என் மலர்
நாகப்பட்டினம்
கீழ்வேளூர்:
நாகை மாவட்டம் திருமருகலை அடுத்த அருள்மொழிதேவன் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மகன் சக்தி(வயது 19).
சரக்கு ஆட்டோ டிரைவரான இவர் நேற்று மாலை காரைக்கால் மாவட்டம் விழுதியூரில் இருந்து வேளாங்கண்ணியை நோக்கி சரக்கு ஆட்டோவில் தண்ணீர் கேன்களை ஏற்றிக்கொண்டு நாகை கிழக்கு கடற்கரை சாலை வழியாக வந்து கொண்டிருந்தார்.
நாகூரை அடுத்த தெத்தி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் வந்தபோது எதிரே சென்ற மோட்டார் சைக்கிளும், சரக்கு ஆட்டோவும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இதை தொடர்ந்து தாறுமாறாக ஓடிய சரக்கு ஆட்டோ சாலையோரத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த திருச்சி மேலகல்கண்டார்கோட்டையை சேர்ந்த ஹரிஹரன்(22) மற்றும் அவருடன் உறவினர் தர்மாவளவன் (18) ஆகிய இருவரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் சரக்கு ஆட்டோ டிரைவர் சக்தி படுகாயம் அடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து டிரைவர் சக்தியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து அவர் மேல்சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சக்தியும் இறந்தார்.
இந்த விபத்து குறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம், கரியாப்பட்டினம் பகுதிகளில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் பஸ் கட்டண உயர்வை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடந்தது.
வேதாரண்யத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. காமராஜ் தலைமையில் தி.மு.க. நகர செயலாளர் புகழேந்தி, காங்கிரஸ் சார்பில் முன்னாள் பேரூராட்சி தலைவர் சங்கரவடிவேல், நாகை தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் போஸ், மகிளா காங்கிரஸ் செல்வராணி, இந்திய கம்யூனிஸ்டு மாரியப்பன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதுபோல் கரியாப்பட்டினம் கடைத்தெருவில் தி.மு.க கிழக்கு ஒன்றியச் செயலாளர் கவிஞர் மாசி தலைமையில் மறியல் நடந்தது. இதில் 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கரியாபட்டினம், நாகக் குடையான் பகுதியை சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவி ஒருவர் தாய் வேலைக்கு சென்று விட்டதால் தனியாக இருந்தார். அவரிடம் வடமாநில வாலிபர் ஒருவர் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதில் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி சத்தம் போட்டார். உடனே அங்கிருந்த தப்பி ஓடிய வாலிபரை அப்பகுத மக்கள் சுற்றி வளைத்து பிடித்து கரியாபட்டினம் போலீசில் ஒப்படைத்தனர்.
அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த நூரான் மகன் சாதிக் (வயது 20) என்பதும், அவர் நாகையில் தங்கி வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை வேதாரண்யம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
வடமாநில வாலிபர் வேலைக்கு வந்த இடத்தில் மாணவியிடம் சில்மிஷம் செய்த சம்பவம் நாகக்குடையான் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த மணல்மேடு, தெற்குகாரு குடியை சேர்ந்த கோவிந்தசாமி மனைவி அரும்புஅம்மாள் (வயது 75). இவர் குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி அவர் கொடூரமாக கொலைசெய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மணல்மேடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் கொலையாளிகள் அரும்புஅம்மாளை கொலை செய்து அவர் அணிந்திருந்த 4 பவுன் செயினை பறித்து சென்று இருப்பது தெரியவந்தது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடிவந்தனர்.
இதில் அரும்பு அம்மாளை கொலை செய்து நகை பறித்தவர்கள் கடலங்குடியை சேர்ந்த முருகன் மகன் பாலாஜி, (வயது 19), அவரது நண்பர் பந்தநல்லூரை சேர்ந்த முனியாண்டி மகன் பிரபு (38) என்று தெரியவந்தது. அவர்களை நேற்று தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
கொலையாளி பாலாஜி அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-
அரும்புஅம்மாளை எனக்கு தெரியும். அவர் நகை அணிந்து தனியாக வசித்து வந்ததால் அவரை கொலை செய்து நகைபறிக்க திட்டமிட்டேன். இதுபற்றி எனது நண்பர் பிரபுவிடம் கூறினேன். அவரும் என்திட்டத்துக்கு ஒப்பு கொண்டதால் இருவரும் சேர்ந்து சம்பவத்தன்று அரும்புஅம்மாள் அணிந்திருந்த நகையை பறித்தோம். அவர் என்னை காட்டி கொடுத்துவிடுவார் என்று எனக்கு அச்சம் ஏற்பட்டதால் வீட்டில் இருந்த குத்துவிளக்கால் அரும்புஅம்மாள் கழுத்தில் குத்தி கொலை செய்தோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #tamilnews
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழி அருகே வெள்ளப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் வினோத் என்கிற வெள்ளப் பள்ளம் வினோத் (வயது 35).
இவர் கடந்த 2012-ம் ஆண்டில் பூம்புகார் மேலையூரில் தி.மு.க. பிரமுகர் முத்து ராஜேந்திரனை நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்த வழக்கு, சென்னையில் பிரபல துணிக்கடையில் கொள்ளையடித்த வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. மேலும் நாகை- கடலூர் மாவட்டங்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் வினோத் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் இருந்து வந்தன.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கொள்ளை வழக்கில் வினோத் ஜாமீன் பெற்றார். அதன்பின்னர் அவர் கோர்ட்டில் அவர் ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டார். இதனால் அவரை போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர்.
இந்த நிலையில் சீர்காழியை சேர்ந்த வெற்றிவேல் என்பவர் சிதம்பரத்தில் இருந்து சீர்காழிக்கு நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது கொள்ளிடம் பாலம் வல்லம்படுக்கை என்ற இடத்தில் வந்த போது அங்கு நின்ற ரவுடி வெள்ளப்பள்ளம் வினோத் , மோட்டார் சைக்கிளை மறித்தார். பின்னர் வெற்றிவேலை தாக்கி அவரிடம் இருந்த ரூ.2 ஆயிரம் , மற்றும் மோட்டார் சைக்கிளை பறித்து கொண்டு தப்பினார்.
இதுபற்றிய கொள்ளிடம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் கொள்ளிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் நாகை- கடலூர் மாவட்ட எல்லையான கொள்ளிடம் பாலத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ரவுடி வெள்ளப்பள்ளம் வினோத், போலீசாரை கண்டதும் தப்பி ஓடினார். இதை கவனித்த போலீசார் அவரை விரட்டி பின்தொடர்ந்தனர்.
இதனால் போலீசாரிடம் இருந்து தப்பிக்க முடியாததால் வினோத், பாலத்தில் இருந்து குதித்தார். ஆற்றில் தண்ணீர் இல்லாததால் கீழே குதித்த வினோத்துக்கு காலில் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து வினோத்தை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி வெள்ளப்பள்ளம் வினோத் என தெரிய வந்தது.
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
சீர்காழி பகுதியில் பிரபல ரவுடி போலீ சாரிடம் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலில் தென்னிந்திய நதிகள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் அய்யாகண்ணு இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தை வறட்சி மாநிலமாக மாற்றி கனிம வளங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யவே மத்திய அரசு காவிரி தண்ணீர் பெற்றுதராமல் உள்ளது.
கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டாமல் மத்திய, மாநில அரசுகள் அலட்சியம் காட்டுகின்றன.
விவசாயிகளை சிறு.குறு விவசாயிகள் என்று பாகுபாடு பார்க்ககூடாது அனைவரும் விவசாயிகள் தான். அனைவருக்கும் விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். வருங்கால சந்ததியை பாதுகாக்க 32 மாவட்டங்களில் 100 நாட்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்படும். ஏழை எளிய மக்கள், மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்டு அரசு பேருந்து கட்டணம் உயர்வை திரும்ப பெற வேண்டும்.
பயிர் காப்பீடு தொகை வழங்குவதை மத்திய அரசு கார்ப்ரேட் நிறுவனத்திடம் கொடுத்ததால் விவசாயிகளுக்கு இதுவரை உரிய இழப்பீடு கிடைக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
மயிலாடுதுறை:
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மணல்மேடு தெற்குகாருகுடி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மனைவி அரும்புஅம்மாள் (வயது75). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் அரும்புஅம்மாள் வீடு திறக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் வசிப்பவர்கள் அவரது வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது கழுத்து அறுபட்ட நிலையில் அரும்புஅம்மாள் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.
இதுகுறித்து அப்பகுதியில் உள்ளவர்கள் மணல்மேடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து சென்ற போலீசார் அரும்புஅம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து மணல்மேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அரும்பு அம்மாள்அணிந்திருந்த 4 பவுன் நகையை கொள்ளையடிக்க கொலை நடந்து இருப்பது தெரியவந்தது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த மருதூர் வடக்கு, வழியான்செட்டிகட்டளை பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 40-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இங்கு மாணவ-மாணவிகளின் குடிநீர் வசதிக்காக பள்ளி வளாகத்தில் ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி வைக்கப்பட்டு உள்ளது. இந்த தொட்டியில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து தண்ணீர் நிரப்பப்படுகிறது.
இந்த நிலையில் பள்ளி மாணவர்கள் நேற்று காலை தண்ணீர் குடிப்பதற்காக சென்றனர். அப்போது ஒருவித துர்நாற்றத்துடன், நிறம் மாறிய நிலையில் தண்ணீர் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் இதுகுறித்து ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். பின்னர் ஆசிரியர்கள், கரியாப்பட்டினம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் கிடைத்ததும் போலீசார் உடனடியாக அந்த பள்ளிக்கு விரைந்து சென்று குடிநீர் தொட்டியை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மர்ம கும்பல், குடிநீர் தொட்டியில் விஷத்தை கலந்து இருப்பது தெரிய வந்தது. உடனடியாக வேதாரண்யத்தில் இருந்து டாக்டர்கள் குழு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அந்த குடிநீரை பரிசோதனை செய்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குடிநீர் தொட்டியில் விஷத்தை கலந்த மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.
பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியில் விஷம் கலந்த சம்பவத்தால் அந்த பகுதியே பரபரப்புக்குள்ளானது. #tamilnews
சீர்காழி:
சீர்காழி அடுத்த கதிராமங்கலம் ஊராட்சி கொண்டத்தூர் கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு மேல்நிலை நீர்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் குடிநீர் தேக்கதொட்டியில் உள்ள மின்மோட்டார் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பழுது ஏற்பட்டு சீரமைக்கப்படாததால் அப்பகுதியில் குடிநீர் தட்டுபாடு நிலவியது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சீர்காழி- மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த வைத்தீஸ்வரன் கோவில் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதன்பேரில் மறியல் விலக்கி கொள்ளப்பட்டது. இதனால் அப்பகுதியில் அரைமணி நேரம் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது.
நாகை:
திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா சேங்காளிபுரம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது40). இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தை விட்டு பிரிந்து நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் தங்கி அங்குள்ள தனியார் விடுதிகளுக்கு சுற்றுலா பயணிகளை அழைத்து செல்லும் ஏஜெண்டாக இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று கடற்கரை அருகே உள்ள ஒரு தனியார் விடுதி அறையில் ஓய்வெடுப்பதாக சுரேஷ் கூறிவிட்டு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் விடுதி ஊழியர்கள் அந்த அறைக்கு சென்று பார்த்தபோது அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கி உள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வேளாங்கண்ணி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுரேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் கடந்த ஆண்டு சம்பா சாகுபடிக்கு காவிரி நீர் உரிய நேரத்தில் கிடைக்காததால் பயிர்கள் கருகி விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
கடை மடை பகுதியான வேதாரண்யத்தை அடுத்த கத்திரிபுலம் பகுதி விவசாயிகளும் வறட்சியால் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்பட்டது. ஆனால் கத்திரிப்புலம் பகுதி விவசாயிகளுக்கு இன்னும் பயிர் காப்பீட்டு தொகை வழங்கவில்லை.
எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகள் கத்திரிப் புலத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். 35-வது நாளான நேற்று விவசாயிகள் துண்டை விரித்து பிச்சை எடுக்கும் நூதன போராட்டம் நடத்தினர். இதில் வட்டார விவசாய சங்க தலைவர் ராஜன் தலைமையில் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இன்று விவசாயிகள் 36-வது நாளான பேராட்டத்தில் ஈடுப்பட்டனர். அவர்கள் உடனடியாக பயிர் காப்பிட்டு தொகை வழங்க மத்திய-மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். #tamilnews






