என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

இந்தாண்டில் 4-வது முறையாக நிரம்பியது: மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் 35 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு
- கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.
- 13 மாவட்டங்களில் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
சேலம்:
கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதி களில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே பெய்ய தொடங்கியது. இதன் காரணமாக நீர்வரத்து அதிகரித்து அங்குள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் நிரம்பியது.
இதையடுத்து இந்த அணைகளில் இருந்து உபரிநீர் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக இந்தாண்டில் முதல் முறையாக கடந்த மாதம் 29-ந் தேதி மேட்டூர் அணை நிரம்பியது.
பின்னர் மழையின் தீவிரத்தை பொறுத்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. ஆனாலும் தொடர்ந்து டெல்டா பாசனத்துக்கு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் குறைவதும், அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
இதன் அடிப்படையில் மேட்டூர் அணை இந்தாண்டில் 2-வது முறையாக கடந்த 5-ந்தேதியும், 3-வது முறையாக கடந்த 20-ந்தேதியும் நிரம்பியது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக நேற்று மாலை இந்தாண்டில் 4-வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது.
இதையடுத்து உடனடியாக பாதுகாப்பு கருதி அணையில் இருந்து உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. நேற்று மாலை நீர்மின்நிலையம் மற்றும் 16 கண் மதகு வழியாக வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.
பின்னர் இன்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 25 ஆயிரத்து 400 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது. மேலும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்த நிலையில் காலை 10 மணிஅளவில் மேட்டூர் அணையில் இருந்து நீர்மின்நிலையம் மற்றும் 16 கண் மதகு வழியாக காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால் ஆற்றில் தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது.
இதன் காரணமாக மேட்டூர் அணையின் 16 கண் மதகு எதிரே உள்ள தங்கமாபுரிபட்டணம், அண்ணாநகர், பெரியார் நகர், சேலம் கேம்ப் பகுதிகளில் பொதுமக்கள் காவிரி ஆற்றில் குளிக்கவோ, இறங்கவோ கூடாது என்றும் மேலும் ஆற்றில் ஆபத்தான முறையில் போட்டோ எடுக்க கூடாது என்றும் ஒலி பெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர். மேலும் காவிரி கரையோரம் உள்ள சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 13 மாவட்டங்களில் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.






