என் மலர்tooltip icon

    சேலம்

    • சரத்குமாரின் 4 வயது மகன் அந்த ‘ஏர்கன்’ துப்பாக்கியை அங்கும், இங்கும் தள்ளி விளையாடிக்கொண்டிருந்ததாக தெரிகிறது
    • தமிழரசின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வேங்கிபாளையம் பாப்பான்காடு பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகள் தமிழரசி (வயது 30). இவரது அண்ணன் சரத்குமாரின் 4 வயது மகன் வீட்டுக்கு அருகில் விளையாடிக்கொண்டிருந்தான். அங்கு இச்சி மரம் ஒன்று உள்ளது. அந்த மரத்தை சுற்றி திண்ணை போன்று அமைத்து இருந்தனர். அதில் 'ஏர்கன்' துப்பாக்கியை வைத்து இருந்தனர்.

    சரத்குமாரின் 4 வயது மகன் அந்த 'ஏர்கன்' துப்பாக்கியை அங்கும், இங்கும் தள்ளி விளையாடிக்கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது திடீரென 'ஏர்கன்' துப்பாக்கியில் இருந்து குண்டு மின்னல் வேகத்தில் வெளியேறியது.

    அப்போது அந்த வழியாக வந்த தமிழரசின் வயிற்று பகுதியில் குண்டு பாய்ந்தது. இதில் தமிழரசி ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார்.

    தமிழரசின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் தமிழரசியை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். அங்கு தமிழரசிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்படி இருந்தும் சிகிச்சை பலன் அளிக்காமல் தமிழரசி பரிதாபமாக இறந்தார்.

    போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகின.

    அதன் விவரம் வருமாறு:-

    தமிழரசிக்கும், ஈரோடு மாவட்டம் பவானி தாலுகா கட்டியாகவுண்டனூர் பகுதியை சேர்ந்த கார் டிரைவர் முருகனுக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன்-மனைவி இடையே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் தமிழரசி தன்னுடைய பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.

    தமிழரசியின் அண்ணன் சரத்குமாரும் (34), பெரியப்பா மகன் சதீஷ்குமாரும் (38) சேர்ந்து கோழி வளர்த்து வந்துள்ளனர். கோழி குஞ்சுகளை தூக்கி செல்ல கழுகு வருமாம். அந்த கழுகை விரட்டுவதற்காக 'ஏர்கன்' துப்பாக்கி வாங்கி வைத்துள்ளனர். அந்த துப்பாக்கியில் குண்டை போட்டு கழுகை சுடுவதற்காக தயாராக வைத்துள்ளனர்.

    இதனை சரத்குமாரின் 4 வயது மகன் எடுத்து விளையாடி உள்ளான். அப்போது சிறுவனின் கை பட்டு ஏர்கன்னில் இருந்து குண்டு வெளியேறி தமிழரசி மீது பாய்ந்து அவர் பலியானது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

    தமிழரசி பலியானது தொடர்பாக அவருடைய அண்ணன் சரத்குமார், பெரியப்பா மகன் சதீஷ்குமார் இருவரையும் போலீசார் கைது செய்தனர். 

    • சேலம் அருகாமையில் உள்ள பனமரத்துப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஹரிதாஸ் பணியாற்றி வந்தார்.
    • ஹரிதாஸ் இன்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    சேலம்:

    சேலம் ஏற்காடு அடிவாரம் உள்ள கொண்டப்ப நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ஹரிதாஸ் (வயது 59). போலீஸ்காரர். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் சேலம் அருகாமையில் உள்ள பனமரத்துப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஹரிதாஸ் பணியாற்றி வந்தார். நேற்று இரவு வழக்கம்போல் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது ஹரிதாசுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால் உறவினர்கள் அவரை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று சேர்த்தனர். அங்கு ஹரிதாசுக்கு அவசர வார்டில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் ஹரிதாஸ் இன்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர். இந்த சம்பவம் பனமரத்துப்பட்டி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் சக போலீசார் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    உயிரிழந்த போலீஸ்காரர் ஹரிதாஸ் உடலுக்கு போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் போலீஸ் துறையில் பணியாற்றி வரும் அவரது நண்பர்கள், சக போலீசார் அஞ்சலி செலுத்தினர்.

    • சிலர் தனியார் பஸ்களில் சென்னை, பெங்களூரு, கோவை உள்பட பல முக்கிய நகரங்களுக்கு புறப்பட்டனர்.
    • தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது.

    சேலம்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி வெளியூர்களில் தங்கி வேலை பார்த்தவர்கள் கடந்த சில நாட்களாக சொந்த ஊர்களுக்கு வந்தனர். பினனர் தேர்தல் முடிந்ததால் அவர்கள் நேற்று மீண்டும் அவரவர் வசிக்கும் இடங்களுக்கு புறப்பட்டனர். இதையொட்டி பஸ் , ரெயில் நிலையங்களில் கூட்டம் அலை மோதியது. மேலும் சிலர் தனியார் பஸ்களில் சென்னை, பெங்களூரு, கோவை உள்பட பல முக்கிய நகரங்களுக்கு புறப்பட்டனர். அப்போது தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது.

    இதையடுத்து போக்குவரத்து அதிகாரிகள் தீவிரமாக தனியார் வாகனங்களை கண்காணித்தனர். மேலும் சேலம் புதிய பஸ்நிலையம், ஓமலூர், வாழப்பாடி, நத்தக்கரை, சுங்கச்சாவடி ஆகிய இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நிர்ணயித்ததை விட அதிக கட்டணம், கூடுதல் நபர்களை ஏற்றி சென்றது உள்பட பல்வேறு சாலை விதிகளை மீறியதாக கூறி 40 ஆம்னி பஸ்களின் உரிமையாளர்களுக்கு ரூ. 85 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.

    • கடந்த 2 மாதங்களுக்கு மேலாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 100 கன அடிக்கும் கீழ் குறைந்து வருகிறது.
    • நேற்று 55 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 54.83 அடியாக சரிந்தது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை மற்றும் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் ஆகியவற்றை பொறுத்தே மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்படும். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 100 கன அடிக்கும் கீழ் குறைந்து வருகிறது.

    நேற்று 79 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 57 கன அடியாக சரிந்தது.

    இதற்கிடையே கோடை காலத்தில் அணைக்கு நீர்வரத்து போதுமானதாக இல்லாததால் கடந்த 11-ந் தேதி அணையில் இருந்து குடிநீர் தேவைக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1,500 கனஅடியாக குறைக்கப்பட்டது.

    இருப்பினும் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 100 கன அடிக்கும் கீழ் தொடர்ந்து நீடிப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதனால் நேற்று 55 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 54.83 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 20.98 டி.எம்.சி.யாக உள்ளது.

    அணையில் நீர் இருப்பை கருத்தில் கொண்டு நேற்று மாலை முதல் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு 1500 கன அடியில் இருந்து வினாடிக்கு 1,200 கன அடியாக குறைக்கப்பட்டு உள்ளது.

    • 2 ஹெலிகாப்டர்களின் தொடர்பு துண்டானது.
    • 7 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

    ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு தெற்கே பசிபிக் பெருங்கடலில் அந்நாட்டு கடற்படையை சேர்ந்த 2 ஹெலிகாப்டர்கள் பயிற்சியில் ஈடுபட்டன. அதில் தலா 4 பேர் பயணம் செய்தனர்.

    டோக்கியோவிற்கு தெற்கே 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டோரிஷிமா தீவு அருகே திடீரென்று 2 ஹெலிகாப்டர்களின் தொடர்பு துண்டானது.இதையடுத்து சம்பவ இடத்தில் 2 ஹெலிகாப்டர்களும் கடலில் விழுந்து கிடந்தது. இரண்டு ஹெலிகாப்டர்களும் தண்ணீரில் விழுந்து நொறுங்குவதற்கு முன்பு ஒன்றுடன் ஒன்று மோதியிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விபத்தில் ஒருவர் பலியானார். 7 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

    • குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து வினாடிக்கு 1200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
    • நீர் இருப்பு 21.10 டி.எம்.சி.யாக உள்ளது.

    மேட்டூர்:

    மேட்டூர் அணை நீர்தேக்கம் 60 சதுர மைல் பரப்பளவு கொண்டது. தமிழகத்தின் குடிநீர் மற்றும் பாசனத்துக்கு உயிர் நாடியாக மேட்டூர் அணை திகழ்கிறது. இந்த அணையின் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், கரூர், அரியலூர் உள்பட 15 மாவட்டங்கள் பாசன வசதி பெறுகிறது .இதைத்தவிர மேட்டூர் அணை மற்றும் காவிரி ஆற்றிலிருந்து பல்வேறு கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலமாக குடிநீர் எடுத்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை மற்றும் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்தடைகிறது. தற்போது நீர்வரத்து 100 கன அடிக்கும் கீழ் உள்ளது.

    இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 22 கன அடியில் இருந்து 79 கன அடியாக அதிகரித்துள்ளது.

    குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து வினாடிக்கு 1200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தை விட திறப்பு அதிகமாக உள்ளதால் இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 55 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 21.10 டி.எம்.சி.யாக உள்ளது.

    • நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் சங்ககிரி, ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்திவேலூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்றுள்ளது.
    • நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 78.16 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

    சேலம் பாராளுமன்ற தொகுதியில் ஓமலூர், எடப்பாடி, சேலம் மேற்கு, வடக்கு, தெற்கு, வீரபாண்டி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்றுள்ளது. இந்த தொகுதியில் 8 லட்சத்து 28 ஆயிரத்து 152 ஆண் வாக்காளர்களும், 8 லட்சத்து 30ஆயிரத்து 307 பெண் வாக்காளர்களும், 222 திருநங்கை வாக்காளர்களும் என மொத்தம் 16 லட்சத்து 58 ஆயிரத்து 681 வாக்காளர்கள் உள்ளனர்.

    இவற்றில் 6 லட்சத்து 55 ஆயிரத்து 596 ஆண் வாக்காளர்களும், 6லட்சத்து 40ஆயிரத்து 780 பெண் வாக்காளர்களும், 105 திருநங்கைகளும் என மொத்தம் 12 லட்சத்து 96 ஆயிரத்து 481 பேர் வாக்காளித்து உள்ளனர். சேலம் பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 78.16 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் சங்ககிரி, ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்திவேலூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்றுள்ளது. இந்த தொகுதியில் 7லட்சத்து 83ஆயிரத்து 17 ஆண் வாக்காளர்களும், 7லட்சத்து 44ஆயிரத்து 87 பெண் வாக்காளர்களும், 158 திருநங்கை வாக்காளர்களும் என மொத்தம் 14 லட்சத்து 52ஆயிரத்து 562 வாக்காளர்கள் உள்ளனர்.

    இவற்றில் 5 லட்சத்து 53ஆயிரத்து 668 ஆண் வாக்காளர்களும், 5லட்சத்து 81ஆயிரத்து 525 பெண் வாக்காளர்களும், 53 திருநங்கை வாக்காளர்களும் என மொத்தம் 11 லட்சத்து 35ஆயிரத்து 246 வாக்காளர்கள் வாக்களித்து உள்ளனர். நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 78.16 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

    • தளவாய்பட்டி பிரிவு சாலையின் அருகே நாய் குறுக்கே வந்ததால் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.
    • ஜானி பிரகாஷின் உடலை கைப்பற்றிய ஆத்தூர் ஊரக போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜானி பிரகாஷ்( 39). இவரது மனைவி அனிதா (39). இவர் சேலம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    இன்று நடைபெறும் தேர்தலுக்காக சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சந்தனகிரி அரசு தொடக்கப்பள்ளியில் தேர்தல் பணிக்காக அனிதா தனது கணவர் ஜானி பிரகாஷ் உடன் இருசக்கர வாகனத்தில் அனிதாவின் தாய் வீடான ஏத்தாப்பூரில் இருந்து ஆத்தூரை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது தளவாய்பட்டி பிரிவு சாலையின் அருகே நாய் குறுக்கே வந்ததால் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் இருவரும் படுகாயம் அடைந்தனர். அங்கிருந்த பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி ஜானி பிரகாஷ் உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த நிலையில் அனிதா சேலம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதனையடுத்து ஜானி பிரகாஷின் உடலை கைப்பற்றிய ஆத்தூர் ஊரக போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பொதுமக்களுடன் நீண்ட வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார்.
    • அனைத்து வாக்காளர்களும் தவறாமல் வாக்குப்பதிவு செய்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றிட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

    எடப்பாடி:

    தமிழகம் முழுவதும் இன்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அ.தி.மு.க பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்தினருடன் சொந்த ஊரான சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த சிலுவம்பாளையம் கிராமத்தில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார்.

    முன்னதாக இன்று அதிகாலை தனது சொந்த கிராமத்திற்கு வருகை தந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, காலை 7.10 மணி அளவில் அப்பகுதியில் உள்ள தனது பூர்வீக வீட்டிலிருந்து அவரது மனைவி ராதா, மகன் மிதுன், மருமகள் திவ்யா, பேரன் ஆதித், சகோதரர் கோவிந்தன் உள்பட குடும்பத்தினருடன் அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு நடந்து சென்ற அவர் அங்கு பொதுமக்களுடன் நீண்ட வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார்.


    வாக்குப்பதிவிற்கு பின் நிருபர்களிடம் கூறுகையில், பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள முதல் தலைமுறை வாக்காளர்கள் மற்றும் அனைத்து வாக்காளர்களும் தவறாமல் வாக்குப்பதிவு செய்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றிட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

    • வழக்கமாக மார்ச் மாதம் 15-ந்தேதியில் இருந்து ஆகஸ்டு மாதம் வரை மாம்பழங்கள் வரத்து சேலம் மார்க்கெட்களுக்கு அதிக அளவில் இருக்கும்.
    • சேலம் மார்க்கெட்டுக்கு தற்போது நாள் ஒன்றுக்கு 10 டன் அளவிற்கு மாம்பழங்கள் வரத்து உள்ளது.

    சேலம்:

    சேலம் என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது தித்திக்கும் மாம்பழங்கள் தான். அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் விளையும் மாம்பழங்கள் உலகம் முழுவதும் ஏற்றுமதியாகிறது.

    குறிப்பாக சேலம் மாவட்டம் ஆத்தூர், வாழப்பாடி, கூட்டாத்துப்பட்டி, வரகம்பட்டி, காரிப்பட்டி, குப்பனூர், அயோத்தியாப்பட்டணம், நங்கவள்ளி, ஜலகண்டாபுரம், எடப்பாடி மற்றும் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் மாம்பழங்கள் சேலம் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த மாம்பழங்களுக்கு தனி சுவை உண்டு என்பதால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வாங்கி செல்கிறார்கள். மேலும் ஆன்லைன் விற்பனையும் நடைபெறுகிறது.

    வழக்கமாக மார்ச் மாதம் 15-ந்தேதியில் இருந்து ஆகஸ்டு மாதம் வரை மாம்பழங்கள் வரத்து சேலம் மார்க்கெட்களுக்கு அதிக அளவில் இருக்கும். ஆனால் இந்தாண்டு பருவம் தவறி பெய்த மழையால் மாங்காய் உற்பத்தி கடுமையாக குறைந்தது. இதனால் சேலம் மார்க்கெட்களுக்கு கடந்த மாதம் மாங்காய் வரத்து மிகவும் குறைவாக இருந்தது. இந்த மாத தொடக்கத்தில் இருந்து சேலம் மார்க்கெட்களுக்கு மாம்பழங்கள் வரத்து சற்று அதிகரித்துள்ளது. குறிப்பாக சேலம் பெங்களூரா, சேலம் குண்டு, மல்கோவா, நீலம், இமாம்பசந்த், பங்கணப்பள்ளி உள்பட சில ரகங்கள் மட்டும் மார்க்கெட்களுக்கு வருகிறது.

    சேலம் மார்க்கெட்டுக்கு தற்போது நாள் ஒன்றுக்கு 10 டன் அளவிற்கு மாம்பழங்கள் வரத்து உள்ளது. ஆனாலும் சேலம் மாநகர தெருக்களில் மாம்பழ விற்பனை அதிக அளவில் வரவில்லை. இதனால் மாம்பழங்கள் தற்போது ஒரு கிலோ 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விற்பனையாகிறது. இதனால் பொது மக்கள் குறைந்த அளவே மாம்பழங்களை வாங்கி செல்கிறார்கள்.

    இது குறித்து சேலத்தை சேர்ந்த மாம்பழ வியாபாரி ஒருவர் கூறுகையில், சேலம் மார்க்கெட்களில் கடந்த ஆண்டு இதே நாளில் 30 முதல் 40 டன் வரை மாம்பழங்கள் வரத்து இருந்தது. ஆனால் இந்தாண்டு தற்போது மாம்பழ வரத்து 10 டன்னாக அதிகரித்துள்ளது. பெரும்பாலான மாமரங்களில் பூத்த பூக்கள் உதிர்ந்துள்ளது. இதனால் தற்போது மாம்பழ வரத்து உடனடியாக அதிக அளவில் அதிகரிக்க வாய்ப்பில்லை, அடுத்த மாத தொடக்கத்தில் இருந்து மாம்பழ வரத்து சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. அப்போது விலையும் குறையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 21 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த போதிலும் சங்கர் ஜப்பான் குடியுரிமை பெறாமலேயே இருந்து வந்தார்.
    • ஒரு ஓட்டு போடுவதற்காக லட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட தொகையை செலவு செய்து ஜனநாயக கடமையாற்ற சேலம் வந்துள்ளார்.

    சேலம்:

    சேலம் கொண்டலாம்பட்டியை சேர்ந்தவர் சங்கர்(வயது 45). டிசைனிங் என்ஜினீயராக பணிபுரியும் இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக ஜப்பான் நாட்டுக்கு சென்று உள்ளார். அங்கே தற்போது வரை 21 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த போதிலும் அவர் ஜப்பான் குடியுரிமை பெறாமலேயே இருந்து வந்தார்.

    நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சேலம் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வீரபாண்டி சட்டசபை தொகுதி வாக்காளரான அவர் தனது ஒரு ஓட்டை பதிவு செய்வதற்காக, ஜப்பானில் இருந்து கடந்த 11-ந்தேதி சேலத்திற்கு புறப்பட்டு வந்துள்ளார். இதற்காக அவர் விமானத்தில் வந்தவகையில், ஒரு ஓட்டு போடுவதற்காக லட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட தொகையை செலவு செய்து ஜனநாயக கடமையாற்ற சேலம் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து என்ஜினீயர் சங்கர் கூறியதாவது, 'ஜப்பான் நாட்டில் டோக்கியோ நகரில், நகரேயமா என்ற பகுதியில் வசித்து வரும் என்னிடம், நடிகர் விஜய் நடித்த சர்க்கார் திரைப்படத்தை பார்த்து விட்டு கதாநாயகன் ஒரு ஓட்டு போடுவதற்காக இந்தியாவுக்கு வருவது போன்று அந்த பாணியில் தான் இங்கு வருகிறீர்களா? என்று கேட்டதற்கு அந்த படத்தை நான் பார்த்தது இல்லை என்றார். இதற்கு மோடி அரசு தான் காரணம். பிரதமர் மோடியால் ஈர்க்கப்பட்டு வாக்கு அளிக்க வந்தேன். அனைவரும் ஜனநாயக கடமையாற்ற வேண்டும்' என்றார்.

    • தீ மளமளவென பரவி சுமார் 2 ஏக்கர் பரப்பளவுக்கு பிடித்து எரிந்தது.
    • சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் லேடீஸ் சீட் பகுதியில் தீ ஏற்பட்டதால் உடனடியாக சுற்றுலா பயணிகள் அங்கிருந்து அனுப்பப்பட்டனர்.

    ஏற்காடு:

    ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் கடந்த 3 மாதங்களாக மழை பொய்த்துபோய் காடு, மலைகள் பசுமை இழந்து வறண்டு காணப்படுகிறது. இதனால் அவ்வப்போது வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன் ஏற்காடு மலை பாதையில் உள்ள வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் போராடி அந்த தீயை அணைத்தனர்.

    இந்த நிலையில் ஏற்காடு லேடீஸ் சீட் பகுதியில் உள்ள வனப்பகுதியில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. தீ மளமளவென பரவி சுமார் 2 ஏக்கர் பரப்பளவுக்கு பிடித்து எரிந்தது. சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் லேடீஸ் சீட் பகுதியில் தீ ஏற்பட்டதால் உடனடியாக சுற்றுலா பயணிகள் அங்கிருந்து அனுப்பப்பட்டனர்.

    சம்பவ இடத்துக்கு வந்த ஏற்காடு தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைக்க முற்பட்டும் தீ கட்டுக்குள் வரவில்லை. குடியிருப்பு பகுதிக்கு தீ பரவாமல் தடுக்க தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி அணைத்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் புகையும், சாம்பலுமாக காணப்பட்டது.

    ×