என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

குர்ஆன் மீது ஆணையாக எந்த காலத்திலும் பா.ஜ.க.வுடன் த.வெ.க. கூட்டணி கிடையாது- ஆதவ் அர்ஜூனா
- பா.ஜ.க.வை நேரடியாக வரவேற்று கூட்டணி வைத்து அ.தி.மு.க. வலுவிழந்துவிட்டது.
- பா.ஜ.க.வை கடுமையாக துணிவுடன் எதிர்க்கக்கூடிய ஒரே தலைவர் விஜய்.
சேலம்:
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் முதல் மாநில கொள்கை விளக்க பொதுக்கூட்டம் சேலம் போஸ் மைதானத்தில் நேற்று இரவு நடந்தது. கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
2026-ல் நடக்கும் சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று முதல்-அமைச்சராக விஜய் பதவி ஏற்பது உறுதி. கட்சியின் முதல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் சேலத்தில் மாபெரும் வெற்றி கூட்டமாக அமைந்துள்ளது. சேலத்தில் சாக்கடை கால்வாய், சாலை வசதிகள் போதுமானதாக இல்லை. இதனை ஆளுங்கட்சியினர் செய்து கொடுக்க மாட்டார்கள். 2026-ல் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைந்தவுடன் முதல்-அமைச்சராக விஜய் பதவி ஏற்றவுடன் நிச்சயம் செய்து கொடுப்பார் என்றார்.
இதையடுத்து பேசிய த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா,
தி.மு.க.வின் ஊழல்தான் தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை வளர்க்கிறது. பா.ஜ.க.வை நேரடியாக வரவேற்று கூட்டணி வைத்து அ.தி.மு.க. வலுவிழந்துவிட்டது. நாங்கள் ஏன் அ.தி.மு.க.வை எதிர்க்கவில்லை என்றால், அ.தி.மு.க.வின் ஒட்டுமொத்த தொண்டர்கள் த.வெ.க.வில் எப்போதும் இணைந்துவிட்டார்கள். எம்.ஜி.ஆர். எந்த குறிக்கோளோடு ஆரம்பித்தாரோ, ஜெயலலிதா அம்மா எந்த குறிக்கோளோடு அ.தி.மு.க.வை மீட்டு எடுத்தார்களோ... அந்த குறிக்கோளின் ஒற்றை நம்பிக்கை இன்றைக்கு நம்முடைய தலைவர் விஜய் மட்டும்தான். இந்த கொள்கையற்ற அரசியலால்தான் தி.மு.க. இன்றைக்கு சுலபமாக கடைசி 3 தேர்தலில் வெற்றி பெற்றது. ஆனால் இனி வெற்றி பெற முடியாது. ஏன் என்றால் உங்களை எதிர்த்து அரசியல் செய்யக்கூடியவர்கள் பா.ஜ.க.விடம் சரணடைந்த தலைவர்கள் அல்ல. பா.ஜ.க.வை கடுமையாக துணிவுடன் எதிர்க்கக்கூடிய ஒரே தலைவர் விஜய். இஸ்லாமிய தோழர்களே.. எங்களுக்கு குர்ஆனும் ஒரு கடவுளோடு நம்பிக்கைத்தான். குர்ஆன் மீது ஆணையாக சொல்கிறோம்.... எந்த காலத்திலும் பா.ஜ.க.வுடன் எங்களுக்கு கூட்டணி கிடையாது... உறவு கிடையாது என்பதை அழுத்தமாக இந்த சேலம் மாநாட்டில் உறுதியுடன் கூறுகிறோம் என்றார்.






