search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுனாமி 14-ம் ஆண்டு நினைவு தினம்: நாகையில் மீனவ கிராம மக்கள் மவுன ஊர்வலம்-அஞ்சலி
    X

    சுனாமி 14-ம் ஆண்டு நினைவு தினம்: நாகையில் மீனவ கிராம மக்கள் மவுன ஊர்வலம்-அஞ்சலி

    சுனாமி 14-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மீனவ கிராம மக்களுடன் சென்று கடலில் பால் ஊற்றி மலர் தூவி வணங்கினார். #Tsunami #MemorialDay
    நாகப்பட்டினம்:

    கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கடலுக்கு அடியில் பயங்கர பூகம்பம் காரணமாக சுனாமி என்னும் ஆழிப்பேரவை எழுந்தது. இதனால் இந்தோனேசியா, இந்தியா, இலங்கை, மியான்மர் உள்பட பல்வேறு நாடுகளில் கடற்கரை பகுதிகளை வாரி சுருட்டின. இதில் மொத்தம் 2½ லட்சம் பேர் பலியானார்கள்.

    தமிழகத்தில் சுனாமி பேரலைக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதில் நாகை மாவட்டத்தில் மட்டும் 6 ஆயிரத்து 65 பேர் இறந்தனர். மீனவர்களின் படகுகள் தூக்கி வீசப்பட்டு கடும் சேதமானது.

    இறந்தவர்களின் உடல்களை புதைக்க போதிய இடம் இல்லாததால் ஒரே குழிக்குள் 25 உடல்கள் வரை புதைக்கப்பட்டன சுனாமியில் உருக்குலைந்த நாகை மாவட்டம் மீண்டு வர பல மாதங்கள் ஆனது.

    இந்த கோர சம்பவம் நடந்து இன்றுடன் 14 ஆண்டுகள் ஆகிவிட்டது. சுனாமியால் குழந்தைகளை இழந்த பெற்றோருக்கும், பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கும், மற்றும் உற்றார்-உறவினர்களை இழந்து தவிக்கும் மக்களுக்கும் இன்னும் ஆறாத வடுவாகவே உள்ளது.

    சுனாமியின் கோரத்தாண்டவத்தில பலியான வர்களின் நினைவாக நாகை மாவட்டத்தில் உள்ள கடற்கரையோர பகுதிகளில் நினைவிடம் அமைக்கப் பட்டுள்ளது.

    நாகை அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார் நகர், வேளாங்கண்ணி, நாகூர் மற்றும் வேதாரண்யம், ஆறுக்காட்டுத்துறை, தரங்கம்பாடி, பூம்புகார், சின்னகுடி, பொறையாறு, சந்திரபாபு ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவ கிராம மக்கள் இன்று சுனாமியால் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    நாகையில், மீனவ கிராமங்களை சேர்ந்த மக்கள், சுமார் 500-க்கும் மேற்பட்டோர் இன்று காலை மவுன ஊர்வலமாக சென்றனர். பின்னர் கடலில், பாலை ஊற்றி, சுனாமியால் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    வேதாரண்யம் அடுத்த ஆறுக்காட்டுத்துறை மீனவர் கிராமத்தில் இன்று 14-ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

    இதையொட்டி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மீனவ கிராம மக்களுடன் கடலுக்கு சென்று கடலில் பால் ஊற்றி மலர் தூவி வணங்கினார். பின்னர் சுனாமி நினைவிடத்திற்கு வந்து அங்கு மலர் வளையம் வைத்து மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.

    நாகை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சுனாமி நினைவு பூங்காவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், கலெக்டர் சுரேஷ்குமார், எஸ்.பி.விஜயகுமார், மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    இதேபோல் நாகை மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவ கிராமங்களில் இன்று பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தியபடி மவுன ஊர்வலம் நடத்தினர். இதில் அரசியல் கட்சியினர், வணிகர் சங்கத்தினர் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.  #Tsunami #MemorialDay
    Next Story
    ×