியாக மனுஜோதி ஆசிரமம் சென்று உடையாம்புளி வரை இயக்கப்படும் அரசு பஸ்சை மருதம்புத்தூர் வரை நீட்டிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
- அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும்.
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டது.
நெல்லை:
தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் நெல்லை மாவட்ட நிர்வாகிகள் சார்பில் இன்று வண்ணார்பேட்டையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் நாதன் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் முத்து மாலை முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் லோகிதாசன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும். 80 வயதின் தொடக்கத்திலேயே கூடுதல் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை உடனே செயல்படுத்த வேண்டும். சத்துணவு ஓய்வூதியர்களுக்கு தற்போதைய ஓய்வூதியம் ரூ.2,000 என்பதை ரூ. 7,850 ஆக உயர்த்திட வேண்டும். மருத்துவப்படி ரூ. 300, ஈமச்சடங்கு ரூ.25 ஆயிரம் மற்றும் குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.3 லட்சம் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
சங்கத்தின் முன்னாள் மாநில துணைத் தலை வர் குமார வேல், மாநில அமைப்பாளர் ஆறுமுகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட பொருளாளர் ரத்தினவேல் நன்றி கூறினார்.
- மகளிர் தொண்டரணி சார்பில் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
- மதுரையில் நடந்த அ.தி.மு.க. மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரை அவதூறாக பாட்டுப்பாடி கதிரவன் விமர்சித்ததாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
நெல்லை:
நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடை யப்பன் ஆலோசனையின்படி மாவட்ட மகளிரணி, மகளிர் தொண்டரணி சார்பில் மகளிர் தொண்டரணி துணைத்தலை வர் வக்கீல் ஜெனிபர் தினகர் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்தார்.
அதில், மதுரையில் நடந்த அ.தி.மு.க. மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எம்.பி.க்கள் கனிமொழி, ஆ.ராசா ஆகியோரை அவதூறாகவும், அநாகரீக மாகவும் பாட்டுப்பாடி விமர்சித்த கதிரவன், அதனை ரசித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
அப்போது மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மல்லிகா அருள், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் பிரேமா, துணை அமைப்பாளரும், கீழநத்தம் பஞ்சாயத்து தலைவருமான அனுராதா ரவிமுருகன் மற்றும் வழக்கறிஞரணி அமைப்பாளர் செல்வசூடாமணி ஆகியோர் உடன் இருந்தனர்.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் மைதீன்கான் ஆலோசனையின்பேரில், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் அனிதா தலைமையில் மாவட்ட துணை செயலாளர் கிரிஜாகுமார், மகளிரணி சவுந்திரம், பவானி, வக்கீல்கள் ராஜா முகம்மது, மணிகண்டன் ஆகியோர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
- நெல்லை மாவட்ட வக்கீல்கள் சங்கத்தின் சார்பில் நீதிமன்ற பணியை புறக்கணித்து இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- வக்கீல்கள் சங்கத்தினர் உள்ளிட்ட யாரையும் கலந்து ஆலோசிக்காமல் 3 முக்கிய சட்டங்களின் பெயர்களையும் மாற்றியுள்ளது.
நெல்லை:
இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சியவியல் சட்டம் ஆகிய 3 சட்டங்களின் பெயரை இந்தி, சமஸ்கிருத மொழியில் மத்திய அரசு பெயர் மாற்றம் செய்வதற்கு மசோதாவை தாக்கல் செய்துள்ளது.
இதனை எதிர்த்து நெல்லை மாவட்ட வக்கீல்கள் சங்கத்தின் சார்பில் நீதிமன்ற பணியை புறக்கணித்து இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நெல்லை மாவட்ட நீதிமன்றம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வக்கீல்கள் சங்க தலைவர் ராஜேஷ்வரன் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் செந்தில் முன்னிலை வகித்தார்.
இதில் கலந்துகொண்ட வக்கீல்கள் கூறுகையில், மத்திய அரசு சட்டவியல் நிபுணர்கள், பார் கவுன்சில்கள், உயர்நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்றத்தின் வக்கீல்கள் சங்கத்தினர் உள்ளிட்ட யாரையும் கலந்து ஆலோசிக்காமல் 3 முக்கிய சட்டங்களின் பெயர்களையும் மாற்றியுள்ளது.
இதனை கண்டித்து இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இது வக்கீல்களின் தொழில் முறைக்கு எதிரானது என்று கூறி அவர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
இதில் வக்கீல்கள் சுதர்சன், செந்தில்குமார், ஜாபர் அலி, பிரபாகரன் மற்றும் வக்கீல் சங்க செயற்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- கோமதிநாயகத்தின் மகள் கொண்டாநகரத்தில் வீடு கட்டி வருகிறார்.
- சைக்கிள் லாரி மீது உரசியதில் வையாபுரி நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
நெல்லை:
நெல்லையை அடுத்த பேட்டை வி.வி.கே. தெருவை சேர்ந்தவர் வையாபுரி (வயது 65). பந்தல் போடும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி இவரை பிரிந்து சென்றுவிட்டதால் தனியாக வசித்து வந்தார்.
இவரது சகோதரர் கோமதிநாயகத்தின் மகள் கொண்டாநகரத்தில் வீடு கட்டி வருகிறார். அங்கு வீடு கட்டும் பணியை வையாபுரி அடிக்கடி சென்று பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை வையாபுரி கொண்டாநகரத்தை நோக்கி சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பேட்டை ரெயில்வே கேட் அருகே சென்றபோது சாலையோரம் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. இதனால் அவர் லாரியை கடக்க முயன்றபோது அவ்வழியே அரசு பஸ் ஒன்று வந்தது. அதில் படாமல் இருப்பதற்காக வையாபுரி சைக்கிளை இடது பக்கம் திருப்பிய போது லாரி மீது உரசியதில் வையாபுரி நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவர் மீது அரசு பஸ்சின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியது.
இதில் சம்பவ இடத்திலேயே அவர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வையாபுரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






