search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிவாரண தொகையை விவசாயிகளின் வங்கி கடன்களில் வரவு வைப்பதா?- பிஆர் பாண்டியன் கண்டனம்
    X

    நிவாரண தொகையை விவசாயிகளின் வங்கி கடன்களில் வரவு வைப்பதா?- பிஆர் பாண்டியன் கண்டனம்

    கஜா புயல் இழப்பீட்டு நிவாரண தொகையை விவசாயிகளின் வங்கி கடன்களில் வரவு வைக்க முயற்சிப்பதற்கு பி.ஆர்.பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார். #GajaCyclone #PRPandian
    சீர்காழி:

    சீர்காழியில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் சார்பில் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கலந்து கொண்டார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரி டெல்டாவில் பேரழிவை ஏற்படுத்தகூடிய ஹைட்ரோகார்பன், மீத்தேன் எடுக்கும் திட்டத்திற்கு தொடர்ந்து மத்திய அரசு மறைமுகமாக தீவிர முயற்சி எடுப்பது கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே மீத்தேன் திட்டத்திற்கு ஜெயலலிதா தடை விதித்தது போல தற்போதைய முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தடை விதிக்க முன் வரவேண்டும். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து விவசாயிகளை காக்க வேண்டும்.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க தமிழக அரசு மறுத்து வருகிறது. பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு கூட முழு நிவாரணம் வழங்காமல் ஏழை மக்களை வஞ்சித்து வருகிறது. அதே போல் தென்னை விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் வழங்காமல் அறிவிக்கப்பட்ட ரூ. 1600 வங்கிகள் மூலம் வழங்கப்படுவதாக கூறி மரம் ஒன்றுக்கு 500 ரூபாய் வீதம் விடுவிக்கப்படுகிறது.

    கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்க கூடிய நிவாரண தொகையை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மகளிர் குழு கடன், கல்வி கடன், விவசாய கடன், நிலுவை என்று சொல்லி நிவாரண தொகையை அதில் வரவு வைத்துக்கொள்ள முயற்சி செய்கிறார்கள்.

    தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய நான்கு மாவட்டங்களில் முதற்கட்ட கணக்கெடுப்பில் 79 லட்சம் தென்னை மரங்கள் விழுந்ததாக கணக்கீடு செய்யப்பட்டது. இந்த 4 மாவட்டங்களோடு தேனி, மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மொத்தம் 49 லட்சம் தென்னை மரங்கள் விழுந்திருப்பதாக பட்டியல் கூறுகிறது. அதற்கான நிவாரணமும் 500 ரூபாய் வீதமே ஏற்றப்படுகிறது. இது மிகப்பெரிய மோசடி நடவடிக்கையாகும். மத்திய அரசு இதுவரை நிவாரணம் கொடுக்கவில்லை. வங்கிகளும் விவசாயிகளுக்கு பெரிய நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதற்கு மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு கடனை மத்திய கால கடனாக மாற்றம் செய்ய கூடாது.

    இவ்வாறு பி.ஆர். பாண்டியன் கூறினார். #GajaCyclone #PRPandian
    Next Story
    ×