என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    விநாயகர் கோவிலில் கொள்ளையடித்த மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் சீர்காழி மெயின் ரோட்டில் வள்ளாலகரம் வெங்கடேசா நகரில் செல்வ விநாயகர் கோவில் அமைந்துள்ளது.

    இக்கோவிலுக்கு இன்று காலை அதே பகுதியை சேர்ந்த சோமு பிள்ளை என்பவர் வந்தார். அப்போது கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் விநாயகர் சிலையில் இருந்த வெள்ளி கீரிடமும் திருட்டு போய் இருந்தது.

    உடனே இதுபற்றி அவர் மயிலாடுதுறை போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து கோவிலில் விசாரணை நடத்தினர்.

    நள்ளிரவில் மர்ம கும்பல் கோவிலுக்குள் புகுந்து கொள்ளையடித்து விட்டு சென்றது தெரிய வந்தது. திருட்டு போன வெள்ளி கீரிடம் 820 கிராம் ஆகும்.

    கோவில் உண்டியலில் சுமார் ரூ.10 ஆயிரத்துக்கும் மேல் காணிக்கை பணம் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    விநாயகர் கோவிலில் கொள்ளையடித்த மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சாராயம்-மதுபாட்டில்கள் கடத்திய 2 பெண்கள் உள்பட 23 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரில், மது மற்றும் சாராயம் கடத்தலை தடுக்கும் வகையில் தனிப்படையினர் பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நாகூரை அடுத்த மேலவாஞ்சூர் சோதனைசாவடி அருகே போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது காரைக்கால் பகுதியில் இருந்து புதுச்சேரி மாநில சாராயம் கடத்தி வந்த செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த முத்துபிள்ளை மனைவி ராஜம் (வயது 45), அதே பகுதியை சேர்ந்த செல்லப்பாண்டி மனைவி சத்யா (31) ஆகியோரை கைது செய்தனர். இதேபோல், வெளிப்பாளையம், தெற்கு நல்லியான்தோட்டம், செல்லூர், கீழ்வேளூர், மயிலாடுதுறை சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அதில் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயம் கடத்தி வந்த 21 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஆயிரத்து 925 லிட்டர் சாராயமும், 481 மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 1 மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 
    தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சுரேஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    நாகப்பட்டினம்:

    நாகை கடைவீதியில் உள்ள வணிக வளாகங்கள், சில்லறை விற்பனை கடைகள், உணவகங்கள், பேக்கரிகள், பழக்கடைகள், அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் கலெக்டர் சுரேஷ்குமார் நேரில் சென்று பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    இதை தொடர்ந்து கலெக்டர் சுரேஷ்குமார் கூறியதாவது:-

    நாகை மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 11 ஊராட்சி ஒன்றியங்கள், 8 பேருராட்சிகளில் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பயன்படுத்துவதனால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும்.

    தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோர் மீதும், விற்பனை செய்யும் வணிக நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். 

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து, பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வணிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் கலெக்டர் வழங்கினார். இந்த ஆய்வின் போது, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ராமசுப்பு, உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன், நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், நாகை தாசில்தார் இளங்கோவன் மற்றும் அதிகாரிகள், வணிகர்கள், பொதுமக்கள் பலர் உடன் இருந்தனர்.
    சீர்காழி அருகே சாலையின் குறுக்கே மதுபாட்டில்களை தொங்கவிட்டு கள்ளச் சாராய விற்பனைக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    சீர்காழி:

    நாகை மாவட்டம், சீர்காழி அருகே வேட்டங்குடி மற்றும் வேட்டங்குடி ஊராட்சியை சேர்ந்த வாடி, வேம்படி, இருவக்கொல்லை ஆகிய கிராமங்களில் இரவும் பகலும் தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் மதுபிரியர்கள் வெளியூர்களில் இருந்து வந்து மதுபாட்டில்களை வாங்கி வருகின்றனர். 

    மதுபாட்டில்கள் முக்கிய பொது இடங்களான பள்ளி, மற்றும் ஆரம்ப சுகாதாரநிலைய கட்டிடம் உள்ளிட்ட இடங்களில் விற்கப்படுவதால் ஊர் பொதுமக்கள் அச்சத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர்.

    அப்பகுதியில் விற்கப்படும் மதுபாட்டில்கள் போலி மதுபாட்டில்கள் என்று கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இதனை கண்டித்து வேட்டங்குடி ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் மற்றும் சாலையின் குறுக்கே மதுபாட்டில்கள் மற்றும் கருப்பு துணி ஆகியவைகளை தோரணமாக கட்டி தொங்கவிட்டு பொதுமக்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குத்தாலம் அருகே விவசாயி வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குத்தாலம்:

    குத்தாலம் அருகே உள்ள கோவில்குத்தி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். (வயது 60) விவசாயி. இவர் நேற்று காலை தன் வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவியுடன் கடலூர் சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    வீட்டில் இருந்த இரண்டு பீரோவை திறந்து அதில் இருந்த 8 பவுன் நகை, ரூ.3 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பி ஓடிவிட்டனர். கொள்ளைபோனவற்றின் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.

    இந்த நிலையில் இரவு வீட்டிற்கு வந்த செல்வராஜ் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் எல்லாம் சிதறி கிடந்தன. வீட்டுக்குள் புகுந்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் குத்தாலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். வீட்டில் பதிவான கைரேகைகளை சேகரித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பொறையாறு அருகே கடத்தல் தங்கத்தை பங்கு போட முயன்ற போலீசார் 3 பேரை சஸ்பெண்டு செய்து நாகை மாவட்ட எஸ்.பி. விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார். #Smugglinggold
    பொறையாறு:

    இலங்கையில் இருந்து வேதாரண்யம் வழியாக சென்னைக்கு அரசு பஸ்சில் தங்கம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு கடந்த 1-ந் தேதி ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனால் அன்று மதியம் 1 மணியளவில் நாகை மாவட்டம் பொறையாறு அடுத்த நண்டாலார் சோதனை சாவடியில் பொறையாறு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சீர்காழி மதுவிலக்கு பிரிவு போலீஸ்காரர் ஜெயபால், வைத்தீஸ்வரன் கோவில் போலீஸ்காரர் விஜயகுமார் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு அரசு பஸ்சை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் பஸ்சில் ஒரு பை இருந்தது. இந்த பையை போலீசார் யாருடையது? என்று கேட்டனர். ஆனால் யாரும் உரிமை கோரவில்லை.

    இதனால் போலீசார் 3 பேரும் , அந்த பையை சோதனை செய்தபோது அதில் 3 கிலோ எடை கொண்ட தங்க கட்டிகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே பையை பறிமுதல் செய்துகொண்டு எடுத்து சென்றனர்.

    இதற்கிடையே சுமார் ஒரு மணி நேரம் கழித்து ஒரு காரில் 3 பேர், சோதனை சாவடிக்கு வந்தனர். அவர்கள் அங்கு பணியில் இருந்த ஜெயபால், சீனிவாசன், சதீஷ் ஆகியோர் கடத்தல் தங்கத்தை எங்களிடம் கொடுத்து விடுங்கள். நாங்கள் உங்களுக்கு ரூ.20 லட்சம் தருகிறோம் என்று தெரிவித்தனர்.

    ஆனால் போலீசார் 3 பேரும், கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்யவில்லை என்று மறுத்து விட்டனர். இதை கேட்டு காரில் வந்த 3 பேரும் திரும்பி சென்று விட்டனர்.

    இந்த நிலையில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாருக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய ஒரு நபர், அரசு பஸ்சில் வந்த ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கத்தை போலீசார் 3 பேரும் பறிமுதல் செய்து பங்குப்போட்டு கொண்டு விட்டனர் என்று கூறினார்.

    இதையடுத்து சீர்காழி டி.எஸ்.பி. சேகர் தலைமையில் போலீசார் விரைந்து நண்டாலார் சோதனை சாவடிக்கு சென்று அங்கு இருந்த சீனிவாசன், ஜெயபால், சதீசிடம் விசாரித்தனர். அப்போது அவர்கள் கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்யவில்லை என்று மறுத்தனர்.

    பின்னர் நாகை எஸ்.பி. விஜயகுமார் நேரிடையாக 3 போலீசாரிடம் விசாரணை நடத்தினார். இதையடுத்து 3 போலீசாரும், கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்ததை ஒப்புக்கொண்டனர். 3 பேரும் தங்கத்தை விற்று பங்கு போட முடிவு செய்திருந்ததையும் தெரிவித்தனர். சோதனை சாவடி அருகில் உள்ள ஒரு புளிய மரத்தில் குழிதோண்டி புதைத்து இருப்பதையும் தெரிவித்தனர்.

    இதையடுத்து கடத்தல் தங்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கடத்தல் தங்கத்திற்கு பேரம் பேச வந்த 3 பேர் காரில் தப்பி சென்று விட்டதால் அவர்களை தேடும் பணியில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதற்கிடையே கடத்தல் தங்கத்தை பங்கு போட முயன்ற போலீசார் ஜெயபால், சீனிவாசன், சதீஸ் ஆகிய 3 பேரையும் சஸ்பெண்டு செய்து நாகை மாவட்ட எஸ்.பி. விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார்.

    கடத்தல் தங்கத்தை பதுக்கிய சம்பவத்தில் 3 போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்ட விவகாரம் நாகை மாவட்ட போலீசார் மத்தியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. #Smugglinggold

    கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்காததை கண்டித்து நாகையில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். #GajaStorm
    நாகப்பட்டினம்:

    நாகையில் கடந்த 22-ந்தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்ட மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டி தர மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவிக்கப்பட்டது.

    அதன்படி நேற்று காலை நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், அனைத்திந்திய விவசாய தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட சங்கத்தை சேர்ந்தவர்கள் நாகை - நாகூர் மெயின் ரோட்டில் சாலையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில துணை தலைவர் அமிர்தம், அனைத்திந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநில துணை தலைவர் ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் நாகை மாலி, நகர செயலாளர் பெரியசாமி உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

    போராட்டத்தில் கஜா புயலால் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள வீடுகளுக்கு ரூ. 50 ஆயிரமும், பகுதியாக பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு ரூ. 25 ஆயிரமும், அனைத்து வீடுகள், நிலங்கள், பயிர்களுக்கு முழுவதுமாக இழப்பீடு வழங்கவேண்டும். கஜா புயல் பாதிப்புகளை கணக்கெடுக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    இந்த காத்திருப்பு போராட்டத்தின் காரணமாக நாகை - நாகூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் கிழக்கு கடற்கரை சாலை வழியாக போக்குவரத்து மாற்றி விடப்பட்டது. #GajaStorm
    திருவாரூர் இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு? என்பது குறித்து மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளர் தமிமூன் அன்சாரி தெரிவித்துள்ளார். #ThiruvarurByElection
    நாகப்பட்டினம்:

    மனிதநேய ஜனநாயகக் கட்சின் பொதுச்செயலாளர் தமிமூன் அன்சாரி எம்.எல்.ஏ. நாகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் லட்சக்கணக்கான மரங்கள் விழுந்து மிகப்பெரிய சுற்று சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    அடுத்த 10 ஆண்டு காலத்தில் இழந்த பசுமையை மீட்கும் நோக்கத்தோடு கஜா புயல் பாதித்த 4 மாவட்டத்திலும் மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் 2019-ம் ஆண்டை பசுமையாண்டு என்று பெயரிட்டு பசுமை திட்டத்தை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 5 லட்சம் மரக்கன்றுகளை 4 மாவட்டத்தில் வினியோகிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    இந்த அறிவிப்பு வந்த நேரத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை நிர்வாகக் குழு கூட்டம் சிவகங்கை மாவட்டம் இளையாங் குடியில்நடைபெற்றது.

    திருவாரூர் சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினோம். திருவாரூர் இடைத்தேர்தலில் எந்த கூட்டணியையும், எந்த கட்சியையும் ஆதரிப்பது இல்லை என்று முடிவு எடுத்திருக்கிறோம்.

    திருவாரூர் இடைத்தேர்தலில் மும்முனை போட்டி தான் இருக்கும். இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுகிறார்களோ, 2-வது இடத்திற்கு யார் வருகிறார்களோ அவர்கள் தான் தமிழக அரசியலில் முக்கிய சக்தியாக திகழ்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #ThiruvarurByElection
    நாகை அருகே குடும்பத்தகராறில் மனைவியை கல்லால் கணவன் அடித்துக்கொலை செய்த சம்பவம், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே எட்டுக்குடி பகுதியை சேர்ந்தவர் ரவி. விவசாயி. இவருடைய மனைவி சித்ரா (வயது 45). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

    சம்பவத்தன்று ரவிக்கும், மனைவி சித்ராவிற்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதில் இருவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த ரவி, அருகில் கிடந்த கல்லை எடுத்து சித்ராவை தலையில் தாக்கினார். இதனால் படுகாயம் அடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சித்ரா பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் திருக்குவளை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ரவியை வலைவீசி தேடி வருகின்றனர்.

    சீர்காழி அருகே பாக்கெட் சாராயம் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சீர்காழி:

    நாகை எஸ்.பி. விஜயக்குமார் உத்தரவின் பேரில் திருவெண்காடு இன்ஸ்பெக்டர் வேலுதேவி, தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் சீர்காழி அருகே ஆலங்காடு பகுதியில் வாகனசோதனை மேற்கொண்டனர். அப்போது காரைக்கால் பகுதியிலிருந்து வந்த காரை நிறுத்தி சோதனையிட்ட போது அதில் 200 லிட்டர் சாராயம் பாக்கெட்களில் அடைக்கப்பட்டு கடத்தி வருவது தெரிந்தது. இதையடுத்து சாராயத்தோடு காரையும் பறிமுதல் செய்து காரைக்கால் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (வயது 26) என்பவரை கைது செய்தனர்.

    இதேபோல் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் பெரம்பூர் அருகே வாகனதணிக்கை செய்தபோது மோட்டார் சைக்கிளில் 120லிட்டர் சாராயம் கடத்திவந்த மாங்கா.சண்முகம்(48) என்பவரை கைது செய்தனர்.

    வேதாரண்யம் வனப்பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த வாலிபரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஆயக்காரான்புலம் 2-ம் சேத்தி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 39). இவர் நேற்று இரவு ஆயக்காரங்குடி வனப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் துப்பாக்கியுடன் சுற்றி திரிந்தார்.

    அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட கோடியக்கரை வனவர் சதிஷ்குமார் மற்றும் வனத்துறையினர் ராஜாவை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் அனுமதியின்றி வனப்பகுதியில் சுற்றி திரிந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து நாகை வனஉயிரின பாதுகாப்பாளர் சத்திஷ் கிரிஜலா உத்தரவின்பேரில் ராஜாவை வனத்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர் வேதாரண்யம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    தமிழகத்தில் பிரதமர் மோடிக்கு ஒரு வாக்கு கூட கிடைக்காத நிலையை ஏற்படுத்துவோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். #seeman #pmmodi #gajacyclone

    நாகப்பட்டினம்:

    கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நாம் தமிழர் கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் நாகை அவுரி திடலில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ் தேசிய பேரியக்க தலைவர் மணியரசன் தலைமை தாங்கினார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் மன்சூர்அலிகான், மருது மக்கள் இயக்கம் முத்து பாண்டி, தமிழர் விடுதலை இயக்கம் வினோத், காவிரி உரிமை மீட்புக்குழு மணிமொழியன், தேசிய மீனவர் பேரவை குமரவேலு, தமிழக மீனவர் பெண் தொழிலாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் காளியம்மாள் ரத்தினவேலு உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

    முன்னதாக சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தியாவின் வளமை மற்றும் பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. 4½ லட்சம் மக்கள் தொகை கொண்ட மாலத்தீவுக்கு ரூ.10 ஆயிரம் கோடியை மத்திய அரசு அள்ளி கொடுக்கிறது. சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு ரூ.3 ஆயிரம் கோடி செலவிட்டுள்ளது. கஜா புயல் பாதிப்புக்கு தமிழக அரசு கேட்ட ரூ.15 ஆயிரம் கோடியை மத்திய அரசு முழு மையாக வழங்க மறுக்கிறது.

    தமிழர்களின் வரி வேண்டும். ஆனால் அவர்களின் வாழ்க்கை குறித்து கவலையில்லை. தமிழர்களின் ஓட்டு வேண்டும். ஆனால் அவர்களின் உயிர் குறித்து கவலையில்லை என்ற நிலைப்பாட்டை தான் மத்திய அரசு கொண்டுள்ளது.

    கஜா புயல் பாதிப்பில் ஆறுதல் கூறக்கூட பிரதமர் மோடி வரவில்லை. இந்த நிலையில் அடுத்த மாதம் தமிழகத்துக்கு பிரதமர் மோடி வாக்குகள் கேட்டு வர இருப்பது தமிழர்களை அவமதிக்கும் செயல். மோடிக்கு கருப்புக்கொடி காட்டி, கருப்பு கொடியின் பெருமையை சிதைக்க நாங்கள் விரும்பவில்லை.

    தமிழகத்தில் பிரதமர் மோடிக்கு ஒரு வாக்கு கூட கிடைக்காத நிலையை ஏற்படுத்துவோம்.


    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழ் தேசிய பேரியக்க தலைவர் மணியரசன் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பெரும்பாலான மக்களுக்கு இன்னமும் நிவாரணம் கிடைக்கவில்லை. மத்திய அரசு பாகுபாடு காட்டுகிறது. தமிழக அரசு செயல்படாத அரசாக உள்ளது’ என்றார்.  #seeman #pmmodi #gajacyclone

    ×