என் மலர்tooltip icon

    சிவகங்கை

    காளையார்கோவில் அருகே பாலத்தின் தடுப்புச் சுவரின் மீது கார் மோதியதில் சிறுமி, முதியவர் பரிதாபமாக இறந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
    காளையார்கோவில்:

    ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள பெத்தனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் இஸ்மாயில் (வயது 50). வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சபீதா என்ற மனைவியும், நசீன் பாத்திமா (14) என்ற மகளும் உள்ளனர்.

    வெளிநாட்டில் இருந்த இஸ்மாயில் நேற்று விமானம் மூலம் ஊருக்கு புறப்பட்டார். திருச்சி விமான நிலையத்தில் வந்து இறங்கும் அவரை அழைத்து வருவதற்காக சபீதா, தனது மகள் நசீன் பாத்திமா, உறவினர் ராஜா முகமது (60) ஆகியோருடன் காரில் நேற்று இரவு திருச்சிக்கு புறப்பட்டார். காரை பரமக்குடியைச் சேர்ந்த செல்வம் (37) என்பவர் ஓட்டினார்.

    விமானத்தில் வந்து இறங்கிய இஸ்மாயிலை அழைத்துக் கொண்டு இன்று அதிகாலை 2 மணியளவில் அவர்கள் ஊருக்கு காரில் புறப்பட்டனர். சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே மறவமங்கலத்தை அடுத்துள்ள புல்லுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது.

    அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி பாலத்தின் தடுப்புச்சுவரில் பயங்கரமாக மோதியது.

    இதில் கார் நொறுங்கியது. உள்ளே இருந்தவர்கள் படுகாயம் அடைந்து கூக்குரலிட்டனர். இந் விபத்தில் நசீன் பாத்திமா, ராஜா முகமது ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

    ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இஸ்மாயில், சபீதா, டிரைவர் செல்வம் ஆகியோரை அந்தப் பகுதி மக்கள் மீட்டு மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஆபத்தான நிலையில் 3 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    விபத்து குறித்து காளையார் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிங்கம்புணரி-திண்டுக்கல் சாலையில் கழிவுநீர் ஆறாக ஓடுவதால், அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
    சிங்கம்புணரி:

    சிங்கம்புணரி-திண்டுக்கல் சாலையில் கால்நடை மருத்துவமனைக்கு எதிரில் மழைநீர் வடிகால் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டியில் இருந்து சாலையின் மறுபுறம் வரை குழாய் அமைத்து மழைநீர் பாலாற்றுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்தநிலையில் மழைநீர் வடிகால் தொட்டியில், இந்த பகுதியில் இருந்து வரும் கழிவுநீர் செல்லும் வகையில் இணைக்கப்பட்டது.

    இதனால் கழிவுநீருடன் வரும் குப்பைகள் மழைநீர் வடிகால் தொட்டியில் தேங்குவதால், தொட்டியில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் செல்ல வழியின்றி, சாலைகளில் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் அந்த பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் சுகாதார கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கூறினர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- இந்த பகுதியில் முறையாக கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படாததால் குடியிருப்புகள், ஓட்டல்களில் இருந்து வரும் கழிவுநீரை குழாய் மூலம் சாலை ஓரம் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால் தொட்டியில் இணைத்துள்ளனர்.

    இதனால் கழிவுநீர் குழாயில் வரும் குப்பைகள் பிளாஸ்டிக் பைகள், கோழி கடைகளின் கழிவுகள் மழைநீர் வடிகால் தொட்டியில் தேங்கி அடைப்பு ஏற்படுகிறது. அப்போது இந்த தொட்டி நிரம்பி கழிவுநீர் சிங்கம்புணரி-திண்டுக்கல் சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது.

    இதுபோன்று அடிக்கடி நிகழ்வதால், கடும் துர்நாற்றம் வீசிவருவதோடு, இந்த பகுதியை சேர்ந்த அனைத்து தரப்பினரும் பெரும் சிரமமடைகின்றனர். மேலும் மழைநீர் வடிகால் செல்லும் பாதையில் கழிவுநீர் செல்வதால், பாலாற்றில் மாசு ஏற்பட்டு வருகிறது.

    இதனால் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதி பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் நலன் கருதி, கழிவுநீர் கால்வாய் முறையாக அமைத்தும், மழைநீர் வடிகால் தொட்டியில் கழிவுநீர் செல்லாத வகையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
    நண்பரை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி வாங்கிய ரூ.8 லட்சத்தை திருப்பிக்கொடுக்க முடியாததால் மனம் உடைந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.

    காரைக்குடி:

    காரைக்குடி முத்துப்பட்டினத்தைச் சேர்ந்த வீரப்பன் மகன் சின்னையா (வயது 35). இவர் தனது நண்பர் செல்வம் (35) என்பவரை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி இருந்து ரூ.8 லட்சம் வாங்கினார். அதை புரோக்கரிடம் செலுத்தினார்.

    நீண்ட நாட்களாகியும் செல்வத்தை வெளிநாட்டுக்கு அனுப்பவில்லை. பணமும் கிடைக்கவில்லை.

    இது குறித்து செல்வம், சின்னையாவிடம் கேட்டபோது சரிவர பதில் சொல்லவில்லை.

    இதில் மனம் உடைந்த சின்னையா நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து அவரது தாயார் லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    சிவகங்கை அருகே குடிநீர் தட்டுப்பாட்டால் கிராம மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை அருகே உள்ளது பெரியகோட்டை கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக இந்த கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் 3 ஆழ்துளை கிணறுகளுடன் கூடிய சிறு தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கான ஆழ்துளை மோட்டார் பழுதாகியது.

    மேலும் ஆழ்துளை கிணற்றுடன் அமைக்கப்பட்டுள்ள சிறு தொட்டியும் தற்போது செயல்படவில்லை. இதையடுத்து இங்கு குடிநீர் தட்டுப்பாடு நிலவி இந்த கிராம மக்கள் தற்போது குடிநீர் இல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    மேலும் இந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் தங்கள் கிராமத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வைரவன்பட்டி பகுதிக்கு நடந்து சென்று அங்குள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்தி வருகின்றனர்.

    எனவே இந்த அவல நிலையை போக்கிட மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து பெரியகோட்டை கிராமத்துக்கு போதிய குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.
    திருப்பத்தூர் அருகே இன்று நடந்த மஞ்சு விரட்டில் மாடுகள் முட்டித் தள்ளியதில் 2 பார்வையாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள கண்டரமாணிக்கத்தில் மாணிக்கநாச்சியம்மாள் கோவில் உள்ளது.

    இந்த கோவில் திருவிழாவையொட்டி நேற்று தேரோட்டம் நடந்தது. இதையொட்டி இன்று காலை மஞ்சு விரட்டு நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மஞ்சுவிரட்டை பார்வையிட்டனர்.

    இந்த மஞ்சுவிரட்டில் சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி மற்றும் மதுரை மாவட்டங்களில் இருந்து 800-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

    மஞ்சுவிரட்டின்போது காளைகள் தொழுவத்தில் அவிழ்த்து விடப்படுவது வழக்கம். இதற்கு மாறாக காளைகள் இன்று கண்டர மாணிக்கம் கண்மாயில் அவிழ்த்து விடப்பட்டன. இதனால் காளைகள் ஆங்காங்கே சிதறி ஓடி கண்மாய்களில் குவிந்திருந்த பார்வையாளர்கள் மீது முட்டித்தள்ளியது.

    இதில் அமராவதி புதூரைச்சேர்ந்த சேவுகன் (வயது 48), வலையபட்டி ராசு (23), அழகாபுரி சின்னசாமி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். வழியிலேயே சேவுகன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட வலையபட்டி ராசு, சிகிச்சை பலனின்றி இறந்தார். அழகாபுரி சின்னசாமி கவலைக் கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    மேலும் இந்த மஞ்சு விரட்டில் 38 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து திருக்கோஷ்டியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மஞ்சுவிரட்டின் போது பார்வையாளர்கள் 2 பேர் பலியான சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    முன் விரோதத்தில் பெண்ணை கொலை செய்ய முயன்றதாக 2 பெண்கள் உள்பட 6 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிவகங்கை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
    சிவகங்கை:

    மானாமதுரையை அடுத்த செட்டிக்குளத்தைச் சேர்ந்தவர் சோனைமுத்து. இவருடைய மகன்கள் கருப்பசாமி என்ற செந்தில் மற்றும் ஆனந்த்.

    ஆனந்திற்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த முத்தையா என்பவருக்கும் இடையே கடந்த 2013-ம் ஆண்டு பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆனந்த் மற்றும் அவரது தந்தை சோனைமுத்து, தாயார் சேது அம்மாள் ஆகியோர் சேர்ந்து முத்தையாவை தாக்கியதில் அவர் இறந்து போனாராம்.

    இதையடுத்து அவர்கள் இரு குடும்பத்திற்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 18.10.2013 அன்று செட்டிக்குளத்தில் உள்ள கருப்பசாமி வீட்டில் இருந்த சேது அம்மாளை இறந்துபோன முத்தையாவின் மகன்கள் சோனைய தேவன்(வயது32), கருப்பசாமி (29) மற்றும் வி.புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணுச்சாமி (37), மானாமதுரை அருகே உள்ள வேலூர் கிராமத்தை சேர்ந்த வேங்கை(30) மற்றும் சித்ரா, ஆறுமுகம் அம்மாள் ஆகிய 6 பேர் சேர்ந்து பயங்கர ஆயுதங்களால் தாக்கினார்களாம்.

    இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த சேது அம்மாள் சிகிச்சைக்குப்பின் உயிர் பிழைத்தார். இது தொடர்பாக மானாமதுரை சிப்காட் போலீசார் இந்த சம்பவத்தில் தொடர்புடைய சோனைய தேவன், கருப்பசாமி, கண்ணுச்சாமி, வேங்கை, சித்ரா, ஆறுமுகம் அம்மாள் ஆகிய 6 பேரை கைது செய்து அவர்கள் மீது சிவகங்கை தலைமை குற்றவியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த தலைமை குற்றவியல் நீதிபதி ராதிகா குற்றம் சாட்டபட்ட பெண்கள் உள்பட 6 பேருக்கும் தலா 7 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ1,250 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். 
    மானாமதுரையில் ஏற்படும் தொடர் மின் தடையில் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.

    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் தற்போது சித்திரை திருவிழா நடைபெறுகிறது. விழாவையொட்டி வைகை ஆற்றில் சுவாமி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதை காண ஏராளமான பக்தர்கள் வைகை ஆற்றில் திரண்டனர். இது தவிர வைகை ஆறு முழுவதும் மின்சார அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

    பக்தர்கள் மற்றும் சுவாமி அலங்காரம் செய்யப்பட்டு காட்சி தரும் இடங்களில் கூடுதலாக மின்விளக்கு வசதி செய்யப்பட்டு இருந்தது.

    தொடர் மின்தடையால் மானாமதுரை நகர் முழுவதும் மின் வினியோகம் அடிக்கடை தடைப்பட்டது. வைகை ஆற்றில் அமைக்கப்பட்ட உயர் கோபுர மின் விளக்குகளும் எரியாததால் பக்தர்கள் இருளில் பெரிதும் அவதிப்பட்டனர்.

    திருவிழா நேரத்தில் தொடர் மின் தடை செய்யக் கூடாது என பொதுமக்கள், வணிகர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    7-வது முறையாக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்தார். #Loksabhaelections2019 #PChidambaram
    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கண்டனூரில் உள்ள சிட்டாள் ஆச்சி உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குசாவடியில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் இன்று காலை வாக்களித்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகம் மற்றும் இந்தியாவில் நாம் விரும்புகின்ற மாற்றம் ஏற்பட்டு புதிய அரசுகள் அமைவதற்காக வாக்களித்துள்ளேன். இதேபோல் தமிழக மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்.

    சுயமரியாதை, பகுத்தறிவு, ஜனநாயகம்,சாதி, மத வேறுபாடு இல்லாமல் சட்டத்தின் முன் அனைவரும் சமம், தமிழின மாண்பு போன்றவற்றை காப்பாற்றுவதற்காக தமிழக மக்கள் வாக்களிக்க வேண்டும்.

    வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் மனைவி ஸ்ரீநிதி, தாயார் நளினி ஆகியோருடன் வாக்களித்தார்.

    மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணி இந்த தேர்தலில் நிச்சயம் வெல்லும். கடந்த 1971, 80, 96, 98, 2004, 2009 ஆகிய 6 முறை இந்த கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தற்போது 7-வது முறையாக வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து சிவகங்கை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் தனது மனைவி ஸ்ரீநிதி, தாயார் நளினி ஆகியோருடன் வந்து வாக்கு செலுத்தினார். #Loksabhaelections2019 #PChidambaram
    ஓட்டு எண்ணும் மையத்தில் தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு செய்தனர்.
    சிவகங்கை:

    காரைக்குடி அழகப்பா அரசு என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் அமைத்துள்ள ஓட்டு எண்ணும் மையங்களை தேர்தல் பார்வையாளர் ஹர்பிரீத்சிங் பார்வையிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தார். சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை, திருமயம், ஆலங்குடி சட்டசபை தொகுதிகளில் நாளை (வியாழக் கிழமை) ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.

    இது தவிர மானாமதுரை சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தலும் நடக்கிறது. ஓட்டுப்பதிவு முடிந்ததும் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் ஓட்டு எண்ணும் மையமான காரைக்குடி அழகப்பா அரசு என்ஜினீயரிங் மற்றும் அழகப்பா அரசு பாலிடெனிக் கல்லூரிகளில் வைக்கப்படும்.

    அடுத்த மாதம் (மே) 23-ந் தேதி அன்று ஓட்டுகள் எண்ணும் பணி நடைபெறுகிறது. ஓட்டு எண்ணும் மையங்களை பாராளுமன்றதேர்தல் பொது பார்வையாளர் ஹர்பிரீத்சிங், மானாமதுரை சட்டமன்ற தொகுதி பொது பார்வையாளர் சீனிவாசலு ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    தொடர்ந்து கலெக்டர் ஜெயகாந்தன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் மற்றும் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கண்ணன் ஆகியோர்களிடம் ஓட்டு எண்ணும் மையத்தில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், ஓட்டு எண்ணும் மையங்களில் தடுப்புகள் அமைப்பது குறித்தும் ஆலோசனை செய்தனர். காரைக்குடி தாசில்தார் பாலாஜி உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர். 
    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் காலியாக உள்ள 24 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தேர்தல் பிரசாரத்தில் ப.சிதம்பரம் பேசினார். #Loksabhaelections2019 #PChidambaram #congress #PMModi
    தேவகோட்டை:

    சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார்.

    அவரை ஆதரித்து மானாமதுரை, இடைக்காட்டூர், தேவகோட்டை ஆகிய பகுதிகளில் ப.சிதம்பரம் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    பா. ஜனதா ஆட்சியில் நாட்டில் 5 லட்சம் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளோம். 50 ஆயிரம் குறுந்தொழில்கள் முடங்கி விட்டன. கடந்த 5 ஆண்டுகளில் கல்வி கடன் யாருக்கும் வழங்கப்படவில்லை.

    விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என பா.ஜனதா கூறியது. ஆனால் நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட எந்த விவசாயிகளின் வருமானமும் இரட்டிப்பாகவில்லை. கடன் தான் இரட்டிப்பாகி உள்ளது.

    நாட்டில் 8 மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களில் பா.ஜனதாவிற்கு செல்வாக்கு கிடையாது. பா.ஜனதாவை எதிர்ப்பதில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, கஜா புயல் உள்ளிட்ட எதையும் பா.ஜனதா அரசு கண்டு கொள்ளவில்லை. பா.ஜனதா ஆட்சியில் மாணவர்கள், பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    எங்களுக்கு பல பெரிய திட்டங்களை நிறைவேற்றிய அனுபவங்கள் உண்டு. அதனால் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள ஐந்து கோடி குடும்பங்களுக்கு மாதம் ரூ.6000 வீதம் நாங்கள் கொடுப்போம். இது எங்களால் முடியும்.

    தற்போது மத்திய அரசில் 4 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. மாநில அரசில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்படி பணியிடங்களை காலியாக வைத்திருப்பது மக்களுக்கு செய்யும் பெரும் துரோகம். நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் சரியாக ஒன்பது மாதங்களில் அனைத்து காலியிடங்களை நிரப்புவோம்.

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும். சிவகங்கை தொகுதியில் மட்டும் 20 ஆயிரம் பேருக்கு கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.  #Loksabhaelections2019 #PChidambaram #congress #PMModi
    ஆங்கிலேயர் ஆட்சிக்கும், உ.பி முதல்வர் ஆட்சிக்கும் வேறுபாடு கிடையாது என முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார். #YogiAdityanath #PChidambaram
    காரைக்குடி:

    உத்தரபிரதேசம் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 11ம் தேதி முதற்கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், மீதமுள்ள தொகுதிகளுக்கு 6 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    அந்த வகையில் கடந்த ஏப்ரல் 9ம் தேதி மீரட்டில் நடைபெற்ற பிரசாரப்பொதுக்கூட்டத்தில் யோகி ஆதித்யநாத் பேசுகையில், 'ஒரு நாளுக்கு முன்னர் மாயாவதி என்ன பேசினார் என்பதை கேட்டிருப்பீர்கள். அவருக்கு முஸ்லிம் மக்களின் வாக்குகளே தேவை. மாபெரும் கூட்டணி மற்ற மக்களின் வாக்குகளை விரும்பவில்லை. உங்களுக்கு ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன். காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளுக்கு அலி மீது நம்பிக்கை உள்ளது என்றால், எங்களுக்கு பஜ்ரங்பலி மீது நம்பிக்கை உள்ளது' என பேசினார்.



    இதையடுத்து தேர்தல் விதிகளை மீறி பேசியது தொடர்பாக   யோகி ஆதித்யநாத்க்கு அம்மாநில தேர்தல் ஆணையம், நோட்டீஸ் அனுப்பியிருந்தது. யோகி தரப்பில் எந்த பதிலும் இல்லை. இதனையடுத்து தேர்தல் ஆணையம், 16ம் தேதி (இன்று) காலை 6 மணி முதல் அடுத்த 72 மணி நேரத்திற்கு யோகி ஆத்தியநாத் பிரசாரம் செய்யக்கூடாது என அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

    இது குறித்து   முன்னாள் மத்திய நிதி மந்திரி  ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'தன்னுடைய பேச்சால், தன்னுடைய நடவடிக்கையால் யோகி பிரித்தாளும் சூழ்ச்சியை கையாளுகிறார். ஆங்கிலேயர் ஆட்சிக்கும், உத்தரபிரதேசம் முதல்வர் ஆட்சிக்கும் வேறுபாடு கிடையாது. முதன்முறையாக ஒரு முதல்வருக்கு இது போன்ற தண்டனை கிடைத்திருக்கிறது. கொஞ்சம் தன்மானம் உள்ளவராக இருந்தால் உடனடியாக யோகி பதவியை விட்டு விலக வேண்டும்' என கூறினார். #YogiAdityanath #PChidambaram


    அரசு ஆஸ்பத்திரியில் ஊழியரை கத்தியால் குத்திக்கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    காரைக்குடி:

    சிவகங்கை நேரு பஜார் வீதியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது 40). இவர் சிவகங்கை அரசு மருத்துவ மனையில் மருந்தக பிரிவில் தற்காலிக ஊழியராக பணி புரிந்து வந்தார்.

    இன்று காலை தமிழ் செல்வன் வழக்கம் போல் வேலைக்கு வந்தார். மதியம் பணியில் இருந்தபோது ஒக்கூரைச் சேர்ந்த அருண்குமார் என்ற வாலிபர் அங்கு வந்துள்ளார். அவர் தமிழ்செல்வனிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

    அப்போது ஆத்திரமடைந்த அருண்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தமிழ் செல்வனை சரமாரியாக குத்தினார்.

    இதை பார்த்த சக ஊழியர்கள் அதிர்ச்சிய டைந்தனர். ரத்த வெள்ளத்தில் மயங்கிய தமிழ் செல்வனுக்கு உடனே அங்கேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே தமிழ்செல்வன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் அரசு மருத்துவ மனைக்கு வந்து விசாரணை நடத்தினர். தமிழ்செல்வனை கொலை செய்த அருண்குமாரை போலீசார் கைது செய்தனர். எதற்காக கொலை நடந்தது? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×