என் மலர்tooltip icon

    சேலம்

    • கர்நாடகாவில் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
    • காவிரி ஆற்றில் யாரும் குளிக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக குடகு, கேரள மாநிலம் வயநாடு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் கிருஷ்ணராஜசாகர் அணை, கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. குறிப்பாக கபினி அணை நிரம்பும் தருவாயில் உள்ளது. இதனால் அணையில் இருந்து நேற்று காலையில் வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், பிற்பகல் 12 மணி முதல் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக தமிழக காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது.

    இதனால் கர்நாடகாவில் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. காவிரி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும், காவிரி ஆற்றில் யாரும் குளிக்க வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கபினி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் காவிரி ஆற்றில் பாய்ந்து, டி.நரசிப்புராவில் உள்ள திருமகூடலு வழியாக ஒகேனக்கல் வந்து சேரும். அந்த வகையில் நேற்று கபினி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் 48 மணி நேரத்தில் தமிழகத்துக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி நாளை மதியத்துக்கு மேல் கபினி அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் அந்த தண்ணீர் நாளை இரவு முதல் மேட்டூர் அணைக்கு வரத்தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 113.81 அடியாக இருந்தது. அணைக்கு நேற்று வினாடிக்கு 6040 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று வினாடிக்கு 6829 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதேபோல் பாசனத்திற்கு தொடர்ந்து 12ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது மேட்டூர் அணையில் 83.94 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    • சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓடிய நாய் மீண்டும் அதே இடத்திற்கு வந்தது.
    • ரெயில் நடு வழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் ரெயிலில் இருந்து இறங்கி தவித்தபடி நின்றனர்.

    சேலம்:

    ஈரோட்டில் இருந்து சேலம், ஜோலார்பேட்டை வழியாக சென்னைக்கு தினசரி ரெயிலாக ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த ரெயில் நேற்றிரவு 9 மணியளவில் வழக்கம் போல ஈரோட்டில் இருந்து புறப்பட்டு சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த மாவேலிபாளையத்தை கடந்து மகுடஞ்சாவடி அருகே வந்து கொண்டிருந்தது .

    அப்போது ரெயில் என்ஜின் சக்கரத்தில் இரும்பு துண்டு சிக்கிய நிலையில் தரதரவென சிறிது தூரம் இழுத்து சென்றது. ஏதோ விபரீதம் நடப்பதை அறிந்த ரெயில் என்ஜின் டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார்.

    பின்னர் கீழே இறங்கி சென்று பார்த்தபோது தண்டவாளத்தில் பெரிய அளவிலான இரும்பு துண்டு வைக்கப்பட்டிருந்ததும் அது ரெயில் என்ஜினின் சக்கரத்தில் சிக்கி இருப்பதும் தெரிய வந்தது.

    இதனால் ரெயில் என்ஜின் பழுதானதால் தொடர்ந்து இயக்க முடியாத நிலையில் ரெயில் இருப்பதை அறிந்த என்ஜின் டிரைவர் இது குறித்து ரெயில்வே கோட்ட கட்டுப்பாட்டறைக்கு தகவல் தெரிவித்தார்.

    உடனே அங்கு விரைந்து வந்த ரெயில்வே அதிகாரிகள் மற்றும் சேலம், ஈரோடு ரெயில்வே போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்கும் நோக்கில் பெரிய அளவிலான 10 அடி நீளமுள்ள உடைந்த தண்டவாள துண்டை ரெயில்தண்டவாளத்தின் குறுக்கே மர்ம நபர்கள் வைத்து சென்றது தெரிய வந்தது. தொடர்ந்து மோப்பநாயும் வரவழைத்து ஆய்வு செய்தனர். சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓடிய நாய் மீண்டும் அதே இடத்திற்கு வந்தது.

    இதற்கிடையே ரெயில் நடு வழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் ரெயிலில் இருந்து இறங்கி தவித்தபடி நின்றனர். தொடர்ந்து சேலத்தில் இருந்து மாற்று என்ஜின் கொண்டு வரப்பட்டு அந்த என்ஜின் பொருத்தப்பட்டது.

    பின்னர் 2 மணி நேரம் தாமதமாக இரவு 11.45 மணிக்கு ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லி சென்ற எக்பிஸ்பிரஸ் ரெயில் 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

    இதே போல ஈரோடு மார்க்கமாக சென்னை மற்றும் பெங்களூரு செல்லும் 3 ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. இதனால் அந்த ரெயில்களில் பயணம் செய்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

    இந்த சம்பவம் குறித்து ரெயில்வே டி.எஸ்.பி.பாபு மற்றும் போலீசார் நடத்திய விசாரணையில், இரவு நேரத்தில் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்தி இருக்கலாம் என்றும், மது போதையில் அங்குகிடந்த 10 அடி நீளமுள்ள உடைந்த தண்டவாள துண்டை ரெயில் தண்டவாளத்தின் குறுக்கே வைத்து சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    இதையடுத்து அந்த பகுதி காட்டுப்பகுதி என்பதால் அங்கு கேமராக்கள் இல்லை. ஆனாலும் அருகில் உள்ள காளி கவுண்டம்பாளையம், மாவேலிக்கரை, மகுடஞ்சாவடி பகுதியில் தண்டவாள பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றி திரிந்த நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் அந்த பகுதிகளில் உள்ள உள்ள கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து குடிபோதையில் சுற்றி திரியும் நபர்களை பிடித்து விசாரணை நடத்த உள்ளனர். தொடர்ந்து மர்ம நபர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.

    • அணைக்கு வினாடிக்கு 6040 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
    • அணையில் தற்போது 84.41 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    சேலம்:

    மேட்டூர் அணை மூலம் காவிரி டெல்டா பகுதியில் 13 மாவட்டங்களில் சுமார் 17 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் டெல்டா பாசனத்துக்காக ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது வழக்கம்.

    அதே போல் கடந்த 12-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைத்தார். முதலில் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து 5 ஆயிரம் கனஅடியாகவும், 10 ஆயிரம் கனஅடியாகவும் தண்ணீர் அதிகரித்து திறக்கப்பட்டது.

    இந்த நிலையில் பாசனத்துக்கு தண்ணீர் தேவை அதிகரித்ததன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை முதல் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் மின் உற்பத்தியும் தொடங்கி நடந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.13 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 6040 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் தற்போது 84.41 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    • மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.
    • டாஸ் வென்ற கோவை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    சேலம்:

    டி.என்.பி.எல். தொடரின் 15-வது லீக் போட்டி சேலத்தில் நடைபெறுகிறது. இதில் திருச்சி கிராண்ட் சோழாஸ், லைகா கோவை கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. டாஸ் வென்ற லைகா கோவை கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

    அதன்படி, திருச்சி அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் வசீம் அகமது 32 ரன்னில் அவுட்டானார். ஜகதீஷ் கவுசிக் 5 ரன்னில் வெளியேறினார். சுஜய் சிவசங்கரன் 25 ரன்னும், ஜாபர் ஜமால் 6 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். சஞ்சய் யாதவ் 27 ரன்னில் அவுட்டானார்.

    கடைசி கட்டத்தில் இறங்கிய ராஜ்குமார் அதிரடியாக ஆடி 18 பந்தில் அரை சதம் கடந்தார். 17வது ஓவரில் 21 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், திருச்சி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. ராஜ்குமார் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இதையடுத்து, 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லைகா கோவை கிங்ஸ் அணி களமிறங்குகிறது.

    • வேம்படிதாளம் சுற்றுவட்டார பகுதிகளில் மின் பராமரிப்பு பணி காரணமாக மின் வினியோகம் நிறுத்தப்படும்.
    • பெருமாகவுண்டம்பட்டி, காந்தி நகர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வேம்படிதாளம் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை மறுநாள் (18-ந் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இளம்பிள்ளை, சித்தர் கோவில், இடங்கணசாலை,

    கே.கே.நகர், வேம்படிதாளம், காக்காபாளையம், மகுடஞ்சாவடி, சீரகாபாடி, ெபாதியன் காடு, கோத்துப்பாலிக்காடு, அரியாம்பாளையம், மலங்காடு, தப்பக்குட்டை, பெருமாகவுண்டம்பட்டி, காந்தி நகர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.

    • டாஸ் வென்ற நெல்லை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய சேலம் அணி 20 ஓவரில் 126 ரன்கள் எடுத்தது.

    சேலம்:

    டிஎன்பிஎல் தொடரின் 13-வது லீக் ஆட்டம் சேலத்தில் நடைபெற்றது. இதில் சேலம் ஸ்பார்டன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற நெல்லை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் ஹரி நிஷாந்த் அரை சதம் அடித்து 50 ரன்னில் அவுட்டானார். முகமது 28 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை.

    நெல்லை சச்சின் ராதி 5 விக்கெட்டும், சோனு யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் நெல்லை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அஜிதேஷ் குருசாமி 3 ரன்னில் அவுட்டானார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சந்தோஷ்குமார் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து73 ரன்னில் அவுட்டானார்.

    2-வது விக்கெட்டுக்கு சந்தோஷ்குமார்-நிர்மல் குமார் ஜோடி பொறுப்புடன் ஆடி 54 ரன்கள் சேர்த்தது. நிர்மல் குமார் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இறுதியில், நெல்லை அணி 13.4 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 130 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் நெல்லை அணி வெற்றி பெற்றது. நெல்லை அணி பெற்ற 2-வது வெற்றி இதுவாகும்.

    • டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய மதுரை அணி 20 ஓவரில் 150 ரன்கள் எடுத்தது.

    சேலம்:

    டிஎன்பிஎல் தொடரின் 11-வது லீக் ஆட்டம் சேலத்தில் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய மதுரை பாந்தர்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது. அதிக் உர் ரகுமார் அரை சதம் அடித்து 50 ரன்னில் ஆட்டமிழந்தார். பாலசந்தர் அனிருத் 31 ரன்கள் எடுத்தார்.

    திண்டுக்கல் அணி சார்பில் பெரியசாமி, சந்திரசேகர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்கியது. தொடக்க ஜோடி பொறுப்புடன் ஆடியது. முதல் விக்கெட்டுக்கு 124 ரன்கள் சேர்த்த நிலையில் அஸ்வின் 49 ரன்னில் அவுட்டானார்.

    மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஷிவம் சிங் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

    ஷிவம் சிங் 86 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இறுதியில், திண்டுக்கல் அணி 12.3 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 9 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணி வெற்றி பெற்றது. திண்டுக்கல் அணி பெற்ற 2-வது வெற்றி இதுவாகும்.

    • மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.91 அடியாக இருந்தது.
    • அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    சேலம்:

    மேட்டூர் அணைக்கு கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் மெதுவாக உயர்ந்து வருகிறது.

    இந்த நிலையில் கடந்த 12-ந்தேதி முதல் காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. முதலில் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடியாக திறக்கப்பட்ட தண்ணீர் பின்னர் 5 ஆயிரம் கன அடியாகவும், இரவு 8 மணியளவில் அது வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாகவும் அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை முதல் பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.

    அதே போல் அணைக்கு வரும் தண்ணீரும் அதிகரித்து காணப்படுகிறது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.91 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 7507 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய திருப்பூர் அணி 20 ஓவரில் 177 ரன்கள் அடித்தது.

    சேலம்:

    டி என் பி எல் தொடரின் 9-வது லீக் ஆட்டம் சேலத்தில் நடைபெற்றது. இதில் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் அடித்தது. அதிரடியாக ஆடிய துஷார் ரஹேஜா 16 பந்தில் அரைசதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய அவர் 28 பந்தில் 8 பவுண்டரி, 5 சிக்சர்கள் உள்பட 74 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அமித் சாத்விக், பிரதோஷ் ரஞ்சன் பால் தலா 25 ரன்கள் எடுத்தனர்.

    சேலம் அணி சார்பில் பொய்யாமொழி 3 விக்கெட்டும், முகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் அணி களமிறங்கியது. நிதிஷ் ராஜகோபால் அரை சதம் கடந்தார். அவர் 44 பந்தில் 69 ரன் குவித்து ஆட்டமிழந்தார். ஆர்.கவின் 34 ரன்கள் எடுத்தார்.

    கடைசி கட்டத்தில் பூபதி குமார் 19 ரன்னும், ஹரிஷ் குமார் 23 ரன்னும் எடுத்து பொறுப்புடன் ஆடினர்.

    இறுதியில், சேலம் அணி 19.5 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்து வென்றது. இதன்மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் சேலம் அணி வெற்றி பெற்றது. சேலம் அணி பெற்ற 3வது வெற்றி இதுவாகும்.

    • சேலம் வழியாக இயங்கும் சில ரெயில்கள் வழித்தடத்தில் மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.
    • ரெயில்கள் ஈரோடு சேலம் வழியாக செல்லாமல் ஈரோடு ,கரூர் ,சேலம் வழியாக செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    ஈரோடு - காவிரி பாலம் இடையே தற்போதுள்ள இரும்பு பாலத்துக்கு பதிலாக கான்கிரீட் பாலம் அமைப்பதற்கான பணி நடைபெறுவதால் சில ரெயில்கள் இயக்க வழித்தடத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

    சேலம் ரெயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    ஈரோடு காவிரி பாலம் அருகே பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதில் ஏற்கனவே உள்ள இரும்பு பாலத்தை அகற்றி உயர்தர காங்கிரீட் பாலம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் நடைபெறுவதால் ஈரோடு, சேலம் வழியாக இயங்கும் சில ரெயில்கள் வழித்தடத்தில் மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

    கோவையில் இருந்து தினமும் இயக்கப்படும் லோக் மானிய திலக் எக்ஸ்பிரஸ் ரெயில் கோவையில் இருந்து 8.50 மணிக்கு புறப்பட்டு வழக்கமாக ஈரோடு சேலம் வழியாக செல்லும். தற்போது காவிரி பாலம் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (14-ந் தேதி ) முதல் ஈரோடு, கரூர், சேலம் வழித்தடத்தில் செல்லும் எனவும் கூடுதலாக இந்த ரெயில் கரூரில் நின்று செல்லும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதே போல எர்ணாகுளம்-தாத்தாங்கர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஈரோடு, கரூர் , சேலம் வழியாக செல்லும் எனவும் கரூரில் இந்த ரெயில் நின்று செல்லும் எனவும்அறிவிக்கப்பட்டுள்ளது . அதேபோல ஆலப்புழா தன் பாத் எக்ஸ்பிரஸ் ரெயில், எர்ணாகுளம் கே. எஸ் .ஆர் .பெங்களூரு எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் ஈரோடு சேலம் வழியாக செல்லாமல் ஈரோடு கரூர், சேலம் வழியாக செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 114.89 அடியாக இருந்தது.
    • மேட்டூர் அணையில் திறக்கப்பட்டுள்ள இந்த தண்ணீர் நாளை மறுநாள் கல்லணையை சென்றடையும்.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தண்ணீர் திறந்து வைத்தார். முதலில் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் அணையின் மேல்மட்ட மதகு வழியாக வெளியேற்றப்பட்டது. பின்னர் 12 மணியளவில் தண்ணீர் திறப்பு 5 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்ட நிலையில் இரவு 8 மணி முதல் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து திறக்கப்பட்டு வருகிறது.

    மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் தற்போது நீர்மின் நிலையங்கள் மூலம் மின்உற்பத்தி தொடங்கியுள்ளது. மேட்டூர் அணையில் திறக்கப்பட்டுள்ள இந்த தண்ணீர் நாளை மறுநாள் கல்லணையை சென்றடையும்.

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 114.89 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 6896 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • மத்திய அரசின் எந்த திட்டங்களுக்கும் முழு நிதி மாநில அரசுக்கு வந்து சேர்வதில்லை.
    • டெல்லிக்கு தலையாட்டி பொம்மையாக அமர்ந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

    சேலம்:

    அமித்ஷா மதுரைக்கு வந்தபோது தி.மு.க. ஆட்சியில் குறை சொல்லி ஆத்திரத்தை கொட்டித் தீர்த்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில்,

    * அறிவிப்பு மட்டுமே வெளியிட்டு செயல்படுத்தாமல் உள்ளதாக தி.மு.க. அரசை குற்றம்சாட்டியுள்ளார்.

    * 10 ஆண்டுகளுக்கு முன் அறிவித்த எய்ம்ஸ் மருத்துவமனையின் நிலை என்ன?

    * 2 ஆண்டுகளில் எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டி முடித்திருக்கலாம்.

    * எய்ம்ஸ் மருத்துவமனையை பத்தாண்டுகளாக கட்டுவதற்கு அது மருத்துவமனையா அல்லது விண்வெளி ஆராய்ச்சி நிலையமா?

    * மதுரை வந்த அமித்ஷா எய்ம்ஸ் நிலை குறித்து நேரில் போய் பார்த்தாரா?

    * பிரதமர் பெயரில் உள்ள திட்டங்களுக்கே மாநில அரசு தான் கூடுதல் நிதி கொடுக்கிறது.

    * 11 ஆண்டுகளில் மத்திய அரசு தமிழகத்திற்கு அளித்த சிறப்பு திட்டம் என்ன?

    * மத்திய அரசின் எந்த திட்டங்களுக்கும் முழு நிதி மாநில அரசுக்கு வந்து சேர்வதில்லை.

    * சட்டையில் இருந்தால் தான் அகப்பையில் வரும்... எனவே எந்த சாதனையையும் மத்திய அரசால் சொல்ல முடியவில்லை.

    * அன்றைய பொருளாதாரம், விலைவாசி நிலை என்ன? தற்போதைய நிலை என்ன?

    * மதுரையின் தொன்மையை நிராகரிக்கும் வகையில் பேசியிருக்கிறார் மத்திய அமைச்சர் ஒருவர்.

    * ஏராளமான தரவுகளுடன் கொடுக்கப்பட்ட கீழடி ஆய்வறிக்கையை திருத்த வேண்டும் என்று மத்திய அரசு சொல்கிறது.

    * கீழடி அறிவியல் ஆய்வில் எழுதப்பட்ட அறிக்கையை போதவில்லை என கூறுகிறார் மத்திய அமைச்சர் செகாவத்.

    * தமிழர்களின் தொன்மையை அழிக்கவும், மறைக்கவும் மத்திய அரசு முயற்சிக்கிறது.

    * தமிழ்நாட்டின் உரிமைகள் பறிபோன போது எடப்பாடி பழனிசாமி வாய் திறந்து கேள்வி கேட்டாரா?

    * டெல்லிக்கு தலையாட்டி பொம்மையாக அமர்ந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். 

    ×