என் மலர்
திருச்சிராப்பள்ளி
- கடந்த 1-ந்தேதி தங்க கருட வாகனத்திலும், நேற்று காலை வெள்ளிக்குதிரை வாகனத்திலும் வீதி உலா வந்தார்.
- தேரின் முன் பக்தர்கள் தேங்காய் உடைத்தும், நெய் விளக்கு, சூடம் ஏற்றி வழிபட்டனர்.
திருச்சி:
கோவிந்தா. கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் இன்று நடை பெற்றது. இதில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவத்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்க நாதர்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர்த்திருவிழா 11 நாட்கள் நடைபெறும்.
இவ்வகையில் இந்த ஆண்டிற்கான சித்திரை தேர்த்திருவிழா கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினமும் காலை, மாலை வேளைகளில் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
கடந்த 1-ந்தேதி தங்க கருட வாகனத்திலும், நேற்று காலை வெள்ளிக்குதிரை வாகனத்திலும் வீதி உலா வந்தார். மாலை நம்பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் வீதி உலா வந்து, சித்திரைத்தேர் அருகில் வையாளி கண்டருளினார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி நம்பெருமாள் அதிகாலை 4.30 மணியளவில் கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு காலை 5 மணியளவில் சித்திரைத் தேர் ஆஸ்தான மண்டபம் வந்து சேர்ந்தார். இதையடுத்து காலை 5.15 மணிக்கு மேஷ லக்னத்தில் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

பின்னர் காலை 6 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர். கீழச்சித்திரைவீதியிலிருந்து புறப்பட்டு தேர் தெற்குசித்திரை வீதி, மேற்கு சித்திரை வீதி மற்றும் வடக்கு சித்திரை வீதிகளில் வலம் வந்து மீண்டும் காலை 10 மணிக்கு நிலையை அடைந்தது. பின்னர் தேரின் முன் பக்தர்கள் தேங்காய் உடைத்தும், நெய் விளக்கு, சூடம் ஏற்றி வழிபட்டனர்.
சித்திரை தேர்த்திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் பகுதிகளில் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் மற்றும் தனியார் அமைப்புகள் மூலம் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு நீர் மோர், பானகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
தேரோட்டத்தை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் ஆகியவை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தேரோட்டத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநகர போலீசார் செய்திருந்தனர். நாளை(7-ந்தேதி) இரவு சப்தாவரணம் நிகழ்ச்சியை தொடர்ந்து திருவிழாவுக்கென ஏற்றப்பட்ட கொடியிறக்கப்படும். நாளை மறுநாள் (8-ந்தேதி) இரவு ஆளும்பல்லக்குடன் தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் , இணை ஆணையர் மாரியப்பன், கோவில் உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
- சூறாவளி காற்று வீசியதில் அப்பகுதியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கின் மேற் கூரை பறந்து சென்றது.
- காற்றுடன் பெய்த மழையின் காரணமாக வாழை மரங்கள் முறிந்து போனதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தொட்டியம்:
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியது முதலே சுட்டெரிக்கும் வெயிலால் பொது மக்கள் கடும் அவதி அடைந்து உள்ளனர். அக்னி நட்சத்திரம் தொடங்கியதால் அனல் வீசும் வெப்ப காற்றினால் பொதுமக்கள் வெளியே தலை காட்ட அஞ்சிய நிலையில் நேற்று இரவு சுமார்7.30 மணி அளவில் தொட்டியம் அருகே காட்டுப்புத்தூர் பகுதியில் திடீரென வானில் கருமேகங்கள் சூழ்ந்தது. சூறாவளி காற்று வீசியதில் அப்பகுதியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கின் மேற் கூரை பறந்து சென்றது. அப்போது இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
பலத்த காற்று மற்றும் மழை காரணமாக சில இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளது. இது தவிர வயல் வெளியில் காட்டுப்புத்தூர், சீலை பிள்ளையார்புத்தூர், ஸ்ரீராமசமுத்திரம், மஞ்சமேடு, மற்றும் காட்டுப்புத்தூர் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் விவசாயிகள் ரஸ்தாலி, பூவன், ஏலரசி, கற்பூரவள்ளி, உள்பட பல்லாயிரக் கணக்கான வாழையை பயிரிட்டு வந்தனர். இந்த சூறாவளி காற்றுடன் பெய்த மழையின் காரணமாக வாழை மரங்கள் முறிந்து போனதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட வாழை பயிருக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தீயணைப்பு நிலைய மீட்பு படையினர் விரைந்து வந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
- தீ விபத்தில் பள்ளி மாணவர்கள் சீருடைகள், பழைய ரெக்கார்டு பதிவேடுகள் அனைத்தும் தீயில் கருகியது.
தா.பேட்டை:
திருச்சி மாவட்டம் தா.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே வட்டார கல்வி அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு தா.பேட்டை ஒன்றியத்தில் பணிபுரியும் ஆசிரியர்களின் பதிவேடுகள், பள்ளி மாணவ, மாணவிகள் குறித்தான அனைத்து பதிவேடுகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இந்த வட்டார கல்வி அலுவலகத்தின் அருகே காலியாக இருந்த இடத்தில் சருகுகள், காய்ந்த கட்டைகள் கிடந்தது. நள்ளிரவில் இதில் எதிர்பாராத விதமாக பட்ட நெருப்பு வட்டார கல்வி அலுவலகத்தின் உள்ளே பரவி உள்ளது.
நள்ளிரவு முழுவதும் உள்ளே எரிந்த நிலையில் அதிகாலை அலுவலகத்தில் இருந்து புகை வருவதை அப்பகுதியினர் பார்த்து தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து முசிறி தீயணைப்பு நிலைய மீட்பு படையினர் விரைந்து வந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த ஆசிரியர்கள் அப்பகுதியினர் விரைந்து வந்து பீரோ கணினிகள் உள்ளிட்ட வைகளை உடனடியாக வெளியே கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் பள்ளி மாணவர்கள் சீருடைகள், பழைய ரெக்கார்டு பதிவேடுகள் அனைத்தும் தீயில் கருகியது.
- வி.சி.க. வேட்பாளர் ரவிக்குமார் தேர்தல் அலுவலரிடத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
- நெல்லூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளேன்.
திருச்சி:
திருச்சி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் நடைபெற்ற தேர்தலுக்கான மின்னணு வாக்கு எந்திரங்கள் பெட்டி அரியலூரில் வைக்கப்பட்டுள்ளது. அதை பார்வையிடுவதற்காக இன்று செல்கிறேன்.
விழுப்புரம் பாராளுமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்கு எந்திரங்களை வைக்கப்பட்ட இடத்தில் சி.சி.டி.வி. கேமராக்கள் அரை மணி நேரம் செயலிழந்து உள்ளது. இதுபற்றி வி.சி.க. வேட்பாளர் ரவிக்குமார் தேர்தல் அலுவலரிடத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
இதே போல நீலகிரி, ஈரோடு பகுதிகளில் சி.சி.டி.வி. கேமரா செயல் இழந்துள்ளது சந்தேகத்திற்கு இடமான சில குளறுபடிகள் நடந்துள்ளன. அரியலூரில் வைக்கப்பட்டுள்ள சிதம்பரம் தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்களை விடுதலை சிறுத்தை கட்சியினர் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.
அந்தந்த தொகுதிக்கான தேர்தல் அலுவலகம் சி.சி.டி.வி. எந்திரங்களை கண்காணிக்க வேண்டும். சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் அவைகளை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
பிரதமர் மோடி சமீபகாலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி அதிக இடங்களீல் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்துவது போல் அமைந்துள்ளது.
அவருடைய நிலையை மறந்து பொறுப்பை மறந்து மிகவும் கீழிறங்கி போய் அவருடைய விமர்சனங்களை முன் வைக்கிறார். குறிப்பாக தாலியை பறித்து இஸ்லாமியருக்கு கொடுத்து விடுவார் என்ற அளவுக்கு அவர் பேசுவது அவரது பொறுப்புக்கு அழகல்ல. அது அச்சத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.
வருகிற 9-ந்தேதி ஆந்திராவில் உள்ள நெல்லூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளேன். எங்களது வேட்பாளர்கள் ஆந்திராவில் போட்டியிடுகின்றனர். நாங்கள் போட்டியிடாத மற்ற தொகுதிகளில் நான் பிரசாரம் மேற்கொள்கிறேன்.
இதே போல் மகாராஷ்டிராவில் தாராவில் போட்டியிடுகிற காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களுக்கு பிரசாரம் மேற்கொள்ள உள்ளேன். மகாராஷ்டிராவில் லத்தூர் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேட்பாளர் போட்டியிடுகிறார்.
தெலுங்கானாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் 7 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். அங்கு பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறேன்.
இதுவரையில் அரசியல் வரலாற்றிலேயே டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலை நேரடியாக அமலாக்கத்துறை கைது செய்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்றாகும்.
அதேபோல ஹேமன்சோரளை பொறுப்புள்ள பதவியில் இருக்கிறார். அவரையும் சிறை பிடித்துள்ளனர். இது தவறான ஒரு தவறான முன் மாதிரி என்று அரசியல் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
நாடு எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறது.
வழக்கு செய்த பிறகு அதன் பிறகு கைது செய்ய வேண்டிய துறையினரால் தான் கடந்த காலங்களில் கைது செய்திருக்கிறார்கள். ஆனால் இந்த முறை அமலாக்கதுறையினர் கெஜ்ரிவாலை கைது செய்திருப்பது அதிகாரப் போக்கை வெளிப்படுத்துகிறது.
இதனால் இந்தியா கூட்டணிக்கு எந்த பின்னடைவும் ஏற்படாது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இதனால் பின்னடைவு ஏற்படும். டெல்லியில் எல்லா தொகுதிகளும் காங்கிரஸ்-ஆம்ஆத்மி கூட்டணி கைப்பற்றும் என்று தெரிவித்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- திருச்சி விமான நிலையத்தில் துபாய், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அதிக அளவில் கடத்தல் தங்கம் கைப்பற்றப்பட்டு வருகிறது.
- சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த 3 பயணிகளின் டிராவல் பேக்கில் சோதனை செய்தபோது அதில் சுருள் வடிவில் மறைத்து எடுத்து வந்த 235 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
கே.கே. நகர்:
வெளிநாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் அதிக அளவில் கடத்தல் தங்கம் கடத்தப்பட்ட வருவது, அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் வாடிக்கையாகி உள்ளது. திருச்சி விமான நிலையத்தில் துபாய், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அதிக அளவில் கடத்தல் தங்கம் கைப்பற்றப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த ஏர் ஏசியா விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த 3 பயணிகளின் டிராவல் பேக்கில் சோதனை செய்தபோது அதில் சுருள் வடிவில் மறைத்து எடுத்து வந்த 235 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு இந்திய ரூபாயில் ரூ.16.17 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- வெப்பத்தை தணிப்பதில் எலுமிச்சை பழம் முக்கிய பங்காற்றி வருகிறது.
- கோடை காலம் முடியும் வரை எலுமிச்சை பழத்தின் விலை குறையாது.
திருச்சி:
தமிழகத்தில் கோடை வெயில் அனல் பறக்கிறது. இதில் உடல் வெப்பத்தை தணிப்பதில் எலுமிச்சை பழம் முக்கிய பங்காற்றி வருகிறது. நன்னாரி சர்பத், எலுமிச்சை ஜூஸ், லெமன் டீ போன்ற வற்றுக்கு எலுமிச்சை பழம் பயன்படுத்தப்படுகிறது.
மேலும் இது எளிய மக்களின் தேர்வாகவும் எலு மிச்சை உள்ளது. தற்போது இதன் தேவை அதிகரித்து விளைச்சல் குறைந்துள்ள காரணத்தினால் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.
பெரம்பலூரில் எலு மிச்சை பழங்களின் விலை 2 மடங்காக உயர்ந்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு முதல் தர எலுமிச்சை பழம் ஒன்று ரூ.4-க்கும், 2-ம் தர பழம் ஒன்று ரூ.2-க்கும் விற்பனையானது. ஆனால் தற்போது விலை உயர்ந்து முதல் தர எலுமிச்சை பழம் ஒன்று ரூ.8-க்கும், 2-ம் தர பழம் ஒன்று ரூ.4-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ எலுமிச்சை பழம் ரூ.240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து எலுமிச்சை பழம் விற்பனை செய்யும் வியாபா ரிகள் கூறுகையில், பெரம்ப லூருக்கு அயிலூர் குடிகாடு, சிறுகன்பூர், திருச்சி மாவட்டம், திருப்பட்டூரில் இருந்து எலுமிச்சை பழம் விற்ப னைக்கு வருகிறது. வெயில் காலத்திற்கு முன்பு குறைந்த விலையில் விற்பனை செய் யப்பட்ட எலுமிச்சை பழம் தற்போது கோடை வெயி லினால் வரத்து குறைவாலும், தேவை அதிகமானதாலும் அவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
பெரம்பலூரில் எண் ணிக்கை அடிப்படையில் எலுமிச்சை பழம் விற்பனை செய்யப்படுகிறது. கோடை காலம் முடியும் வரை எலுமிச்சை பழத்தின் விலை அதிகரிக்குமே தவிர குறையாது என்றனர்.
மணப்பாறை காமராஜர் மார்க்கெட் காய்கறி கமிஷன் மண்டி உரிமையாளர் நாகூர் கனி கூறியதாவது:-
மணப்பாறை காமராஜர் மார்க்கெட்டுக்கு வையம் பட்டி, துவரங்குறிச்சி, விராலி மலை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளிலிருந்து விவசாயிகள் எலுமிச்சை பழங்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

தினமும் இங்கு 200 மூட்டை எலுமிச்சை பழங்கள் ஏலம் விடப்படுகிறது. ஒரு மூட்டை 50 கிலோ எடை இருக்கும். இங்கு வரும் 200 முட்டை எலுமிச்சை பழங்க ளில் 80 சதவீதம் உள்ளூர் சில்லறை வியாபாரிகளுக்கு செல்கிறது.
மீதமுள்ளவை ஒட்டன்சத்திரம் வியாபாரிகள் மூலமாக கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது மேற்கண்ட பகுதி களில் கடும் வறட்சி நிலவி வருவதால் விளைச்சல் சரிந்து உள்ளது. ஆகவே மார்க்கெட் டுக்கு 50, 60 மூட்டை எலுமிச்சை பழங்கள் மட்டுமே வருகின்றது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு மூட்டை எலு மிச்சை பழம் ரூ. 2000 முதல் 2500க்கு ஏலம் விடப்பட்டது. தற்போது தேவை அதிகரித்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ரூ. 7000 வரை ஏலம் போகிறது. இதனால் சில்லறை கடைக ளில் ஒரு எலுமிச்சை பழத்தின் விலை ரூ. 12 என நிர்ண யிக்கப்பட்டுள்ளது. நன்னாரி சர்பத்தின் விலையும் பல இடங்களில் 20 லிருந்து ரூ. 25 வரை விலை உயர்ந்துள்ளது.
- தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல்கள் திறக்கப்பட்டது.
- பந்தல் முழுவதும் எரிந்து சேதமானது.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதிகளில் கோடை காலத்தை முன்னிட்டு தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல்கள் திறக்கப்பட்டது.
இதில் தி.மு.க. மாவட்ட நெசவாளர் அணி தலைவர் பழனியப்பன் சார்பில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அமரடக்கி பகுதியில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.
நேற்று இரவு இந்த நீர் மோர் பந்தலுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து விட்டனர். இதில் பந்தல் முழுவதும் எரிந்து சேதமானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பழனியப்பன், தி.மு.க. நிர்வாகி ராமநாதன் உள்ளிட்டோர் சம்பவம் குறித்து ஆவுடையார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோடை காலத்தை முன்னிட்டு தி.மு.க. சார்பில் வைக்கப்பட்டிருந்த நீர் மோர் பந்தல் மர்ம நபர்களால் தீ வைக்கப்பட்ட அப்பகுதியில் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பொதுமக்களின் அத்யாவசிய தேவைக்களுக்கான அட்டைகளில் ஆதாரை இணைப்பது அவசியமாக்கப்பட்டு உள்ளது.
- வாகனங்களில் இருந்து தவறி விழுந்ததா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
லால்குடி:
ஆதார் கார்டு என்பது தற்போது இந்திய குடிமக்களின் மிக முக்கிய ஆவணமாக மாறி உள்ளது. வங்கி கணக்கு, பேன் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்ட பொதுமக்களின் அத்யாவசிய தேவைக்களுக்கான அட்டைகளில் ஆதாரை இணைப்பது அவசியமாக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு இணைக்கவில்லை என்றால் மேற்கண்ட சேவைகள் கிடைக்காது என்ற நிலை உள்ளது.
மேலும் தற்போது தமிழக அரசால் பெண்களுக்கு வழங்கப்படும் மகளிர் உரிமை தொகை பெறுவதற்கு வங்கி கணக்கு அவசியம். அவ்வாறு வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்றால் ஆதார் கார்டு அவசியம். அவ்வாறு ஆதார் கார்டு இருந்தாலும் அது புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். இதன் காரணமாக பலர் ஆதார் கார்டு விண்ணப்பித்திருந்தனர். மேலும் ஆதார் கார்டு புதுப்பிக்கவும் செய்தனர். இவர்களுக்கு ஆதார் கார்டு தபால் மூலம் நேரடியாக வீட்டிற்கே அனுப்பப்படும்.
அவ்வாறு அனுப்பப்பட்ட ஆதார் கார்டுகள் திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள பூவாளூர் கிராமத்தில் ரோட்டில் வீசப்பட்டு கிடந்தது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 500க்கும் மேற்பட்ட ஆதார் கார்டுகள் பூவாளூரில் உள்ள நிர்மலா என்பவரின் வீட்டின் முன்பாக கொட்டிக்கிடந்தது. ஆதார் கார்டுகளில் உள்ள அனைத்து முகவரியும் பூவாளுரை சேர்ந்ததாக உள்ளது. இந்த செய்தி அப்பகுதி முழுவதும் பரவியது. இதனால் ஏற்கனவே ஆதார் கார்டுக்கு விண்ணப்பித்திருந்த பொதுமக்கள் அங்கு வந்து தங்கள் முகவரி உள்ளதா என தேடி பார்த்து எடுத்து சென்றனர். இது குறித்து வருவாய் துறை மற்றும் காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
பொதுமக்களுக்கு தபால் மூலம் வந்த ஆதார் கார்டுகளை சரியாக வீடுகளுக்கு சென்று டெலிவரி செய்யாமல் தபால் ஊழியர் யாரேனும் வீசி சென்றனரா? அல்லது வாகனங்களில் இருந்து தவறி விழுந்ததா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
- கடந்த சில வருடங்களுக்கு முன்பு கேபிள் சேகர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
- குற்றவாளிகள் குறித்து உடனடியாக எந்த தகவலும் தெரியவில்லை.
திருச்சி:
திருச்சி அரியமங்கலம் திடீர் நகரை சேர்ந்தவர் கேபிள் சேகர். இவர் முன்னாள் அ.தி.மு.க. பகுதி செயலாளராகவும், திருச்சி மாநகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலராகவும் பதவி வகித்தவர். இவரது மனைவி கயல்விழி சேகர். இவர் முன்னாள் திருச்சி மாநகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர் ஆவார். கேபிள் தொழில் மட்டுமல்லாமல் பன்றி வளர்த்த வருகின்றனர்.
கேபிள் சேகரின் மகன் முத்துக்குமார் (வயது 27). டிப்ளமோ என்ஜினியர். இந்த நிலையில் பன்றி வளர்ப்பதில் இவர்கள் குடும்பத்திற்கும் கேபிள் சேகரின் சகோதரர் பெரியசாமி குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் வந்தது. தொழில் போட்டியில் ஏற்பட்ட தகராறில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கேபிள் சேகர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அன்றிலிருந்து இன்று வரை இந்த முன்விரோதம் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்நிலையில் திருச்சி அரியமங்கலம் எஸ்.ஐ.டி பேருந்து நிறுத்தம் அருகே இன்று காலை சுமார் 11 மணியளவில் பட்டப் பகலில் கேபிள் சேகரின் மகன் முத்துக்குமார் சரமாரியாக ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கியுடன் வந்த சில மர்ம நபர்கள் அவருடைய முகத்தை வெட்டி சிதைத்துவிட்டு தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருச்சி மாநகர அரியமங்கலம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்துக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் நடந்த இடத்தில் சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் முதல் கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். முதல் கட்ட விசாரணையில் தொழில் போட்டி மற்றும் முன்விரோதத்தில் இந்த கொலை நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. குற்றவாளிகள் குறித்து உடனடியாக எந்த தகவலும் தெரியவில்லை. கொலை செய்யப்பட்ட முத்துக்குமார் மீதும் வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது .திருச்சி அரியமங்கலத்தில் இன்று பட்டப்பகலில் நடந்த இந்த கொடூர கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
- மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
- வெடிகுண்டு நிபுணர் குழுவினர் உடனடியாக விமான நிலையத்திற்கு வருகை தந்து சோதனை செய்து வருகின்றனர்.
கே.கே. நகர்:
திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளான மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், அபுதாபி, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இவை தவிர உள்நாட்டு விமான சேவைகளாக ஐதராபாத், பெங்களூரு, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இயக்கப்படும் விமானங்களை பயணிகள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்திற்கு இன்று காலை முகநூல் பகுதியில் தனிநபர் ஒருவர் திருச்சி விமான நிலையத்தில் விரைவில் வெடிகுண்டு வெடிக்க இருப்பதாகவும் 4 இடங்களில் இந்த வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் தகவல் அனுப்பியதாக தெரிகிறது.
இதனை அறிந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். வெடிகுண்டு நிபுணர் குழுவினர் உடனடியாக விமான நிலையத்திற்கு வருகை தந்து சோதனை செய்து வருகின்றனர்.
பயணிகளின் வாகனங்கள் மற்றும் உடைமைகள் தீவிர சோதனைக்கு பின்பு உள்ளே அனுமதிக்கப்படுகிறது. இதனால் திருச்சி விமான நிலையம் பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
- அதிகாலை 3.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு அதிகாலை 3.45 மணிக்கு கொடியேற்ற மண்டபம் வந்தார்.
- விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வருகிற 6-ந் தேதி நடைபெறுகிறது.
திருச்சி:
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. இதையொட்டி இன்று அதிகாலை 3.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு அதிகாலை 3.45 மணிக்கு கொடியேற்ற மண்டபம் வந்தார். பின்னர் காலை 5.30 மணிமுதல் காலை 6.15 மணிக்குள் மேஷ லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து காலை 7.30 மணிக்கு நம்பெருமாள் கொடிமண்டபத்தில் இருந்து புறப்பட்டு காலை 7.45 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார். மாலை 4.30 மணிமுதல் 5.30 மணிவரை பேரிதாடனம் நடைபெறுகிறது.
பின்னர் மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு சித்திரை வீதிகள் உலா வந்து இரவு 8.30 மணிக்கு சந்தனு மண்டபம் வந்தடைகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு யாகசாலையை சென்றடைகிறார். அங்கு நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளுகிறார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நாளை 29-ந் தேதி அதிகாலை 2 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைகிறார். விழாவின் இரண்டாம் நாளான நாளை (29-ந்தேதி) மாலை கற்பகவிருஷ வாகனத்திலும், 30-ந்தேதி காலை சிம்ம வாகனத்திலும், மாலை யாளி வாகனத்திலும், 1-ந்தேதி காலை இரட்டை பிரபை வாகனத்திலும், மாலை கருட வாகனத்திலும், 2-ந்தேதி காலை சேஷ வாகனத்திலும், மாலை அனுமந்த வாகனத்திலும், 3-ந்தேதி காலை தங்க ஹம்ச வாகனத்திலும், மாலை யானை வாகனத்திலும் நம்பெருமாள் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வருகிறார்.
4-ந்தேதி நெல்லளவு கண்டருளுகிறார். 5-ந்தேதி காலை வெள்ளி குதிரை வாகனத்திலும், மாலை தங்க குதிரை வாகனத்திலும் வீதி உலா வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வருகிற 6-ந் தேதி நடைபெறுகிறது. 7-ந்தேதி சப்தாவரணம் நடைபெறுகிறது. 8-ந்தேதி ஆளும்பல்லக்குடன் சித்திரை தேர்திருவிழா நிறைவடைகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரியப்பன், கோவில் உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், அதிகாரிகள், மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
- சோதனையானது நேற்று முன்தினம் இரவு முதல் நடைபெற்று வருகிறது.
- மறுஅறிவிப்பு வரும் வரை சோதனை தொடரும் என மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.
கே.கே.நகர்:
கொல்கத்தா, டெல்லி, மும்பை, ஹைதராபாத் ஆகிய விமான நிலையங்களுக்கு நேற்று மர்மநபர்களால் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதையடுத்து நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
திருச்சி விமான நிலையத்தில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
விமான நிலையத்தின் உள்ளே நுழையும் வாகனங்களை தீவிர சோதனைக்கு பின்பு அனுமதித்து வருகின்றனர். விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் தமிழக போலீசாரின் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார், சோதனை செய்யப்பட்ட பின்பு வாகனங்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றது.
அதற்கு அடுத்தபடியாக விமான நிலைய நுழைவு வாயிலில் மோப்பநாய் உதவியுடன் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்து வருகின்றனர்.
இதில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் அவர்களது உடமைகளை பிரித்து சோதனை செய்யும் நிலை இருந்து வருகிறது.
மேலும் பயணிகளின் உடைமைகளை ஸ்கேனர் கருவிக்கொண்டு சோதனை செய்யப்பட்ட பின்பு முனைய வளாகத்திற்குள் அனுமதித்து வருகின்றனர். மற்றும் பயணிகளை ஸ்கேனர் கருவிக்கொண்டு விமான நிறுவனத்தினர் சோதனை செய்யப்பட்ட பின்பே விமானத்தில் பயணம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
இந்த சோதனையானது நேற்று முன்தினம் இரவு முதல் நடைபெற்று வருகிறது. எனவும் மறு அறிவிப்பு வரும் வரை இந்த சோதனை தொடரும் என மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர். இந்த சோதனையில் விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி தலைமையில் மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமிஷனர் ஹரி சிங் ஆகியோர் கொண்ட குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
உள்நாட்டு பயணிகள் விமானம் புறப்படுவதற்கு ஒன்றரை மணி நேரத்துக்கு முன்னதாகவும், வெளிநாட்டு பயணிகள் 3 மணி நேரத்துக்கு முன்னதாகவும் விமான நிலையத்துக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.






