என் மலர்
தேனி
- மாரிச்சாமி என்பவர் தனது வீட்டு முன்பு 2 மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி வைத்திருந்தார்.
- போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி ரெயில் நிலையம் அருகே டி.வி.கே.கே.நகரில் செல்வ காளியம்மன் கோவில் உள்ளது. இந்த தெருவில் மாரிச்சாமி என்பவர் தனது வீட்டு முன்பு 2 மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி வைத்திருந்தார். நேற்று நள்ளிரவு இந்த மோட்டார் சைக்கிள்கள் தீ பிடித்து எரிந்து கொண்டு இருந்தது.
மேலும் பெட்ரோல் டேங்க் வெடிக்கும் சத்தமும் கேட்டுள்ளது. இதனை கேட்டு மாரிச்சாமி மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது 2 மோட்டார் சைக்கிள்களும் எரிந்து கொண்டு இருந்ததால் தண்ணீர் ஊற்றி அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இது குறித்து போடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
மோட்டார் சைக்கிள்கள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருக்கலாம் என்று அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அந்த தெருவில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் சோதனை செய்தனர்.
அதில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் ஏதோ ஒரு பொருளை வீசுவது போன்றும், தீ வைப்பது போன்றும் காட்சி பதிவாகி இருந்தது. அதன் பேரில் குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். நள்ளிரவில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உரிமம் இன்றி நாட்டுத்துப்பாக்கியை கார்த்திக் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி அருகே ஒருவர் வீட்டில் நாட்டுத்துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட எஸ்.பி.க்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் எஸ்.பி. தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் தலைமையில் ஏட்டு ராம்குமார் சேதுபதி மற்றும் போலீசார் போடி புதூர் ரெயில்வே லைன் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த அய்யாவு மகன் கார்த்திக் (வயது 42) என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர்.
இதில் உரிமம் இன்றி நாட்டுத்துப்பாக்கியை கார்த்திக் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். அவர் எதற்காக இதனை பதுக்கி வைத்திருந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சித்திரை திருவிழாவை தொடர்ந்து விவசாயம் செழிக்கும் வகையில் தொடர்ந்து மழை பெய்ய வேண்டும் என எதிர்பார்த்துள்ளனர்.
- முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 115.35 அடியாக உள்ளது.
கூடலூர்:
மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது. இதற்காக வைகை அணையிலிருந்து கடந்த 19ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது அந்த தண்ணீர் மதுரையை வந்தடைந்துள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சித்திரை திருவிழாவை தொடர்ந்து விவசாயம் செழிக்கும் வகையில் தொடர்ந்து மழை பெய்ய வேண்டும் என எதிர்பார்த்துள்ளனர். 1000 கனஅடி நீர் திறக்கப்பட்டு படிப்படியாக நீர் திறப்பு குறைக்கப்பட்டது. அதன்படி இன்று 272 கனஅடி நீர் மட்டுமே திறக்கப்படுகிறது. அணைக்கு நீர்வரத்து இல்லை. நீர்மட்டம் 58.07 அடியாக குறைந்துள்ளது.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 115.35 அடியாக உள்ளது. அணைக்கு 209 கனஅடி நீர் வருகிறது. அணையிலிருந்து 105 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.50 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 104.10 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.
- 2011ம் ஆண்டுக்கு பிறகுதான் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாசாரத்தை அதிக அளவில் பரவ விட்டுள்ளனர்.
- நான் பொதுமக்களுக்கு கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் உதவி செய்துள்ளேன்.
கம்பம்:
தேனி மாவட்டம் கம்பம் நந்த கோபாலன் கோவில் சித்திரை திருவிழாவில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தேர்தல் முடிந்த பிறகு செல்லும் இடங்களில் எல்லாம் நீங்கள்தான் வெற்றி பெறுவீர்கள் என மக்கள் கூறுகின்றனர். நான் எந்த வித கருத்து கணிப்பும் நடத்தவில்லை. கடந்த 1999-ம் ஆண்டு இங்கு போட்டியிட்டதில் இருந்து 2011ம் ஆண்டு நடந்த பல தேர்தல்களில் ஓட்டுக்கு பணம் கொடுக்கவில்லை.
2011ம் ஆண்டுக்கு பிறகுதான் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாசாரத்தை அதிக அளவில் பரவ விட்டுள்ளனர். சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் முன்னாள் முதல்வர் பழனிசாமி கோஷ்டியினர் தான் பணம் கொடுத்தனர். அதைப் பார்த்து டோக்கன் கொடுத்த விவகாரம் தெரியவரவே அதை நான் தடுத்து நிறுத்தினேன். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுத்து நான் வெற்றிபெற வில்லை.
தற்போது தேனி பாராளுமன்ற தொகுதியில் டோக்கன் கொடுத்தது யார்? என்று உங்களுக்கே தெரியும். மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மீது பா.ஜ.வுக்கு நல்ல மரியாதை உள்ளது. அதனால்தான் மாநில தலைவர் அண்ணாமலை அ.தி.மு.க. என் கைக்கு வரும் என்று பேசினார். அவர் படித்தவர். 3 ஆண்டுகளாக யாத்திரை நடத்தி வருகிறார். எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க. அழிந்து விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில்தான் அவர் அவ்வாறு பேசினார்.
நான் பொதுமக்களுக்கு கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் உதவி செய்துள்ளேன். மோடி மீண்டும் பிரதமராக வர இந்த தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதன் பிறகு எடப்பாடி பழனிசாமி குறித்து கேள்வி எழுப்பிய போது, கோவில் விழாவுக்கு வந்துள்ளேன். எனவே அவரைப்பற்றி பேசி டென்சனாக்கி விடாதீர்கள் என கூறினார்.
விழாவுக்கு வந்த தி.மு.க. எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன், தினகரனுடன் கைகுலுக்கி நலம் விசாரித்துக் கொண்டனர்.
- பூமாரியின் புகைப்படம், கணவர் பெயர் உள்ளிட்ட விவரங்கள் சரியாக இருந்தது.
- பெயர் மாறி இருப்பதால் பூமாரி வாக்கு செலுத்த அனுமதிக்கப்படவில்லை.
தேனி:
தேனி பங்களாபட்டியை சேர்ந்த இளங்கோவன் மனைவி பூமாரி (வயது 53). இவர் தனது குடும்பத்தினருடன் தேனி எடமால் தெருவில் உள்ள வாக்குச்சாவடிக்கு நேற்று வாக்கு செலுத்த வந்தார். தனது வாக்காளர் அடையாள அட்டையுடன் வாக்குச்சாவடிக்குள் சென்றார்.
அப்போது அவருடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்று வாக்குச்சாவடி அலுவலர்கள் கூறியதாக தெரிகிறது. பின்னர், அவர் தனது வாக்காளர் அட்டையை காண்பித்து, கடந்த தேர்தலில் வாக்களித்தேன் என்றார். பின்னர் வாக்காளர் பட்டியலில் தேடிப் பார்த்தபோது அவருடைய வாக்காளர் விவரத்தில், அவருடைய பெயருக்கு பதில் சிவக்குமார் என்று ஆணின் பெயர் இருந்தது.
ஆனால், அதில் பூமாரியின் புகைப்படம், கணவர் பெயர் உள்ளிட்ட விவரங்கள் சரியாக இருந்தது. பெயர் மட்டும் மாறி இருந்ததால் அவர் தனது வாக்கை பதிவு செய்ய அனுமதி கேட்டு முறையிட்டார். பெயர் மாறி இருப்பதால் அவர் வாக்கு செலுத்த அனுமதிக்கப்படவில்லை.
இதையடுத்து அவர் சுமார் 1 மணி நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார். இந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- சந்திரன் தனது மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு வாக்களிக்க பெயர் உள்ளது.
- பூத் சிலீப் வழங்கப்பட்டும் அதிகாரிகள் குளறுபடியால் பெயர் இறந்ததாக கூறியதால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடியை சேர்ந்தவர் சந்திரன் (வயது 56). கூலித்தொழிலாளியான இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இன்று அப்பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு சென்ற போது அவர் இறந்துவிட்டதாக வாக்காளர் ஜாபிதாவில் இருந்துள்ளது. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சந்திரன் தனது மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு வாக்களிக்க பெயர் உள்ளது. தனது பெயர் மட்டும் எவ்வாறு விடுபட்டது? என கேள்வி எழுப்பினார்.
நகராட்சி அலுவலகத்தில் சென்று விண்ணப்பம் அளித்து புதிதாக வாக்காளர் அட்டைக்கு மனு அளிக்குமாறு அவர்கள் தெரிவித்தனர்.
பூத் சிலீப் வழங்கப்பட்டும் அதிகாரிகள் குளறுபடியால் பெயர் இறந்ததாக கூறியதால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.
- 10 ஆண்டு சிறப்பான ஆட்சியை தந்த பிரதமர் மோடி தான் 3ம் முறையாக பிரதமராக வர வேண்டும்.
- என்னுடைய வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
தேனி:
இந்தியாவில் 18-வது பாராளுமன்ற தேர்தல் இன்று தொடங்கி ஜூன் மாதம் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தேனி பெரியகுளம் பகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாக்களித்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
கே: தேர்தல் முடிவு எப்படி இருக்கும்?
நடைபெற்றுக்கொண்டிருக்கக்கூடிய இந்திய தேசத்தினுடைய தலைவிதியை யார் நிர்ணயிக்கின்ற தேர்தலாக பாராளுமன்ற தேர்தல் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
10 ஆண்டு சிறப்பான ஆட்சியை தந்த பிரதமர் மோடி தான் 3ம் முறையாக பிரதமராக வர வேண்டும் என்று இந்தியா முழுவதும் உள்ள பொதுமக்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். உறுதியாக 3ம் முறையாக பிரதமர் மோடிதான் வருவார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
கே: உங்களது வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?
என்னுடைய வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. உறுதியாக நான் வெற்றி பெறுவேன் என்று கூறினார்.
- பாராளுமன்ற தேர்தலில் தங்களது வாக்குகளை வீணடிக்காமல் என்னை போல் வெளிநாட்டில் பணிபுரியும் தமிழர்கள் வாக்களிக்க வேண்டும்.
- தமிழக அரசு அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மூலம் வாக்களிப்பது அவசியம் குறித்து பல்வேறு வகையான விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது வரவேற்கத்தக்கது.
சின்னமனூர்:
தேனி மாவட்டம் சின்னமனூர் தேரடி தெருவை சேர்ந்த பால சுப்பிரமணி மற்றும் சுமதி தம்பதியின் மகன் நாக அர்ஜூன் (வயது 23). இவர் அமெரிக்காவில் மெக்சிகோ பகுதியில் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தற்போது 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தனது வாக்குரிமையை செலுத்த வேண்டும் என்பதற்காக தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தலில் தங்களது வாக்குகளை வீணடிக்காமல் என்னை போல் வெளிநாட்டில் பணிபுரியும் தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் எனவும், தற்போது தமிழக அரசு அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மூலம் வாக்களிப்பது அவசியம் குறித்து பல்வேறு வகையான விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது வரவேற்கத்தக்கது எனவும் கூறினார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்,
இந்தியாவில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக அமெரிக்காவில் இருந்து வந்துள்ளேன். என்னுடன் இந்தியாவை சேர்ந்த பலரும் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் சிலர் என்னுடன் வந்தனர். மேலும் பலர் அந்தந்த மாநிலங்களில் நடைபெறும் வாக்குப்பதிவு நாளில் வருகை தர உள்ளனர்.
உள்ளூரில் இருந்தால்கூட நாம் வாக்களித்து என்ன மாற்றம் வந்துவிட போகிறது என்று சிலர் நினைத்து வீட்டிலேயே இருந்து விடுகின்றனர். இது தவறான செயலாகும். என்னைப்போல வேலை நிமித்தமாக வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வசிப்பவர்களும் சொந்த நாட்டிற்கு வந்து தங்கள் வாக்குரிமையை செலுத்த நான் முன்மாதிரியாக இருக்க விரும்புகிறேன் என்றார்.
வாக்குப்பதிவிற்காக அமெரிக்காவில் இருந்து வந்த நாக அர்ஜூனனை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
- பஸ் நிலையத்தில் போதிய அளவில் இடவசதி இல்லை.
- புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு தகுந்த இடம் கிடைக்கவில்லை.
வருசநாடு:
தேனி மாவட்டம் வருசநாடு கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு பஸ் நிலையம் கட்டப்பட்டது. அப்போதைய காலத்தில் வருசநாடு பகுதிக்கு குறைந்த அளவிலான பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டது. இதனால் குறைந்த அளவிலான இடத்தில் பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வருசநாட்டில் இருந்து நாள்தோறும் 30-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இதனால் பஸ் நிலையத்தில் போதிய அளவில் இடவசதி இல்லை. எனவே பஸ் நிலையத்தை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு தகுந்த இடம் கிடைக்கவில்லை. அதேபோல வருசநாடு கிராமத்தில் புதிய அரசு அலுவலகங்கள் கட்டுவதற்கும் இடங்கள் கிடைக்காத நிலை இருந்து வந்தது.
இந்த நிலையில் சின்னமனூரைச் சேர்ந்த பரமசிவம் என்ற விவசாயி தாமாக முன்வந்து வருசநாடு கிராமத்தில் பஸ் நிலையம் மற்றும் அரசு அலுவலகங்கள் கட்டுவதற்காக தனக்குச் சொந்தமான 2.36 ஏக்கர் நிலத்தை தானமாக ஆளுநர் பெயருக்கு பத்திரம் பதிவு செய்து வழங்கினார். அதற்கான ஆவணங்களை வருசநாடு ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்துவிடம் வழங்கினார். பஸ் நிலையம் அமைக்க இடம் தானமாக வழங்கிய பரமசிவத்தின் செயலைக்கண்டு அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டு தெரிவித்தனர்.
- வழிபாடு நடத்தி விவசாய பணிகளை தொடங்குவதே இந்த விழா.
- நாட்டார்கள் கூடி வெற்றிலைப்பிரி விழா கொண்டாடுவது வழக்கம்.
மேலூர்:
மதுரை மாவட்டம் மேலூர் அருகே வெள்ளலூர் கிராமத்தை தலைமையாக கொண்டு சுற்றி உள்ள 58 கிராமங்கள் இணைந்து வெள்ளலூர் நாடு என பல நூறு ஆண்டுகளாக அழைக்கப்படுகிறது. இந்த வெள்ளலூர்நாடு வெள்ளலூர், அம்பலகாரன்பட்டி, உறங்கான்பட்டி, குறிச்சிப்பட்டி, மலம்பட்டி என 5 மாகாணங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் மூண்டவாசி, வேங்கைப்புலி, சமட்டி, நைக்கான், சாவடைதாங்கி, வெக்காளி, சலிப்புளி, திருமான், செம்புலி, நண்டன்கோப்பன், பூலான் மலவராயன் என 11 கரைகளாக மக்கள் வாழ்கின்றனர்.
ஆண்டுதோறும் இங்கு தமிழ்ப்புத்தாண்டான சித்திரை 1-ந்தேதி வெள்ளலூர் கருங்கல் மந்தையில் நாட்டார்கள் அனைவரும் கூடி வெற்றிலைப்பிரி விழா கொண்டாடுவது வழக்கம். அதாவது வீடுதோறும் வெற்றிலைகளை வழங்கி அதை வைத்து வழிபாடு நடத்தி விவசாய பணிகளை தொடங்குவதே இந்த விழாவாகும்.
அதன்படி நேற்று வெற்றிலைப்பிரி விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி கருங்கல் மந்தை முன்பு நாட்டார்கள் வழிபாடு செய்தனர். பின் அருகில் உள்ள சுனை பாறையில் தமிழ் எழுத்து ப வடிவில் அம்பலகாரர்களும், இளங்கச்சிகளும், பொதுமக்களும் அமர்ந்தனர்.
குவித்து வைக்கப்பட்ட வெற்றிலை கட்டுகளை பிரித்து முதலில் விவசாய பணிகளில் முக்கிய உதவிகள் செய்பவர்களுக்கு வெற்றிலைகள் வழங்கப்பட்டன. பின்னர் பாரம்பரிய வழக்கப்படி 11 கரையினருக்கும், 5 மாகாணத்திற்கும் வெற்றிலை கட்டுகள் வழங்கப்பட்டு அந்த வெற்றிலைகள் ஆங்காங்கே தனித்தனியாக 56 கிராமத்தினர்களும் வெற்றிலைகளை வாங்கி சென்றனர்.
ஒவ்வொரு குடும்பத்தினரும் அந்த வெற்றிலைகளை தங்களுடைய வீட்டின் பூஜை அறையில் வைத்து வணங்கி கலப்பை, மண்வெட்டி, நெல் அளக்க பயன்படும் மரக்கால், கடப்பாரை ஆகியவற்றின் முன்பு வைத்து வழிபட்டனர். பின்னர் வீடுகளில் சேமித்து வைக்கப்பட்ட இயற்கை உரங்களை எடுத்து அவரவர்களின் வயல்களில் கொட்டி நிலத்தை உழுது விவசாய பணிகளை தொடங்கினர். இவ்வாறு செய்வதால் ஆண்டுதோறும் மழை பெய்து, செல்வம் செழித்து விவசாயம் நன்றாக நடைபெறும் என்பது இப்பகுதி மக்களின் பாரம்பரிய நம்பிக்கை ஆகும்.
- தர்ஹா கடந்த 1950-ம் ஆண்டு கட்டப்பட்டது.
- முஸ்லிம்கள் மட்டுமல்லாது அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த ஆண், பெண்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.
கம்பம்:
ஆந்திர மாநிலம் நகரி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் நடிகையும், அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சருமான ரோஜா தனது கணவருடன் தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள தர்ஹாவில் சிறப்பு தொழுகை நடத்தினார்.
கம்பம் கம்பமெட்டுச் சாலையில் கல்வத் நாயகம், அம்பாநாயகம் அடக்கம் செய்யப்பட்ட இடம் உள்ளது. இந்த தர்ஹா கடந்த 1950-ம் ஆண்டு கட்டப்பட்டது. இங்கு முஸ்லிம்கள் மட்டுமல்லாது அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த ஆண், பெண்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆந்திர மாநில சுற்றுலா மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் ரோஜா தனது கணவரும் சினிமா இயக்குநருமான ஆர்.கே. செல்வமணியுடன் கம்பம் தர்ஹாவிற்கு வந்து சுமார் 15 நிமிடம் வழிபாடு செய்தனர். செல்வமணி இஸ்லாமிய முறைப்படி தலையில் கைக்குட்டையை கட்டிக்கொண்டு தொழுகை நடத்தினார். பின்னர் அவர்கள் காரில் புறப்பட்டு சென்றனர்.
இது குறித்து தர்ஹாவை சேர்ந்தவர்கள் கூறுகையில், ரோஜா ஆந்திர மாநில சுற்றுலா மற்றும் இளைஞர் நலத்துறை மந்திரியாக உள்ளார். தற்போது ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபைத் தேர்தலும் வருகிறது. இதில் ரோஜா மீண்டும் நகரி பகுதியில் சட்டசபை உறுப்பினருக்கு போட்டியிடுகிறார். தேர்தலில் வெற்றி பெறவும், ஜெகன்மோகன்ரெட்டி மீண்டும் முதல் மந்திரியாக ஆக வேண்டும் என்பதற்காக சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தனர்.
ரோஜா வருகை குறித்து போலீசாருக்கு எவ்வித தகவலும் தெரிவிக்க வில்லை. அவர் வந்து சென்ற பிறகே இது குறித்த தகவல் அப்பகுதி மக்களிடம் பரவியது.
- பெரியாறு புலிகள் சரணாலய பிரச்சினையிலும், தமிழக உரிமையை காவு கொடுத்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி.
- எதற்காக தேர்தலில் நிற்கிறோம் என்றே தெரியாமல் எடப்பாடி பழனிச்சாமி களம் காண்கிறார். யார் பிரதமர் என்று தெரியாது.
தேனி:
தேனி பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர் டி.டி.வி. தினகரனை ஆதரித்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இன்று தேனியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது,
தமிழக உரிமைகளை காவுகொடுத்த தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் டி.டி.வி. தினகரனை குறிவைத்து பிரசாரம் செய்து வருகின்றனர். அப்போதிலிருந்தே இவரது வெற்றி உறுதியாகிவிட்டது என்று தெரிந்து கொள்ளலாம்.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 152 அடியாக உயர்த்த முயற்சி மேற்கொண்டவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. இந்த அணை பிரச்சினையில் கேரள அரசு தமிழகத்திற்கு எதிரான நிலைப்பாடை எடுத்தபோது அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி போராட்டம் நடத்த போவதாக கூறினார்.
ஆனால் அப்போது மத்தியில் இருந்த காங்கிரஸ் மந்திரி ஜெயராம் ரமேஷ் போராட்டம் நடத்தினால் 2ஜி வழக்கில் கனிமொழி, ராசா ஆகியோர் கைது செய்யப்படுவார்கள் என எச்சரித்ததால் அமைதியாகிவிட்டார். இதேபோல் பெரியாறு புலிகள் சரணாலய பிரச்சினையிலும், தமிழக உரிமையை காவு கொடுத்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி.

மு.க.ஸ்டாலின் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.1000 ஊக்கத்தொகை கொடுக்கப்படும் என்றார். இதுவரை எந்த குடும்பத்திற்காவது அவர் பணம் கொடுத்தாரா?. ஆனால் தேர்தலுக்காக ரூ.500 முதல் ரூ.1000 வரை பணம் கொடுக்க தி.மு.க.வினர் வருவார்கள். அப்போது வாக்காளர்களாகிய நீங்கள் கஞ்சா விற்ற பணம் எங்களுக்கு வேண்டாம் என கூறவேண்டும்.
தி.மு.க. மீண்டும் பழைய புராணத்தை பாடி வருகிறது. வடக்கு வாழ்கிறது. தெற்கு தேய்கிறது என்கிறார்கள். 50 வருடமாக ஆட்சி செய்த காங்கிரஸ்தான் இதற்கு காரணம். தற்போது அந்த கட்சியுடன்தான் கூட்டணி வைத்துள்ளனர். தமிழகத்திற்கு எதுவுமே மத்திய அரசு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை தி.மு.க. வைக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு மட்டும் ரூ.10 லட்சத்தி 76 ஆயிரம் கோடி நிதி தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
மத்திய பா.ஜ.க. ஆட்சியில் தான் சிலிண்டருக்கு மானியம், முத்ரா கடன் திட்டம், ஆவாஜி யோசனா திட்டம் மூலம் குடும்பத்திற்கு நேரடியாக நிதிஉதவி அளித்து வருகிறது. அந்த நிதியை தி.மு.க. அரசு எங்களுக்கு தெரியாமல் எப்படி கொடுக்கலாம் என தடுக்கப் பார்க்கின்றனர். தமிழகத்திற்கு 15 மருத்துவ கல்லூரிகளை கொடுத்துள்ளோம். இதையெல்லாம் மக்களிடமிருந்து மறைத்து தி.மு.க. பொய் பிரசாரம் செய்து வருகிறது.
எதற்காக தேர்தலில் நிற்கிறோம் என்றே தெரியாமல் எடப்பாடி பழனிச்சாமி களம் காண்கிறார். யார் பிரதமர் என்று தெரியாது. யார் ஆட்சி அமைக்கிறார்களோ அவர்களிடம் தமிழக உரிமையை வலியுறுத்துவதாக கூறுகிறார். தற்போது அ.தி.மு.க.வில் உண்மையான தொண்டர்களுக்கு சீட்டு வழங்கப்படவில்லை. கான்ட்ராக்டர்களுக்கும், ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கும் தான் சீட் வழங்கப்படுகிறது. அவர் கட்சி நடத்துவதே கான்ட்ராக்டர்களுக்காக தான். ஜூன் 4ம் தேதி டி.டி.வி. தினகரன் வெற்றி பெற்ற பின்பு உண்மையான அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் இவரது பின்னால் வருவார்கள்.
தமிழகத்தில் 11 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு உள்ளது. இவர்கள் அனைவரும் போட்டிபோட்டு லஞ்சம் வாங்கி அதனை கப்பம்கட்டி வருகின்றனர். ரூ.30 ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளதாக பி.டி.ஆர். பழனிவேல் ராஜனே கூறியுள்ளார். எனவே அந்த பணத்தை வைத்து தேர்தலில் வாக்காளர்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளனர். யார் பிரதமர் என்பதே தெரியாமல் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க போகிறோம் என்கிறார்கள்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மன்மோகன்சிங் என்ற பொம்மை பிரதமரை அமர்த்தி ரூ.12 லட்சம் கோடி கொள்ளையடித்ததை போல மீண்டும் ஒரு கொள்ளையை அரங்கேற்ற இந்த கூட்டணி தயாராகி வருகிறது. எனவே மக்கள் எச்சரிக்கையுடன் இருந்து தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.






