என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    வருகிற 20-ந் தேதிக்குள் நாகை மாவட்டம் முழுவதும் மின் வினியோகம் வழங்கப்படும் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியுள்ளார். #Gajastorm

    வேதாரண்யம்:

    கஜா புயலால் நாகை மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இங்கு ஒரு மாதமாகியும் மின் இணைப்பு பெறமுடியாமல் பல கிராமங்கள் உள்ளன. புயலில் பல்லாயிரக்கணக்கான மின்கம்பங்கள் சாய்ந்து விட்டதால் அவைகளை சரிசெய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மின் மாற்றிகளும் சேதமானதால் திருவாரூர் மாவட்ட மின் மாற்றி மூலம் பிராந்தியக்கரை, மூலக்கரை ஆகிய இடங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மின் இணைப்பு வழங்குவது தொடர்பாக வேதாரண்யத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வேதாரண்யம் தாலுகாவில் புயலால் விழுந்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் 4300 பேர் ஈடுபட்டுள்ளனர். 6 மின் மாற்றிகள் நாளை முதல் செயல்பட தொடங்கும். இதைத்தொடர்ந்து திருவாரூர் மாவட்ட மின் மாற்றியில் இருந்து மின் சாரம் பெறும் பிராந்தியக்கரை, மூலக்கரை பகுதிகளுக்கும் நாகை மாவட்ட மின் மாற்றி மூலம் மின்சாரம் வினியோகிக்கப்படும்.

    வருகிற 20-ந் தேதிக்குள் நாகை மாவட்டம் முழுவதும் மின் வினியோகம் வழங்கப்படும். படகு மூலம் வண்டல், அவரிகாடு பகுதிகளுக்கு செல்ல வேண்டி இருப்பதால் அங்கு பூமிக்கடியில் கேபிள் அமைத்து மின்சாரம் வழங்க மின்துறை அமைச்சர் மூலம நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது உயர் அழுத்த மின் சம்பவங்களுக்கு மின் இணைப்பு வழங்கும் பணி நிறைவடைந்து விட்டது.

    இவ்வாறு அவர் கூறினார். #Gajastorm

    புதிய புயல் உருவாக உள்ளதன் எதிரொலியாக நேற்று நாகை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
    நாகப்பட்டினம்:

    கடந்த மாதம் 16-ந்தேதி அதிகாலையில் வேதாரண்யம் அருகே கஜா புயல் கரையை கடந்தது. இந்த புயலால் நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டன. மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. வீடுகள் சேதம் அடைந்தன. தமிழக அரசு சார்பில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் டெல்டா மாவட்டங்களில் இயல்பு நிலை திரும்பி வருகிறது.இந்த நிலையில் தென் கிழக்கு வங்கக்கடலில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டிருந்தது. தற்போது தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, புயலாக உருவாகும் என்றும், வட தமிழக கடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

    புதிய புயல் உருவாக உள்ளதால் மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவர்களை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.மேலும், கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்களையும் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    புயல் காரணமாக நாகை துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நேற்று முன்தினம் ஏற்றப்பட்டது. புதிய புயல் எதிரொலியாக நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, சாமந்தான்பேட்டை, செருதூர், காமேஸ்வரம், விழுந்தமாவடி ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களும் கரை திரும்பி வந்து கொண்டிருக்கின்றனர். மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் தங்களது படகுகளை நாகை கடுவையாற்று பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.
    வேதாரண்யம் அருகே சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் காவல் சரகம், வாய்மேடு காவல் நிலையத்தில் தனிப்பிரிவு சப்இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சந்திரமோகன். இவரது சொந்த ஊர் தேத்தாகுடி ஆகும்.

    இவர் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்ற போது குரவப்புலம் சித்தி விநாயகர் கோவில் அருகே ரோட்டில் நின்றிருந்த 2 பேர் அவரை வழிமறித்து தகராறு செய்தனராம். மேலும் அவர்கள் தங்களது மோட்டார் சைக்கிளால் மோதி சிமெண்ட் ஓட்டால் அவரை தாக்கினார்களாம்.

    இதில் படுகாயமடைந்து சந்திரமோகனை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய சத்தியசீலன், சிவராஜன் ஆகிய 2 பேரை தேடி வருகிறார்கள். #tamilnews
    நாகையில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள விசைப்படகை மர்ம கும்பல் தீ வைத்து கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை கடுவையாற்று பகுதியில் மீன்பிடி படகுகளுக்கான கட்டுமான தளம் அமைந்துள்ளது.

    இங்கு நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்த சந்திரன் என்பவருக்கு சொந்தமான புதிய விசைப்படகு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த படகு நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென தீப்பிடித்து எரிந்தது.

    அப்போது அந்த வழியாக சென்ற மீனவர்கள் சிலர் படகு ஒன்று தீப்பிடித்து எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக நாகை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற தீயணைப்பு படை வீரர்கள் படகில் பற்றிய தீயை அணைத்தனர்.

    ஆனால் படகு முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. படகின் மேற்கூரை, படகில் இருந்த வலைகள் உள்ளிட்ட மீன்பிடி தளவாடங்கள், ஐஸ் பெட்டி என அனைத்தும் தீயில் கருகி நாசமானது. இதன் சேத மதிப்பு ரூ.30 லட்சம் ஆகும்.

    இதுகுறித்து நாகை டவுன் போலீசார் விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில், மீன்பிடி படகிற்கு மர்ம நபர்கள் தீ வைத்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து படகிற்கு தீ வைத்த மர்ம நபர்கள் யார்? எதற்காக தீ வைத்தார்கள்? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். கஜா புயலால் ஏற்கனவே படகுகள் சேதமான நிலையில் மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர். இந்த நிலையில் விசைப்படகை மர்ம கும்பல் தீ வைத்து கொளுத்திய சம்பவம் நாகையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நாகை துறைமுகத்தில் தற்போது 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வானிலை மையம் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து மீனவர்கள் நேற்று முதல் கரை திரும்பி வருகின்றனர். #Stormwarning
    நாகப்பட்டினம்:

    வங்கக்கடலில் இன்று (14-ந்தேதி) புதிய புயல் உருவாகி உள்ளது.

    இதனால் தமிழக கடலோர மாவட்டங்களில் நாளையும், நாளை மறுநாளும் கனமழை பெய்யும் என்றும், எனவே 15, 16 ஆகிய நாட்களில் தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவேண்டாம். ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் உடனே கரைக்கு திரும்பவேண்டும். வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.

    மேலும் இந்த புயல் ஆந்திரா நோக்கி நகர்ந்து வருவதாகவும், அப்போது 50 முதல் 75 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்றும் தெரிவித்துள்ளது.

    இதையொட்டி நாகை துறைமுகத்தில் தற்போது 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வானிலை மையம் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து ஆழ்கடல் சென்று மீன் பிடித்த நாகை மீனவர்கள் நேற்று முதல் கரை திரும்பி வருகின்றனர்.

    புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட பொதுமக்களும், விவசாயிகளும், மீனவர்களும் புதிய புயல் என்ன சேதத்தை ஏற்படுத்துமோ? என்ற கலக்கத்தில் உள்ளனர். இதையொட்டி நாகை மாவட்ட புயல் பாதுகாப்பு மையங்களில் பொதுமக்கள் தங்க மாவட்ட நிர்வாகம் தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது. #Stormwarning

    புயலால் வீடு சேதமடைந்ததால் வேதாரண்யம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள மணியன்தீவு கிராமத்தை சேர்ந்தவர் ராசு (வயது48). விவசாயி. இவருடைய மனைவி சுமதி (40). இவர்கள் கூரை வீட்டில் வசித்து வந்தனர். இந்த கூரை வீடு, கஜா புயலினால் சேதமானது.

    இதனால் ராசு, தனது வீட்டின் மீது தார்ப்பாயை போட்டு மூடி, குடும்பத்துடன் குடியிருந்து வந்தார்.

    புயலால் வீடு சேதமாகி விட்டதே என்ற மனவேதனையுடன் ராசு இருந்து வந்தார். இதுபற்றி அவர் தனது உறவினர்களிடம் வருத்தமாக கூறியுள்ளார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று ராசு விஷத்தை குடித்தார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    நேற்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அவருடைய மனைவி சுமதி, வேதாரண்யம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகவேலு, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அகோரம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புயலில் வீடு சேதமடைந்ததால் ஏற்பட்ட மன வேதனையில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ராசுவுக்கு 4 மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    கஜா புயலால் கோடியக்காடு வன விலங்குகள் சரணாலயத்தில் 373 பறவைகள், 18 மான்கள் உயிரிழந்திருப்பது முதல் கட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. #GajaCyclone
    நாகப்பட்டினம்:

    கஜா புயலால் நாகை மாவட்டத்தில் வேதாரண்யம், தலைஞாயிறு ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வேதாரண்யம் அருகே கோடியக்காட்டில் உள்ள வன விலங்குள் சரணாலயத்தில் இருந்த ஆயிரக்கணக்கான மரங்கள் புயல் காற்றில் வேரோடு சாய்ந்தன.

    கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மரக்குவியல்களாகவே காணப்பட்டன. இதனால் வன விலங்குகளின் கதி என்ன ஆனது என்று வனவிலங்கு ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வந்தனர்.

    இந்நிலையில் மாவட்ட வன உயிரின காப்பாளர் நாகசதீஷ் கிடிசாலா தலைமையில் வனத்துறை ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    இதுகுறித்து வனச்சரகர் கிருஷ்ணமூர்த்தி கூறியபோது,



    கஜா புயல் தாக்கத்தில் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. புயலால் 17 வெளிமான்களும், ஒரு புள்ளி மானும், 4 பன்றிகளும், 373 பறவைகளும் உயிரிழந்திருப்பது முதல் கட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. கணக்கெடுப்பு பணி இன்னும் ஒருவாரத்தில் நிறைவடையும், அப்போது இறந்த விலங்குகள், பறவைகள் குறித்த முழுமையான விவரம் தெரியவரும் என்றார்.

    பொலிவிழந்த நிலையில் உள்ள கோடியக்காட்டில் முன்புபோல் மரங்கள், மூலிகைச் செடிகளை நட்டுப் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். #GajaCyclone

    மயிலாடுதுறை அருகே செங்கல் சூளைகளுக்கு மணல் எடுப்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள பனம்பள்ளி கிராமத்தில்  திருவாவடுதுறை ஆதீனம் மாயூரநாதர் ஆலயத்திற்கு சொந்தமான 45 ஏக்கர் திடலில் 10-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகளுக்கு அனுமதியின்றி பலர் எடுத்து வந்தனர். இதற்காக 30அடி வரை பள்ளம் தோண்டி மணலை அள்ளி விற்பனை செய்து வந்தனர்.

    இதை தட்டிக்கேட்ட கிராம மக்களுக்குக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இப்பகுதியில் அரசு அனுமதியின்றி 42 செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றன. 10 அடியில் நல்ல தண்ணீர் கிடைத்துவந்த நிலை மாறி தற்போது நிலத்தடி நீர்மட்டம் 50 அடிக்கும் கீழ் சென்றுவிட்டது. இதனை கண்டித்து மணல் திருட்டு நடைபெறும் இடத்தில் 30 அடி ஆழத்தில் இறங்கி அப்பகுதியில் வசிக்கும் மக்கள் போராட்டம் நடத்தினர்.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மயிலாடுதுறை தாசில்தார் விஜயராகவன் பனம்பள்ளி கிராமத்திற்கு சென்று அரசு அனுமதியின்றி செங்கல் சூளையும், மணல் குவாரியும் நடத்திவந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.  அப்போது அங்கு திரண்ட   கிராம மக்கள் அனைத்து பள்ளங்களையும் மூடி சமன்செய்து தரவேண்டும், மணல் எடுக்க அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தி உளுத்துக்குப்பை என்ற இடத்தில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இப்போராட்டத்தின் போது சிலர் மண்எண்ணையை உடலில் ஊற்றி தீவைத்து கொள்ள முயன்றனர். அவர்களை சப்-இன்ஸ்பெக்டர் பாபுராஜ் தடுத்து அப்புறப்படுத்தினார். சம்பவ இடத்துக்கு மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் டில்லிபாபு மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதைத்தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். #tamilnews
    நூறு நாள் வேலை வாய்ப்பில் தென்னங்கீற்றுகளை முடைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு முடைந்த கீற்றுகள் அதிமுக சார்பில் விலைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் கஜா புயலினால் ஆயிரக்கணக்கான வீடுகளும் பல்லாயிரக்கணக்கான தென்னை மரங்களும் சாய்ந்தன. பலத்த சேதமடைந்த வேதாரண்யம் பகுதியில் தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்து விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    புயலில் சாய்ந்த தென்னை மரங்களை வெட்டி புதிதாக தென்னங்கன்றுகளை நடுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் தென்னந்தோப்பில் ஏராளமான தென்னை மட்டைகள் விழுந்து வீணாகிக் கொண்டிருக்கிறது. இவற்றை பார்வையிட்ட அமைச்சர் ஒ.எஸ்.மணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வேதாரண்யம் பகுதியில் புயலால் பாதித்த கூரை வீடுகளுக்கு வெளி மாவட்டங்களிலிருந்து சுமார் 6 லட்சம் கீற்றுகள் அரசு மூலம் வாங்கப்பட்டு பொது மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. சுமார் 36 ஆயிரம் குடிசை வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதால் இவற்றை சரிசெய்ய வெளி மாவட்டங்களிலிருந்து கீற்றை கொண்டுவருவதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.

    எனவே நூறு நாள் வேலை வாய்ப்பில் தென்னங்கீற்றுகளை முடைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு முடைந்த கீற்றுகளை நூறு கீற்றுகள் ரூ.800க்கு அ.தி.மு.க. சார்பில் விலைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

    கஜா புயல் பாதித்த கோடியக்கரைக்கு நூறு சதவீதம் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மற்ற 35 ஊராட்சிகளுக்கு படிப்படியாக மின்சாரம் வழங்கப்படும். 35 ஊராட்சிகளிலும் மின் விநியோகத்தை சீர்செய்ய 3 அதிகாரிகள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது மின்சாரம் கிடைக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

    புயல் பாதித்த 181 வருவாய் கிராமங்களில் 105 வருவாய் கிராமங்களுக்கு வங்கி கணக்கில் ரூ.10 ஆயிரம் வரவு வைக்கப்பட்டுள்ளது. மீதி உள்ள வருவாய் கிராமங்களுக்கு இன்று வரவு வைக்கப்படும்.

    இந்த தொகை வரவு வைக்கப்பட்ட உடன் முகாமில் தங்கி இருந்தவர்களுக்கு வாழ்வாதாரத்தொகையாக ரூ.5 ஆயிரம் உடனடியாக வரவு வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட சென்ற அமைச்சர் ஓ.எஸ்.மணியனை வெட்ட அரிவாளுடன் ஒரு வாலிபர் பாயும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #GajaCyclone #OSManian
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் புயலால் சேதமடைந்த பகுதிகளை கடந்த மாதம் 18-ந்தேதி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பார்வையிட சென்றபோது அவரது காரை சிலர் வழிமறித்து அடித்து நொறுக்கினர்.

    இதுகுறித்து கீழையூர் போலீசார் விசாரணை நடத்தி மனோகரன்(வயது 53), கவியரசன்(30), ராமச்சந்திரன்(30) ஆகிய 3 பேரை கைது செய்தனர். நேற்று வீரசேகரன்(30), அவரது தம்பி பன்னீர்செல்வம்(29) ஆகிய 2 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


    இந்த நிலையில் அமைச்சர் சென்ற காரை சிலர் வழிமறித்து தாக்குவதும், அமைச்சரின் காரை நோக்கி ஒரு வாலிபர் அரிவாளால் வெட்ட பாய்ந்து செல்வது போலவும் சமூக வலைதளங்களில் வீடியோ காட்சி வேகமாக பரவி வருகிறது.

    அந்த சமயத்தில் அமைச்சரின் கார் வேகமாக பின்னோக்கி சென்றதால், அவர்கள் அமைச்சர் காருடன் வந்த மற்றொரு காரை அடித்து நொறுக்குவது போலவும் காட்சிகள் உள்ளன. இந்த வீடியோ காட்சி தற்போது நாகை மாவட்ட மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #GajaCyclone #OSManian
    நாகை மாவட்டம் கொள்ளிடம் கடை வீதியில் மழை நீர் தேங்கி கிடப்பதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
    சீர்காழி:

    நாகை மாவட்டம் கொள்ளிடம் கடை வீதியின் மையப்பகுதியில் சீர்காழியிலிருந்து சிதம்பரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மழை பெய்யும் போது 20 மீட்டர் தூரத்திற்கு மழை நீர் தேங்கி விடுகிறது. இந்த மழை நீர் வடிய குறைந்த பட்சம் 3 அல்லது 4 நாட்கள் ஆகிறது. 

    சாதாரணமாக குறைந்த அளவு மழை பெய்தாலும் சாலையின் நடுவே தண்ணீர் தேங்கி விடுகிறது. ஒரு பகுதி பள்ளமாக இருப்பதால் சாலையில் தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வருகிறது. சாலையில் தண்ணீர் தொடர்ந்து தேங்கி வருவதால் வாகனங்கள் செல்லும் போதும், சாலையோரத்தில் நடந்து செல்லும்போதும், சகதியுடன் சேர்ந்த தண்ணீர் படுவதால் சாலையில் செல்வோர் பாதிக்கப்படுகின்றனர். தொடர்ந்து தண்ணீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றமும் வீசுகிறது. 

    இதனால் கடை வியாபாரிகள் சிரமம் அடைகின்றனர். எனவே கொள்ளிடத்தின் மையப்பகுதியில் பள்ளமாக உள்ள தேசிய நெடுஞ்சாலையை சரிபடுத்தவும் தண்ணீரை உடனடியாக வடியவைக்கவும் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  
    வேதாரண்யம் அருகே கார்- அரசு பஸ் மோதிய விபத்தில் பள்ளி மாணவன் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் இருந்து நாகையை நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டு இருந்தது. இந்த பஸ்சை வாய்மேட்டை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 45) என்பவர் ஓட்டி சென்றார். தோப்புத்துறையை சேர்ந்தவர் விஜயகுமார் (45). இவர் தனது காரில் செந்தில்குமார் என்பவருடன் நாகையில் இருந்து வேதாரண்யத்தை நோக்கி சென்று கொண்டு இருந்தார். வேதாரண்யம் - நாகை மெயின்ரோட்டில் தேத்தாகுடி வடக்கு புதுரோடு அருகே கார் சென்று கொண்டு இருந்தது. அப்போது வேதாரண்யத்தில் இருந்து நாகையை நோக்கி வந்த அரசு பஸ் மீது கார் மோதியது. இதில் பஸ்சின் பக்கவாட்டு பகுதி சேதமடைந்தது. கார் அருகில் உள்ள வாய்க்காலில் விழுந்தது.

    இந்த விபத்தில் விஜயகுமார், செந்தில்குமார், பஸ்சில் பயணம் செய்த தாமரைப்புலத்தை சேர்ந்த பள்ளி மாணவன் அரவிந்த் (15), வேதாரண்யம் காந்தி நகரை சேர்ந்த நதியா (24) ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    இவர்கள் 4 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் விஜயகுமார், செந்தில்குமார் ஆகிய 2 பேரும் மேல் சிகிச்சைக்காக திருவாரூரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து அரசு பஸ் டிரைவர் ராமச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ×