என் மலர்
திருச்சிராப்பள்ளி
- பக்கத்து வீட்டு ஜன்னலை எட்டிப்பார்க்க வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமியே கூறிவிட்டார்.
- எங்கள் ஒவ்வொரு தெண்டரும் அகில இந்தியா தலைமைக்கு கட்டுப்பட்டவர்கள்.
திருச்சியில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியிருப்பதாவது:-
என்டிஏ முதல்வர் வேட்பாளர் குறித்து பாஜக நாடாளுமன்ற குழுதான் முடிவு செய்யும். தலைவர்கள் முடிவு செய்வார்கள். பக்கத்து வீட்டு ஜன்னலை எட்டிப்பார்க்க வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமியே கூறிவிட்டார். எங்கள் கூட்டணியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.
அதனால், திமுக இதுகுறித்து பேசி அசிங்கப்படாதீர்கள்.
திரும்ப திரும்ப அடுத்தவன் வீட்டு ஜன்னலில் எட்டி பார்க்காதீர்கள். அது அநாகரீகம். பக்கத்து வீட்டில் குழந்தைகள் ராத்திரியில் எப்படி வேணாலும் இருக்கும்.. அதை போய் எட்டிப் பார்ப்பீர்களா?
என்னுடைய வரம்பு மாநிலத்திற்கு உட்பட்டது. ஆனால், கூட்டணி பற்றி முடிவு செய்வது அகில இந்தியா தலைமைதான்.
கூட்டணி குறித்து பாஜகவும்- அதிமுகவும் பேசி என்ன முடிவு அறிவிச்சாலும் எனக்கு சம்மதம், எங்கள் கட்சிக்கு சம்மதம். எங்கள் ஒவ்வொரு தெண்டரும் அகில இந்தியா தலைமைக்கு கட்டுப்பட்டவர்கள்.
அமித்ஷா ஏற்கனவே சொல்லிவிட்டார். அவர் என்று வந்தார், கண்டார், வென்றார். அதனால்தான் மறுநாளே 6 மணி நேரத்தில் பதறியது தூத்துக்குடி.
இவ்வாறு அவர் கூறினார்.
- தேசிய ஜனநாயக கூட்டணி வலுப்பெறுவதை பார்த்து தி.மு.க. கூட்டணியினர் அச்சப்படுகிறார்கள்.
- எங்களின் ஒரே இலக்கு தி.மு.க. ஆட்சியை வீழ்த்தி தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை கொண்டு வருவதுதான்.
திருச்சி:
திருச்சியில் நிருபர்களுக்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-
தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என அமித்ஷா பல முயற்சி எடுத்து வருகிறார். அதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியை பலப்படுத்தி வருகிறார்.
தேர்தல் நேரத்தில் விஜய் கூட்டணியில் இணைவது குறித்து தெரியும் என அமித்ஷா கூறியுள்ளார் காத்திருந்து பார்ப்போம்.
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி சாத்தியம்தான். கொள்கை வேறாக இருந்தாலும் தி.மு.க.வை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்திற்காக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளோம்.
தேசிய ஜனநாயக கூட்டணி வலுப்பெறுவதை பார்த்து தி.மு.க. கூட்டணியினர் அச்சப்படுகிறார்கள்.
தமிழகத்தின் இன்றைய நிலையை பார்த்தால் 2036 ல் அல்ல 2026- லேயே தி.மு.க. ஆட்சிக்கு வராது.
பா.ம.க. நிறுவனர் ராமதாசை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சந்தித்தது குறித்து அவர்கள் இருவரிடம் தான் கேட்க வேண்டும்.
தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அ.தி.மு.க. தான் தலைமை. முதல்வர் வேட்பாளர் குறித்து அமித்ஷா தெளிவாக தான் பதில் அளித்துள்ளார்.
தி.மு.க.வை வீழ்த்த ஜெயலலிதா தொண்டர்கள் அனைவரும் ஒரே குடையின் கீழ் வரவேண்டும் என அமித்ஷா முயற்சி செய்தார். 2021லும் அவர் முயற்சி செய்தார். 2026-ல் அது பலன் அளித்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இடையூறு வரும் வகையில் ஏதாவது கருத்து சொன்னால் அது நாகரீகமாக இருக்காது.
உரிய தொகுதிகளை தேர்தல் நேரத்தில் பெற்று நாங்கள் தேர்தலில் போட்டியிடுவோம்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இருப்பது என்பது குறித்து நயினார் நாகேந்திரன் கூறினால் தான் சரியாக இருக்கும். எடப்பாடி பழனிசாமி அது குறித்து ஏன் கூறவில்லை என அவரிடம் தான் கேட்க வேண்டும்.
பா.ம.க., தே.மு.தி.க. தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமா என்பது குறித்தான ஜோசியம் எனக்கு தெரியாது. எங்களின் ஒரே இலக்கு தி.மு.க. ஆட்சியை வீழ்த்தி தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை கொண்டு வருவதுதான்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- அ.தி.மு.க. தலைமையிலான அணி என்பது பா.ஜ.க. தலைமையிலான அணி என்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளது.
- பா.ஜ.க., பா.ம.க. இருக்கும் இடத்தில் நாங்கள் இருக்க மாட்டோம்.
திருச்சி:
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. தலைமையிலான 2 அணிகளுக்கான மோதலாக தான் அமையும். அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. இருப்பதால் அதனை வீழ்த்த வேண்டிய அவசியம் உள்ளது.
அ.தி.மு.க. தலைமையிலான அணி என்பது பா.ஜ.க. தலைமையிலான அணி என்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளது. அ.தி.மு.க.வை விழுங்குவதுதான் பா.ஜ.க.வின் செயல் திட்டம். இதை அ.தி.மு.க.வினர் எப்போது புரிந்து கொள்ளப் போகிறார்கள்.
எங்களுக்கு சீட்டு குறைவது பிரச்சனை இல்லை. நாங்கள் ஆண்ட கட்சியும் கிடையாது. ஆனால் ஆண்ட கட்சி 75 எம்.எல்.ஏ.க்கள் இருக்கும் கட்சி. தேய்மானம் அடைவதற்கு அ.தி.மு.க. உடன்படுகிறதா?
முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார் அண்ணாவை கொச்சைப்படுத்தி வீடியோ வெளியிட்டுள்ளனர். அண்ணா, பெரியாரைக் கொச்சைப்படுத்தும் அவர்களுடன் பயணிப்பது தற்கொலைக்கு சமம்.
பெரியாரை வழிகாட்டியாக ஏற்றுக்கொண்ட நடிகர் விஜய் பெரியார் குறித்து சர்ச்சை வீடியோவுக்கு தனது கருத்தை வெளிப்படுத்தி இருக்க வேண்டும். அவருக்கு ஆலோசனை வழங்குபவர்கள் இது பற்றி தகவல் தெரிவிக்க வேண்டும். பெரியாரை விமர்சித்த பின்னர் விஜய் அமைதியாக இருப்பது ஏன்?
திரை உலகில் போதை கலாச்சாரத்தால் நடிகர்கள் கைது செய்யப்பட்டுள்ளது அதர்ச்சியான ஒன்று. தமிழக அரசு மதுக்கடைகளை மூட வேண்டும். பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். போதைப் பொருட்களை தடுக்க தனி உளவு பிரிவு இருந்தாலும் அதனை தனிப்படை அமைத்து கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.
தமிழக இளைஞர்களை காப்பாற்ற வேண்டும். அ.தி.மு.க. கூட்டணியில் தற்போது வரை பா.ஜ.க. மட்டுமே இருக்கிறது. அந்த கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க. இல்லை. தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணையும் என்ற ஒரு நிலை வந்தால் அப்போது அது குறித்து கருத்து தெரிவிக்கிறேன்.
பா.ஜ.க., பா.ம.க. இருக்கும் இடத்தில் நாங்கள் இருக்க மாட்டோம். எங்களுக்கு குறைந்த எண்ணிக்கையில் தொகுதிகள் கொடுத்தாலும் தி.மு.க. கூட்டணியில் இருப்போம். இதை கூறுவதால் எங்கள் தொண்டர்கள் சோர்வடைய மாட்டார்கள். காரணம் எங்கள் தொண்டர் களை கொள்கை அடிப்படையில் செழுமைப்படுத்தி உள்ளோம். தி.மு.க. கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே சிலர் தொடர்ந்து இதைக் கேட்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- துவாக்குடி துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
- தேவராயநேரி, பொய்கைக்குடி ஆகிய இடங்களில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
திருச்சி:
துவாக்குடி துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணிவரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதையொட்டி துவாக்குடி பகுதியில் நேரு நகர், அண்ணா வளைவு, ஏ.ஓ.எல், அக்பர் சாலை, அசூர், அரசு பாலிடெக்னிக், எம்.டி.சாலை, ராவுத்தன் மேடு, பெல் நகர், இந்திரா நகர், பெல் டவுன்ஷிப்பில் சி-செக்டார் மற்றும் ஏ,பி,இ,ஆர், & பி.ஹச் செக்டார், தேசிய தொழிற்நுட்பக் கழகம், துவாக்குடி மற்றும் துவாக்குடி தொழிற்பேட்டை, தேனேரிப்பட்டி,
பர்மா நகர், தேவராயநேரி, பொய்கைக்குடி ஆகிய இடங்களில் நாளை (செவ்வாய்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மன்னார்புரம் செயற்பொறியாளர் எம்.கணேசன் தெரிவித்துள்ளார்.
- ஜீப்பின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது
- படுகாயம் அடைந்த ஜீப் டிரைவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் முசிறி உதவி கலெக்டராக (கோட்டாட்சியர்) இருந்தவர் ஆரமுத தேவசேனா (வயது 50). இவர் இன்று காலை அலுவலக ஜீப்பில் முசிறியில் இருந்து திருச்சி நோக்கி புறப்பட்டார். ஜீப்பை அலுவலக டிரைவர் ஓட்டிச் சென்றார். ஆரமுத தேவசேனா ஜீப்பில் முன்பக்க இருக்கையில் அமர்ந்திருந்தார். இந்த ஜீப் இன்று காலை ஜீயபுரம் அருகே கரியகுறிச்சி பகுதியில் வந்தபோது விபத்தில் சிக்கியது.
திருச்சியில் இருந்து திருப்பூர் நோக்கி சென்ற அரசு பஸ் கரிய குறிச்சி பகுதியில் நேருக்கு நேர் ஜீப் மீது மோதுவது போல் வந்தது. உடனே டிரைவர் பஸ் மீது மோதாமல் இருக்க ஜீப்பை வேகமாக இடது பக்கம் திருப்பினார்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த ஜீப் சாலையோரம் சாலை பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜே.சி.பி. எந்திரம் மீது பயங்கரமாக மோதியது.
இதில் ஜீப்பின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. உதவி கலெக்டர் ஆராமுத தேவசேனா இடிபாடுகளுக்குள் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். டிரைவர் பலத்த காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இது பற்றி தகவல் அறிந்த ஜீயபுரம் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விபத்தில் உயிரிழந்த உதவி கலெக்டர் ஆராமுத தேவசேனா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், படுகாயம் அடைந்த அவரது ஜீப் டிரைவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தகவல் அறிந்த திருச்சி கலெக்டர் பிரதீப் குமார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.
பலியான ஆர்.டி.ஓ. ஆரமுத தேவசேனாவின் சொந்த ஊர் தேனி மாவட்டம் பெரியகுளம் ஆகும்.
பெண் உதவி கலெக்டர் விபத்தில் சிக்கி இறந்த சம்பவம் வருவாய்த் துறையினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- லால்குடி பூவாளுர் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
- புஞ்சை சங்கேந்தி மற்றும் இருதயபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்.
திருச்சி:
லால்குடி பூவாளுர் துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணிவரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதையொட்டி லால்குடி நகர் பகுதியில் லால்குடி அரசு பொதுமருத்துவமனை, நாகம்மையார்தெரு, ராஜேஸ்வரிநகர், சாந்திநகர், பூவாளூர், பின்னவாசல், தென்கால், மணக்கால், கொப்பாவளி, வழுதியூர், நடராஜபுரம், படுகை, மேட்டாங்காடு, ஆதிகுடி, கொன்னைக்குடி, சாத்தமங்கலம், ஆனந்திமேடு, அன்பில், கீழ்அன்பில், ஜங்கமராஜபுரம், மங்கம்மாள்புரம், குறிச்சி, பருத்திக்கால், அம்மன்நகர், காட்டூர், ராமநாதபுரம், கொத்தமங்கலம், சிறுமயங்குடி, மேட்டுப்பட்டி, வெள்ளனூர், பெருவளநல்லூர், நஞ்சை, சங்கேந்தி, புஞ்சை சங்கேந்தி மற்றும் இருதயபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என லால்குடி செயற்பொறியாளர் அன்புசெல்வம் தெரிவித்துள்ளார்.
இதேபோல், தொட்டியம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட தொட்டியம், அரங்கூர், கமலாபுரம், பாலசமுத்திரம், தோளுர்பட்டி, எம்.புத்தூர், ஏலூர்பட்டி, எம்.களத்தூர், மேய்க்கல் நாயக்கன்பட்டி, தலமலைப்பட்டி, காட்டுப்புத்தூர், நத்தம், காடுவெட்டி, முருங்கை, ஸ்ரீராமசமுத்திரம், உன்னியூர்,
கொளக்குடி, அம்மன்குடி, பூலாஞ்சேரி, அப்பணநல்லூர், தும்பலம், நாடார்காலணி, சேருகுடி, சூரம்பட்டி, கேணிப்பள்ளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை (புதன்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என முசிறி செயற்பொறியாளர் ரவிராம்தாஸ் தெரிவித்து உள்ளார்.
- தஞ்சை மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
- மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவச்சிலையை திறந்து வைக்கிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டங்கள் தோறும் சென்று அரசின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கள ஆய்வு செய்து வருகிறார்.
அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைவது பற்றி அரசு உயர் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்துவதோடு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார்.
அதன்படி 2 நாள் பயணமாக இன்றும் நாளையும் (15, 16-ந்தேதிகள்) தஞ்சை மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
தஞ்சை, திருச்சி, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த 12-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார்.
மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட காவிரி நீர் கல்லணைக்கு இன்று வந்து சேருகிறது. இந்த நிலையில் டெல்டா மாவட்ட பாசனத்திற்காக கல்லணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதற்காக சென்னையில் இருந்து இன்று காலை விமானம் மூலம் புறப்பட்டு திருச்சிக்கு பகல் 12.15 மணிக்கு சென்றார். அங்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ்பொய்யாமொழி உள்ளிட்டோர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்றனர்.
வரவேற்பை பெற்றுக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாலை மார்க்கமாக காரில் கல்லணைக்கு சென்றடைந்தார். அங்குள்ள சுற்றுலா மாளிகையில் தங்கி இருக்கும் அவர் இன்று மாலை 5 மணியளவில் கல்லணையை திறந்து வைத்தார். இதற்காக கல்லணையின் மதகுகள் புதுப்பொலிவுடன் சீரமைக்கப்பட்டு உள்ளது.
கல்லணையில் இருந்து டெல்டா மாவட்டங்களுக்கு காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் ஆறுகள் மூலம் காவிரி நீரை பகிர்ந்து அளிக்கும் வகையில் தண்ணீரை திறந்துவிட்டு மலர்களையும், நெல்மணிகளையும் தூவினார்.
இந்த நிகழ்ச்சி முடிந்ததும் அங்கிருந்து கார் மூலம் தஞ்சாவூர் செல்கிறார். அங்கு சுற்றுலா மாளிகையில் அவர் சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார்.
பின்னர் அவர் சுற்றுலா மாளிகையில் இருந்து 2 கி.மீ. தூரம் ரோடுஷோவாக பழைய பஸ்நிலையம் வரை பொதுமக்களை சந்தித்தவாறு, மனுக்களை பெற்று கொண்டு நடந்து செல்கிறார்.
அதைத் தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவச்சிலையை திறந்து வைக்கிறார். பின்னர் அங்கிருந்து மீண்டும் சுற்றுலா மாளிகை வந்து இரவு தங்குகிறார்.
- அம்பேத்கரை ஏற்றுக்கொண்ட எவனும் எந்த விளம்பர மாயைக்கும் பணியமாட்டான். விலைபோக மாட்டான்.
- அம்பேத்கர் லட்சம் மடங்கு ஹீரோ. லட்சம் சூப்பர் ஸ்டார்களுக்கு சமமானவர்.
திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் பிரமாண்ட மதச்சார்பின்மை காப்போம் பேரணி நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். எங்கு பார்த்தாலும் நீல நீரமாக காட்சி அளித்தது.
பேரணி விழா மேடையில் திருமாவளவன் பேசியதாவது:-
* இப்போது நாங்கள் ஆடுகளுமும் அல்ல.. இழிச்சவாய கூட்டமும் அல்ல... சீறிப்பாயும் விடுதலை சிறுத்தைகள்.
* அடங்க மறுப்போம், அத்து மீறுவோம். திமிறி எழுவோம். திருப்பி அடிப்போம். வீர வணக்கம் வீர வணக்கம்.
* வேரறுப்போம் வேரறுப்போம் சனாதனத்தை வேரறுப்புாம். வென்றெடுப்போம் வென்றெடுப்போம். சமத்துவத்தை வென்றொடுப்போம்.
* மோடி அரசே, மோடி அரசே திரும்பப்பெறு திரும்பப்பெறு. வக்பு சட்டத்தை திரும்பப்பெறு. குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறு.
* பரப்பாதே, பரப்பாதே முஸ்லிம்களுக்கு எதிராக, கிறிஸ்தவர்களுக்கு எதிராக எதிர்ப்பு அரசியலை பரப்பாதே. சிதைக்காதே சிதைக்காதே அரசியலமைப்பு சட்டத்தை சிதைக்காதே.
* சனாதன சக்திகளா, விடுதலை சிறுத்தைகளா. விரட்டி அடிப்போம் விரட்டி அடிப்போம் மதவாத சக்திகளை, சனாதன சக்திகளை விரட்டி அடிப்போம் விரட்டி அடிப்போம்.
* இந்த பேரணி தமிழக அரசியலில் மட்டுமல்ல, இந்திய அரசியலில் பேரதிர்வை உருவாக்குகின்ற பேரணி.
* யார் எந்த கூட்டணி என தேர்தல் கணக்குகள் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். நமக்கு அந்த கவலை இல்லை. எத்தனை இடங்கள் என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். நமக்கு அந்த கவலை இல்லை. யார் முதலமைச்சர்கள் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். நமக்கு அந்த கவலை இல்லை.
* விடுதலை சிறுத்தைகள் திமுக-விடம் சிக்கிக்கொண்டு தவிக்கிறது... அற்பர்களே, அரசியல் அறியாமையில் உளறும் அரைவேக்காடுகளே.. தமிழ்நாட்டின் அரசியலின் திசைவழியை தீர்மானிப்பவர்கள் விடுதலை சிறுத்தைகள். இந்திய தேசிய அரசியலையும் கூர்மைப்படுத்துபவர்கள் விடுதலை சிறுத்தைகள்.
* முதலமைச்சர் பதவியை பற்றி கவலைப்படவில்லை. துணை முதலமைச்சர் பதவி?... எங்களது தந்தை புரட்சியாளர் அம்பேத்கர் பிரதமரை கைப்பற்றுங்கள் என வழிகாட்டியிருக்கிறார். அதுதான் அதிகாரமிக்க பதவி, அதுதான் அரசு.
* தலித்கள், பழங்குடியின மக்கள், நாட்டின் பூர்வீக குடிமக்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும். இதுதான் அம்பேத்கர் கண்ட கனவு.
* எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என எங்களுக்கு தெரியும். திருமாவளவனுக்கு தெரியும். 25 வருடம் இந்த தில்லுமுல்லு அரசியலில் தாக்குபிடித்தவர்கள் விடுதலை சிறுத்தைகள். எங்களுக்கு யாருடைய அட்வைஸும் தேவையில்லை.
* தலித்துகள் இந்துக்களாக இருந்தாலும் கூட தலித்களின் உரிமைகளுக்காக போராடாதவர்கள்தான் பிஜேபிகாரர்கள்.
* அந்த பிஜேபி-யின் செயல்திட்டத்தை நிறைவேற்ற பலபேர் பல வேசம் போடுகிறார்கள். சில பேர் சினிமா புகழோடு வந்திருக்கிறார்கள். ஹீரோ என்ற வேசத்துடன வந்திருக்கிறார்கள். எஸ்.சி. இளைஞர்கள் எல்லாம் சினிமோவோடு, சினிமா ஹீரோக்களுடன் சென்று விடுவார்கள் எனச் சொல்கிறார்கள். நடக்குமா?
* அம்பேத்கரை ஏற்றுக்கொண்ட எவனும் எந்த விளம்பர மாயைக்கும் பணியமாட்டான். விலைபோக மாட்டான். அம்பேத்கரின் அரசியலே வேற.. அதை அவர்கள் புரிந்து கொள்ள முடியாது.
* இன்றைக்கும் அம்பேத்கர் என்று சொன்னால் கோடி மக்கள் குரல் எழுப்புவார்கள். இந்தியா முழுவதும், உலகம் முழுவதும் குரல் எழுப்புவார்கள். கோஷம் எழுப்புவார்கள். சினிமா காரர்களுக்கு அந்தந்த ஏரியாவில் மட்டும் கோஷம் வரும். அம்பேத்கர் லட்சம் மடங்கு ஹீரோ. லட்சம் சூப்பர் ஸ்டார்களுக்கு சமமானவர் அம்பேத்கர்.
* அம்பேத்கரை தலைவராக ஏற்றுக்கொண்ட என் உயிரின் உயிரான விடுதலை சிறுத்தைகள்.... ஒரு வாக்கு சிதறாது.
* சிறுத்தைகள் எப்பக்கமோ அப்பக்கம்தான் வெற்றி. சிறுத்தைகள் எப்பக்கமோ அப்பக்கம்தான் ஆட்சி. அதை தீர்மானிக்கும் வல்லமை படைத்தவர்கள் விடுதலை சிறுத்தைகள்.
இவ்வாறு திருமாவளவன் பேசினார்.
- எதிர்பார்ப்பு என்பது எல்லா தேர்தலிலும் உள்ளது.
- அ.தி.மு.க. இன்னும் வடிவம் பெறவில்லை என்பது கசப்பான உண்மை.
திருச்சி:
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. இன்று திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான வெறுப்பு அரசியலை மத்திய பா.ஜ.க. அரசு கையாண்டு வருகிறது.
இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ளார்கள் என்ற காரணத்தினால் அவர்கள் நலம் என்ற பெயரில் இந்துக்களை அணி திரட்டுகிறார் கள்.
அந்த வகையில் சிறுபான்மையினருக்கு எதிராக ஆட்சி அதிகாரத்தையும் முழுமையாக பயன்படுத்தி வருகின்றனர். சட்டத்தின் பெயரால் ஜனநாயகத்தின் பெயரால் சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்டு வருகின்றனர்.
முத்தலாக், வக்பு, திருத்தச் சட்டம் மதச்சார்பின்மைக்கு, அரசமைப்புக்கு எதிரானது. அரசு அமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் நோக்கில் திருச்சியில் வி.சி.க. சார்பில் நாளை மதசார்பின்மை காப்போம் பேரணி நடைபெறுகிறது.
இந்தியாவில் பிற மாநிலங்களில் ஆர்.எஸ். எஸ்., பா.ஜ.க., சங்பரிவார் அமைப்புகள் மதத்தின் பெயரால் வெறுப்பு அரசியலை பரப்பி இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக் கும் எதிராக வன்முறைகளை கட்டவிழ்த்து வருகின்றனர்.
குடியுரிமை திருத்த சட்டம் அது நிறைவேற்றப்பட்டிருந்தாலும் அந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்துவது தான் விடுதலை சிறுத்தை ஏற்றுக்கொண்ட பேரணி நோக்கமாகும்.
மதவாதத்திற்கு இடம் தராத ஒரு பக்குவப்படுத்தப்பட்ட மண்ணாக தமிழ் மண் தமிழ்நாடு விளங்குகிறது. ஆனால் இன்றைக்கு தமிழ்நாட்டில் அவர்களுக்கு ஒரு இலக்காக வேண்டி மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்துவதற்காக முருகவேல் யாத்திரை முருக பக்தர்கள் மாநாடு இதுபோன்ற செயல்படுத்துகின்றனர்.
அகமதாபாத்தில் ஏற்பட்டுள்ள விமான விபத்தில் எப்படி ஆறுதல் சொல்வது என தெரியவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு கூடுதலாக இழப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும். ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் அரசு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்.
தலைமை தாங்கி இருக்கும் கட்சியுடன் கூட்டணி கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்துவது என்பது அந்த நேரத்தில் உள்ள அரசியல் சூழ்நிலை அடிப்படையில் உள்ளது.
நிபந்தனை அரசியலை கூட்டணிக்குள் செய்யக்கூடாது. எதிர்பார்ப்பு என்பது எல்லா தேர்தலிலும் உள்ளது. கூட்டணியில் நலம் முதன்மையானது.
தி.மு.க.வுக்கு எப்படி கூட்டணி பொறுப்புள்ளதோ அதே போல கூட்டணி கட்சிகளுக்கும் பொறுப்பு உள்ளது.
கூட்டணி ஆட்சி என்பதை நெடுங்காலத்திற்கு முன்பு நிலைப்பாடாகக் கொண்டிருக்கிறோம், கோரிக்கையாக வெளிப்படுத்தி இருக்கும். இன்றைக்கும் அதன் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். அதற்கான காலம் இது இல்லை. வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.விடமிருந்து கூடுதல் சீட் கேட்போம்.
அ.தி.மு.க.வால் வெளியில் உள்ளவர்களையே இணைக்கவில்லை. அமைச்சர் அமித்ஷா கூட்டணிக்காக இரண்டாவது முறை வந்து விட்டார்.
கூட்டணி தயாராக இல்லை. அ.தி.மு.க. இன்னும் வடிவம் பெறவில்லை என்பது கசப்பான உண்மை.
நிரந்தரமாக டாஸ்மாக் மூட வேண்டும் என்பது எங்களது கோரிக்கை. இந்த தேர்தலிலாவது திராவிட முன்னேற்றக் கழகம் நிரந்தரமாக டாஸ்மாக் கடைகளை குறித்து தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்.
எங்கெல்லாம் அரசு இருக்கிறதோ அங்கு ஊழல் உள்ளது. ஊழல் என்பதை சொல்லி ஆட்சியில் இருந்து அகற்றப்படுவது என்பது சொற்பமான நிகழ்வுகள் தான்.
அண்ணாமலை பல்வேறு குற்றச்சாட்டு சொல்லி உள்ளார். ஆனால் இதுவரை எந்த ஆதாரமும் வெளியிடவில்லை.
ஊழல் குற்றச்சாட்டு இருந்தால் முன் வைக்கட்டும் மக்களிடத்தில் எடுத்து வைக்கட்டும், விசாரணைக்கு கொண்டு செல்லட்டும். ஊழல் மிகப்பெரிய பிரச்சனை தான். ஆனால் ஊழலை விட மாதவாதம், வெறுப்பு அரசியல் கொடூரமானது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது தலைமை நிலையச்செயலாளர் பாலசிங்கம், முதன்மைச் செயலாளர் பாவரசு, மண்டல பொறுப்பாளர் பெரம்பலூர் இரா.கிட்டு மற்றும் பலர் உள்ளனர்.
- பட்டா கோரி பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- கம்யூனிஸ்டு கட்சி கூடுதல் தொகுதிகள் கேட்பது தொடர்பாக மு.க.ஸ்டாலின் பார்த்துக்கொள்வார்.
திருச்சி:
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் வீட்டு மனை பட்டாக்கள் வழங்கக்கோரி மனுக்கள் பெறப்பட்டது. மனுக்களை ஏற்று தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு பட்டாக்கள் வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் 56,000 இலவச பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பட்டா கோரி பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணை இன்று திறக்கப்பட்டுள்ளது.
திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடை வரை தங்கு தடையின்றி செல்ல தூர்வாரும் பணிகள் 100 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் 6 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட உள்ளது.
திருச்சி மாவட்டம், பேட்டைவாய்த் தலையில் குடிநீரில் கழிவு நீர் கலந்ததாக கூறப்படும் தகவலில் உண்மையில்லை. குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக மணல் கலந்து வந்தது அதுவும் உடனடியாக சரி செய்யப்பட்டு விட்டது.
அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து எங்களோடு இணைய பலர் காத்திருக்கிறார்கள். இதுவரை பா.ஜ.க.வினரால் தங்கள் கூட்டணியை இறுதிப்படுத்த முடியவில்லை. எங்கள் கூட்டணியில் இருந்து கட்சிகளை தங்கள் கூட்டணிக்கு இழுக்கும் முயற்சியில் எல். முருகன் ஈடுபடுகிறார் . அவரது எண்ணம் நிறைவேறாது.
தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் கம்யூனிஸ்டு கட்சி கூடுதல் தொகுதிகள் கேட்பது தொடர்பாக மு.க.ஸ்டாலின் பார்த்துக்கொள்வார். இது குறித்து தான் கருத்து கூற முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு வரும் திட்டங்களை அமைச்சராகிய நீங்கள் உங்கள் தொகுதிக்கு மாற்றிக் கொள்வதாக ஸ்ரீரங்கம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. பழனியாண்டி குற்றம் சாட்டியுள்ளாரே என்ற கேள்விக்கு பதில் அளித்த கே.என். நேரு, அவர் கூறுவதில் உண்மை இல்லை. அவர் சொல்வது போல திட்டங்களை மாற்ற முடியாது என்றார்.
- பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது.
- ரூ. 80 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
திருச்சி:
திருச்சியில் அமைச்சர் கே.என். நேரு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது.
மேட்டூர் அணை வருகிற 12-ந்தேதி திறக்கப்பட உள்ளதால் கடைமடை வரை தண்ணீர் செல்ல ஏதுவாக ரூ. 80 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
பாசனத்திற்கு ஏதுவாக தூர்வாரும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அடுத்த சம்பா பயிர் நடவு செய்யும் பொழுது அடுத்த கட்டமாக வாய்க்கால், கால்வாய்கள் படிப்படியாக தூர்வாரப்படும்.
தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெற வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளதற்கு நான் எதுவும் கருத்து கூற இயலாது. தலைமை தான் முடிவெடுக்கும்.
இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
- அவதூறு வழக்கை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.
- வழக்கு விசாரணையை ஜூலை 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
திருச்சி:
திருச்சி சரக டிஐஜி வருண்குமார், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்தபோது அவர் குறித்தும், அவருடைய குடும்பத்தினர் குறித்தும் நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களைப் பதிவுசெய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதோடு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் வருண்குமார் குறித்து சமூக வலைதளங்களிலும், செய்தியாளர் சந்திப்பிலும் அவதூறாக பேசியதாக வருண்குமார் தரப்பு குற்றம்சாட்டி வந்தது.
இதையடுத்து, சீமான் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி வருண்குமார் திருச்சி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கு விசாரணை திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இதற்கிடையே, தன் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரிக்க தகுந்தது அல்ல எனக்கூறி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் சீமான் மீது டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கை விசாரிக்க அனுமதி அளித்தது.
அவதூறு வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படும் எனக்கூறிய நீதிபதி, வழக்கு விசாரணையை ஜூலை 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அத்துடன், அன்றைய தினம் சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, சீமானின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.






