என் மலர்
உள்ளூர் செய்திகள்

நெல்லையில் இன்று காலை விபத்து- அரசு பஸ் டயரில் சிக்கி தொழிலாளி பலி
- கோமதிநாயகத்தின் மகள் கொண்டாநகரத்தில் வீடு கட்டி வருகிறார்.
- சைக்கிள் லாரி மீது உரசியதில் வையாபுரி நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
நெல்லை:
நெல்லையை அடுத்த பேட்டை வி.வி.கே. தெருவை சேர்ந்தவர் வையாபுரி (வயது 65). பந்தல் போடும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி இவரை பிரிந்து சென்றுவிட்டதால் தனியாக வசித்து வந்தார்.
இவரது சகோதரர் கோமதிநாயகத்தின் மகள் கொண்டாநகரத்தில் வீடு கட்டி வருகிறார். அங்கு வீடு கட்டும் பணியை வையாபுரி அடிக்கடி சென்று பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை வையாபுரி கொண்டாநகரத்தை நோக்கி சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பேட்டை ரெயில்வே கேட் அருகே சென்றபோது சாலையோரம் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. இதனால் அவர் லாரியை கடக்க முயன்றபோது அவ்வழியே அரசு பஸ் ஒன்று வந்தது. அதில் படாமல் இருப்பதற்காக வையாபுரி சைக்கிளை இடது பக்கம் திருப்பிய போது லாரி மீது உரசியதில் வையாபுரி நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவர் மீது அரசு பஸ்சின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியது.
இதில் சம்பவ இடத்திலேயே அவர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வையாபுரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






