என் மலர்tooltip icon

    தேனி

    • கடந்த 3 நாட்களாக பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
    • முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 113.50 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடி வாரத்தில் சோத்துப்பாறை அணை அமைந்துள்ளது. கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் இருந்து வரும் நீர் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் மழை மூலம் அணைக்கு நீர்வரத்து உள்ளது.

    கடந்த 3 நாட்களாக பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வனப்பகுதியில் பெய்த தொடர் மழைக்கு சோத்துப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் 2 நாட்களில் 20 அடி உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் 66.25 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 86.75 அடியாக உயர்ந்துள்ளது. 42 கனஅடி நீர் வருகிற நிலையில் 3 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் பாசன பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 113.50 அடியாக உள்ளது. 493 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 105 கன அடி நீர் திறக்கப்படுகிறது. 1476 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

    71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 56.50 அடியாக உள்ளது. 238 கன அடி நீர் வருகிற நிலையில் மதுரை மாநகர குடிநீருக்காக 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 2966 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 32 அடியாக உள்ளது. 109 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை. சண்முகா நதி அணையின் நீர்மட்டம் 34.70 அடியாக உள்ளது. 7 கன அடி நீர் வருகிற நிலையில் திறப்பு இல்லை.

    பெரியகுளம் 6, மஞ்சளாறு 7, சோத்துப்பாறை 6, போடி 1.2, கூடலூர் 2.8, பெரியாறு 0.2, தேக்கடி 0.4, சண்முகாநதி 8.6 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • கம்பம் சுற்று வட்டார பகுதியிலும் சுமார் 3 மணிநேரத்திற்கும் மேலாக இடைவிடாத மழை கொட்டி தீர்த்தது.
    • வீடுகள் இடிந்த குடும்பத்தினரை பாதுகாப்பாக வேறு இடத்தில் தங்க வைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக கனமழை பெய்தது. இதேபோல கம்பம் சுற்று வட்டார பகுதியிலும் சுமார் 3 மணிநேரத்திற்கும் மேலாக இடைவிடாத மழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் புகுந்து பெருக்கெடுத்து ஓடியது. கம்பம் நகராட்சி 26, 27, 28வது வார்டுகளில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர் 29வது வார்டு ஆதிசக்தி விநாயகர் கோவில் தெருவுக்குள் சூழ்ந்தது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவிர்த்தனர். மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டதால் இரவு முழுவதும் தூக்கமின்றி வேறு இடங்களுக்கு சென்றனர்.

    இன்று அதிகாலை அப்பகுதியில் இருந்த அடுத்தடுத்த 5 வீடுகள் இடிந்து தரைமட்டமானது. அப்போது வீட்டிற்குள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து வீட்டில் இருந்த பொருட்களை அவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து சுவர் இடிந்து விழுந்ததால் ரேசன் கார்டு, ஆதார் அட்டை, வங்கி புத்தகம் மற்றும் பள்ளி மாணவர்களின் புத்தகங்கள் அனைத்தும் நீரில் நனைந்து சேதம் ஆகிவிட்டதாக வேதனையுடன் அவர்கள் தெரிவித்தனர்.

    எனவே தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு கம்பம் நகராட்சி அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறையினர் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். வீடுகள் இடிந்த குடும்பத்தினரை பாதுகாப்பாக வேறு இடத்தில் தங்க வைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

    • கும்பக்கரை அருவியில் கடந்த சில நாட்களாகவே குறைந்த அளவு தண்ணீரே வந்துகொண்டிருந்தது.
    • மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து இருப்பது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கடுமையான வெப்பம் நிலவி வந்த நிலையில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று 2-வது நாளாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    தேனி பஸ் நிலையம் உள்பட நகரின் முக்கிய இடங்களில் மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. பெரியகுளம் சாலை, மதுரை சாலையில் இருந்து நேரு சிலை சிக்னல் நோக்கி மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியதால் நடந்து செல்ல முடியாத நிலையும், வாகனங்கள் செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டது.

    இதேபோல் தேவதானப்பட்டி, பெரியகுளம், உத்தமபாளையம், ஆண்டிபட்டி, அரண்மனைபுதூர், கம்பம், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    பெரியகுளம் அருகே அமைந்துள்ள கும்பக்கரை அருவியில் கடந்த சில நாட்களாகவே குறைந்த அளவு தண்ணீரே வந்துகொண்டிருந்தது. இந்நிலையில் கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி, வட்டக்கானல், வெள்ளக்கவி, பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ததால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்காக மாறியது.

    நேற்று மாலை அருவியில் குளித்துக்கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இன்றும் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவிக்கு வரும் தண்ணீரின் அளவை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், நீரின் அளவை பொறுத்து சுற்றுலா பணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் வனச்சரகர் அன்பழகன் தெரிவித்தார்.

    இதேபோல் கம்பம் அருகில் உள்ள சுருளி அருவியிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் அங்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து இருப்பது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டத்திற்கு மேலும் சில நாட்கள் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அணைகளுக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 56.43 அடியாக உள்ளது. நீர்வரத்து 180 கன அடி. திறப்பு 72 கன அடி. இருப்பு 2955 மி.கன அடி. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 113.30 அடியாக உள்ளது. வரத்து 396 கன அடி. திறப்பு 105 கன அடி. இருப்பு 1442 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 31 அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 81.34 அடி. வரத்து 155 கன அடி. திறப்பு 3 கன அடி, இருப்பு 40.28 மி.கன அடி. சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 34.40 அடி. வரத்து 7 கன அடி.

    ஆண்டிபட்டி 43, அரண்மனைபுதூர் 30.2, வீரபாண்டி 9.4, பெரியகுளம் 61, மஞ்சளாறு 43, சோத்துப்பாறை 86, வைகை அணை 22.8, போடி 12.8, உத்தமபாளையம் 54.6, கூடலூர் 9.6, பெரியாறு அணை 8, தேக்கடி 1.2, சண்முகாநதி அணை 11.4 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. 

    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 31 அடியாக உள்ளது.
    • சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 34.10 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நாளை வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி பரவலாக மழை பெய்து வருகிறது.

    தேனி மாவட்டத்திலும் பெய்து வரும் தொடர் மழையால் அணைகள், குளம், கண்மாய், ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 56.40 அடியாக உள்ளது. நீர்வரத்து 110 கன அடியாக அதிகரித்துள்ளது.

    அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது. 2949 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து 396 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 113.15 அடியாக உள்ளது. தமிழக பகுதிக்கு 105 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 1417 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 31 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 66.25 அடியாக உள்ளது. 6 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 34.10 அடியாக உள்ளது. 5 கன அடி நீர் வருகிற நிலையில் திறப்பு இல்லை.

    ஆண்டிபட்டி 25.2, அரண்மனைபுதூர் 14, வீரபாண்டி 18.2, வைகை அணை 27.6, போடி 4, உத்தமபாளையம் 3.8, கூடலூர் 4.4, பெரியாறு அணை 34.8, தேக்கடி 4.2, சண்முகாநதி 7.8 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. 

    • தமிழகத்தில் ஒரு சில தியேட்டர்களில் படம் நிறுத்தப்பட்டது.
    • ‘எம்புரான்’ திரைப்படத்தை தமிழகத்தில் முற்றிலும் தடை செய்ய வேண்டும்.

    கம்பம்:

    மலையாள நடிகர் மோகன்லால், டொவினோ தாமஸ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள 'எம்புரான்' திரைப்படத்தில் முல்லைப்பெரியாறு அணை குறித்து சர்ச்சைக்குரிய வசனங்கள் இடம்பெற்றுள்ளது.

    இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் படத்தை தடை செய்ய வேண்டும் என தமிழக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஏற்கனவே இப்படத்தில் குஜராத் கலவரம் தொடர்பாக காட்சிகள் இடம் பெற்றிருந்ததால் 17 இடங்களில் வந்த படக்காட்சிகளை துண்டித்து மீண்டும் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இந்து அமைப்புகள் எதிர்ப்பின் காரணமாக காட்சிகளை வெட்டிய படக்குழு தமிழக விவசாயிகள் வைத்த கோரிக்கையை ஏற்கவில்லை. முல்லைப்பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளதால் படத்தை திரையிடக்கூடாது என்று பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில தியேட்டர்களில் படம் நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கும் வகையில், தேனி மாவட்டம் கம்பத்தில் இன்று போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் தலைமையில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கம்பத்தில் இருந்து பேரணியாக சென்றனர். அப்போது 'எம்புரான்' திரைப்படத்தை தமிழகத்தில் முற்றிலும் தடை செய்ய வேண்டும். இல்லையெனில் அந்த படத்தின் வினியோக உரிமை பெற்றுள்ள கோபுரம் சினிமாஸ் கம்பெனியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என கூறி அந்த அலுவலகம் முன்பு ஏராளமானோர் திரண்டனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. 

    • எம்புரான் திரைப்படம் வெளியான சில நாட்களிலேயே பல்வேறு சர்ச்சை கருத்துகள் இடம் பெற்றிருந்ததாக செய்திகள் பரவியது.
    • திரைப்படத்தில் முல்லை பெரியாறு அணை குறித்த சர்ச்சைக்குரிய வசனங்கள் இடம் பெற்றுள்ளன.

    கூடலூர்:

    மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பில் உருவான எம்புரான் திரைப்படம் கடந்த மாதம் 27ம் தேதி வெளியானது. இந்த திரைப்படம் வெளியான சில நாட்களிலேயே பல்வேறு சர்ச்சை கருத்துகள் இடம் பெற்றிருந்ததாக செய்திகள் பரவியது. குறிப்பாக குஜராத் கலவரம் தொடர்பாக காட்சிகள் வைக்கப்பட்டதால் வலதுசாரி அமைப்புகள் படத்தை தடை செய்ய வேண்டும் எனவும், இல்லையெனில் போராட்டம் வெடிக்கும் எனவும் தெரிவித்தனர்.

    அதன்பின் சர்ச்சைக்குரிய 17 காட்சிகள் நீக்கப்பட்டு மீண்டும் படம் திரையிடப்படுவதாக படக்குழு அறிவித்தது. இருந்தபோதும் இந்த படத்தில் முல்லை பெரியாறு அணை குறித்த கருத்துகள் இடம் பெற்றுள்ளது என்றும், அதனை நீக்காவிட்டால் தமிழகம் முழுவதும் எம்புரான் படம் திரையிட்ட தியேட்டர்கள் முன்பு போராட்டம் நடத்துவோம் எனவும் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து பெரியாறு-வைகை பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறுகையில்,

    இந்த திரைப்படத்தில் முல்லை பெரியாறு அணை குறித்த சர்ச்சைக்குரிய வசனங்கள் இடம் பெற்றுள்ளன. இதுகுறித்து ஏற்கனவே நாங்கள் அறிக்கை வெளியிட்டு படக்குழுவினரிடம் அதனை நீக்க வலியுறுத்தினோம். இதுவரை நீக்கப்படவில்லை. ஆனால் வலதுசாரி அமைப்புகள் எதிர்ப்பு காரணமாக 17 காட்சிகளை நீக்கி திரைப்படத்தை வெளியிட்டுள்ளனர் .அப்படியானால் தமிழக விவசாயிகளின் உணர்வுக்கு மதிப்பு இல்லையா? தமிழினத்திற்கு எதிரான கருத்துகளை உமிழும் வகையில் திரைப்படத்தில் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன. எனவே தமிழக அரசு இந்த திரைப்படத்தை தணிக்கை செய்து வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் விவசாயிகளை திரட்டி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவோம் என்றார்.

    • முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 113 அடியாக உள்ளது.
    • சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 66.25 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. பருவமழையின் போது மழை கைகொடுத்ததால் அணை முழு கொள்ளளவான 71 அடியை எட்டியது. அதனை தொடர்ந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் நீர்மட்டம் குறைந்து கொண்டு வருகிறது. அவ்வப்போது மழை பெய்தாலும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து நேற்று முற்றிலும் நின்று விட்டது.

    இதனால் அணையின் நீர்மட்டம் 57.71 அடியாக குறைந்துள்ளது. அணையில் முறைநீர் பாசன அடிப்படையில் தற்போது மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. அதன்படி குடிநீருடன் சேர்த்து 722 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 3178 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

    முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 113 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 105 கனஅடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. 1392 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 31 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 66.25 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 34 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை. மழை எங்கும் இல்லை.

    • பலத்த காயம் அடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷ்குமார், பிரவீனை கைது செய்தனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் டொம்பு சேரி கிழக்குத்தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது33). எலக்ட்ரீசியன் வேைல பார்த்து வந்தார். இவரது அண்ணன் மருதமுத்து (36). இவரது மனைவி வீரலட்சுமி (32). இவரும் அதே பகுதியில் வசித்த பிரவீன் (24) என்பவரும் நெருக்கமாக பழகி வந்தனர். இவர்கள் கள்ளத்தொடர்பு அக்கம் பக்கத்தில் இருந்தவர்களுக்கு தெரிய வந்தது. இதனையடுத்து ஊர் பெரியவர்கள் மூலம் பேசி அவர்களுக்கு அறிவுரை வழங்கி வந்தனர்.

    இனிமேல் இதுபோன்று செயல்பட்டால் போலீசில் புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கையும் விடுத்தனர். ஆனால் அதனையும் மீறி வீரலட்சுமி, பிரவீன் கள்ளத்தொடர்பு தொடர்ந்து வந்தது.

    இந்நிலையில் கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் 26ந் தேதி வீரலட்சுமியுடன் பேசிக்கொண்டிருந்த பிரவீனை கணவர் மருதமுத்து கண்டித்தார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் மருதமுத்துவை தினேஷ்குமார் (27) என்பவர் பிடித்துக்கொள்ள பிரவீன் கத்தியால் குத்த முயன்றார். ஆனால் தகராறை தடுக்க சென்ற ராஜா மீது கத்திக்குத்து விழுந்தது. பலத்த காயம் அடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷ்குமார், பிரவீனை கைது செய்தனர். இந்த வழக்கு தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் பிரவீனுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் உடந்தையாக இருந்த தினேஷ்குமாருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சொர்ணம் நடராஜன் உத்தரவிட்டார்.

    • இந்த குழு கடந்த 7-ந் தேதி ஆய்வு நடத்துவதாக இருந்த நிலையில் அது ஒத்திவைக்கப்பட்டது.
    • தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையக்குழு அமைக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் ஆய்வு இதுவாகும்.

    கூடலூர்:

    கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கரில் இரு போக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது.

    மேலும் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் திகழ்ந்து வருகிறது. அணையின் நீர்மட்டத்தை 142 ஆக உயர்த்திக்கொள்ளவும், பேபி அணையை பலப்படுத்திய பிறகு 152 அடி வரை தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் என கடந்த 2014ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    ஆனால் பேபி அணையை பலப்படுத்த தமிழக அதிகாரிகள் எடுத்து வரும் நடவடிக்கைக்கு கேரள அரசு தொடர்ந்து இடையூறு செய்து வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 1-ந் தேதி முல்லைப்பெரியாறு அணை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.

    ஆணையத் தலைவர் அனில் ஜெயின் தலைமையிலான இந்தக்குழுவின் தமிழக நீர் வளத்துறை செயலர் மங்கத்ராம் சர்மா, காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியன், கேரள அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் விஸ்வாஸ், நீர் வளத்துறை தலைமைப் பொறியாளர் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் என 7 பேர் இடம்பெற்றுள்ளனர்.

    இந்த குழு கடந்த 7-ந் தேதி ஆய்வு நடத்துவதாக இருந்த நிலையில் அது ஒத்திவைக்கப்பட்டது.

    இதனிடையே புதிய கண்காணிப்பு குழுவில் இடம்பெற்றுள்ள கேரள பிரதிநிதிகளை நீக்க வேண்டும் என்பது உள்பட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினர் நேற்று லோயர்கேம்பில் இருந்து பேரணியாக சென்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தங்கள் எதிர்ப்பையும் மீறி புதிய கண்காணிப்பு குழு அணைப்பகுதியில் ஆய்வு நடத்தினால் தமிழக விவசாயிகள் தடையை மீறி முல்லைப்பெரியாறு அணைப்பகுதிக்குள் சென்று போராட்டம் நடத்துவோம் என்றும் தெரிவித்தனர்.

    ஆனால் திட்டமிட்டபடி புதிய கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் இன்று முல்லைப்பெரியாறு அணைப்பகுதிக்கு வந்தனர். தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையக்குழு அமைக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் ஆய்வு இதுவாகும். அணை தொடர்பான பிரச்சனைகளுக்கு 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இந்த ஆய்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதன் மூலம் பல ஆண்டுகளாக தொடரும் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முல்லைப்பெரியாறு அணையில் ஆய்வு செய்தபிறகு தமிழகத்தை சேர்ந்த அதிகாரிகள் சார்பில் வைக்கப்படும் கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்வார்களா? என்பது விவசாயிகள் எதிர்பார்ப்பாக உள்ளது. விவசாயிகள் போராட்டத்தையும் மீறி புதிய கண்காணிப்பு குழு முல்லைப்பெரியாறு அணையில் ஆய்வுக்கு வந்துள்ளதால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

    • வைகை அணையின் நீர்மட்டம் 59.84 அடியாக உள்ளது.
    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 31 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கரில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது.

    பருவமழை போதிய அளவு பெய்யாததால் அணையின் நீர்மட்டம் உயராமல் இருந்தது. அதனைத் தொடர்ந்து அவ்வப்போது மழை பெய்தபோதும் அணைக்கு நீர்வரத்து குறைவாகவே உள்ளது.

    இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்துள்ளது. வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் முதல் போக நெல்சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும். நீர்மட்டம் குறைந்து வருவதால் தண்ணீர் திறக்கப்படுமா? என விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

    அணைக்கு 50 கன அடி நீர் மட்டுமே வருகிறது. இருந்தபோதும் தமிழக பகுதிக்கு 322 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 113.75 அடியாக சரிந்துள்ளது. 1518 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 59.84 அடியாக உள்ளது. 114 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 3572 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 31 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 45 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 70.71 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் 3 கன அடி.

    சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 32.60 அடியாக உள்ளது. 9 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை.

    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 32.05 அடியாக உள்ளது.
    • சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 70.39 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதி மற்றும் தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மழைப்பொழிவு இல்லாமல் இருந்தது. மேலும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்ததால் அணைக்கு நீர்வரத்து முற்றிலும் நின்று விட்டது.

    இந்த நிலையில் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. இதேபோல் தேனி மாவட்டத்திலும் கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது. மேலும் வருசநாடு, பெரியகுளம், முருகமலை, தேவதானப்பட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அடிக்கடி காட்டுத்தீ பற்றி எரிந்து அரிய வகை மூலிகைகள், மரங்கள் எரிந்து நாசமானது.

    காட்டுத்தீயை அணைக்க வனத்துறையினர் போராடினர். இருந்தபோதும் தொடர்ந்து பற்றி எரிந்ததால் விவசாயிகள் அச்சம் அடைந்தனர். இந்த நிலையில் தற்போது பெய்துள்ள மழையால் காட்டுத்தீ முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வனப்பகுதியில் ஈரப்பதம் காணப்படுகிறது. இதனால் வன விலங்குகள் வெளியேறும் அபாயம் நீங்கி உள்ளது.

    நீர் வரத்தின்றி காணப்பட்ட முல்லைப்பெரியாறு அணைக்கு 54 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 322 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 114.10 அடியாக உள்ளது. 1576 மி.கன அடி. நீர் இருப்பு உள்ளது.

    இதேபோல் வைகை அணைக்கும் நீர்வரத்து தொடங்கி உள்ளது. இன்று காலை 177 கன அடி நீர் வந்த நிலையில் மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 422 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 3531 மி.கன அடி. நீர் இருப்பு உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 32.05 அடியாக உள்ளது. 5 கன அடி நீர் வருகிறது. 45 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 70.39 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 30.70 அடியாக உள்ளது. வரத்து 11 கன அடி. திறப்பு இல்லை.

    ஆண்டிபட்டி 4.8, வீரபாண்டி 4.6, பெரியகுளம் 12, மஞ்சளாறு 7, சோத்துப்பாறை 9, வைைக அணை 8.2, போடி 2.8, உத்தமபாளையம் 5.6, கூடலூர் 2.6, பெரியாறு அணை 1.2, தேக்கடி 11.8, சண்முகாநதி 6.4 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • தக்காளி போன்று கத்திரிக்காயும் கொள்முதல் விலையில் இறங்கு முகமாக உள்ளதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
    • வெளிச்சந்தைகளில் கத்திரிக்காய் தற்போது கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரை மட்டுமே விற்கப்படுகிறது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அருகே பொட்டிபுரம், ராமகிருஷ்ணாபுரம், ராசிங்காபுரம், சிலமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 700 ஏக்கருக்கும் மேல் கத்திரிக்காய் பயிரிடப்பட்டு வருகிறது. தற்போது தக்காளி போன்று கத்திரிக்காயும் கொள்முதல் விலையில் இறங்கு முகமாக உள்ளதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. கத்திரிக்காய் தற்போது விளைச்சல் இருந்த போதிலும் போதிய விலை கிடைக்கவில்லை. விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் வியாபாரிகள் கத்திரிக்காய் கிலோ ரூ.6 முதல் ரூ.7 வரை மட்டுமே கொள்முதல் செய்து வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    கத்திரிக்காய் நடவு கூலி, மருந்தடிப்பு, களைபறிப்பு மற்றும் காய்கள் பறிப்பு செலவிற்கு கூட கட்டு படியாகாத நிலையில் காய்களை பறித்து சந்தைக்கு கொண்டு செல்லும் வாகன செலவு கூட விலையில்லை.

    போதிய விலையின்மை காரணமாக மனஉளைச்சலுக்கு ஆளான பெரும்பாலான விவசாயிகள் கத்திரிக்காய் செடிகளை தங்கள் தோட்டத்திலேயே டிராக்டர் ரொட்டேட்டர் வைத்து உழுது அழித்து வருகின்றனர். 3 மாத பயிராக உருவாக்கி விளைச்சலுக்காக பாடுபட்டு விளைந்த கத்திரிக்காய் செடிகளை போதிய கொள்முதல் விலை இல்லாத காரணமாக தாங்களே அழிக்கும் நிலைக்கு ஆளாவதாக விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர்.

    வெளிச்சந்தைகளில் கத்திரிக்காய் தற்போது கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரை மட்டுமே விற்கப்படுகிறது. இதனால் பெரும்பாலான விவசாயிகள் கத்திரிக்காய் செடிகளை தோட்டத்திலே அழித்துவிட்டு பூக்கள் நடவு செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×