என் மலர்
நாகப்பட்டினம்
நாகப்பட்டினம்:
வங்கக் கடலில் உருவான கஜா புயல் கடந்த மாதம் 16-ந்தேதி வேதாரண்யம் அருகே கரையைக் கடந்த போது டெல்டா மாவட்டங்களை மிகக்கடுமையாக சேதப்படுத்தியது.நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களிலும் மக்களின் வாழ்வாதாரங்கள் அழிந்தன. புயல் சீற்றத்தில் சிக்கி 63 பேர் உயிரிழந்தனர்.
டெல்டா மாவட்டங்களில் சுமார் 88 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் இருந்த நெற்பயிர்கள், தென்னை, வாழை மரங்கள் முற்றிலுமாக அழிந்தன. அதுபோல சுமார் 57 ஆயிரம் குடிசை வீடுகளும் சேதம் அடைந்தன. 21 ஆயிரம் மின் கம்பங்கள் சரிந்தன.
வீடுகளை இழந்த சுமார் 2½ லட்சம் பேர் நிவாரண முகாம்களில் நீண்ட நாட்கள் தங்கும் நிலை ஏற்பட்டது. இயல்பு வாழ்க்கையை முற்றிலும் இழந்த டெல்டா மக்கள், தற்போது தான் மெல்ல, மெல்ல மீண்டு வருகிறார்கள். வாழ்வாதாரங்களை இழந்த மக்களுக்கு நிதி உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை காரிகாடு கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்ற கூலித் தொழிலாளிக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகனுக்கு திருமணம் ஆகி விட்டது. அவரது இரண்டாவது மகன் பெரமையா. இவனுக்கு 12 வயதாகிறது.
தினமும் கூலி வேலை செய்து பிழைத்து வந்த நிலையில் மாரிமுத்துவின் குடிசை வீடு, கஜா புயலால் முற்றிலும் அழிந்து போனது. புதிய குடிசை வீடு கட்ட அவருக்கு 10 ஆயிரம் ரூபாய் தேவைப்பட்டது. அடகு வைத்து பணம் புரட்டவும் அவரிடம் எதுவும் இல்லை.
மகன் மட்டுமே இருந்த நிலையில், அவனை தற்காலிகமாக விற்று பணம் பெற ஏழை தினக்கூலித் தொழிலாளியான மாரிமுத்து முடிவு செய்தார். அதன்படி 3 வாரங்களுக்கு முன்பு 12 வயது மகனை 10 ஆயிரம் ரூபாய்க்கு பேரம் பேசி ஒரு பண்ணைத் தோட்டத்து முதலாளியிடம் விற்று விட்டார்.
நாகை மாவட்டத்தில் பனங்குடி என்ற கிராமத்தில் ரெட்டி திருவாசல் தெருவைச் சேர்ந்த பண்ணைத் தோட்டத்து உரிமையாளர் சந்துரு என்பவர் அந்த சிறுவனை வாங்கி இருந்தார். அந்த சிறுவனை அவர் பண்ணைத் தோட்டத்து வேலைகளில் ஈடுபடுத்தினார். கொத்தடிமை போல் அந்த சிறுவன் வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
தோட்ட வேலைகளில் ஈடுபடுத்தப்படுவதற்கு மட்டுமின்றி ஆடு மேய்க்கும் வேலையிலும் அந்த சிறுவன் ஈடுபடுத்தப்பட்டான்.
இந்த நிலையில் பனங்குடி பண்ணையில் 12 வயது சிறுவன் கொத்தடிமை போல வேலையில் உள்ளதாக சிறுவர்கள் நல அதிகாரிகளுக்கு 1908 என்ற இலவச தொலைபேசி மூலம் புகார் வந்தது. இதையடுத்து கடந்த 22-ந்தேதி மாவட்ட அரசு அதிகாரிகளும், சைல்டு லைன் உறுப்பினர்களும் அந்த பண்ணைத் தோட்டத்துக்கு சென்று அதிரடி ஆய்வு செய்தனர்.
அப்போது 12 வயது சிறுவன் பெரமையா கொத்தடிமை போல இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. உடனடியாக அந்த சிறுவனை அதிகாரிகள் மீட்டனர். பிறகு அந்த சிறுவன் நாகை உதவிக் கலெக்டர் கமல்கிஷோர் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டான்.
அங்கு அவனிடம் வருவாய் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது கஜா புயலால் ஏற்பட்ட வாழ்வாதார இழப்பு சோகம் காரணமாக அந்த சிறுவனை அவனது பெற்றோரே விலை பேசி விற்று விட்ட அவலம் நடந்து இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த சிறுவன் நாகையில் உள்ள சிறுவர்கள் மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டான். கடந்த திங்கட்கிழமை அந்த சிறுவனை விடுவிப்பதற்கான சான்றிதழை நாகை உதவி கலெக்டர் அமல்கிஷோர் வழங்கினார்.
இதைத் தொடர்ந்து அந்த சிறுவன் தஞ்சை மாவட்டத்துக்கு அழைத்து வரப்பட்டான். அங்கு அவன் சிறுவர்கள் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப் பட்டுள்ளான்.
இதற்கிடையே ஏழ்மையைப் பயன்படுத்தி அந்த சிறுவனை விலைக்கு வாங்கியது குறித்து நாகை மாவட்ட போலீசார் விசாரணை நடத்தினார்கள். ரூ.10 ஆயிரம் கொடுத்து வாங்கிய பண்ணைத் தோட்ட உரிமையாளர் சந்துரு மீது நாகூர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொத்தடிமை தொழிலாளர்கள் சட்டம்-1976ன் கீழ் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக அந்த சிறுவனின் தந்தையிடமும் அரசு அதிகாரிகளும், போலீசாரும் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது மாரிமுத்து கூறுகையில், “கஜா புயலால் எங்கள் வீடு தரைமட்டமாகி விட்டது. அதை பழுது பார்க்க எங்களிடம் எந்த பணமும் இல்லை.
வயல்களிலும் வேலை வாய்ப்பு இல்லை. எனவே தான் இந்த முடிவு எடுக்க வேண்டியதாகி விட்டது. எனது மகனை அனுப்ப வேண்டிய நிர்பந்தத்தால் இதை செய்தேன்” என்றார். #GajaCyclone
நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள தொடுவாய் சுனாமி நகரை சேர்ந்தவர் உதயகுமார். மீனவர். இவரது மனைவி சகுந்தலா வள்ளி (வயது 26). இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. ரோகித் (6) மற்றும் ரசித் (2) என்ற 2 ஆண் மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் சகுந்தலாவள்ளி 3-வது முறையாக கர்ப்பம் ஆனார். 8 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
நேற்று மாலை சகுந்தலா வள்ளியின் மாமியார் ராஜவள்ளி அங்கு வந்தார். அவர் மருமகள் சகுந்தலா வள்ளியிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்கிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் சகுந்தலாவள்ளி மனம் உடைந்தார். கர்ப்பிணி என்று பாராமல் தன்னுடன் மாமியார் தகராறு செய்கிறாரே என்று விரக்தி அடைந்தார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார். வலி தாங்க முடியாமல் அலறினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். உடல்கருகிய நிலையில் இருந்த சகுந்தலா வள்ளியை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவர் திருவாரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிரமாக சிகிச்சை அளித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த சகுந்தலாவள்ளியின் உறவினர்கள் அங்கு திரண்டனர்.
இந்த நிலையில் இன்று காலை சகுந்தலாவள்ளிக்கு பிரசவ வலி ஏற்பட்டு வலியால் துடித்தார். இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். அறுவை சிகிச்சை செய்து பெண் குழந்தையை வெளியே எடுத்தனர். ஆனால் குழந்தை இறந்து பிறந்தது. இதை பார்த்த அவரது உறவினர்கள் கதறி அழுதனர். தொடர்ந்து சகுந்தலாவள்ளிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்து சீர்காழி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வருகின்றனர்.
கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கடலுக்கு அடியில் பயங்கர பூகம்பம் காரணமாக சுனாமி என்னும் ஆழிப்பேரவை எழுந்தது. இதனால் இந்தோனேசியா, இந்தியா, இலங்கை, மியான்மர் உள்பட பல்வேறு நாடுகளில் கடற்கரை பகுதிகளை வாரி சுருட்டின. இதில் மொத்தம் 2½ லட்சம் பேர் பலியானார்கள்.
தமிழகத்தில் சுனாமி பேரலைக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதில் நாகை மாவட்டத்தில் மட்டும் 6 ஆயிரத்து 65 பேர் இறந்தனர். மீனவர்களின் படகுகள் தூக்கி வீசப்பட்டு கடும் சேதமானது.
இறந்தவர்களின் உடல்களை புதைக்க போதிய இடம் இல்லாததால் ஒரே குழிக்குள் 25 உடல்கள் வரை புதைக்கப்பட்டன சுனாமியில் உருக்குலைந்த நாகை மாவட்டம் மீண்டு வர பல மாதங்கள் ஆனது.
இந்த கோர சம்பவம் நடந்து இன்றுடன் 14 ஆண்டுகள் ஆகிவிட்டது. சுனாமியால் குழந்தைகளை இழந்த பெற்றோருக்கும், பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கும், மற்றும் உற்றார்-உறவினர்களை இழந்து தவிக்கும் மக்களுக்கும் இன்னும் ஆறாத வடுவாகவே உள்ளது.
சுனாமியின் கோரத்தாண்டவத்தில பலியான வர்களின் நினைவாக நாகை மாவட்டத்தில் உள்ள கடற்கரையோர பகுதிகளில் நினைவிடம் அமைக்கப் பட்டுள்ளது.
நாகை அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார் நகர், வேளாங்கண்ணி, நாகூர் மற்றும் வேதாரண்யம், ஆறுக்காட்டுத்துறை, தரங்கம்பாடி, பூம்புகார், சின்னகுடி, பொறையாறு, சந்திரபாபு ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவ கிராம மக்கள் இன்று சுனாமியால் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
நாகையில், மீனவ கிராமங்களை சேர்ந்த மக்கள், சுமார் 500-க்கும் மேற்பட்டோர் இன்று காலை மவுன ஊர்வலமாக சென்றனர். பின்னர் கடலில், பாலை ஊற்றி, சுனாமியால் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
வேதாரண்யம் அடுத்த ஆறுக்காட்டுத்துறை மீனவர் கிராமத்தில் இன்று 14-ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மீனவ கிராம மக்களுடன் கடலுக்கு சென்று கடலில் பால் ஊற்றி மலர் தூவி வணங்கினார். பின்னர் சுனாமி நினைவிடத்திற்கு வந்து அங்கு மலர் வளையம் வைத்து மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.
நாகை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சுனாமி நினைவு பூங்காவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், கலெக்டர் சுரேஷ்குமார், எஸ்.பி.விஜயகுமார், மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல் நாகை மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவ கிராமங்களில் இன்று பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தியபடி மவுன ஊர்வலம் நடத்தினர். இதில் அரசியல் கட்சியினர், வணிகர் சங்கத்தினர் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர். #Tsunami #MemorialDay
சீர்காழியில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் சார்பில் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கலந்து கொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி டெல்டாவில் பேரழிவை ஏற்படுத்தகூடிய ஹைட்ரோகார்பன், மீத்தேன் எடுக்கும் திட்டத்திற்கு தொடர்ந்து மத்திய அரசு மறைமுகமாக தீவிர முயற்சி எடுப்பது கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே மீத்தேன் திட்டத்திற்கு ஜெயலலிதா தடை விதித்தது போல தற்போதைய முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தடை விதிக்க முன் வரவேண்டும். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து விவசாயிகளை காக்க வேண்டும்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க தமிழக அரசு மறுத்து வருகிறது. பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு கூட முழு நிவாரணம் வழங்காமல் ஏழை மக்களை வஞ்சித்து வருகிறது. அதே போல் தென்னை விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் வழங்காமல் அறிவிக்கப்பட்ட ரூ. 1600 வங்கிகள் மூலம் வழங்கப்படுவதாக கூறி மரம் ஒன்றுக்கு 500 ரூபாய் வீதம் விடுவிக்கப்படுகிறது.
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்க கூடிய நிவாரண தொகையை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மகளிர் குழு கடன், கல்வி கடன், விவசாய கடன், நிலுவை என்று சொல்லி நிவாரண தொகையை அதில் வரவு வைத்துக்கொள்ள முயற்சி செய்கிறார்கள்.
தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய நான்கு மாவட்டங்களில் முதற்கட்ட கணக்கெடுப்பில் 79 லட்சம் தென்னை மரங்கள் விழுந்ததாக கணக்கீடு செய்யப்பட்டது. இந்த 4 மாவட்டங்களோடு தேனி, மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மொத்தம் 49 லட்சம் தென்னை மரங்கள் விழுந்திருப்பதாக பட்டியல் கூறுகிறது. அதற்கான நிவாரணமும் 500 ரூபாய் வீதமே ஏற்றப்படுகிறது. இது மிகப்பெரிய மோசடி நடவடிக்கையாகும். மத்திய அரசு இதுவரை நிவாரணம் கொடுக்கவில்லை. வங்கிகளும் விவசாயிகளுக்கு பெரிய நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதற்கு மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு கடனை மத்திய கால கடனாக மாற்றம் செய்ய கூடாது.
இவ்வாறு பி.ஆர். பாண்டியன் கூறினார். #GajaCyclone #PRPandian
தரங்கம்பாடி:
நாகை மாவட்டம் பொறையார் வள்ளுவ தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 42). அதே பகுதயை சேர்ந்தவர் சின்னத்துரை. இவர்கள் இருவரும் காரைக்காலில் உள்ள ஓ.என்ஜி.சி. நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகின்றனர்.
நேற்று இவர்கள் வழக்கம் போல் பணிக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் பொறையாரை நோக்கி வந்து கொண்டு இருந்தனர். அவர்கள் பொறையார் ராஜீவ்புரம் என்ற இடத்தில் வந்தபோது அந்த வழியாக வந்த புதுச்சேரி அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். காயமடைந்த சின்னதுரையை பொறையாறு போலீசார் மீட்டு காரைககால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து பொறையார் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
குத்தாலம்:
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் நினைவஞ்சலி நிகழ்ச்சி, வி.ஜி.கே.மணிகண்டன் தலைமையில் இன்று மதியம் நடைபெற்றது. இதில் ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் காடுவெட்டி குருவின் தாயார் கல்யாணி அம்மாள், மகன் கனலரசன், தங்கை செல்வி, மருமகன் மனோஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக காடுவெட்டியின் தாயார் கல்யாணி அம்மாள் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மயிலாடுதுறையில் நடைபெறுகிற படத்திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளோம். குருவின் மறைவுக்கு பிறகு அவருக்கு மணிமண்டபம் கட்டித்தருகிறேன் என்று சொன்னார்கள். எங்களுக்கு உள்ள ரூ.1½ கோடி கடனை அடைத்து விட்டு மணிமண்டபம் கட்டுங்கள் என்று சொன்னோம். ஆனால் கடனை அடைக்காமல், ஆட்களை வைத்து எங்களை தாக்கி விட்டனர். எனது மருமகளை எங்களிடமிருந்து பிரித்துவிட்டனர். ஊரில் சிலர் எங்களை மிரட்டி வருகின்றனர். இப்போது கட்சிக்கும் (பா.ம.க.) எங்களுக்கும் எந்த தொடர்புமில்லை. கட்சியுடனான தொடர்பு எனது மகனுடன் முடிந்துவிட்டது. கட்சியில் சேர்ந்ததால் தான் எனது மகன் உயிருக்கே ஆபத்து வந்தது. சரியான வைத்தியம் செய்திருந்தால் குருவை காப்பாற்றி இருக்கலாம். மருத்துவமனையில் ரூ.35 லட்சம் செலவு செய்து சிகிச்சை அளித்தார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #kaduvettiguru #pmk
மயிலாடுதுறை:
நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த திருஇந்தளூர், பொட்ட வெளிபகுதியில் உள்ள 3 தெருக்களுக்கு கடந்த 2 மாதமாக குடிநீர் வினியோகிக்கப்பட வில்லை. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வந்தனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் பொட்ட வெளியில் உள்ள பூம்புகார்-கல்லணை சாலையில் இன்று காலை மறியலில் ஈடுபட்டனர்.
அவர்கள் காலி குடங்களுடன் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் டெல்லி பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி அனைவருக்கும் குடிநீர் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.
அதனை ஏற்று பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மயிலாடுதுறை தர்மபுரம் ஆதீனம் மகளிர் கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.ஏ., படிப்பவர்கள் மஞ்சு, விவேகா, முதலாம் ஆண்டு படித்துவந்தவர் சிவப்பிரியா. இவர்கள் 3 பேரும் தனது தோழிகள் உட்பட 7 பேர் இன்று காலை பூம்புகார் கடற்கரைக்கு சுற்றுலா சென்றனர்.

இதை கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து சேற்றில் சிக்கிய 3 மாணவிகள் உடலையும் மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பூம்புகார் போலீசார் 3 மாணவிகள் உடலையும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
காவிரி கடலோடு கலக்கும் இடத்தில் சேறுடன் கூடிய புதைமணல் அதிகம் இருப்பதால் அங்கு பொதுமக்கள் இறங்கி குளிக்கக்கூடாது என்ற அறிவிப்பு பலகையை போலீசார் அங்கு வைத்திருந்தனர். ஆனால் கல்லூரி மாணவிகள் இதனை கவனிக்காமல் இறங்கி குளித்ததால் பரிதாபமாக பலியானது தெரியவந்தது.
கல்லூரி மாணவிகள் கடலில் குளித்தபோது இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. #Poompuharbeach
தென்கிழக்கு வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை சென்னைக்கு தென்கிழக்கே பெயிட்டி புயல் நிலைக்கொண்டு ஆந்திராவை நோக்கி நகர்ந்து வருகிறது.
ஆந்திர மாநிலம் காக்கிநாடா இடையே இன்று (17-ந் தேதி) பிற்பகலில் கரையை கடக்கிறது.
இதன் காரணமாக கடலோர மாவட்டங்களான நாகை, தஞ்சையில் சில இடங்களில் பலத்த காற்று வீசி வருகிறது. நாகையில் கடல் அலைகளின் சீற்றம் ஆக்ரோஷத்துடன் உள்ளது. கடல் அலை சுமார் 3 மீட்டர் வரை உயரே எழும்புகிறது. கடலோர பகுதிகளில் காற்றும் வீசி வருவதால் நாகை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
இன்று 4-வது நாளாக நாகை, நாகூர், நம்பியார் நகர், அக்கரைபேட்டை, கீச்சாங்குப்பம், வேளாங்கண்ணி, செருதூர், விழுந்தமாவடி, வேதாரண்யம், கோடியக்கரை, வெள்ளப்பள்ளம், புஷ்பவனம், பழையாறு துறைமுகம், புதுப்பட்டினம் ஆகிய பகுதிகளில் உள்ள 4-வது நாளாக 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வருமானத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
தஞ்சை மாவட்டத்தில் கஜா புயலால் சேதமான படகுகளால் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு செல்வது இல்லை. சேது பாவாசத்திரம், மல்லிப்பட்டினம் ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் மீனவர்கள் இன்று 4-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை.






