என் மலர்tooltip icon

    சிவகங்கை

    மது குடித்து விட்டு வந்து வீட்டில் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம் அடைந்த வாலிபர் சகோதரன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சூரைக்குடியை சேர்ந்தவர் மீனாள். இவருக்கு பிரதாப் (வயது29), பிரதீஷ் (24) ஆகிய 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

    பிரதாப்புக்கு திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். கடந்த சில மாதங்களாக அவர் சென்னையில் உள்ள சலூன் கடையில் வேலை பார்த்து வந்தார்.

    2 நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்திருந்த பிரதாப் மது குடித்து விட்டு வந்து தாயாரிடம் ஏன் மீன் குழம்பு வைக்கவில்லை என்று தகராறு செய்துள்ளார். இதேபோல் அவரது தொந்தரவு அதிகரித்துள்ளது. இதனால் பிரதீசுக்கும், பிரதாப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    நேற்று நள்ளிரவு மதுகுடித்து விட்டு வந்து பிரதாப் வீட்டு திண்னையில் படுத்திருந்தார். அப்போது அங்கு வந்த பிரதீஷ் சகோதரரை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி வீட்டில் இருந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி தீ வைத்து விட்டு தப்பினார்.

    இதனால் உடல் கருகிய பிரதாப் வலியால் அலறி துடித்தார். அவரது கூக்குரல் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் பிரதாப்பை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் தொடர்பாக செட்டிநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பிரபு வழக்குப்பதிவு செய்து பிரதீசை தேடி வருகிறார்.
    மதுரையில் இருந்து பரமக்குடி செல்லும் நான்கு வழிச்சாலையில் திருப்புவனம் ரெயில்வே மேம்பாலத்தின் ஒரு பகுதியில் தற்போது போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு அந்த வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன.
    திருப்புவனம்:

    மதுரை-ராமநாதபுரம் நான்கு வழிச்சாலை பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதன் முதற்கட்டமாக மதுரை ரிங் ரோட்டில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இதில் தரை வழியாக சாலைகள் அமைக்கும் பணி சில பகுதிகளில் நிறைவு பெற்றுள்ளது. ஆனால் இந்த சாலையில் ரெயில்வே இணைப்பு சாலை பல இடங்களில் வருவதால் அந்த இடங்களில் மட்டும் உயர் மட்ட மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்றன. அதில் ஒரு சில இடங்களில் மட்டும் இந்த பணிகள் தாமதமாக நடந்து வந்தன.

    இந்த உயர் மட்ட மேம் பாலம் கட்டும் போது இணைப்பு சாலையும் அமைக்கப்பட்டன. சில இடங்களில் இணைப்புச் சாலை வழியாகத்தான் நகருக்குள் செல்ல முடியும். உதாரணமாக திருப்புவனத்தில் கட்டப்பட்டு வரும் ரெயில்வே மேம்பாலத்தின் வலதுபுறம் திருப்புவனம் நகருக்குள் செல்லும் இணைப்பு சாலை செல்கிறது. இந்த சாலை மூலம் மதுரையில் இருந்து வரும் நகர் மற்றும் புறநகர் பஸ்கள் மற்றும் பிற வாகனங்கள் திருப்புவனத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன.

    இதேபோல் திருப்புவனத்தில் இருந்து மதுரை நோக்கி செல்லும் அனைத்து பஸ்கள் மற்றும் பிற வாகனங்கள் இந்த உயர் மட்ட மேம்பாலத்தின் கீழ் பகுதி வழியாக வந்து தென்புறத்தில் அமைக்கப்பட்ட இணைப்பு சாலை வழியாக சென்று வருகிறது. திருப்பு வனம், ரெயில்வே மேம்பாலம் பணி நிறைவு பெற தாமதமானதால் பரமக்குடி, மானாமதுரை வழியாக மதுரை செல்லும் அனைத்து வாகனங்களும் நான்கு வழிச்சாலை வழியாக வந்து திருப்புவனம், புல்வாய்க்கரை சந்திப்பில் திரும்பி ரெயில்வே கேட் வழியாக திருப்புவனம் நகருக்குள் சென்று அதன் பின்னர் மதுரைக்கு செல்கின்றன.

    இதனால் காலதாமதம் ஏற்பட்டது. தற்போது மணலூரில் கட்டப்பட்ட மேம்பாலம் போக்குவரத்திற்கு திறந்து விடப்பட்டதால் பயண நேரம் குறைந்துள்ளது. மேலும் திருப்புவனம் மேம்பாலத்தில் தற்போது இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இருப்பினும் மேம்பாலத்தின் ஒருபகுதி போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டதால், மதுரையில் இருந்து மானாமதுரை, பரமக்குடி வழியாக சென்று வரும் அனைத்து வாகனங்களும் திருப்புவனம் மேம்பாலம் வழியாக ஊருக்குள் வராமல் நான்கு வழிச்சாலையில் சென்று வருகின்றன.

    மேலும் இடைநில்லா பஸ்கள் திருப்புவனம் நகருக்குள் செல்லாததால், பயண நேரம் குறைவாகவும், போக்குவரத்து பாதிப்பு இல்லாமலும் உள்ளது. இதனால் திருப்புவனம் நகருக்குள் காலை மற்றும் மாலை நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் சிறிது குறைந்துள்ளது.
    தேவகோட்டையில் தந்தை கண் முன்பு மகன் தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
    தேவகோட்டை:

    தேவகோட்டை அருகே உள்ள பனந்தோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகன் ஈஸ்வரன் (வயது 10). தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.

    மலேசியாவில் வேலை பார்த்து வந்த சுந்தரம் சமீபத்தில் ஊருக்கு திரும்பினார். தேவகோட்டை நாச்சியாபுரத்தில் புதிய வீடு கட்டி வருகிறார். அந்தப்பணிகளை இன்று காலை சுந்தரம் பார்வையிட வந்தார். அவருடன் மகன் ஈஸ்வரனும் வந்தான்.

    புதிய கட்டிடத்திற்கு தண்ணீர் ஊற்றிவிட்டு மகனை அழைத்துக் கொண்டு உடப்பம்பட்டி ஊரணிக்கு சுந்தரம் சென்றார். ஊரணி கரையில் மோட்டார் சைக்கிளை சுந்தரம் நிறுத்தியபோது, ஈஸ்வரன் முதலில் இறங்கி வேகமாக ஊரணிக்குள் இறங்கினான்.

    எதிர்பாராத விதமாக அவன் சேற்றில் சிக்கினான். அதில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்தான். இதனை கவனித்த சுந்தரம், மகனை காப்பாற்ற முயன்றார்.

    அதற்குள் தண்ணீரில் மூழ்கிய ஈஸ்வரன் மூச்சுத்திணறி இறந்தான். தேவகோட்டை தாலுகா போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
    தேவகோட்டை அருகே சுற்றுலா பஸ் கவிழ்ந்த விபத்தில் 16 பேர் காயம் அடைந்தனர்.

    தேவகோட்டை:

    கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே தமிழக-கேரள எல்லையில் உள்ளது பாறசாலை. இந்த பகுதியில் வசிக்கும் 10 குடும்பங்களைச் சேர்ந்த 48 பேர் தமிழக கிறிஸ்தவ ஆலயங்களுக்கு சுற்றுலாவாக புறப்பட்டனர். பாறசாலையை சேர்ந்த ஷியாம்குமார் (வயது 28) பஸ்சை ஓட்டினார்.

    ஊட்டி, பழனி பகுதி களுக்கு சென்றுவிட்டு நேற்று சுற்றுலா பஸ் வேளாங்கண்ணிக்கு வந்தது. அங்கு தரிசனத்தை முடித்துவிட்டு நெல்லை மாவட்டம், தென்காசி அருகே உள்ள தாவூத்து மாதா கோவிலுக்கு புறப்பட்டனர்.

    இன்று அதிகாலை அந்த பஸ் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே திருவேகம்புதூர் போலீஸ் நிலையம் அருகே உள்ள புலிக்குட்டி கிராம பகுதியில் வந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடியது.

    அதே வேகத்தில் அங்கிருந்த கால்வாய் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது. அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் திருவேகம் புதூர் போலீசார் விரைந்து சென்றனர். காயம் அடைந்த சந்திரன் (48), சுதாகரன் (60), இருதயம்மாள் (80), வினிஸ் (14), தங்கையன் (55), அருண்போஸ் (24), ஸ்டீபன் (45), சிராஜ் (31), அஜி (32), அப்புக்குட்டன் (78), ஜெயக்குமாரி (55), லீசாமோல் (29), சரசா (56) உள்பட 16 பேர் மீட்கப்பட்டு காளையார்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    அங்கு அவர்களுக்கு முதல் உதவி அளிக்கப்படடது. இவர்களில் சந்திரன், சுதாகரன், இருதயம்மாள் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    விபத்து குறித்து தேவகோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு (பொ) மனோகர், திருவேகம்புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துமணிசாமி ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காரைக்குடி அருகே பெண் அதிகாரி வீட்டில் 13 பவுன் நகை திருட்டு போனது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
    காரைக்குடி:

    காரைக்குடி வள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் திரிபுரசுந்தரி (வயது 44). இவர் புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட தொழில் மையத்தில் துணை இயக்குனராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்குவதற்கு முன்பு தனது நகைகளை கழற்றி மேஜையின் மீது வைத்து விட்டு அயர்ந்து தூங்கிவிட்டார்.

    காலையில் எழுந்து பார்த்த போது மேஜை மீது வைத்திருந்த 13 பவுன் நகைகளை காணவில்லை இரவில் யாரோ ஜன்னல் வழியாக அதனை திருடி சென்றிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து திரிபுரசுந்தரி வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். 
    தேவகோட்டை அருகே மின்சாரம் தாக்கி கொத்தனார் பலியானார்.

    தேவகோட்டை:

    தேவகோட்டை அருகே உள்ள அண்டக்குடி கிராமத்தை சேர்ந்தவர் வீரபாண்டி. இவர் நாரணமங்கலத்தில் புதிதாக வீடு கட்டி வருகிறார்.

    இங்கு சாத்திக்கோட்டையை சேர்ந்த வேம்பன் மகன் சேகர் (வயது 40) என்பவர் கட்டிட வேலை பார்த்து வந்தார்.

    இவர் சம்பவத்தன்று பணிகளை முடித்து விட்டு மோட்டார் சுவிட்ச்சை போட்டுள்ளார். இதில் எதிர்பாரத விதமாக மின்சாரம் சேகர் மீது பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே சேகர் இறந்தார்.

    சேகரை காப்பாற்றுவதற்காக அவருடன் பணியாற்றும் சாமிகண்ணு முயற்சி செய்தார். அப்போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் தேவகோட்டை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பிளவர்ஷீலா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சேகரின் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து. விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருப்பத்தூர் அருகே கீழையபட்டி கிராமத்தில் அரசு அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக 13 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே கீழையபட்டி கிராமத்திலுள்ள விநாயகர் கோவில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு நேற்று காலையில் கீழையபட்டி, ஊர்குளத்தான்பட்டி, கொரட்டி, மருதங்குடி, என்.மேலையூர் உள்ளிட்ட பல ஊர்களில் இருந்து அலங்கரித்து கொண்டு வரப்பட்ட 250-க்கும் மேற்பட்ட மஞ்சுவிரட்டு காளைகளை கீழையபட்டி பகுதியில் உள்ள கண்மாய் மற்றும் வயல்காட்டுப்பொட்டலில் கட்டுமாடுகளாக ஆங்காங்கே அவிழ்த்து விடப்பட்டு மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது. இதில் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    அரசு அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக கூறி சிராவயல் கிராம நிர்வாக அதிகாரி நல்லழகு கொடுத்த புகாரின் பேரில், கீழையபட்டியைச்சேர்ந்த சேவுகன்(75), நாகராஜன்(45), கண்ணன்(55), ஆறுமுகம் மகன் நாகராஜன்(45), தேனப்பன்(45) ஆகிய 5 பேர் மீதும், மேலும் இதே போன்று அரசு அனுமதியின்றி கண்மாயில் மஞ்சுவிரட்டு மாடுகளை அவிழ்த்து விட்டதாக கூறி அருகில் உள்ள ஊர்களைச்சேர்ந்த செந்தில் (24), சிவா(47), நாச்சியப்பன்(62), கண்ணுச்சாமி(54), பாஸ்கரன், விவேக், பாண்டி (20), பிரகாஷ்(25) ஆகிய 8 பேர் மீதும் மொத்தம் 13 பேர் நாச்சியாபுரம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராஜா வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.
    கோடையில் மக்களுக்கு போதிய குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் ஜெயகாந்தன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
    சிவகங்கை:

    குடிநீர் தட்டுப்பாட்டை போக்க செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் சிவகங்கையில் உள்ள கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது:- மாவட்டத்தில் கோடைகாலத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் தடையின்றி வழங்க நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பொதுமக்களுக்கு தேவையான அளவு குடிநீர் வழங்கிடும் வகையில் துறை அலுவலர்கள் திட்டமிட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும். நகராட்சி நிர்வாகம் தங்கள் பகுதிக்குட்பட்ட நீர்தேக்க தொட்டிகள் மற்றும் குடிநீர் வழங்கும் இணைப்புகள் சரியாக உள்ளதா என கண்காணிப்பதுடன், குடிநீரில் சரியான முறையில் குளோரிநேசன் செய்யப்பட்டுள்ளதா என அவ்வப்போது உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    குடிநீர் இணைப்புகளில் பழுதுகள் ஏற்பட்டால் குடிநீர் வடிகால் வாரியத்துறை பணியாளர்கள் வரும் வரை காத்திருக்காமல் மக்களின் தேவையை உணர்ந்து உடனடியாக நகராட்சி நிர்வாகம் பழுதை சரி செய்ய வேண்டும். பேரூராட்சித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட இடங்களுக்கு அவ்வப்போது சென்று குடிநீர் பணிகளை கண்காணிக்க வேண்டும்.

    மேலும் பேரூராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை என்ஜினீயர்கள் ஒவ்வொரு பகுதியிலும் அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறுகள் சரியான அளவு முறையில் அமைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்வதுடன், குறிப்பாக ஆழ்குழாய் கிணற்றின் ஆழம் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்த பின்பு அதற்கான தொகையை வழங்க வேண்டும்.

    மேலும் பயன்பாடு இல்லாமல் உள்ள ஆழ்குழாய் கிணறுகளை சீரமைத்து அதில் கைப்பம்புகள் அமைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொடுக்க வேண்டும். இந்த பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு ஒன்றிய அளவிலும் ஓய்வு பெற்ற பிட்டர்களை பயன்படுத்தி கொள்ளலாம். கால சூழ்நிலைக்கு ஏற்ப தேவையான இடங்களுக்கு லாரிகளில் தண்ணீர் வழங்கவும் தயார்நிலையில் இருத்தல் வேண்டும். பொதுவாக குடிநீர் குழாய்கள் உடைப்பு ஏற்படும் பகுதிகளுக்கு காலதாமாக பழுது பார்க்கும் பணி மேற்கொள்வதால் குடிநீர் அதிக அளவில் வீணாகிறது எனவே பாதிக்கப்பட்ட இடங்களுக்கு உடனடியாக சென்று பழுதுகளை சரிசெய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்

    கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வடிவேல், பேரூராட்சி துறை உதவி இயக்குநர்.ராஜா, ஊராட்சிகள் உதவி இயக்குனர் விஜயநாதன் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துறை அலுவலர்கள், நகராட்சி நிர்வாகத் துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    முன்விரோதத்தில் வாலிபரை அடித்து கொன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். 2 பேரை தேடி வருகின்றனர்.

    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மாதவன். இவரது மகன் பழனியப்பன். இவருக்கும், கொங்கரத்தி பகுதியைச் சேர்ந்த நாராயணன் (30) என்பவருக்கும் பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

    இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று இரவு பழனியப்பன் கண்டரமாணிக்கம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு தனது நண்பர்களுடன் வந்த நாராயணன் பழனியப்பனிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த நாராயணன் மற்றும் அவரது நண்பர்கள் கட்டையால் பழனியப்பனை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பினர்.

    இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது பழனியப்பன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த கொலை தொடர்பாக திருக்கோஷ்டியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாராயணன், அவரது மைத்துனர் சந்திரசேகர், கல்லல் செல்வம் ஆகிய 3 பேரை கைது செய்துள்ளனர். அருண், வெற்றி ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர்.

    கொலையான பழனியப்பனின் மனைவி தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    தேவகோட்டையில் பயிர் இழப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    தேவகோட்டை:

    தேவகோட்டையை அடுத்த கண்ணங்குடி ஒன்றிய பூசலாகுடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 2017-18-ம் ஆண்டிற்கு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திருந்தனர். அதில் சுமார் 2 ஆயிரத்து 189 பேர் பணம் கட்டி இருந்தனர். ஆனால் அதில் 1,693 பேருக்கு மட்டும் பயிர் இழப்பீட்டு தொகை வந்துவிட்டது. மீதமுள்ளவர்களுக்கு இந்த தொகை வழங்கப்படவில்லையாம். மேலும் பயிர் காப்பீடு கட்டணம் செலுத்தியதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததையொட்டி மாவட்டம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தி வருகிறது. அதில் சந்தேகத்திற்கிடமான பலருக்கு தொகை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் கூட்டுறவு வங்கியில் சுமார் ரூ.3 கோடி அளவிற்கு பணம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் இழப்பீடு தொகை வழங்குவது நிலுவையில் உள்ளது.

    இந்த நிலையில் அதில் நிலுவையில் உள்ளவர்கள் நேற்று கூட்டுறவு வங்கி அலுவலகத்தை முற்றுகையிட்டு பல மணி நேரம் போராட்டம் நடத்தினர். அதன்பின்பு அவர்கள் கண்டதேவி-தேவகோட்டை சாலையில் பஸ்களை மறித்து சாலை மறியல் செய்தனர். அப்போது என்ன காரணத்திற்காக பணம் வழங்காமல் நிறுத்தப்பட்டுள்ளது என்ற விவரத்தை விவசாயிகளிடம் தெரிவிக்க வேண்டுமென்று அவர்கள் வற்புறுத்தினர். தகவலறிந்து வந்த தேவகோட்டை தாசில்தார் மெசியதாஸ் தலைமையில் வருவாய்த் துறையினர் மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் இழப்பீடு வழக்குவது தொடர்பான விசாரணை முடிவடைந்து விட்டது. அதன் அறிக்கை தாலுகா அலுவலகம் மூலம் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து அரசுக்கு அனுப்பப்பட உள்ளது.

    எனவே அடுத்த வாரம் தகுதியானவர்களுக்கு பணம் வழங்கப்படும் என்று கூறினர். அதைத்தொடர்ந்து மறியல் நடத்திய விவசாயிகள் கலைந்து சென்றனர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
    வீடு புகுந்து 75 பவுன் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள காரையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரஜினி. வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு ஊருக்கு திரும்பினார்.

    நேற்று உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ரஜினி, தனது மனைவி பிரியாவுடன் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்று விட்டார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    பின்னர் பீரோவை உடைத்த அவர்கள் அதில் இருந்த 75 பவுன் நகை, ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகிய வற்றை திருடிக் கொண்டு தப்பினர்.

    துக்க நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு இரவு வீடு திரும்பிய ரஜினி கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது நகை, பணம் கொள்ளை போயிருந்தது.

    இது குறித்து கண்டவராயன் பட்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. துணை சூப்பிரண்டு அண்ணாத்துரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களும் சேகரிக்கப்பட்டன. மோப்ப நாய் லைக்கா மூலம் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அந்த நாய் வீட்டில் இருந்து அருகில் உள்ள தோப்பு வரை சென்று நின்றது.

    நகை திருட்டு தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சிவகங்கை அருகே இன்று காலை கியாஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் தாய் மற்றும் 2 குழந்தைகள் உடல் சிதறி பரிதாபமாக இறந்தனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே உள்ள கே.உத்தம்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பையா. வெளிநாட்டில் வேலை பார்க்கும் இவர் சமீபத்தில் ஊர் திரும்பினார். இவரது மனைவி சின்னம்மாள் (வயது29). இவர்களது மகன் வீரன் (5), மகள் திவ்ய வர்ஷினி (3).

    இன்று காலை சின்னம்மாள் வீட்டில் சமையல் செய்வதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்தார். அப்போது கியாஸ் கசிவு இருந்ததை அவர் அறியவில்லை.

    அடுப்பை பற்ற வைத்த உடனேயே கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் சின்னம்மாள் மற்றும் அவரது அருகில் நின்று கொண்டிருந்த வீரன், திவ்ய வர்ஷினி ஆகிய 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

    ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர்கள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உடல் சிதறி பரிதாபமாக இறந்தனர்.

    தகவல் அறிந்ததும் புழுதிபட்டி போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கியாஸ் சிலிண்டர் வெடித்த சமயத்தில் கருப்பையா வெளியே சென்றிருந்ததால் உயிர் பிழைத்தார்.

    கியாஸ் சிலிண்டர் வெடித்து ஒரே வீட்டில் 3 பேர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
    ×