என் மலர்tooltip icon

    சிவகங்கை

    சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரியில் மாவட்ட கலெக்டர் லதா நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது டெங்கு காய்ச்சல் நிலைமை குறித்து டாக்டர்களிடம் அவர் கேட்டறிந்தார்.
    சிங்கம்புணரி:

    சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு டெங்கு காய்ச்சல் பாதிப்பால் குழந்தைகள் உள்பட 8 பேர் அடுத்தடுத்து பலியாகினர். இதனையடுத்து மாவட்டம் முழுவதும் சுகாதார துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் டெங்கு தடுப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டன. ஒன்றியங்கள் வாரியாக கலெக்டர் மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் டெங்கு காய்ச்சல் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் அப்பகுதிகளில் சுகாதாரமற்று வளாகங்களை வைத்திருக்கும் கடை, வீடுகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    இந்தநிலையில் சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரியில் நேற்று கலெக்டர் லதா திடீர் ஆய்வு மேற்கொண்டார். முதலில் டெங்கு சிறப்பு பிரிவில் அவர் ஆய்வு நடத்தினார். பின்னர் அங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவோரிடம் நலம் விசாரித்தார். தொடர்ந்து அவர்களிடம் டெங்கு காய்ச்சல் வராமல் எவ்வாறு தடுக்கலாம் என்று விழிப்புணர்வு கருத்துகளை தெரிவித்தார்.

    பின்னர் டாக்டர்களின் வருகை பதிவேட்டை கலெக்டர் சரி பார்த்தார். மேலும் சிங்கம்புணரி பேரூராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு தடுப்பு பணிகள் குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் முனியாண்டியிடம் கேட்டறிந்தார். இதனைத்தொடர்ந்து ஆஸ்பத்திரியில் மக்களுக்கு வழங்கப்படுவதற்காக வைக்கப்பட்டிருந்த நிலவேம்பு கசாயத்தை அருந்தி, சோதனை செய்தார்.

    இந்த ஆய்வின்போது, டாக்டர்கள் செந்தில்வேலன், செந்தில், கண்ணன் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் நபிஷாபானு, தாசில்தார் தனலட்சுமி, வருவாய் ஆய்வாளர் வினோத், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹேமலதா, பிரதீப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    இளையான்குடி அருகே திருமண ஏற்பாடுகள் பிடிக்காததால் இளம்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    சிவகங்கை:

    ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே உள்ள நல்லுகுறிச்சியைச் சேர்ந்தவர் விஜயராமன். இவரது மகள் கிருஷ்ணவேணி (வயது 21).

    இவர் சில நாட்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள துகவூரில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு வந்தார்.

    அங்கு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கிருஷ்ணவேணி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் இளையான்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.

    திருமண ஏற்பாடுகள் பிடிக்காததால் கிருஷ்ணவேணி தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காரைக்குடியில் கந்து வட்டி பிரச்சினையில் வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தொடர்பாக 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    காரைக்குடி:

    காரைக்குடி மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் வழிவிட்டான் (வயது 25), மீன் வியாபாரி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த ராஜீ, முத்துமீனாள், சுந்தரபாண்டி, கருப்பாயி, ராஜாம்பாள் ஆகிய 5 பேரிடம் வட்டிக்கு பணம் வாங்கினார்.

    இந்த நிலையில் 5 பேர் கூடுதல் வட்டி கேட்டு வழிவிட்டானை மிரட்டியதாக தெரிகிறது. மேலும் அவரது சகோதரர் பிரகாசையும் மிரட்டியுள்ளனர்.

    இதில் மனம் உடைந்த பிரகாஷ் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு காரைக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து காரைக்குடி வடக்கு போலீசில் வழிவிட்டான் கொடுத்த புகாரின் பேரில் 4 பெண்கள் உள்பட 5 பேர் மீது இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    சிவகங்கை மாவட்டத்தில் கந்துவட்டி குறித்து புகார் தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் கந்துவட்டி குறித்து புகார் கூற விரும்புபவர்கள் 86086 00100 என்ற தொலைபேசியில் தெரிவிக்கலாம். 24 மணி நேரமும் இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம். புகார்கள் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    மாவட்டத்தில் சாலை விபத்துக்களை குறைக்கும் வகையில் சிவகங்கை, குன்றக்குடி, கீழசெவல்பட்டி, மானாமதுரை, திருப்பத்தூர், காளையார்கோவில் உள்பட 8 இடங்களில் பேரிகாட் வைக்கப்பட்டுள்ளது.

    இது தவிர முக்கிய இடங்களில் போக்குவரத்து காவலர்களுக்கு ஒளிரும் பனியன்கள், சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 32 லட்சம் மதிப்பிலான பணிகள் செய்யப்பட்டுள்ளன.

    தேவகோட்டை, காரைக்குடி பகுதியில் நடந்த தொடர் திருட்டுக்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் திருடர்கள் கண்டுபிடிக்கப்படுவார்கள்.

    பெண்கள், தங்களுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளை தெரிவிக்கும் வகையில் மகளிர் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் கொண்ட மொபைல் வேன் செயல்பட்டு வருகிறது. இதில் நகரில் முக்கிய இடங்களில் காவல் துறையால் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்த டாக்குமெண்டரி படம் காண்பிக்கப்படுகிறது.

    வீடுகளில் உள்ள பெண்களை மகளிர் போலீசார் சந்தித்து பேசுவார்கள். பிரச்சினைகளை அவர்களிடம் தெரிவிக்கலாம்.

    கொலை, வழிப்பறி, கொள்ளைகளில் ஈடுபட்டு 7 ஆண்டுகளுக்கு மேலாக பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டவர்கள் 58 பேர்களில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 34 வழக்குகளில் 58 பேர் தேடப்பட்டு வந்தனர். மீதம் உள்ள குற்றவாளிகளை விரைவாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தனிப்படை பிரிவு இன்ஸ்பெக்டர் சுபாஷ், சப்-இன்ஸ்பெக்டர் பூபதி ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
    வாலிபரிடம் கத்தி முனையில் வழிப்பறி செய்த ரவுடி கைது செய்யப்பட்டார்.
    சிவகங்கை:

    மானாமதுரை தாலுகா பிரமனூரைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 25). இவர் மோட்டார் சைக்கிளில் மானாமதுரை சாலையில் சென்றார்.

    அப்போது அங்கு வந்த வாலிபர் அவரை வழிமறித்தார். திடீரென்று கத்தியை காட்டி மிரட்டி ராதாகிருஷ்ணனிடம் இருந்த 1,200 ரூபாயை பறித்துச் சென்றுவிட்டார். இது குறித்து மானாமதுரை டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் முகமது பரக்கத்துல்லா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் பணம் பறித்துச் சென்றது உடைகுளத்தைச் சேர்ந்த ரவுடி முத்துப்பாண்டி (26) என தெரியவந்தது.

    தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார் முத்துப்பாண்டியை கைது செய்தனர். அவர் மீது பல்வேறு வழிப்பறி வழக்குகள் உள்ளன.

    தலைமறைவாக இருந்த ரவுடி முத்துப்பாண்டி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    காரைக்குடியில் தொழிலாளி கால் தடுமாறி வெந்நீர் அண்டாவில் விழுந்ததால் பரிதாபமாக உயிரிழந்தார்.
    காரைக்குடி:

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள குளத்தூரை சேர்ந்தவர் சுந்தர்(வயது 45). இவர் காரைக்குடி கல்லூரி சாலையில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று பேக்கரியில் முட்டைகளை அவிப்பதற்காக பெரிய அண்டாவில் தண்ணீரை சூடாக்கினார். பின்னர் முட்டைகள் வெந்துவிட்டனவா என்பதை பார்க்க அவர் ஆண்டாவை எட்டி பார்த்துள்ளார். அப்போது கால் தடுமாறிய சுந்தர் வெந்நீர் அண்டாவினுள் விழுந்துவிட்டார்.

    வெந்நீரில் விழுந்ததால் சுந்தர் உடல் முழுவதும் வெந்து போனது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக காரைக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இதுகுறித்து காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரைக்குடியில் பெண்ணிடம் கந்துவட்டி வசூலித்ததாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    சிவகங்கை:

    காரைக்குடி செஞ்சை பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி முத்து (வயது45). இவர் காரைக்குடி தெற்கு போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.

    அதில் முருகேசன் என்பவரிடம் எனது கணவர் 4 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.50 ஆயிரம் கடன் வாங்கினார். இதற்கு வட்டி கட்டி வந்தோம்.

    இந்த நிலையில் கணவர் ஆறுமுகம் இறந்து விட்டார். அதன்பிறகு முருகேசன் கந்துவட்டி கேட்டு மிரட்டுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.

    இது குறித்து இன்ஸ்பெக் டர் பிரேம்ஆனந்த் விசாரணை நடத்தினார். தொடர்ந்து கந்துவட்டி வசூலித்த புகாரில் முருகேசனை கைது செய்தார்.

    திருப்பத்தூர் அருகே வீடு புகுந்து திருடியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    சிவகங்கை:

    திருப்பத்தூர் தாலுகா எஸ்.வி.மங்கலம் அருகே உள்ள மாதவராயன் பட்டியை சேர்ந்தவர் பழனிக்குமார் (வயது43), விவசாயி. இவர் வீட்டின் கதவை பூட்டாமல் அருகில் உள்ள கடைக்கு சென்றார்.

    அங்கிருந்து திரும்பி வந்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது 4 வாலிபர்கள் பீரோவை உடைக்க முயற்சி செய்து கொண்டிருந்தனர். இதனை கண்டு பழனிக்குமார் கூச்சலிட்டார்.

    அவரது சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். அவர்கள் வீடு புகுந்து திருட முயன்ற 4 பேரையும் பிடித்து எஸ்.வி.மங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் சேதுராஜ் விசாரணை நடத்தி கைது செய்தார்.

    விசாரணையில் கைதான 4 பேரின் பெயர்கள் முகமது காசிம் (35), சலீம் (22), காசிம் (23), முகமதுநாசர் (28) என தெரியவந்தது. மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த இவர்கள் கம்பளி விற்பதுபோல் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இவர்கள் வேறு எங்காவது இதுபோல திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதகுபட்டி அருகே போலி பெண் டாக்டரை போலீசார் கைது செய்தனர்.

    சிவகங்கை:

    சிவகங்கை தாலுகா மதகுபட்டி போலீஸ் சரகத்துக்குட்பட்ட கே.சொக்கநாதபுரத்தில் ஓமியோபதி கிளினிக் நடத்தி வந்தவர் அமுதா (வயது46). இந்த கிளினிக்கில் ஊசி போடப்பட்டு மாத்திரை கொடுப்பதாக புகார்கள் வந்தன.

    இதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குநர் விஜயன் மதமடக்கி மற்றும் அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தினர்.

    அப்போது கிளினிக் நடத்தி வந்த அமுதா 10-ம் வகுப்பு மட்டுமே படித்து விட்டு போலி டாக்டராக செயல்பட்டு வந்தது தெரிய வந்தது.

    இதுதொடர்பாக மதகுபட்டி போலீசில் சுகாதார பணிகள் இணை இயக்குநர் விஜயன் மதமடக்கி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி டாக்டர் அமுதாவை கைது செய்தனர்.

    இவர் காரைக்குடி அருகே உள்ள டி.டி.நகரில் வசித்து வருகிறார். இங்கிருந்துதான் தினமும் கிளினிக் சென்று வந்துள்ளார்.

    மருதுபாண்டியர்கள் குருபூஜை விழாவுக்கு போலீஸ் உத்தரவை மீறி வாகனங்களில் கூடுதல் ஆட்களுடன் வந்ததாக திருநாவுக்கரசர், டி.டி.வி.தினகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் மருதுபாண்டியர்கள் குருபூஜை விழா நடைபெற்றது. இதில் அனைத்து கட்சியினரும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

    மருதுபாண்டியர்கள் குரு பூஜை விழாவையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மரியாதை செலுத்த வரும் அரசியல் கட்சி தலைவர்கள் வாகனங்களுடன் 5 வாகனங்கள் மட்டுமே வர வேண்டும். ஒவ்வொரு வாகனத்திலும் 5 பேர் மட்டுமே வரவேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவித்தார்.

    அ.தி.மு.க. அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டிடி.வி.தினகரன், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன், கருணாஸ் எம்.எல்.ஏ., ம.தி.மு.க. மாவட்ட தணிக்கை குழு உறுப்பினர் கண்ணன், ஸ்ரீதர் வாண்டையார், நாம் தமிழர் கட்சி மாநில செயலாளர் சகாயம் மற்றும் சமுதாய அமைப்புகளை சேர்ந்தவர்கள் மருது பாண்டியர்கள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

    அப்போது அவர்களுடன் 5-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்ததாகவும், அதில் 5-க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்ததாகவும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை போலீஸ் நிலையங்களில் இன்ஸ்பெக்டர்கள் புகார் செய்தனர். அதன்பேரில் அவர்கள் மீது போலீஸ் உத்தரவை மீறி வாகனங்களில் கூடுதல் ஆட்களுடன் வந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    திருப்பாச்சேத்தியில் ரசாயன கலவையை பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்ட வாழை தார்களை ஆய்வில் கண்டுபிடித்து மாவட்ட கலெக்டர் லதா பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுத்தார்.
    திருப்புவனம்:

    திருப்பாச்சேத்தி ஊராட்சி பகுதிகளில் கிழக்குத்தெரு, காமாட்சியம்மன் கோவில் தெரு, படித்துறை ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் அங்கு பராமரிப்பு இல்லாமல் செயல்பட்டு வந்த வாழைக்காய் மண்டியில் ரசாயன கலவையை பயன்படுத்தி செயற்கை முறையில் வாழைப்பழம் பழுக்க வைப்பதை கண்டறிந்தார். இதையடுத்து அங்கிருந்த அனைத்து வாழைத்தார்களையும் அதிகாரிகள் மூலம் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுத்து விசாரணை நடத்தினார். பின்னர் அவைகள் குழித்தோண்டி புதைக்கப்பட்டன. வாழைக்காய் மண்டி உரிமையாளர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.

    கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஊராட்சிப் பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளிலும் ஆய்வு மேற்கொள்ள கலெக்டர் அறிவுறுத்தினார். டெங்கு தடுப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படும் பணியாளர்களின் எண்ணிக்கையை உயர்த்தி விரைவாக அனைத்து துப்புரவு பணிகளை முழுவீச்சில் செயல்படுத்த கலெக்டர் உத்தரவிட்டார்.

    இந்த ஆய்வின் போது சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோ பூவந்தி ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சேதுராமு மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
    சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் உதவித்தொகை வழங்காததைக் கண்டித்து பயிற்சி டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் அவதி அடைந்தனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை நகரில் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். மேலும் பலர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    தற்போது மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளதால் நாள்தோறும் குழந்தைகள், பெண்கள் என ஏராளமானோர் ஆஸ்பத்திரிக்கு வருகின்றனர்.

    இந்த நிலையில் அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரிந்து வரும் 96 பயிற்சி டாக்டர்களுக்கு கடந்த 3 மாதங்களாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இதை கண்டித்தும், உதவித்தொகையை உடனே வழங்ககோரியும் இன்று திடீர் என்று பயிற்சி டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ஆஸ்பத்திரி முன்பு திரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    இதன் காரணமாக நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் அவதி அடைந்தனர்.
    ×