என் மலர்
நாகப்பட்டினம்
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா கரியாப்பட்டினத்தில் விவசாயிகள்- வர்த்தகர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழக காவேரி விவசாய சங்க மாநில தலைவர் பி.ஆர். பாண்டியன் கலந்து கொண்டார்.
கூட்டம் முடிந்த பிறகு பி.ஆர்.பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருவாரூர் மாவட்டம் திருகாரவாசல் முதல் நாகை மாவட்டம் கரியாப்பட்டினம் வரை ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஏல அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மக்களுக்கு துளியும் பயன் இல்லாத இந்த திட்டத்தை வருகிற ஜனவரி மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை நடைபெறுகின்ற பாராளுமன்ற கூட்டத்திற்கு முன்பாக மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.
அவ்வாறு செய்யாவிட்டால் ஜனவரி 26-ந் தேதி குடியரசு தினத்தன்று திருவாரூர் மாவட்டம் திருகாரவாசலில் விவசாயிகள், வர்த்தகர்கள், மீனவர்கள் அனைத்து கட்சியினருடன் சேர்ந்து உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். இதற்கு முன்பாக வருகின்ற 22-ந் தேதி விவசாயிகள், மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் இந்த திட்டத்தை எதிர்த்து இரு மாவட்டங்களிலும் பிரச்சாரம் செய்யப்படும்.
மேலும் ஜனவரி 26-ந் தேதி நடைபெறும் கிராம சபா கூட்டங்களில் திட்டம் நடைமுறைப்படுத்த உள்ள கிராமங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #PRPandian
தரங்கம்பாடி:
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே குத்தாலம் தாலுகா அனந்த நல்லூர் கிராமம் பிள்ளையார் கோவில தெருவை சேர்ந்தவர் அறிவழகன் (வயது43). இவர் காணும் பொங்கலையொட்டி அதே தெருவில் அம்பேத்கார் இளைஞரணி சார்பில் விளையாட்டுப் போட்டிகளை நடத்தினார்.
அப்போது பக்கத்து ஊரை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் அங்கு வந்து மைக்கில் தேவையில்லாமல் பேசி சர்ச்சையை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனை அறிவழகன் தட்டிக் கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் வீட்டிற்கு சென்ற செந்தில்குமார் இதுபற்றி கூறி தனது மகன் சரவணன், தனது தம்பி பெரியதுரை, அவரது மகன்கள் யோகி, சின்னத்தம்பி, சரவணன் மற்றும் 10 பேர் கும்பலுடன் அறிவழகன் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கிருந்த அறிவழன், அவரது மனைவி திலகவதி, தாயார் சமுத்திரம் ஆகியோரை அவர்கள் கடுமையாக தாக்கி உள்ளனர். மேலும் அவர்களது கூரை வீட்டையும் தீ வைத்து எரிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் திரண்டு வந்ததால் செந்தில்குமார் தனது கும்பலுடன் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். தாக்குதலில் காயமடைந்த 3 பேரையும் அப்பகுதி மக்கள் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பாலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இருதரப்பினரிடையே அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளதுரை தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் சீர்காழி அருகே நாதல்படுகை கிராமத்தை சேர்ந்தவர் கணேசன்(வயது36). கொத்தனார். இவருக்கும், சட்டநாதபுரத்தை சேர்ந்த ஆண்டாள் மகள் ரம்யாவிற்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு பத்மஸ்ரீ(4) என்ற பெண் குழந்தை உள்ளது. கணேசனுக்கும், ரம்யாவிற்கும் இடையே குடும்ப பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன் ரம்யா தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக கொள்ளிடம் போலீசில் ரம்யாவின் தாயார் ஆண்டாள் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பின்னர் ஜாமீனில் வெளியே வந்த கணேசன், சட்டநாதபுரம் திருமுருகன் காலனியில் உள்ள தனது மாமியார் ஆண்டாள் வீட்டிற்கு அடிக்கடி மது குடித்து விட்டு சென்று தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்றும் ஆண்டாள் வீட்டிற்கு குடித்துவிட்டு கணேசன் வந்ததாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் அவர் பலத்த தீக்காயத்துடன் உயிருக்கு போராடிய நிலையில் அங்கு கிடந்துள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து கணேசனின் தந்தை ராஜேந்திரன் தனது மகன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக சீர்காழி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சிங்கார வேலு, சப்-இன்ஸ்பெக்டர் அங்கப்பன் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வந்தனர்.
இந்நிலையில் சட்டநாதபுரம் வி.ஏ.ஓ.விடம் சென்று ஆண்டாள் தனது உயிருக்கு கணேசனால் ஆபத்து ஏற்பட்டு விடுமோ? என்று பயந்து சம்பவத்தன்று அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக கூறி சரணடைந்தார்.
இதையடுத்து அவரை கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில் தனது மகள் ரம்யா தூக்கு மாட்டி இறந்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த கணேசன் குடித்து விட்டு வந்து அடிக்கடி பணம் கேட்டு மிரட்டி வந்ததாகவும். நேற்று இரவு குடிபோதையில் வந்த கணேசன் பெட்ரோல் மற்றும் கத்தியை எடுத்துவந்து என்னை அடித்து துன்புறுத்தியதோடு என்னையும், எனது பேத்தியையும் கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.
இதனால் பயந்து போன நான் போதையில் மயங்கி கிடந்த கணேசன் மீது அதே பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டு பேத்தியுடன் தப்பிசென்று விட்டேன் என கூறினார்.
மருமகனை மாமியாரே பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த சம்பவம் சீர்காழியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த தாண்டவன் குளத்தை சேர்ந்த பெரியசாமி மகன் அருண், தர்காஸ் பகுதியை சேர்ந்த ஹரி, அவரது தம்பி வெங்கடேசன் உள்பட சிலர் காணும் பொங்கலையொட்டி நேற்று மோட்டார் சைக்கிளில் பழையாறு கடற்கரைக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். அவர்கள் பழையாறு பஸ் நிலையம் அருகே சென்றபோது அப்பகுதயை சேர்ந்த 4 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை மறித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பழையாறு வாலிபர்கள் எதிர்ப்பை மீறி தர்காஸ் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பழையாறு கடற்கரைக்கு சென்று காணும் பொங்கலை கொண்டாடி விட்டு இரவு 7 மணி அளவில் தங்கள் ஊருக்கு புறப்பட்டு பழையாறு பஸ்நிலையம் பகுதிக்கு வந்துள்ளனர். அப்போது பழையாறு பகுதியை சேர்ந்த 4 வாலிபர்களும் மீண்டும் தகராறு செய்து 2 மோட்டார் சைக்கிளையும், ஒரு காரையும் உடைத்ததாக கூறப்படுகிறது. அப்போது இருதரப்பினரும் மோதி கொண்டனர். இதில் அருண் படுகாயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இந்த மோதலில் காயமடைந்த ஹரி, வெங்கடேசன் ஆகிய 2 பேரும் சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் நாகை எஸ்.பி. விஜயகுமார், சீர்காழீ டி.எஸ்.பி. சேகர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இது தொடர்பாக வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் புதுப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதைத் தொடர்ந்து மீனவ கிராமங்களில் மோதலை தடுக்கும் வகையில் 3 இன்ஸ்பெக்டர்கள், 30 போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
2 மீனவ கிராமங்களை சேர்ந்தவர்கள் மோதி கொண்ட சம்பவம் சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகப்பட்டினம்:
ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் லாலுகார்டன் பகுதியை சேர்ந்தவர் இஸ்மாயில். இவர் தனது குடும்பத்தினருடன் காரில் நேற்று நாகை அடுத்த நாகூர் தர்காவுக்கு வழிபாட்டுக்காக வந்திருந்தார்.
இந்த நிலையில் இஸ்மாயில் குடும்பத்தினர் மதியம் கடற்கரையில் உள்ள சில்லடி தர்காவுக்கு சென்று விட்டு கடலில் குளித்துள்ளனர்.
அப்போது கடல் அலையின் சீற்றம் அதிகமாக இருந்தது. இதனால் அலையில் இஸ்மாயில் மகன் சபீர் (15) மூழ்கினார். இதில் அதிர்ச்சி அடைந்த இஸ்மாயில் மற்றும் அவரது குடும்பத்தினர் சத்தம் போட்டு கதறி அழுதனர். இதற்கிடையே கடல் அலையில் சபீர் மூழ்கி பலியான நிலையில் கரையில் உடல் ஒதுங்கியது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் நாகை கடற்கரை போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் சபீர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேதாரண்யம்:
டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்கள் கடந்த நவம்பர் மாதம் 16-ந் தேதி வீசிய கஜா புயலால் பெரும் பாதிப்புக்குள்ளானது.
புயலால் சாய்ந்த மின்கம் பங்களை சீரமைக்கும் பணி நடந்தது. இதில் நகர்ப் புறங்களில் மின் இணைப்பு வழங்கப்பட்டு விட்டது. கிராமப்புறங்களில் மட்டும் இன்னும் 20 சதவீதம் மின் இணைப்பு கொடுக்கப்பட வேண்டியது உள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கத்திரிப்புலத்தில் வயல் பகுதிகளில் மின்கம்பங்களை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கத்தரிப்புலத்தில் வள்ளுவர் சாலை பகுதியில் கஜா புயல் பாதிப்பிற்கு பிறகு தற்போது மின் வினியோகம் அளிப்பதற்கு மின் கம்பங்கள் நடப்படுகின்றன. அவ்வாறு நடப்படும் மின்கம்பங்கள் சாலையோரம் நடாமல் வயல் பகுதிகளில் நடப்பட்டு வருகிறது.
இதனால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக குற்றம் சாட்டினர்.
மேலும் சாலை வழியே மின்கம்பங்களை நட்டு மின்சாரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் வந்தனர்.
ஆனால் வயல்பகுதிகளில் மட்டுமே மின்கம்பங்கள் நடப்பட்டு வந்ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் கத்தரிப்புலம் -பனையடி குத்தகை சாலையில் , புயலால் சாய்ந்த தென்னை மரங்கள் மற்றும் மரங்களை சாலையின் குறுக்கே போட்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தபகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்து கரியாப்பட்டினம் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுபறறி அதிகாரிகளுடன் பேசி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் மறியல் கைவிட்டு கலைந்து சென்றனர்.
சீர்காழி:
சீர்காழி வேளாண்மை உதவி இயக்குனர் பொ.ராஜா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத்திட்டம் விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளிலிருந்து பாதுகாக்கவும்,பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும், அதிநவீன தொழில் நுட்பங்கள் கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ரபி பருவத்தில் சாகுபடி செய்யப்படும் உளுந்து, பாசிப்பயறு, எள்,நிலக்கடலை,கோடை நெல்,தரிசுபருத்தி பயிரை காப்பீடு செய்ய ஒவ்வொரு பயிருக்கும் அறிவிக்கை செய்யப்பட்டுள்ள கிராமங்கள் அறிவிக்கப்பட்டு அரசாணைவெளியிடப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் இத்திட்டம் காப்பீட்டு நிறுவனமான நியூ இந்தியா அஸ்சூரன்ஸ் கம்பெனி மூலம் செயல்படுத்தபட்டு வருகிறது.
இத்திட்டத்தின்கீழ் கடன் பெறும் விவசாயிகள், அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் கட்டாயமாக பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்யப்படுவார்கள்.கடன்பெறா விவசாயிகள் அங்கீகரிக்கப்பட்ட பொது சேவை மையங்கள்,வங்கிகள்,மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாகவோ விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.ஒரு ஏக்கருக்கு பிரிமியம் பயிர் தொகையாக உளுந்துபயிருக்கு ரு.214.50,பாசிப்பயிருக்கு ரூ.214.50,நிலக்கடலைக்கு ரூ.357.00,எள் பயிருக்கு ரூ.180.00 இவற்றிக்கு பிரிமியம் தொகை செலுத்த ஜனவரி 15ம் தேதி கடைசி நாளாகும்.
கோடை நெல் சாகுபடிக்கு ரூ.442.50.கடைசி தேதி பிப்ரவரி 15 மற்றும் பருத்திக்கு ரு.354 கடைசிதேதி மார்ச் 15-ந்தேதி ஆகும். விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம்,கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல் அல்லது உதவி வேளாண்மை அலுவலரால் வழங்கப்படும் சாகுபடி சான்று, வங்கி கணக்குப்புத்தகத்தின் முதல் பக்க நகல்,ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து கட்டணத்தொகையை செலுத்திய பின் அதற்கான ரசீதை பயிர் காப்பீட்டுக் கட்டணம் செலுத்திய இடத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த திருவேள்விக்குடி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் குத்தாலத்தில் அகில உலக திறந்தவெளி மாற்றுமுறை மருத்துவ பல்கலைக்கழகம் என்ற பெயரில் பல்கலைக்கழகம் ஒன்றை கடந்த 9 ஆண்டுகளாக நடத்தி வந்தார்.
தொலைதூர பல்கலைக்கழகம் என்ற பெயரில் இவர் நாடு முழுவதும் ஆயுர்வேதா, சித்தா ஆகிய மருத்துவ துறைகளின் கீழ் சான்றிதழ்கள் அளித்துள்ளார்.
இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளிலும் இருந்து இவரிடம் பணம் கட்டி ஆயிரக்கணக்கானோர் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மருத்துவ பட்டங்களை பெற்றுள்ளனர். இவரிடம் சான்றிதழ் வாங்கிய ஆயிரக்கணக்கானோர், இந்தியா முழுவதும் மாற்றுமுறை மருத்துவராக மருத்துவம் பார்த்து வருகின்றனர்.
இந்தநிலையில் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேர விண்ணப்பங்கள் வரவேற்பதாக இவர் அளித்த விளம்பரம் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்களுக்கு பல்கலைக்கழகம் குறித்து சந்தேகம் எழுந்தது.
இதைத்தொடர்ந்து குத்தாலம் மேலசெட்டித்தெருவில் ஒரு வீட்டில் செயல்பட்ட அந்த பல்கலைக்கழகத்துக்கு அதிகாரிகள் வந்தனர்.

இதைத்தொடர்ந்து அங்கு இருந்த போலி சான்றிதழ்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் குத்தாலம் தாசில்தார் சபீதாதேவி முன்னிலையில் மருத்துவ அதிகாரிகள் போலி பல்கலைக்கழகத்தை மூடி சீல் வைத்தனர்.
இதுபற்றி சுகாதாரத்துறை இணை இயக்குனர் மகேந்திரன் கூறியதாவது:-
இந்த போலி மருத்துவ பல்கலைக்கழகம், மாற்றுமுறை மருத்துவம் என்பதை பதிவு செய்யப்படவில்லை. தமிழகத்தில் வேறு எந்த பல்கலைக்கழகத்திலும் பதிவு செய்யப்படவில்லை. இதுவரை 1000-க்கும் மேற்பட்டோர் போலி சான்றிதழ்களை பெற்று மருத்துவம் பார்த்து வருவதாக தெரிகிறது. இதில் அதிகமாக கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள், சென்னை, மதுரை, தர்மபுரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சென்றுள்ளனர். அவர்களது விவரங்களை அந்தந்த மாவட்டங்களில் உள்ள சுகாதார துறை இணை இயக்குனர்களுக்கு அனுப்பி போலி டாக்டர்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #NagaiFakeUniversity #UniversitySealed
நாகை மாவட்டம் சீர்காழியில் உள்ள 9 ரேசன் கடைகளில் கடந்த 8-ந்தேதி முதல் தமிழக அரசின் பொங்கல் பரிசாக ரூ.1000 மற்றும் சர்க்கரை, பச்சரிசி, கரும்புதுண்டு ஆகியவை வழங்கப்பட்டன. அதேபோல் சீர்காழி ரெயில்வே சாலையில் உள்ள கோயில்பத்து கிளை ரேசன் கடையிலும் மொத்தமுள்ள 1103 குடும்ப அட்டைதாரர்களில் 300அட்டைதாரர்களுக்கு பட்டுவாடா செய்து வழங்கப்பட்டுவிட்டது. மீதமுள்ள குடும்ப அட்டைதாரர்கள் நேற்று காலை 7.30 மணி முதல் பொங்கல் பரிசுப்பொருட்கள் பெற ஆண்கள், பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
கடையில் பொங்கல் பரிசுப்பொருட்களான பச்சரிசி, சர்க்கரை, கரும்புகள் மட்டுமே இருப்பு இருந்தன.கார்டுதாரர்களுக்கு வழங்கவேண்டிய ரூ.1000 பணம் கூட்டுறவு துறையிலிருந்து வழங்கப்படவில்லை. பணம் வந்துவிடும் என பொதுமக்கள் சாப்பிட கூட செல்லாமல் பல மணிநேரம் வரை காத்திருந்தனர். மதியம் 4மணிக்கு பிறகு பணம் வரவில்லை என தெரிந்து பணம் இருப்பு இல்லை என அறிவிப்பு பலகை வைத்துவிட்டு ரேசன்கடை விற்பனையாளர் கடையை மூடி சென்றார். இதனால் பல மணிநேரம் வெயிலில் காத்துகிடந்த பொதுமக்கள் ஆத்திரமடைந்து சீர்காழி-பணங்காட்டாங்குடி பிரதான சாலையில் திடீர் சாலைமறியலில் ஈடுப்பட்டனர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் சீர்காழி இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு, சப்-இன்ஸ்பெக்டர் அங்கப்பன்,தேர்தல் துணை தாசில்தார் வெங்கடேசன் ஆகியோர் பொதுமக்களிடம் பேசி மறியலை கைவிட செய்தனர். தொடர்ந்து மயிலாடுதுறை மத்திய கூட்டுறவு வங்கியிலிருந்து பயனாளிகளுக்கு பணம் பட்டுவாடா செய்திட பணம் எடுத்துக்கொண்டு வருவாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து மீண்டும் பொதுமக்கள் வரிசையில் காத்திருந்தனர்.பின்னர் மாலை 6 மணிக்கு மேல் ரேசன் கடைக்கு பணம்வந்ததையடுத்து கார்டுதாரர்களுக்கு தொடர்ந்து பொங்கல் பரிசு பொருட்கள்,ரூஆயிரம் வழங்கப்பட்டது. #Pongal






