search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கியாஸ் சிலிண்டர் விபத்து"

    • தீயணைப்பு படையினர் பாதுகாப்பு உபகரணங்களுடன் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
    • ரூ.1½ லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள் சேதமடைந்தது.

    புதுச்சேரி:

    புதுவை முதலியார்பேட்டை அப்பாவு நாயக்கர் வீதியை சேர்ந்தவர் பழனி. ஓட்டல் தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

    இன்று காலை பழனியின் இளைய மகள் வீட்டின் மாடியில் உள்ள சமையல் அறையில் சமையல் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது கியாஸ் சிலிண்டரை திறந்து தீ பற்ற வைக்கும் போது ரெகுலேட்டரில் தீபற்றியது.

    இதனை பார்த்ததும் பழனியின் மகள் அதிர்ச்சியடைந்து வீட்டின் கீழ் தளத்தில் இருந்த தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார்.

    இதனால் சுதாரித்துக்கொண்ட குடும்பத்தினர் உடனே வீட்டை விட்டு வெளியேறினர். சிறிது நேரத்தில் கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. சிலிண்டர் இரண்டாக பிளந்து போனது.

    குடும்பத்தினர் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறியதால் அனைவரும் உயிர் தப்பினர்.

    இதுபற்றி உடனடியாக புதுவை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தீயணைப்பு படையினர் பாதுகாப்பு உபகரணங்களுடன் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனாலும் வீட்டில் இருந்த டி.வி., பிரிட்ஜ், வாஷிங் மெஷின், மிக்சி, கிரைண்டர், தையல் எந்திரம் உள்ளிட்ட ரூ.1½ லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள் சேதமடைந்தது.

    இந்த தீவிபத்து குறித்து முதலியார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சிலிண்டர் வெடித்த விபத்தில் வீட்டின் மேற்கூரை இடிந்து வீடு தரைமட்டமானது.
    • சம்பவ இடத்திற்கு புதுக்கோட்டை போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அம்பேத்கார்நகரை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது25). இவரது தந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

    வீட்டில் இன்று காலை முத்துக்குமார் மட்டும் தனியாக இருந்துள்ளார். பின்னர் வெந்நீர் வைப்பதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்துள்ளார்.

    சிறிது நேரத்தில் பயங்கர சத்தத்துடன் கியாஸ் சிலிண்டர் வெடித்தது. இதனால் முத்துக்குமார் அங்கிருந்து தூக்கி வீசப்பட்டார். இதனால் அவர் காலில் பலத்த காயமடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சிலிண்டர் வெடித்த விபத்தில் வீட்டின் மேற்கூரை இடிந்து வீடு தரைமட்டமானது. மேலும் அப்போது ஏற்பட்ட தீ விபத்தில் அங்கிருந்த கட்டில் துணிகள், பொருட்கள் உள்ளிட்டவை எரிந்து சாம்பலானது. சம்பவ இடத்திற்கு புதுக்கோட்டை போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அப்துல் கரீம் வீட்டில் சமையல் செய்த போது கியாஸ் கசிந்து சிலிண்டர் வெடித்து தீப்பிடித்தது. இதனால் அறை முழுவதும் தீ பரவியது.
    • ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரும் சிலிண்டர் வெடித்து விபத்தில் இறந்தனர். தீயணைப்பு வீரர்கள் செல்வதற்குள் அவர்கள் தீயில் கருகி பலியானார்கள்.

    பானிபட்:

    அரியானா மாநிலம் பானிபட் மாவட்டம் டெசில் கேம்ப் பகுதியை சேர்ந்தவர் அப்துல் கரீம்.

    மேற்கு வங்காளத்தை சேர்ந்த இவர் இங்கு புலம்பெயர் தொழிலாளியாக வசித்து வருகிறார். ஒரு அறை எடுத்து குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

    இந்தநிலையில் இன்று காலை 6.30 மணியளவில் அப்துல் கரீம் வீட்டில் சமையல் செய்த போது கியாஸ் கசிந்து சிலிண்டர் வெடித்து தீப்பிடித்தது. இதனால் அறை முழுவதும் தீ பரவியது.

    இதில் அப்துல் கரீம் (வயது 48), அவரது மனைவி அப்ரோஜ் (45), மகள்கள் இஸ்ரத் (18), ரேஸ்மா (16), அப்சானா (8), மகன் ஷக்குர் (12) ஆகிய 6 பேர் பலியானார்கள்.

    ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரும் சிலிண்டர் வெடித்து விபத்தில் இறந்தனர். தீயணைப்பு வீரர்கள் செல்வதற்குள் அவர்கள் தீயில் கருகி பலியானார்கள். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேற்கு வங்களாவில் உள்ள அவர்களது உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

    ×