என் மலர்tooltip icon

    தேனி

    • 152 அடியாக உயர்த்த கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளோம்.
    • முல்லை பெரியாறு அணை பிரச்சனையில் அ.தி.மு.க. தான் தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்தியது.

    கூடலூர்:

    முல்லை பெரியாறு அணையை உருவாக்கிய ஜான் பென்னிகுவிக் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு லோயர் கேம்பில் அமைந்துள்ள அவரது மணிமண்டபத்தில் அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் இ.பெரியசாமி கூறியதாவது,

    முல்லை பெரியாறு அணை பிரச்சனையில் தமிழகத்தின் உரிமையை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம். அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுத்தது முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசுதான். அதேபோல் 152 அடியாக உயர்த்த கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளோம். இந்த வழக்கிலும் வெற்றி பெற்று அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவோம் என்றார்.

    அதன் பிறகு பென்னிகுவிக் மணிமண்டபத்திற்கு மரியாதை செலுத்த வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

    முல்லை பெரியாறு அணை பிரச்சனையில் அ.தி.மு.க. தான் தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்தியது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொடர் நடவடிக்கையால் அணையின் நீர்மட்டத்தை 142 அடிவரை உயர்த்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஆனால் அமைச்சர் இ.பெரியசாமி தி.மு.க. ஆட்சியில் தான் இது செயல்படுத்தப்பட்டதாக பொய்யான தகவலை தெரிவித்துள்ளர். தமிழக மக்களுக்கு மிகவும் நன்றாக தெரிந்த விசயத்தை மறைத்து அமைச்சர் இ.பெரியசாமி இவ்வாறு பொய்யான தகவலை கூறுவது ஏற்புடையதல்ல.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விவசாய மற்றும் குடிநீர் வாழ்வாதாரம் அளித்த பென்னிகுவிக்கிற்கு நன்றி செலுத்தும் வகையில் அவரது 184-வது பிறந்தநாள் விழா பொங்கலிட்டு கொண்டாடப்பட்டது.
    • மலேசியாவில் இருந்து சுற்றுலா வந்த பெண்களும் இணைந்து பொங்கல் பானை சுமந்து ஊர்வலமாக வந்தனர்.

    கூடலூர்:

    தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் நீர்பாசன தேவையை பூர்த்தி செய்து வரும் முல்லைப்பெரியாறு அணையை கட்டியவர் கர்னல் ஜான்பென்னிகுவிக். அவரது பிறந்தநாளான ஜனவரி 15-ந்தேதியை அரசு விழாவாக கொண்டாட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி பென்னிகுவிக் மணிமண்டபம் அமைந்துள்ள பகுதியில் அதற்கான முன்னேற்பாடுகளை கலெக்டர் ஷஜீவனா தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

    தேனி மாவட்டம் பாலார் பட்டி கிராமத்தில் வருடம் தோறும் பென்னிகுவிக் பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில் பொங்கல் திருநாளன்று ஊர் பொங்கல் வைத்து கொண்டாடுவது கடந்த 25 ஆண்டு காலமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    முல்லைப் பெரியாறு அணையை தன் சொந்த முயற்சியில் கட்டித் தந்து 5 மாவட்டங்களுக்கு விவசாய மற்றும் குடிநீர் வாழ்வாதாரம் அளித்த பென்னிகுவிக்கிற்கு நன்றி செலுத்தும் வகையில் அவரது 184-வது பிறந்தநாள் விழா பொங்கலிட்டு கொண்டாடப்பட்டது.

    பாலார் பட்டி கிராமத்தினர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து தேவராட்டம், சிலம்பாட்டம் ஆடி காளை மாடுகளுடன் பென்னிகுவிக் உருவப்படத்தை சுமந்துகொண்டு பொங்கல் பானையுடன் ஊர்வலமாக வந்தனர்.

    அவர்களுடன் மலேசியாவில் இருந்து சுற்றுலா வந்த பெண்களும் இணைந்து பொங்கல் பானை சுமந்து ஊர்வலமாக வந்தனர்.

    அதனைத் தொடர்ந்து ஊரின் மையத்தில் உள்ள பென்னிகுவிக் நினைவு அரங்கம் முன்பு அனைவரும் ஒன்றாக பொங்கலிட்டு பென்னிகுவிக் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் தீபாராதனை காட்டி பொங்கல் வைத்து வழிபட்டனர்.

    மலேசியாவில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகளும் கிராம பெண்களுடன் இணைந்து பொங்கல் வைத்து மகிழ்ந்தனர். இந்த கிராமத்து மக்கள் தொடர்ந்து 26 ஆண்டுகளாக பென்னிகுவிக் பிறந்தநாளில் பொங்கல் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

    ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 15 ஆம் தேதி பென்னிகுவிக்கிற்கு பொங்கல் விழா விமர்சையாக கொண்டாடப்படும் நிலையில் அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையுடன் கூடி பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

    இதில் பங்கேற்ற மலேசிய தமிழர்கள் தாங்கள் இந்த அளவிற்கு மிகச் சிறப்பாக ஒரு பொங்கல் கொண்டாட்டத்தை கண்டதில்லை என்றும் பென்னிகுவிக் பற்றி தங்களுக்கு தெரியாத நிலையில் தற்போது முல்லைப் பெரியாறு மற்றும் அதன் வரலாறு குறித்து அறிந்து பிரமிப்பு அடைவதாக தெரிவித்தனர்.

    கிராமத்து மக்களுடைய தேவராட்டம் தங்களை கவர்ந்ததாகவும் தாங்கள் பழகி ஆட விரும்புவதாகவும் கூறினர். அதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு தங்கள் குடும்பத்துடன் வந்து பங்கேற்பதாக கூறி பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    பென்னிகுவிக் மணிமண்டபத்தில் நடந்த பொங்கல் விழாவில் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கலெக்டர் ஷஜீவனா தலைமையில் வருவாய் கோட்டாட்சியர் தாட்சாயணி, உத்தமபாளையம் நகர்மன்ற தலைவர் பத்மாவதிலோகன்துரை, பி.ஆர்.ஓ. நல்லதம்பி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர். இதேபோல் பல்வேறு விவசாய சங்கங்கள் சார்பில் பென்னிகுவிக் மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    • தளவாடப் பொருட்கள் அனைத்தும் லாரிகளில் கொண்டு சேர்த்தபின் தற்போது பராமரிப்பு பணிகள் தொடங்கி உள்ளன.
    • உயர் அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பின், 15 நாட்களுக்கு பின் தளவாடப்பொருட்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டது.

    கூடலூர்:

    தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக விளங்கும் முல்லைப்பெரியாறு அணை தமிழக நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் அணை பராமரிப்புப் பணிகள் முழுவதும் தமிழக நீர்வளத்துறை செய்து வருகிறது.

    அணையில் வழக்கமாக நடைபெறும் பராமரிப்புப் பணிகளுக்கு தளவாட பொருட்களை கொண்டு செல்ல எவ்வித தடையும் செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த போதிலும் கேளர அரசின் தடையால் கடந்த 7 மாதங்களாக அணையில் பராமரிப்புப் பணிகள் எதுவும் செய்ய முடியவில்லை. 2024 டிச.4-ல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதற்காக தமிழக நீர்வளத்துறை சார்பில் இரண்டு லாரிகளில் தளவாடப் பொருட்களை கொண்டு சென்றனர்.

    வண்டிப்பெரியாறு அருகே வல்லக்கடவு சோதனைச் சாவடியில் கேரள வனத்துறையினர் அனுமதி மறுத்து தடுத்து நிறுத்தினர். இதைக் கண்டித்து தமிழகப் பகுதியில் விவசாயிகள் சார்பில் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

    உயர் அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பின், 15 நாட்களுக்கு பின் தளவாடப்பொருட்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தளவாடப் பொருட்கள் அனைத்தும் லாரிகளில் கொண்டு சேர்த்தபின் தற்போது பராமரிப்பு பணிகள் தொடங்கி உள்ளன.

    அணையை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகள், ஆய்வாளர் குடியிருப்புகளில் மட்டும் பராமரிப்பு பணிகள் செய்த போதிலும் மெயின் அணை உள்ளிட்ட பகுதிகளில் எவ்வித பணியும் செய்ய அனுமதிக்கவில்லை.

    குறிப்பாக பேபி அணையை பலப்படுத்தும் பணிக்கும் இதுவரை அனுமதி இல்லை. இது விவசாயிகளின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகள் கூறும்போது:-

    தற்போது அணையை ஒட்டி அமைந்துள்ள ஆய்வாளர் மாளிகை மற்றும் குடியிருப்புகளில் கழிவு நீர் தொட்டியை பராமரிக்க மட்டுமே அனுமதி வழங்கி பணிகள் நடந்து வருகிறது. ஆனால் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள பேபி அணைப்பகுதியில் செய்ய வேண்டிய 14 வேலைக்கான அனுமதியை தருவதில் கேரளா தொடர்ந்து முரண்டு பிடித்து வருகிறது.

    பேபி அணையை விரைவில் பலப்படுத்திய பின் அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • தந்தைக்கும் ரிவன்ராஜாவுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
    • மகனை வெட்டிக்கொன்ற தமிழனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி மாவட்டம் வருசநாடு அருகில் உள்ள சிங்கராஜபுரத்தை சேர்ந்தவர் தமிழன் (வயது55). இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு ரிவன்ராஜா (30) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    ரிவன்ராஜா குடிபழக்கத்திற்கு அடிமையானதால் யாரும் பெண் தர மறுத்துள்ளனர். இதனால் எந்த வேலைக்கும் செல்லாமல் தினமும் குடித்து விட்டு வீட்டில் தனது பெற்றோரிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

    மேலும் தனது தாயிடம் மது குடிக்க பணம் தருமாறு கேட்டும் தொந்தரவு செய்து வந்துள்ளார். நேற்று இரவும் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்தார். இதனால் அவரது தந்தைக்கும் ரிவன்ராஜாவுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

    பின்னர் குடிபோதையில் ரிவன்ராஜா தூங்க சென்று விட்டார். நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த தனது மகனை தமிழன் அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.

    இதில் சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இன்று அதிகாலை வருசநாடு போலீஸ் நிலையத்திற்கு சென்ற தமிழன் தான் வெட்டிய அரிவாளுடன் சரண் அடைந்தார். பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலை செய்யப்பட்ட வாலிபர் உடலை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் மகனை வெட்டிக்கொன்ற தமிழனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தேனியை நோக்கி வந்த சரக்கு வாகனம் பைக் மீது பயங்கரமாக மோதியது.
    • தேவதானப்பட்டி போலீசார் விரைந்து வந்து இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    திண்டுக்கல்:

    தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே ஜி.கல்லுப்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது55). தனது மகன் வீரமுத்து (30)வுடன் பைக்கில் பெரியகுளத்தில் இருந்து வந்து கொண்டிருந்தார்.

    இன்று அதிகாலை தேனி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் டி.வாடிப்பட்டி பிரிவு பகுதியில் வந்தபோது தேனியை நோக்கி வந்த சரக்கு வாகனம் பைக் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட ராஜேந்திரன் மற்றும் அவரது மகன் வீரமுத்து ஆகியோர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியாகினர். இதை பார்த்ததும் சரக்கு வாகன டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேவதானப்பட்டி போலீசார் விரைந்து வந்து இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய சரக்கு வாகன டிரைவரை தேடி வருகின்றனர். புத்தாண்டு தினமான இன்று விபத்தில் தந்தை மகன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    • ராஜவாய்க்காலின் குறுக்கே சிறுபாலம் திரும்ப கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
    • பாலம் கட்டும் பணிகள் முடியும் வரை பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மாற்றுப்பாதையை பயன்படுத்தி ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    தேனி:

    தேனி நகரில் கொட்டக்குடி ஆற்றின் தடுப்பணையில் இருந்து கலெக்டர் அலுவலகம் அருகில் தாமரைக்குளம் கண்மாய் வரை ராஜவாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் தூர்ந்து போனதால் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரும் பணிகள் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. குடியிருப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பழைய பஸ் நிலையத்தில் இந்த வாய்க்கால் சுரங்கப்பாதை வழியாக செல்கிறது. இதில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் தண்ணீர் செல்ல முடியாமல் திரும்பி கொட்டக்குடி ஆற்றுக்கே செல்கிறது.

    இதையடுத்து பழைய பஸ் நிலையம் அருகில் கம்பம் சாலையில் ராஜவாய்க்கால் மேல் உள்ள பழைய தரைப்பாலத்தை இடித்து அகற்றி, ராஜவாய்க்காலை தூர்வாரிவிட்டு புதிதாக பாலம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது. இந்த பாலத்தின் கட்டுமான பணிகள் தொடங்க உள்ளதால் பழைய பஸ் நிலையம் பகுதியில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) முதல் போக்குவரத்து வழித்தடம் மாற்றப்படவுள்ளது.

    இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தேனி பழைய பஸ் நிலையம் அருகில் மதுரை-கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் ராஜவாய்க்காலின் குறுக்கே சிறுபாலம் திரும்ப கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த பாலம் கட்டும் பணிகள் மேற்கொள்வதற்காக தேனியில் இருந்து கம்பம், போடி செல்லும் வாகனங்கள் ஒருவழிப்பாதையாக பழைய பஸ் நிலையத்துக்குள் சென்று வெளியேற வேண்டும். கம்பம் மற்றும் போடியில் இருந்து தேனி நகருக்கு வரும் வாகனங்கள் தற்போது உள்ள வழித்தடத்திலேயே வந்து பழைய பஸ் நிலையத்துக்குள் செல்லாமல் நேரு சிலை சிக்னல் வழியாக மதுரை சாலைக்கு செல்ல வேண்டும்.

    இந்த போக்குவரத்து வழித்தட மாற்றம் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) முதல் அமல்படுத்தப்படுகிறது. பாலம் கட்டும் பணிகள் முடியும் வரை பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மாற்றுப்பாதையை பயன்படுத்தி ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வருகிற ஜனவரி 14ம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளது.
    • நறுமணம் நிறைந்த பூக்கள், தூபதீபம், மஞ்சள், சந்தனம் புனிதநீர் தெளித்து பூஜை செய்யப்படும்.

    கூடலூர்:

    சபரிமலையில் கடந்த மாதம் 16ம் தேதி மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. கடந்த 26ம் தேதி வரை மண்டல காலத்திற்கான தொடர் வழிபாடுகள் நடைபெற்றன. தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஐயப்பனை தரிசனம் செய்தனர். கடந்த 26ம் தேதி மண்டல பூஜையுடன் கோவில் நடை சாத்தப்பட்டது.

    இதனை தொடர்ந்து வருகிற ஜனவரி 14ம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. இதற்காக நாளை (30ம் தேதி) மாலை நடை திறக்கப்படும். இந்நிலையில் மண்டல பூஜை நிறைவடைந்து நடை அடைக்கப்பட்டுள்ள காலகட்டத்தில் சுத்திகரிப்பு பணிகளை மேற்கொள்ள தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக அப்பாச்சிமேடு முதல் சன்னிதானம் வரை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. பெரியநடை பந்தல், 18ம் படி வளாகம், மாளிகைபுரத்து அம்மன் கோவில், சன்னிதானம், இரும்பு நடைபாலம், அன்னதான மண்டபம், ஆயுர்வேத மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள குப்பைகள் அகற்றப்பட்டன.

    அதன்பின் தண்ணீரை பீய்ச்சி அடித்து குறுமணல், தூசிகள் முழுவதும் அகற்றப்பட்டன. இதில் பல்வேறு துறை அதிகாரிகள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். சன்னிதான சிறப்பு காவல் அதிகாரி கிருஷ்ணகுமார் தலைமையில் இப்பணி நடைபெற்று வருகிறது. திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் இதுகுறித்து தெரிவிக்கையில்,

    மண்டல பூஜை நிறைவடைந்துள்ள நிலையில் சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் எதிர்மறையாற்றல், அசுத்தம் மற்றும் தோஷத்தை அகற்ற சுத்திகரன் என்னும் வழிபாடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக நறுமணம் நிறைந்த பூக்கள், தூபதீபம், மஞ்சள், சந்தனம் புனிதநீர் தெளித்து பூஜை செய்யப்படும். இப்பணிகள் அனைத்தும் இன்று (29ம் தேதி) மாலைக்குள் நிறைவு செய்யப்படும். பின்னர் மகரவிளக்கு பூஜைக்காக நாளை நடை திறந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.

    கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சபரிமலையில் சாமி தரிசனத்திற்கு வந்து தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் கட்டிடத்தின் மீது ஏறி தற்கொலைக்கு முயன்றார். பின்னர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதுபோன்ற சம்பவங்கள் வரும் நாட்களில் நடைபெறாமல் இருக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பொம்மனம்பட்டியைச் சேர்ந்த 4 குடும்பத்தினர் ஒரு வேனில் ஏற்காடுக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர்.
    • விபத்தில் சிக்கிய காரும், வேனும் அப்பளம் போல் நொறுங்கி சாலையோரம் கிடந்தது.

    தேவதானப்பட்டி:

    கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த ஜெயின் தாமஸ் என்பவர் ஒரு காரில் 4 பேருடன் திண்டுக்கல் வந்து விட்டு மீண்டும் தனது சொந்த ஊருக்கு சென்று கொண்டு இருந்தார். தேனி அருகே உள்ள பொம்மனம்பட்டியைச் சேர்ந்த 4 குடும்பத்தினர் ஒரு வேனில் ஏற்காடுக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர்.

    அதன்படி அவர்கள் தங்கள் வேனில் தேனியில் இருந்து பெரியகுளம் நோக்கி வந்து கொண்டு இருந்தனர். இன்று அதிகாலை 4 மணியளவில் தேவதானப்பட்டி காட்ரோடு பகுதியில் சுற்றுலா வேனும் காரும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

    கடும் பனி மூட்டம் நிலவியதால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என அப்பகுதியில் இருந்தவர்கள் சந்தேகமடைந்தனர். பின்னர் அவர்களின் கூக்குரலை தொடர்ந்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இந்த விபத்தில் காரில் வந்த ஜெயின் தாமஸ் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். வேனை ஓட்டி வந்த தேனி அல்லிநகரத்தைச் சேர்ந்த பிரசாத் (28) உள்பட 18 பேரும் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு தேனி, பெரியகுளம், வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் பலியான 3 பேரின் உடல்களையும் மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்தில் சிக்கிய காரும், வேனும் அப்பளம் போல் நொறுங்கி சாலையோரம் கிடந்தது. அதனை போலீசார் அகற்றி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். விபத்தில் இறந்த மற்ற 2 பேர் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலை நடந்த இந்த விபத்தால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. 

    • முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 129.40 அடியாக உள்ளது.
    • மஞ்சளாறு பகுதியில் மட்டும் 5 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை மூலம் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

    வைகை அணைக்கு முல்லைப்பெரியாறு, போடி கொட்டக்குடி ஆறு, வருசநாடு, மூல வைகையாறு ஆகியவற்றின் மூலம் நீர்வரத்து அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து பாசனத்திற்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது.

    இந்த நிலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை மற்றும் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் 12ந் தேதி 49 அடியாக இருந்த நீர்மட்டம் 16ந் தேதி 60.79 அடியாக உயர்ந்தது. அதனைத் தொடர்ந்தும் நீர்வரத்து அதிகரித்ததால் இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 64.40 அடியை எட்டியுள்ளது. அணைக்கு 1546 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1499 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 4499 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 129.40 அடியாக உள்ளது. 664 கன அடி நீர் வருகிற நிலையில் 1400 கன அடி நீர் திறக்கப்படுகிறது. 4568 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.90 அடியாக உள்ளது. வரத்து 66 கன அடி. திறப்பு 90 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 31.29 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. மஞ்சளாறு பகுதியில் மட்டும் 5 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. 

    • முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 129.70 அடியாக உள்ளது. 913 கன அடி நீர் வருகிறது.
    • வைகை அணையின் நீர்மட்டம் 64.40 அடியாக உள்ளது.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. இதன் நீர்பிடிப்பு பகுதிகளான கொடைக்கானல், வட்டக்கானல், பாம்பார்புரம், வெள்ளகவி உள்ளிட்ட இடங்களில் பெய்த கனமழை காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கடந்த 13-ந்தேதி அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.

    தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தே காணப்பட்டதால் கடந்த 8 நாட்களாக தடை தொடர்ந்தது. இந்த நிலையில் நேற்று வெள்ளப்பெருக்கு குறைந்து நீர்வரத்து சீரானது. இதனால் அருவி பகுதிக்கு செல்லவும், குளிக்கவும் வனத்துறையினர் அனுமதி வழங்கினர். இன்று விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

    மேலும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கும்பக்கரை, சுருளி அருவியில் நீராடிச் செல்வார்கள். அவர்களும் அதிக அளவில் வந்ததால் கும்பக்கரை அருவியில் கூட்டம் அலைமோதியது. நீண்ட நேரம் காத்திருந்து ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரில் குளித்தனர்.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 129.70 அடியாக உள்ளது. 913 கன அடி நீர் வருகிறது. 1400 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இருப்பு 4633 மி.கன அடியாக உள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 64.40 அடியாக உள்ளது. 1808 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1669 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. வரத்து 43 கன அடி. திறப்பு 90 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 126.28 அடியில் நீடிக்கிறது. வரத்தும் திறப்பும் 31.29 கன அடியாக உள்ளது. சண்முகாநதி அணை நீர்மட்டம் 52.30 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 14.47 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    வைகை அணையில் மட்டும் 3.4 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. 

    • 2 வாகனங்களும் கண் இமைக்கும் நேரத்தில் பயங்கரமாக மோதிக் கொண்டன.
    • ஐயப்ப பக்தர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி.

    தேவதானப்பட்டி:

    தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 4 பேர் ஒரு காரில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். பின்னர் மீண்டும் அவர்கள் தங்களது காரில் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர்.

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே காட்ரோடு பிரிவில் இன்று அதிகாலை 5 மணியளவில் அவர்கள் கார் வந்து கொண்டு இருந்தது அப்போது வத்தலக்குண்டுவில் இருந்து போடி நோக்கி சரக்கு வேன் சென்றது. 2 வாகனங்களும் கண் இமைக்கும் நேரத்தில் பயங்கரமாக மோதிக் கொண்டன.

    இதில் காரில் வந்த ஐயப்ப பக்தர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே காருக்குள் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மற்ற இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. சரக்கு வாகனத்தை ஓட்டிச் சென்ற டிரைவரும் படுகாயமடைந்தார்.

    கார் மீது சரக்கு வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டு வெவ்வேறு திசைகளில் விழுந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    விபத்து குறித்து தேவதானப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

    மேலும் பலியான 2 பேர் உடல்களையும் மீட்டு தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் படுகாயமடைந்தவர்களும் மயக்க நிலையில் இருந்ததால் அவர்களது பெயர் விபரம் தெரியவில்லை.

    இதனிடையே காரில் வந்தவர்களின் செல்போன் உதவியுடன் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாலையில் நடந்த இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
    • தமிழக பகுதிக்கு 1400 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகள், குளம், கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி காணப்படுகிறது.

    நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    அதனைத் தொடர்ந்து நீர்மட்டமும் கிடுகிடு வென உயர்ந்தது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 129.30 அடியாக உள்ளது. அணைக்கு 5531 கன அடி நீர் வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் விரைவில் 130 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1400 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    கடந்த வாரம் குடிநீருக்காக 105 கன அடி நீர் மட்டுமே திறக்கப்பட்டது. இதனால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது கூடுதல் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் 3 ஜெனரேட்டர்கள் மூலம் 126 மெகாவாட் மீண்டும் உற்பத்தி செய்யப்படுகிறது. அணையில் நீர் இருப்பு 4547 மி.கன அடியாக உள்ளது.

    அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி பாசனத்திற்கு போக வைகை அணையை வந்து சேர்கிறது. மேலும் மூலவைகையாறு உற்பத்தியாகும் வெள்ளிமலை, வருசநாடு, அரசரடி, கடமலைக்குண்டு, கண்டமனூர் பகுதிகளில் பெய்த கனமழையால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் 59.02 அடியை எட்டியுள்ளது. விரைவில் 60 அடியை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அணையில் இருந்து பாசனத்திற்கான தண்ணீர் நிறுத்தப்பட்டு மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணைக்கு 7787 கன அடி நீர் வருகிறது. 3424 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் மீண்டும் 55 அடியை எட்டியுள்ளது. அணைக்கு வரும் 665 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியான முழு கொள்ளளவை மீண்டும் எட்டியுள்ளது. வரத்தும், திறப்பும் 665 கன அடி.

    சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 52.50 அடியாக நிரம்பி உள்ளது.அணைக்கு வரும் 45.03 அடி அப்படியே திறக்கப்படுகிறது.

    ஆண்டிபட்டி 15, அரண்மனைபுதூர் 9, வீரபாண்டி 10.8, பெரியகுளம் 31, மஞ்சளாறு 18, சோத்துப்பாறை 21.6, வைகை அணை 17.2, போடி 11.2, உத்தமபாளையம் 7.8, கூடலூர் 15.6, பெரியாறு அணை 0.2, தேக்கடி 6, சண்முகாநதி அணை 8 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. 

    ×