என் மலர்
தமிழ்நாடு

கடும் விலை சரிவு: கத்திரிக்காய் செடிகளை அழிக்கும் விவசாயிகள்
- தக்காளி போன்று கத்திரிக்காயும் கொள்முதல் விலையில் இறங்கு முகமாக உள்ளதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
- வெளிச்சந்தைகளில் கத்திரிக்காய் தற்போது கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரை மட்டுமே விற்கப்படுகிறது.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி அருகே பொட்டிபுரம், ராமகிருஷ்ணாபுரம், ராசிங்காபுரம், சிலமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 700 ஏக்கருக்கும் மேல் கத்திரிக்காய் பயிரிடப்பட்டு வருகிறது. தற்போது தக்காளி போன்று கத்திரிக்காயும் கொள்முதல் விலையில் இறங்கு முகமாக உள்ளதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. கத்திரிக்காய் தற்போது விளைச்சல் இருந்த போதிலும் போதிய விலை கிடைக்கவில்லை. விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் வியாபாரிகள் கத்திரிக்காய் கிலோ ரூ.6 முதல் ரூ.7 வரை மட்டுமே கொள்முதல் செய்து வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கத்திரிக்காய் நடவு கூலி, மருந்தடிப்பு, களைபறிப்பு மற்றும் காய்கள் பறிப்பு செலவிற்கு கூட கட்டு படியாகாத நிலையில் காய்களை பறித்து சந்தைக்கு கொண்டு செல்லும் வாகன செலவு கூட விலையில்லை.
போதிய விலையின்மை காரணமாக மனஉளைச்சலுக்கு ஆளான பெரும்பாலான விவசாயிகள் கத்திரிக்காய் செடிகளை தங்கள் தோட்டத்திலேயே டிராக்டர் ரொட்டேட்டர் வைத்து உழுது அழித்து வருகின்றனர். 3 மாத பயிராக உருவாக்கி விளைச்சலுக்காக பாடுபட்டு விளைந்த கத்திரிக்காய் செடிகளை போதிய கொள்முதல் விலை இல்லாத காரணமாக தாங்களே அழிக்கும் நிலைக்கு ஆளாவதாக விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர்.
வெளிச்சந்தைகளில் கத்திரிக்காய் தற்போது கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரை மட்டுமே விற்கப்படுகிறது. இதனால் பெரும்பாலான விவசாயிகள் கத்திரிக்காய் செடிகளை தோட்டத்திலே அழித்துவிட்டு பூக்கள் நடவு செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.