என் மலர்
சிவகங்கை
காரைக்குடி:
காரைக்குடி கிணற்றடி காளியம்மன் கோவில் தெருவைச்சேர்ந்தவர் ஜெயராமன், கோவில் பூசாரி. இவரது மனைவி பார்வதி (வயது 50). இவர்களது மகள் ஐஸ்வர்யா (22) இவர் அந்த பகுதியில் உள்ள கல்லூரியில் எம்.காம். படித்து வந்தார்.
பார்வதிக்கு மன நலம் சற்று பாதிக்கப்பட்டு இருந்ததால், ஐஸ்வர்யாதான் வீட்டு வேலைகளையும் பார்த்துக்கொண்டு கல்லூரிக்கு சென்று வந்தார்.
நேற்று மாலை கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்த ஐஸ்வர்யா, வேலைகளை முடித்துவிட்டு இரவில் வழக்கம்போல் படுக்கச் சென்றார். இன்று காலை ஜெயராமன் எழுந்து மகளை தேடியபோது ஐஸ்வர்யா, துப்பட்டாவால் தூக்குப் போட்டு தற்கொலை செய்திருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து காரைக்குடி தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் வழக்குப்பதிவு செய்து மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
மானாமதுரை:
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வைகை ஆறு மணல் வளம் மிகுந்த பகுதி ஆகும். பல ஆண்டுகள் முன்பே மணல் குவாரி அமைக்கப்பட்டதால் தற்போது மணல் வளம் மறைந்து ஆறு முழுவதும் கருவேல மரங்கள் அடர்ந்து காணப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் மணல் குவாரி அமைக்க நடவ டிக்கை எடுத்த போது பொதுமக்கள், விவசாயிகள் எதிர்ப்பால் மணல் குவாரி அமைக்கப்படவில்லை.
15 ஆண்டுகளுக்கு முன்பு பணி புரிந்த சிவகங்கை மாவட்ட கலெக்டர் ராதாகிருஷ்ணன் மானாமதுரையில் உள்ள வைகை ஆறு முழுவதையும் சீரமைத்து கருவேல மரங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்தார்.
அதன் பின்னர் எந்த கலெக்டரும் வைகை ஆற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. குடிநீர் ஆதாரத்தை பெருக்கும் வகையில் தடுப்பனை அமைத்தும் பொதுமக்கள் நடைபயிற்சி செய்ய ஏதுவாக ஆற்றங்கரைகளில் சாலை அமைக்க திட்டம் செயல்படுத்தப்பட்டது.
ஆனால் தடுப்பணை மட்டும் தான் அமைக்கப்பட்டது. சாலை அமைக்கப்படவில்லை. மானாமதுரை வைகை ஆற்று தடுப்பு அணைக்கு பின்பு ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி மற்றும் திருப்புவனம் பகுதியில் இரு இடங்களில் அமைக்கப்பட்ட தடுப்பணைகளில் ஆற்றின் இரு கரைகளிலும் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் மானாமதுரையில் அமைக்கப்படவில்லை.
தற்போது வைகை ஆற்று பகுதியில் தலைச்சுமையாக அதிக அளவு மணல் கடத்தப்பட்டு வருகிறது. இதையும் பொதுப்பணித்துறையால் தடுக்க முடியவில்லை.
வைகை ஆறு முழுவதும் கருவேல மரங்களால் சூழப்பட்டதால் தனியாக செல்ல முடியவில்லை. பொதுமக்கள் நடை பயிற்சி செய்ய மைதானம் ஏதும் மானாமதுரையில் கிடையாது.
அதனால் வைகை ஆறு பாலத்தை கடந்து 4 வழிச்சாலை மற்றும் புதிய புறவழிச்சாலையில் செல்லும் நிலை உள்ளது.
கடந்த 26-ந் தேதி சாலை வழியே சென்ற அ.ம.மு.க. நிர்வாகி சரவணன் ஓட ஓட வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். வைகை ஆற்றுக்குள் செல்ல முடியாமல் கருவேல மரங்கள் இருந்ததால் தப்ப முடியாமல் இறந்தார்.
இதே போல் வைகை ஆற்று புதிய பாலத்தில் பகல் மற்றும் இரவு நேரங்களில் வழிப்பறி கொள்ளையும் அடிக்கடி நடைபெறுகிறது. இதையும் தடுக்க முடியவில்லை. பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத பகுதியாக வைகை ஆறு மாறி வருகிறது.
பொதுமக்கள் பாதுகாப்பாக நடைபயிற்சி செய்ய மானாமதுரை ரெயில் பாலத்தில் இருந்து புதிதாக அமைக்கப்பட்ட தடுப்பணை வரை ஆற்றின் இருகரைகளிலும் சாலை வசதி அமைக்க வேண்டும்.
மணல் திருட்டு தடுக்கப்பட வேண்டும். புதிய புறவழி சாலை பகுதியில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும். வைகை ஆறு முழுவதும் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என மானாமதுரை பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மானாமதுரை:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ஆவாரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது40). டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க.வின் மேற்கு ஒன்றிய செயலாளராக இருந்து வந்தார். இவர் பேரூராட்சி ஒப்பந்த பணிகளையும் செய்து வந்தார்.
மானாமதுரை பாண்டியன் நகரில் குடும்பத்துடன் வசித்து வந்த சரவணன் தினமும் நடைபயிற்சி செல்வது வழக்கம். இன்று காலையும் அவர் வழக்கம் போல் நடை பயிற்சிக்காக மோட்டார் சைக்கிளில் வைகை ஆற்றுக்கு வந்தார். அங்கு ஆற்றங்கரையில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு நடைபயிற்சி மேற்கொண்டார்.
அப்போது அங்கு ஒரு கும்பல் வந்தது. அந்த கும்பல் சரவணனை சுற்றி வளைத்தது. அவர்களை கண்டதும் சரவணன் தப்பி ஓட முயன்றார். ஆனால் அந்த கும்பல் அரிவாள் மற்றும் பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது. இதில் சரவணன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார்.
பலரும் நடைபயிற்சி செய்யும் காலை நேரத்தில் கொலை நடந்திருப்பது மானாமதுரையில் பதட்டத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்த தகவல் கிடைத்ததும் போலீஸ் துணை சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் மானாமதுரை போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர். சரவணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில் நடந்த மானாமதுரை இடைத்தேர்தலில் அ.ம.மு.க.விற்காக சரவணன் தீவிர பணியாற்றினார். இது பிடிக்காததால் யாராவது கொலை செய்தார்களா? அல்லது பேரூராட்சி ஒப்பந்தப்பணி விவகாரத்தில் கொலை நடந்ததா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.
கொலையாளிகளை பிடிக்க மாவட்டம்முழுவதும் போலீசார் உஷார்படுத்தப் பட்டுள்ளனர். சோதனை சாவடிகளிலும் தீவிரமாக கண்காணிப்பு பணி நடக்கிறது. சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடை பெற்று வருகிறது.
கொலை செய்யப்பட்ட சரவணனுக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.
நெற்குப்பை:
சிவகங்கை மாவட்டம், நெற்குப்பை அருகே உள்ளது பரியாமருதுபட்டி. இங்கு புகழ் பெற்ற சேவுகமூர்த்தி ஆலயம் உள்ளது. இந்த கோவிலுக்கு சுற்று வட்டார மக்கள் தினமும் வந்து காணிக்கை செலுத்தி வழிபாடு செய்வது வழக்கம்.
இன்று காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் சுவருடன் கூடிய உண்டியல் பெயர்த்து எடுக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து நெற்குப்பை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் அரங்கநாயகி, சப்-இன்ஸ்பெக்டர் வினோத், தனி பிரிவு போலீஸ்காரர் சரவணன் ஆகியோர் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இதில் கோவிலில் உடைத்து எடுக்கப்பட்ட உண்டியல் அருகே உள்ள கண்மாய்க்கரையில் கிடப்பது தெரியவந்தது.
யாரோ மர்ம மனிதர்கள் காம்பவுண்டு சுவர் ஏறிக்குதித்து கோவிலுக்குள் வந்துள்ளனர். அவர்கள் உண்டியலை பெயர்த்து எடுத்து வெளியே கொண்டு சென்று பணத்தை எடுத்து விட்டு கண்மாய்க்கரையில் உண்டியலை வீசிச் சென்றிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
இது குறித்து கோவில் தர்மகர்த்தா ஜெய்கணேஷ் புகார் செய்தார். அதன் அடிப்படையில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே அந்தப் பகுதியில் உள்ள நம்பர் பிள்ளையார் கோவிலிலும் உண்டியல் திருடப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கும் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகரில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 464667 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தேமுதிக வேட்பாளர் ஆர் அழகர்சாமி 315055 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். நாம் தமிழர் 52591 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் 56815 வாக்குகளும், அமமுக 107033 வாக்குகளும் பெற்றன.

கன்னியாகுமரியில் வசந்தகுமார் 620594 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் பி ராதாகிருஷ்ணன் 362976 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். மக்கள் நீதி மய்யம் 8524 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 16796 வாக்குகளும், அமமுக 12324 வாக்குகளும் பெற்றன.
பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தமிழகம், புதுவையில் திமுக கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்று வெற்றியை நோக்கி பயணிக்கிறது.
சிவகங்கை தொகுதியில் வாக்கு எண்ணிக்கை துவக்கம் முதலே காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் முன்னிலையில் இருந்தார். மாலை 5 மணி நிலவரப்படி அவர் 3,11,007 வாக்குகள் பெற்றிருந்தார். அவரை எதிர்த்து களமிறங்கிய பாஜக வேட்பாளர் எச்.ராஜா 1,30,063 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் நீடித்தார்.
அமமுக வேட்பாளர் தேர்போகி வி.பாண்டி 66 ஆயிரத்து 950 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சக்திபிரியா 37 ஆயிரத்து 717 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் 14 ஆயிரத்து ஒரு வாக்குகளும் பெற்றிருந்தனர்.
மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் 137 ஆண்டுகள் பழமை வாய்ந்த திரு இருதய திருத்தலம் அமைந்துள்ளது. பிரான்ஸ் நாட்டு கட்டிட கலையான கோதிக் கலை நுட்பத்துடன் கட்டப்பட்ட தேவாலயம் இது. இங்கு மாதந்தோறும் முதல் வெள்ளி சிறப்பு திருப்பலி நடைபெறுவது வழக்கம். இதுதவிர பாஸ்கு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் வருடந்தோறும் நடைபெறுவது வழக்கம்.
30 அடி உயரம் கொண்ட 59 தூண்கள் மூலம் 7 ஆயிரத்து 500 அடி சுற்றளவு கொண்ட சுவர்கள் மூலம் தேவாலயம் கம்பீரமாக காட்சியளித்து வருகிறது. பெரும் மழை, வெள்ளம், புயல் ஆகியவற்றை தாங்கி கம்பீரமாக காட்சியளிக்கிறது. இந்த தேவாலய தூண்களில் ஏழு அடி உயரத்திற்கு ஈரத்தன்மை உள்ளதால் தூண்களின் தாங்கு திறன் பாதிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பழமை சின்னங்களை ஆய்வு செய்யும் 3 நிபுணர் குழு, தேவாலய சுவரில் உள்ள சுண்ணாம்பு காரைகள், ஈரம் பாதித்த செங்கல்களை அகற்றி விட்டு நவீன முறையில் சிமெண்டு பூச்சு மூலம் தூண்களை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இதற்காக 80 லட்ச ரூபாய் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, தேவாலய பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து இடைக்காட்டூர் திரு இருதய திருத்தல பணியாளர் ரெமிஜியஸ் கூறுகையில், தேவாலயத்தின் கட்டிட சுவர்கள் உள்ளிட்டவைகள் நல்ல நிலைமையில் உள்ளன. கட்டிடத்தின் வெளிபுறம், உள்புறம் தூண்களின் தாங்குதிறன் தான் பாதிக்கப்பட்டுள்ளது. ஏழு அடி உயரத்திற்கு ஈரம் சார்ந்துள்ளதால், சுண்ணாம்பு காரை வலுவிழந்துள்ளது. அவற்றை அகற்றி விட்டு அதே நேரத்தில் நவீன முறையில் சிமெண்டு பூச வேண்டும், இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இன்னும் ஒருசில மாதங்களில் பணிகள் நிறைவு பெறும் என்றார்.
நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் தமிழகத்தில் உருவாக்கப்பட்ட 7முக்கிய ரெயில்வே நிலையங்களில் மானாமதுரை ரெயில்வே நிலையமும் ஒன்றாகும். மானாமதுரையில் இருந்து விருதுநகர், ராமேசுவரம், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு அகல ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் பாதைகளின் குறுக்கே செல்லும் ஓடைகள், ஆறுகள், கால்வாய்கள், கண்மாய்கள் ஆகியவற்றில் பாலங்கள் கட்டப்பட்டுள்ளது. தரைப்பாலங்களை விட ரெயில்வே பாலங்கள் சற்று வித்தியாசமாக அமைக்கப்படுவது வழக்கம்.
ரெயில்வே பாதையில் உள்ள பாலங்களில் குகை போன்ற அமைப்புடன் கட்டப்படுவதுடன் பாலங்களில் உள்ள தூண்களைச் சுற்றிலும் ஆட்கள் அமரும் அளவிற்கு பிளாட்பாரம் அமைத்து கட்டப்படும். அந்த பிளாட்பாரத்தில் இறங்குவதற்கு வசதியாக ரெயில் பாதைகளில் இருந்து இரும்பு ஏணி நிரந்தரமாக பொருத்தப்பட்டுள்ளது. இதனை சமூக விரோதிகள் தங்கள் வசதிக்காக பயன்படுத்தி கொள்கின்றனர்.
இதுகுறித்து ரெயில்வே ஊழியர்கள் கூறியதாவது:- மானாமதுரை- விருதுநகர் ரெயில்வே பாதை மற்றும் மானாமதுரை-சிவகங்கை ஆகிய ரெயில்வே பாதையில் உள்ள பாலங்களில் கூட்டமாக அமர்ந்து மது குடித்து விட்டு, காலி மது பாட்டில்களை ரெயில்வே தண்டவாளங்களில் உடைத்து போட்டு விட்டு செல்கின்றனர். இதனால் ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணியில் ஈடுபடும் ஊழியர்கள் ரெயில்வே பாலங்களில் இறங்க முடியாத நிலை உள்ளது. மேலும் உடைந்த பாட்டில்களால் ரெயில்வே ஊழியர்கள் காயமடைந்து வருகின்றனர்.
ரெயில்வே பாதையில் உள்ள பாலங்களில் ரெயில்வே போலீசாரின் ரோந்து பணி இல்லாததால் சமூக விரோத செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே இந்த செயல்களை தடுக்க ரெயில்வே பாலங்களில், ரெயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். மேலும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மானாமதுரை அருகே அரசகுளம் கிராமத்தில் உள்ள திருவேட்டை அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழாவையொட்டி நேற்று ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. முதலாவதாக கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதைத்தொடர்ந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டது.
மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 550-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன.
போட்டியில் கலந்துகொண்ட காளைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டு அவை முறையாக பதிவு செய்யப்பட்டது.
போட்டியை சிவகங்கை கோட்டாட்சியர் செல்வகுமாரி தொடங்கி வைத்தார். போட்டியில் கலந்துகொண்ட காளைகளை அடக்க 100-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர்.
சீறிப்பாய்ந்து சென்ற காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்க முயன்றனர். பல காளைகள் அவர்களிடம் தப்பித்து வெற்றி பெற்றன. வெற்றி பெற்ற காளைகள் மற்றும் மாடு பிடி வீரர்களுக்கு பித்தளை அண்டா, பானை, சில்வர் அண்டா-பானை, கட்டில், ஆட்டுக்குட்டி, ரொக்கப் பணம், தங்க காசுகள் பரிசாக வழங்கப்பட்டன.
விழாவிற்கான ஏற்பாடுகளை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முனியாண்டி தலைமையிலான விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மானாமதுரை தாசில்தார் யாஸ்மின் அகர்பால், துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காரைக்குடி:
காரைக்குடி அருகே உள்ள கழனிவாசலில் அரசின் சார்பில் தண்ணீர் தொட்டி புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இந்தப்பணியில் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள மேலப்பனையைச் சேர்ந்த செந்தில் (வயது 37) என்ற கட்டிடத் தொழிலாளி ஈடுபட்டு வருகிறார்.
வழக்கமாக இரவு நேரங்களில் புழுக்கம் காரணமாக செந்தில் தண்ணீர் தொட்டியின் மேல் பகுதிக்கு சென்று தூங்குவது வழக்கம்.
நேற்று இரவு செந்தில் தண்ணீர் தொட்டியின் மேலே சென்று தூங்கியுள்ளார். இன்று அதிகாலை எழுந்த அவர், தூக்க கலக்கத்தில் கீழே இறங்க முயன்றுள்ளார்.
அப்போது நிலை தடுமாறி செந்தில் தவறி கீழே விழுந்தார். தலையில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் காரைக்குடி வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆத்மநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






