என் மலர்tooltip icon

    தேனி

    • திருப்பரங்குன்றத்தில் அரசியல் செய்யும் விவகாரம் கவலை அளிக்கிறது.
    • அரசியல், ஆன்மீகம் ஆகியவை ஒன்றாக போய்விட்டது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கடமலைக்குண்டு கிராமத்தில் செயல்படும் பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

    விழாவில் பல்வேறு போட்டிகள் மற்றும் தேர்வுகளில் சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். முன்னதாக பள்ளிக்கு வந்த கவிஞர் வைரமுத்துவை பள்ளி மாணவர்கள் கிராமத்து வழக்கப்படி சிலம்பாட்டம், தேவராட்டம், ஒயிலாட்டம் ஆகிய பாரம்பரிய முறைப்படி உற்சாகமாக வரவேற்பு கொடுத்தனர்.

    பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் வைரமுத்து கூறியதாவது:-

    திருப்பரங்குன்றத்தில் அரசியல் செய்யும் விவகாரம் கவலை அளிக்கிறது.


    இப்போது அரசியல், ஆன்மீகம் ஆகியவை ஒன்றாக போய்விட்டது. அரசியலுக்குள்ளும் ஆன்மீகம் இருக்கிறது. ஆன்மீகத்திற்குள்ளும் அரசியல் இருக்கிறது. இதைத்தான் உலகம் தற்போது நம்பிக் கொண்டிருக்கிறது.

    என்னைப் பொறுத்த வரை இந்து மதத்தினரின் வாழ்க்கை முறை வேறு, இஸ்லாம் மதத்தினரின் வாழ்க்கை முறை வேறு, அவரவர்களின் வாழ்க்கை முறையை வாழ்ந்து கொள்ள அவர்களுக்கு முழு உரிமை உண்டு. அதனை செய்து தரும் கடமை அரசுக்கு உண்டு என்பதே எனது கருத்து.

    கலைத்துறையில் இருப்பவர்கள் அனைவரும் எனக்கு நண்பர்களே. அந்த வகையில் விஜய் மீது எனக்கு அதிக நட்பு உண்டு. அரசியல் குறித்தான கருத்துக்களை கூறி நான் யாரையும் பகைக்க விரும்பவில்லை. உண்மையை சொல்லாமல் நான் பொய்யனாகவும் ஆக விரும்பவில்லை, நட்பை கெடுக்கவும் விரும்ப வில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோவிலுக்குள் சேவல் ஒன்று பறந்து வந்தது.
    • சுப்பிரமணிய சுவாமிக்கு பால், மஞ்சள் உள்ளிட்ட 16 வகை பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.

    தேனி மாவட்டம் போடியில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் தை மாத கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு பால், பழம், மஞ்சள் உள்ளிட்ட 16 வகை பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.

    அப்போது திடீரென கோவிலுக்குள் சேவல் ஒன்று பறந்து வந்தது. அந்த சேவல் யாரும் எதிர்பாராத வகையில் கொடிமரம் அருகே சென்றது. பின்னர் கொடிமரத்துக்கும், பலி பீடத்துக்கும் இடையே ஒற்றைக்காலில் ஏறி நின்றது.

    பக்தர்கள் அனைவரும் முருகப்பெருமானை கைகூப்பி வணங்குவது போல சேவல் ஒற்றைக்காலை தூக்கியபடி சுமார் 1 மணி நேரம் அதே இடத்தில் நின்றது.

    • சுமார் 1 மணி நேரம் அதே இடத்தில் நின்றது.
    • புகைப்படம் எடுத்த போதும் சேவல் அதே இடத்தில் ஒற்றைக்காலில் நின்றது.

    போடி:

    தேனி மாவட்டம் போடியில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. சுமார் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. இங்கு சஷ்டி, கிருத்திகை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.

    மேலும் பங்குனி உத்திரம், தைப்பூசம் போன்ற நாட்களில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கம்.

    இக்கோவிலில் தை மாத கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு பால், பழம், மஞ்சள் உள்ளிட்ட 16 வகை பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. அப்போது திடீரென கோவிலுக்குள் சேவல் ஒன்று பறந்து வந்தது.

    அந்த சேவல் யாரும் எதிர்பாராத வகையில் கொடிமரம் அருகே சென்றது. பின்னர் கொடிமரத்துக்கும், பலி பீடத்துக்கும் இடையே ஒற்றைக்காலில் ஏறி நின்றது. பக்தர்கள் அனைவரும் முருகப்பெருமானை கைகூப்பி வணங்குவது போல சேவல் ஒற்றைக்காலை தூக்கியபடி சுமார் 1 மணி நேரம் அதே இடத்தில் நின்றது.

    இதைப் பார்த்த பக்தர்கள் பரவசமடைந்ததுடன் முருகனுக்கு அரோகரா என்று கோஷங்கள் எழுப்பினர். ஆனால் பக்தர்கள் கோஷம் எழுப்பியபோதும் தன்னை புகைப்படம் எடுத்த போதும் அதனை பொருட்படுத்தாமல் சேவல் அதே இடத்தில் ஒற்றைக்காலில் முருகப்பெருமானை வழிபடுவது போல நின்றது.

    தமிழ் கடவுளான முருகனுக்கு சேவற்கொடியோன் என்ற பெயர் உண்டு. அவருடைய கொடியில் சேவல் சின்னம் இடம் பெற்றிருக்கும். இதன் காரணமாகவே தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற முருகப்பெருமானுக்கு சேவலை காணிக்கையாக செலுத்துவது வழக்கம்.

    அதன்படி பக்தர் காணிக்கையாக செலுத்திய சேவல் ஒற்றைக்காலில் நின்று கிருத்திகை நாளில் முருகப்பெருமானை மனமுருக வழிபட்ட சம்பவம் பக்தர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

    • சுமார் 85 முதல் 90 கி.மீ. வேகத்தில் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
    • போடி வருவதற்கு 1 மணி நேரம் 36 நிமிடம் ஆனது.

    போடி:

    தேனி மாவட்டம் போடி ரெயில் நிலையத்தில் கடந்த 2010-ம் ஆண்டு மீட்டர்கேஜ் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு சுமார் 12 ஆண்டுகளுக்கு பின்பு ரூ.436 கோடி செலவில் அகல ரெயில் இருப்புப் பாதையாக மாற்றப்பட்டது. பின்னர் மதுரையில் இருந்து போடிக்கும், போடியில் இருந்து மதுரைக்கும் தினசரி பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    வாரத்தில் ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய 3 நாட்கள் போடியில் இருந்து சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கும், திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாட்கள் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திலிருந்து போடிக்கும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் போக்குவரத்து இயக்கப்படுகிறது.

    இந்நிலையில் சென்னையில் இருந்து வரும் ரெயில் மதுரை வழியாக போடி வருகிறது. சென்னையில் இருந்து மதுரை வரை மின்சார ரெயிலாக வரக்கூடிய அதி விரைவு ரெயில், மதுரையில் இருந்து போடி வரை டீசல் என்ஜினாக மாற்றப்பட்டு வருகிறது.

    இதனால் சுமார் 40 நிமிடம் காலதாமதம் ஏற்படுகிறது. இதனை சீர் செய்யும் வகையில் போடியில் இருந்து மதுரை வரை மின்சார ரெயில் போக்குவரத்து தொடங்குவதற்கான திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு பணிகள் நிறைவு கட்டத்தை அடைந்தது.

    இந்நிலையில் விரைவில் மதுரையில் இருந்து போடிக்கு மின்சார ரெயில் போக்குவரத்து தொடங்குவதற்கான சோதனை ஓட்டங்கள் நடைபெற்று வந்தது.

    இதன் முக்கிய கட்டமாக கடந்த வியாழக்கிழமை போடியில் இருந்து மதுரை வரை உள்ள மின்சார வழி தடக் கம்பிகளில் மின்சார ரெயில் போக்குவரத்திற்கு மின் தொடர்பு ஏற்படுத்தித் தரும் பேன்டோகிராப் எனப்படும் மின்தட இணைப்பு உபகரணம் பொருத்தப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்றது.

    அதன் பின் முதன்முறையாக மின்சார ரெயில் என்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. சோதனை ஓட்டம் நடைபெற்ற ஓரிரு நாட்களிலேயே இன்று முதல் சென்னையில் இருந்து காட்பாடி, நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை வழியே வாரத்திற்கு 3 நாட்கள் இயக்கப்படும் சென்னை அதிவிரைவு ரெயில் மற்றும் மதுரையில் இருந்து தினசரி போடிக்கு இயக்கப்படும் பயணிகள் ரெயில் ஆகிய இரண்டுமே ஒரே நாளில் மின்சார ரெயிலாக மாற்றப்பட்டு பயணிகள் போக்குவரத்து தொடங்கியது.

    110 கி.மீ. வேகத்தில் சோதனை செய்யப்பட்ட மின்சார ரெயில் முதல் நாள் என்பதால் மதுரையில் இருந்து சுமார் 85 முதல் 90 கி.மீ. வேகத்தில் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆண்டிபட்டி கணவாய் மற்றும் போடி, பூதிபுரம் அருகே உள்ள பாலங்களில் வேகம் குறைக்கப்பட்டதன் காரணமாக போடி வருவதற்கு 1 மணி நேரம் 36 நிமிடம் ஆனது.

    இன்று முதன்முறையாக மின்சார ரெயில் போக்குவரத்து தொடங்கியதை முன்னிட்டு இருப்புப் பாதைகளில் உள்ள மின்சார தடங்களில் 25,000 வோல்ட் மின்சாரம் பயன்படுத்தப்படுவதால் மின்சார தடங்கள் உள்ள இருப்புப் பாதைகளில் அத்துமீறி உள்ளே நுழைபவர்கள் மற்றும் சுற்றி திரிபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாதைகளை கடப்பவர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று ரெயில்வே நிர்வாகம் மற்றும் ரெயில்வே போலீசார் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 45.30 அடியாக உள்ளது. 21 கனஅடி நீர் வருகிறது. 75 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
    • சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 106.27 அடியாக உள்ளது. 5 கனஅடி நீர் வருகிறது. 25 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    கூடலூர்:

    கேரள எல்லை பகுதியில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14,707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. தற்போது மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் அணையின் நீர்மட்டம் 120.40 அடியாக குறைந்துள்ளது. 219 கனஅடி நீர் வருகிறது. 556 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. 2707 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

    ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. பருவமழை கைகொடுத்ததால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து பாசனத்திற்கும் தண்ணீர் திறக்கப்பட்டது.

    அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 519 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணைக்கு 427 கனஅடி நீர் வருகிறது.

    அணையின் நீர்மட்டம் 65.37 அடியாக உள்ளது. 4713 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 45.30 அடியாக உள்ளது. 21 கனஅடி நீர் வருகிறது. 75 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 106.27 அடியாக உள்ளது. 5 கனஅடி நீர் வருகிறது. 25 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 37.30 அடியாக உள்ளது. 6 கனஅடி நீர் வருகிறது. 14.47 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    • உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்து வரவேற்புக்குரியது மட்டுமல்ல கொண்டாடப்பட வேண்டிய ஒன்றாகும்
    • எங்களது நிலைப்பாடு புதிய அணை மற்றும் கேரளாவின் பாதுகாப்பும், தமிழகத்துக்கு தண்ணீர் வேண்டும் என்பதுதான்.

    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணையின் பிரதான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும் என்றும், அணையின் பாதுகாப்பு குறித்து கேரளாவைச் சேர்ந்த ஜோசப் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்கின் விசாரணை குறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், முல்லைப்பெரியாறு அணை உறுதியாக உள்ளது. அணையின் வயது 130 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் எத்தனையோ பருவ மாற்றங்களை கண்டும் இன்னும் உறுதியாகவே உள்ளது.

    அணை உடைந்து விடும் என தெரிவித்து வருவது காமிக்ஸ் கதைகளைப் போல கற்பனையாக உள்ளது என்று தெரிவித்தனர். இத்தனை ஆண்டுகள் கடந்தும் அணை பலமாக இருப்பதற்கு இதனை கட்டிய பொறியாளர்களுக்கு நாம் நன்றி கூற வேண்டும் என்றும் தெரிவித்திருந்தனர்.

    இதற்கு 5 மாவட்ட தமிழக விவசாய சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறியதாவது:-

    உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்து வரவேற்புக்குரியது மட்டுமல்ல கொண்டாடப்பட வேண்டிய ஒன்றாகும். தமிழகத்தில் உள்ள 5 மாவட்ட மக்களின் மனங்களில் உள்ளதை உள்ளபடியே பிரதிபலிக்கும் நீதியரசர்களுக்கு நன்றிகள். போர்க்கால அடிப்படையில் அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கும் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றார்.

    இதுகுறித்து கேரள மாநிலம் இடுக்கி எம்.பி. சூர்யகோஸ் தெரிவிக்கையில் 2022 ஏப்ரல் மாதம் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தபடி தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்துக்குதான் அணை குறித்தான அனைத்து விஷயங்களும் கொண்டுவரப்பட வேண்டும். உச்சநீதிமன்ற நீதிபதியின் கூற்று பெரியாறு அணையை ஆய்வு நடத்தி அறிவித்தது அல்ல. அணை குறித்து நீதிமன்றத்தின் கூற்று ஏற்கத்தக்கதல்ல. இது வரை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழகத்துக்கு சாதகமாக உள்ளது. எங்களது நிலைப்பாடு புதிய அணை மற்றும் கேரளாவின் பாதுகாப்பும், தமிழகத்துக்கு தண்ணீர் வேண்டும் என்பதுதான் என்றார்.

    • மாநிலத்திலேயே அதிக நெல் உற்பத்தி திறன் பெற்றுள்ள விவசாயி.
    • பரிசுத் தொகை ரூ.5 லட்சம், தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி பதக்கம் வழங்கப்பட்டது.

    சென்னை:

    மாநில அளவில் திருந்திய நெல் சாகுபடி தொழில் நுட்பங்களை கடைப்பிடித்து அதிக உற்பத்தித் திறன் பெறும் விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவில் முதலமைச்சரால் சிறப்பு ரொக்கப் பரிசு ரூ.5 லட்சம், தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிப் பதக்கம் மற்றும் சான்றிதழ் ஆகியவை 2011-2012-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த விருது 2021-ம் ஆண்டு முதல் "சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது" என்ற பெயரில் வழங்கப்பட்டு வருகிறது.

    தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் வடுகபட்டி கிராமத்தை சேர்ந்த ரா.முருகவேல் என்ற விவசாயி 2023-24-ம் ஆண்டிற்கான சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருதைப் பெற்றிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இவர் விவசாயி. வேளாண்மைத் துறையின் மூலம் வழங்கப்பட்ட நவீன தொழில்நுட்ப பயிற்சிகளின் மூலமாக திருந்திய நெல் சாகுபடி முறையை நன்கு கற்று அதன் அடிப்படையில் திருந்திய நெல் சாகுபடியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.

    விவசாயி முருகவேல் தனது வயலில் நெல் ஆராய்ச்சி இயக்குநரகத்தால் மேம்படுத்தப்பட்ட எம்.டி.யு-1262 என்னும் அதிக விளைச்சல், பூச்சி நோய்கள் எதிர்ப்பு திறன், பல்வேறு சாகுபடி இயற்கை இடர்களைத் தாங்கும் தன்மைகளைக் கொண்ட சன்ன நெல் ரகத்தைப் பயிரிட்டு, திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பங்களை கீழ்க்காணும் விவரப்படி மிக நுணுக்கமாக பின்பற்றி உள்ளார்.

    விவசாயி முருகவேல் எம்.டி.யு. 1262 ரக நெல்லின் சான்று விதைகளை உயிர் உரங்கள் மற்றும் உயிரின பூச்சிக் கொல்லிகள் விதைநேர்த்திகளுக்கு உட்படுத்தி, மேட்டுப்பாத்தி நாற்றங்காலில் முறைப்படி விதைப்பு செய்து 14 நாட்கள் வயது வரை நாற்றங்காலைப் பராமரித்துள்ளார்.

    நன்கு உழவு செய்த தனது உழவு வயலில், பசுந்தாள் உர விதைகளை விதைத்து, விதைத்த 45-ம் நாளில் மடக்கி உழுது, நீர் பாய்ச்சி நடவு வயலை நன்கு தயார் செய்துள்ளார்.

    அதனைத் தொடர்ந்து மேட்டுப்பாத்தியில் நன்கு வளர்க்கப்பட்ட 14 நாட்கள் வயது கொண்ட திரட்சியான நெல் நாற்றுகளைத் தேர்வு செய்து, அவற்றின் வேர்ப் பகுதியை உயிர் உரக் கரைசலில் நன்கு நனைத்து, அவற்றை 25-25 செ.மீ. இடைவெளியில் ஒற்றை நாற்று முறையில் வரிசையாக நடவு செய்துள்ளார்.

    நெல் பயிருக்கு அடி உரமாக ஏக்கர் ஒன்றுக்கு 50 கிலோ வேப்பம் புண்ணாக்கு, 100 கிலோ 20:20:0:13 காம்ப்ளக்ஸ் உரம், 10 கிலோ ஜிங்க் சல்பேட் மற்றும் 50 கிலோ பொட்டாஷ் ஆகியவற்றை இட்டுள்ளார்.

    அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீ ரியா ஆகிய நுண்ணுயிர் உரங்களையும் வயலில் இட்டுள்ளார். மேல் உரமாக ஏக்கர் ஒன்றுக்கு 25 கிலோ யூரியா மற்றும் 10 கிலோ பொட்டாஷ் ஆகியவற்றை நடவு நட்ட 15 மற்றும் 45-ம் நாட்களில் நடவு வயலில் இட்டு சாகுபடியை மேற் கொண்டுள்ளார்.

    கோனோ களைக்கருவி கொண்டு நடவு நட்ட 10, 25 மற்றும் 40-ம் நாட்களில் வயல்களில் காணப்படும் களைகளை மடக்கி உர மாக்கி உள்ளார். காய்ச்சலும், பாய்ச்சலும் என்ற முறையில் நீர் மேலாண்மை செய்து உள்ளார்.

    மேலும் நெல் பயிருக்கு சேதம் விளைவிக்கும் பூச்சி நோய்களைக் கட்டுப்படுத்திட ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை கையாண்டுள்ளார்.

    உரிய முன் தகவலைப் பெற்றதன் அடிப்படையில் அவரது நெல் வயல், மாநில மற்றும் மாவட்ட பிரதிநிதி கள் முன்னிலையில் 23.2.2024 அன்று அறுவடை செய்யப்பட்டதில் எக்டருக்கு 10,815 கிலோ மகசூல் கிடைக்கப் பெற்றுள்ளது.

    இந்த உற்பத்தித் திறன், மாநிலத்திலேயே முதன்மை யாக இருப்பதால் விவசாயி முருகவேல் 2023-2024-ம் ஆண்டின் சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருதுக்கு தகுதி உடையவர் ஆகிறார்.

    திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பங்களை முறையாக கடைபிடித்து மாநிலத்திலேயே அதிக நெல் உற்பத்தி திறன் பெற்றுள்ள விவசாயி முருகவேலை பாராட்டி போற்றும் வகையில் இவருக்கு 2024-ம் ஆண்டின் சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருதுச் சான்றிதழ், பரிசுத் தொகை ரூ.5 லட்சம், தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி பதக்கம் ஆகியவற்றை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.

    • அணையில் தண்ணீர் தேங்கும் பகுதி 999 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட பகுதியாகும்.
    • எதன் அடிப்படையில் புதிய கண்காணிப்புக்குழுவில் கேரள பொறியாளர் இடம்பெற முடியும்?

    கூடலூர்:

    உச்சநீதிமன்றத்தால் முல்லைப்பெரியாறு அணையை பராமரிக்க அமைக்கப்பட்ட பழைய குழு கலைக்கப்பட்டு புதிய கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் தலைவராக தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் அனீஸ் ஜெயின் நியமிக்கப்பட்டார். இந்த ஆணையமே முல்லைப்பெரியாறு அணை தொடர்பான அனைத்து விவகாரங்களையும் கவனிக்கும் என அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் புதிய கண்காணிப்புக்குழுவில் 2 கேரள பிரதிநிதிகள் இடம் பெற்றுள்ளது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது. ஏற்கனவே முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையில் கேரள அரசு தொடர்ந்து இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறது. மத்திய அரசு குழுவில் இடம் பெற்றுள்ள கேரள பிரதிநிதிகளை உடனடியாக நீக்க வேண்டும் எனக்கூறி இன்று தமிழக எல்லை பகுதியான லோயர் கேம்ப்பில் விவசாயிகள் சார்பில் மாபெரும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி ஆகியோர் தலைமையில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது.

    இதில் பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர். இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறியதாவது:-

    மத்திய அரசு முல்லைப்பெரியாறு அணையை கண்காணிக்க புதிய தலைவராக தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் அனீஸ் ஜெயின், தமிழக அரசு சார்பில் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலர் மணிவாசகன், காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியன் ஆகியோரும் கேரள நீர் பாசனத்துறையைச் சேர்ந்த 2 பொறியாளர்கள் இந்திய அறிவியல் கழகம் சார்பில் ஒருவர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    அணையில் தண்ணீர் தேங்கும் பகுதி 999 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட பகுதியாகும். மேலும் ஏக்கருக்கு ரூ.30 வீதம் வரி, மின்சார உற்பத்தி செய்தால் தமிழக அரசு சார்பில் வரி செலுத்தப்படுகிறது. இந்த நிலையில் எதன் அடிப்படையில் புதிய கண்காணிப்புக்குழுவில் கேரள பொறியாளர் இடம்பெற முடியும்? இதனை தமிழக விவசாயிகள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட இடத்தில் வரும் காலங்களில் எந்த ஒரு சிறிய வேலை செய்ய வேண்டும் என்றாலும் கேரள அதிகாரிகளின் உத்தரவுக்காக காத்திருக்க வேண்டும். எனவே குழுவின் தலைவர் அனீஸ் ஜெயின், தமிழக நீர்வளத்துறை பொறியாளர்கள் மட்டும் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் எனத்தெரிவித்தார்.

    போராட்டத்தால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    • ரோந்து சென்ற போலீசார் காரில் இருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
    • போலி சாமி சிலை மற்றும் மரகத கற்களை விற்க முயன்ற கும்பல் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.

    தேனி:

    தேனியை அடுத்த அரண்மனைபுதூரில் இருந்து கொடுவிலார்பட்டி செல்லும் சாலையில் சந்தேகப்படும்படியாக ஒரு கார் நீண்ட நேரமாக நின்று கொண்டு இருந்தது. அப்போது அவ்வழியாக ரோந்து சென்ற போலீசார் காரில் இருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவலை அளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் காரில் இருந்த பொருட்களை சோதனை நடத்தினர். அப்போது ஒரு அடி உயரமுள்ள ஐம்பொன் சாமி சிலையும், பச்சை நிறத்தில் கற்களும் இருந்தன.

    இதனால் சந்தேகமடைந்த பழனிசெட்டிபட்டி போலீசார் அவர்கள் 3 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் மதுரை மாவட்டம் எழுமலை ஆத்தங்கரை பட்டி தெற்குத் தெருவைச் சேர்ந்த சுருளி மகன் தங்கமணி (வயது 41). எம்.கள்ளுப்பட்டி கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த பாண்டி மகன் சம்பழகு (29). விருதுநகர் மாவட்டம் வத்ராயிருப்பு கூமாபட்டியைச் சேர்ந்த பாலமுருகன் (35) என தெரிய வந்தது. இவர்கள் தங்களிடம் உள்ளதை ஐம்பொன் சிலை மற்றும் மரகத கற்கள் என கூறி தேனியில் உள்ள சிலரிடம் விற்பனை செய்ய வந்தது தெரிய வந்தது.

    பறிமுதல் செய்யப்பட்ட சிலை பழமையான தோற்றத்துடன் காணப்பட்டதால் இந்த சிலை அவர்களுக்கு எப்படி கிடைத்தது? என விசாரித்தனர். புத்தர் வடிவில் இருந்த இந்த சிலையை அவர்களாகவே தயாரித்து ஐம்பொன் சிலை என்றும், இதனை வீட்டில் வைத்து வழிபட்டால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் எனவும் தொழிலதிபர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    அதன்படி தேனி சுக்குவாடன்பட்டி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த ஆண்டவர் (வயது 47) என்பவர் கடவுள் பக்தி மிகுந்தவர் என்பதால் சுவாமி சிலைகளை வாங்க விரும்பியுள்ளார். அவரிடம் டிரைவராக வேலைபார்த்த உத்தமபாளையத்தைச் சேர்ந்த சிவா என்பவர் மூலம் மேற்படி நபர்கள் சாமி சிலை மற்றும் போலி மரகத கற்களை விற்பனை செய்ய முயன்றுள்ளனர்.

    இதற்காக குறிப்பிட்ட தொகையை வாங்கி விட்டு சாமி சிலை மற்றும் போலி மரகத கற்களை விற்க வந்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் தங்கமணி, பாலமுருகன், சம்பழகு, டிரைவர் சிவா மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த ரவிந்திரன் (50), திண்டுக்கல் சாணார்பட்டியைச் சேர்ந்த சூரியபிரகாஷ் (21) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

    சதுரங்க வேட்டை சினிமா பட பாணியில் போலி சாமி சிலை மற்றும் மரகத கற்களை விற்க முயன்ற கும்பல் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கும்பல் வேறு யாரிடமாவது மோசடி செய்துள்ளனரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்னர்.

    • நேதாஜி சுபாஷ் சந்திர போசின் பிறந்தநாள்
    • 100-க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் கலந்து கொண்டன.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்னமனூரில் சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று இரட்டை மாட்டு வண்டி எல்லை பந்தயம் நடைபெற்றது.

    இதற்காக தேனி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. கரிச்சான், பூஞ்சிட்டு, தேன் சிட்டு, தட்டான்சிட்டு, வான் சிட்டு, புள்ளிமான், இளஞ்ஜோடி என பல்வேறு பிரிவுகளில் மாடுகள் கலந்து கொண்டன.

    சின்னமனூர் மேகமலை சாலையில் சுமார் 5 கி.மீ தூரம் பந்தய எல்லையாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. காளைகள் சீறிப்பாய்ந்த போது சாலையில் இரு புறமும் நின்று பொதுமக்கள் கரவொலி எழுப்பி உற்சாகப்படுத்தினர்.

    ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடித்த காளைகளுக்கும், சாரதிகளுக்கும் ரொக்கப்பரிசு மற்றும் வெற்றிக்கோப்பை, சான்றிதழ் வழங்கப்பட்டது.

    போட்டியை காண சுற்றுப்புற கிராமங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் வந்திருந்ததால் அப்பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளை சின்னமனூர் இன்ஸ்பெக்டர் பாலாண்டி தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.

    முன்னதாக இரட்டை மாட்டு வண்டி பந்தய போட்டி தேனி தெற்கு மாவட்ட அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் காசிராஜன், இணைச் செயலாளர் மகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. அ.தி.மு.க. நகர செயலாளர் பிச்சைக்கனி கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். இதில் நகரின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • கத்தியால் குத்தியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்தார்.
    • திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன் பட்டியைச் சேர்ந்தவர் பிரசாத் (வயது 32). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அனீஸ் ரகுமான் (35) என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

    அனீஸ் ரகுமானின் மனைவிக்கும், பிரசாத்துக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பிரசாத்துடன் அவரது மனைவி சென்று விட்டார். அப்போது முதல் பிரசாத் மீது அனீஸ் ரகுமானுக்கு மேலும் கோபம் அதிகரித்தது. அவரை தீர்த்து கட்டுவதற்காக சமயம் பார்த்துக் கொண்டு இருந்தார்.

    இன்று காலை பிரசாத் முனீஸ்வரன் கோவில் அருகே உள்ள ஒரு ஓட்டலில் இருந்து வெளியே வந்தார். அவரை பார்த்ததும் அனீஸ் ரகுமான் தான் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் தாக்க முயன்றார்.

    இதனால் சுதாரித்துக் கொண்டு பிரசாத் ஓட ஆரம்பித்தார். உத்தமபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே ஓடிய போது அவரை கீழே தள்ளி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்தார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    இதை பார்த்ததும் பொதுமக்கள் உத்தமபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிரசாத் உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் தப்பி ஓடிய அனீஸ் ரகுமானை தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட பிரசாத் மீது திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    பட்ட பகலில் கோர்ட்டு வளாகம் அருகே வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • அணையில் தண்ணீர் தேங்கும் பகுதி 999 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட பகுதியாகும்.
    • ஏக்கருக்கு ரூ.30 வீதம் வரி, மின்சார உற்பத்தி செய்தால் தமிழக அரசு சார்பில் வரி செலுத்தப்படுகிறது.

    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணை புதிய கண்காணி ப்புக்குழுவில் கேரள பொறியாளர்கள் 2 பேர் சேர்க்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற 25-ந் தேதி போராட்டம் நடத்த பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.

    உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட பழைய கண்காணிப்புக்குழு கலைக்கப்பட்டு புதிய கண்காணிப்புக்குழு தலைவராக தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் அனீஸ் ஜெயின் நியமிக்கப்பட்டார். இந்த ஆணையமே முல்லைப்பெரியாறு அணை தொடர்பான அனைத்து விவகாரங்களையும் கவனிக்கும் என அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் புதிய கண்காணிப்புக்குழுவில் இடம்பெற்றுள்ள கேரள நீர் பாசனத்துறை பொறியாளர்களை நீக்க வேண்டும் என பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறு நீக்காவிட்டால் வருகிற 25-ந்தேதி போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறியதாவது:-

    மத்திய அரசு முல்லைப்பெரியாறு அணையை கண்காணிக்க புதிய தலைவராக தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் அனீஸ் ஜெயின், தமிழக அரசு சார்பில் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலர் மணிவாசகன், காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியன் ஆகியோரும் கேரள நீர் பாசனத்துறையைச் சேர்ந்த 2 பொறியாளர்கள் இந்திய அறிவியல் கழகம் சார்பில் ஒருவர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    அணையில் தண்ணீர் தேங்கும் பகுதி 999 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட பகுதியாகும். மேலும் ஏக்கருக்கு ரூ.30 வீதம் வரி, மின்சார உற்பத்தி செய்தால் தமிழக அரசு சார்பில் வரி செலுத்தப்படுகிறது. இந்த நிலையில் எதன் அடிப்படையில் புதிய கண்காணிப்புக்குழுவில் கேரள பொறியாளர் இடம்பெற முடியும்? இதனை தமிழக விவசாயிகள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட இடத்தில் வரும் காலங்களில் எந்த ஒரு சிறிய வேலை செய்ய வேண்டும் என்றாலும் கேரள அதிகாரிகளின் உத்தரவுக்காக காத்திருக்க வேண்டும். எனவே குழுவின் தலைவர் அனீஸ் ஜெயின், தமிழக நீர்வளத்துறை பொறியாளர்கள் மட்டும் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும். இல்லையென்றால் வருகிற 25-ந் தேதி விவசாயிகளை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்துவோம் என்றார்.

    ×