என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    வேதாரண்யத்தில் புயலால் சேதமான தென்னையை அகற்றியபோது மண்ணில் புதைந்து கிடந்த 4 1/2 அடி உயர சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுக்கா செட்டிப்புலம் கிராமத்தில் வசித்து வருபவர் சந்திர சேகரன் (வயது 65). இவரது வீட்டின் பின்புறம் ஏராளமான தென்னை மரங்களை வளர்த்து வந்தார். இந்நிலையில் கஜா புயல் தாக்குதலில் இவரது வீட்டு தென்னை மரங்கள் பல அடியோடு சாய்ந்து சேதமானது.

    இந்நிலையில் அந்த மரங்களை வேருடன் அகற்ற முடிவு செய்து நேற்று அதற்கான பணிகள் நடந்தன. அப்போது ஒரு தென்னை மரத்தை வேருடன் அகற்றியபோது அதன் அடியில் 4 1/2 அடி உயரமுடைய மிக பழமையான சிவலிங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

    இதனையடுத்து அதனை சேதமில்லாமல் முழுமையாக அகற்றி மேல கொண்டுவந்து சுத்தப்படுத்தி வைத்தனர். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு வந்து அந்த சிவலிங்கத்திற்கு மலர்களால் அலங்கரித்து வழிபாடு நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஜாக்டோ- ஜியோ போராட்டத்தை சில அன்னிய சக்திகள் தூண்டி விடுகின்றனர். இந்த போராட்டத்தினை அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார். #arjunsampath #jactogeo #teachersprotest

    சீர்காழி:

    இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் , சீர்காழியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தருமை ஆதீனத்தின் ஆளுகைக்குட்பட்ட செயல் படக்கூடிய திருக்கடையூர், வைத்தீஸ்வரன்கோயில், சீர்காழி சட்டநாதர் கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தாமல் கால தாமதித்து வருவது என்பது பக்தர்களுக்கு வேதனையை ஏற்படுத்தி வருகிறது.

    ஜேக்டோ-ஜியோ அமைப்பு எதிர்க் கட்சிகளால் தூண்டி விடப்பட்டு வருகிறது. ஜேக்டோ ஜியோ அமைப்பு மத்திய, மாநில அரசுகளின் நிர்வாகத்தினை சீர்குலைக்க வேண்டும், மக்களுக்கு அரசாங்கத்தின் எந்த நல்ல திட்டங்களும் சென்றடைய கூடாது என உள்நோக்கத்துடன் ஒரு சில நிர்வாகிகள் செயல்பட்டு வருகின்றனர். ஜேக்டோ- ஜியோ அமைப்பை தடை செய்ய வேண்டும்.

    தேர்வுகள் நெருங்கி வரும் நிலையில் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கக் கூடிய வகையிலும் தேர்தல் வரக்கூடிய இந்த சூழ்நிலையில், கஜா புயல் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகள் மேற்கொள்ளக் கூடிய அவசர கால சூழ்நிலையில் அரசு எந்திரத்தை ஸ்தம்பிக்க வைக்க வேண்டும் என்ற உள் நோக்கத்துடன் இந்த போராட்டம் நடத்திக் கொண்டுள்ளனர். இந்த போராட்டத்தினை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தூண்டி விடுகிறார்.


    ஜேக்டோ- ஜியோ போராட்டத்தினை அரசாங்கம் முடிவுக்கு கொண்டுவர வேண்டும். அரசாங்கம் தற்காலிக ஆசிரியர் பணிகளுக்கு இளைஞர்களை தேர்வு செய்து வருகின்றனர். பொதுமக்கள் மத்தியில் ஜேக்டோ ஜியோ ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு இல்லை. அரசால் நிறைவேற்றவே முடியாத கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தினை தொடர்கிறார்கள். தலைமை செயலக ஊழியர்களையும், போக்குவரத்து ஊழியர்களையும் இந்த போராட்டத்தில் ஈடுபடுத்துவதற்கு எதிர்கட்சிகள், சில அன்னிய சக்திகள் தூண்டி விடுகின்றனர். இந்த போராட்டத்தினை அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்.

    தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மாவட்டந் தோறும் நவோதயா பள்ளிகளை திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும். பொதுமக்களை பாதிக்காத வகையில் கேபிள் டிவி கட்டண உயர்வை ரத்து செய்யவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #arjunsampath  #jactogeo #teachersprotest

    வேதாரண்யம் அருகே குழந்தையை கடத்த முயன்றதாக வாலிபரை தாக்கியதாக 4 பேர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 50). இவரது 2-வது மகள் பிரித்தீகா (4). இவர் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது கோடியக்கரையில் தங்கி மீன்பிடிக்கும் ராமநாபுரம் மாவட்டம் பாம்பன் குத்துக்கால் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் அங்குகுமார் (24) என்பவர் குழந்தையை கடத்தும் நோக்கத்தோடு தூக்கி சென்றதை அக்கம் பக்கத்தினர் பார்த்து துரத்தி உள்ளனர். இதனால் பயந்த அங்குகுமார் குழந்தையை அங்குள்ள புதர் பகுதியில் தூக்கி வீசிவிட்டு தப்பி சென்றுவிட்டார். இதில் லேசான சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்ட குழந்தைக்கு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

    இதுகுறித்து குழந்தையின் தந்தை சிவக்குமார் வேதாரண்யம் போலீசில் புகார் செய்துள்ளார். அதன் பேரில் வேதாரண்யம் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் அங்குகுமாரை தாக்கியதாக கோடியக்கரையை சேர்ந்த சீனிவாசன் என்பவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் குத்துக்கால் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் அங்குகுமார் என்பவர் தன்னிடம் மீன்பிடி தொழில் செய்து வருவதாகவும், சம்பவத்தன்று அவர் சாலையில் நடந்து வந்துகொண்டிருந்தபோது பிரிதீகா என்ற குழந்தை தூக்கி வைத்துக்கொண்டு விபரம் கேட்டுக் கொண்டிருந்துள்ளார்.

    ஆனால் அவர் குழந்தை கடத்த வந்துள்ளார் என கருதி கோடியக்கரையை சேர்ந்த ரெங்கசாமி, பரமானந்தம், சசிக்குமார், மகேந்திரன் ஆகிய 4 பேரும் சேர்ந்து அங்குகுமாரை தரகுறைவாக பேசி கம்பால் தாக்கி கொலைமிரட்டல் விடுத்துள்ளனர்.

    தலையில் படுகாயம் அடைந்த அங்குகுமார் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் என்று கூறியுள்ளார்.

    இதுதொடர்பாகவும் வேதாரண்யம் சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
    வேதாரண்யத்தில் கலப்பு திருமணம் செய்த வாலிபர் குடும்ப தகராறில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன்பள்ளி பூவந்தோப்பை சேர்ந்த சுப்பிரமணியம் மகன் வடிவழகன் (வயது 27). லாரி டிரைவர். இவர் உப்பள தொழிலாளர்கள் குடியிருப்பில் வசித்து வந்தார். இவரது மனைவி சக்திபிரியா. இவர்களுக்கு 1½ வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    வடிவழகனும், சக்தி பிரியாவும் காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டவர்கள்.

    இந்த நிலையில் தனது குடும்பத்தினர் விசே‌ஷத்திற்காக சக்திபிரியா தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார். இதுதொடர்பாக கணவன்- மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு செய்துள்ளனர்.

    இந்த சம்பவத்தில் மனமுடைந்த வடிவழகன் கடந்த 26-ந்தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். இதுபற்றி அறியாத சக்திபிரியா நேற்று இரவு வீட்டுக்கு வந்தார். அப்போது வடிவழகன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து சில நாட்கள் ஆகி விட்டதால் உடல் அழுகி துர்நாற்றம் வீசியது.

    இதுபற்றிய புகாரின் பேரில் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் முருகவேல், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் தமிழரசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    குடும்ப தகராறில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அகஸ்தியன்பள்ளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கஜா புயல் சேதமான படகுகளுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி 75 அடி உயர டவரில் ஏறி வேதாரண்யம் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். #GajaCyclone
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் கடந்த நவம்பர் மாதம் கஜா புயல் கரையை கடந்ததால் கடும் பாதிப்பு ஏற்பட்டது.

    இதில் மீனவர் கிராமங்களில் வீடுகள் சேதமானதுடன், மீன்பிடி படகுகளும் உடைந்து சேதமானது. இதனால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் 75 நாட்களுக்கும் மேலாக மீன்பிடி தொழிலுக்கு செல்லாமல் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர்.

    புயலில் சேதமான படகுகளுக்கு தமிழக அரசு நிவாரண உதவிகளை அறிவித்தது. ஆனால் மீனவர்களுக்கு சேதமான படகுகளுக்கு வழங்க வேண்டிய நிவாரண தொகை இன்னும் பலருக்கு வழங்கப்படாமல் உள்ளது. இதனால் புதிய படகுகள் வாங்கி கடலுக்கு சென்று மீன்பிடிக்க முடியாததால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வறுமையில் வாடி வருகின்றனர்.

    மீனவர்கள் அதிகாரிகளிடம் நிவாரணம் கேட்டு பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் ஆறுக்காட்டுத்துறையை சேர்ந்த 10 மீனவர்கள் இன்று காலை 9 மணியளவில் அங்குள்ள திசைக்காட்டும் கருவிக்கு அமைக்கப்பட்டுள்ள 75 அடி உயர டவரில் ஏறி தங்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். புதிய படகுகள் வாங்க உதவித்தொகை வழங்க வேண்டும். இல்லையேல் டவரில் இருந்துகுதித்து தற்கொலை செய்து கொள்வோம் என்று மிரட்டல் விடுத்தனர்.

    இதுபற்றிய தகவல் பரவியதும் அங்கு ஏராளனமான மீனவர்கள் குவிந்தனர். அவர்களும் போராட்டம் நடத்திய மீனவர்களுக்கு ஆதரவு தெரிவித்து கோ‌ஷம் எழுப்பினர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் டி.எஸ்.பி. ஸ்ரீகாந்த், வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் முருகவேல் மற்றும் தீயணைப்பு துறையினர், கடலோர காவல் குழுமத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீனவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

    மேலும் சம்பவ இடத்திற்கு 108 ஆம்புலன்சு வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் காரணமாக ஆறுக்காட்டுத் துறை மீனவர் கிராமத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.  #GajaCyclone
    மயிலாடுதுறையில் காரில் கடத்தப்பட்ட டிராவல்ஸ் ஏஜெண்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் கிளியனூரை சேர்ந்தவர் முகமது ரபீக் (வயது 55). இவர் வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பும் டிராவல்ஸ் ஏஜெண்டாக இருந்து வந்தார். முகமது ரபீக் பலரிடம் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக பணம் வாங்கியிருந்ததால் பாதிக்கப்பட்ட சிலர் அவரை அடிக்கடி சிறைபிடித்து அவரிடம் கொடுத்த பணத்தை பெற்று செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி கிளியனூரை சேர்ந்த நடராஜன் என்பவருடன் முகமது ரபீக் பஸ்சில் சென்றுள்ளார். அப்போது காரில் வந்த 3 நபர்கள் பஸ்சில் இருந்த முகமது ரபீக்கை கட்டாயப்படுத்தி அழைத்து சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த நடராஜன் இதுபற்றி முகமது ரபீக்கின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

    இதைத் தொடர்ந்து மாயமான முகமது ரபீக்கை அவரது குடும்பத்தினர் பல இடங்களில தேடியும் அவர் எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை. இதற்கிடையே மயிலாடுதுறை அருகே உள்ள கடுவங்குடி மாரியம்மன் கோவில் அருகில் உள்ள குளத்தில் ஒரு ஆண் உடல் அழுகிய நிலையில் கிடப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் மயிலாடுதுறை போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுபற்றிய தகவல் அறிந்த குடும்பத்தினர் குளத்தில் இருந்து மீட்கப்பட்ட உடலை பார்வையிட்டபோது அது முகமது ரபீக் உடல் என்பது தெரியவந்தது. எனவே அவரை காரில் கடத்தி சென்ற மர்ம நபர்கள் அவரை கொலை செய்து மயிலாடுதுறை- மணல்மேடு சாலையோரம் உள்ள கடுவங்குடி மாரியம்மன் கோவில் குளத்தில் வீசி சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    முகமது ரபீக்கிடம் வெளிநாடு செல்ல பணம் கொடுத்து ஏமாந்த நபர்கள் இந்த கொலையை செய்து இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

    டிராவல்ஸ் ஏஜெண்ட் கொலை செய்யப்பட்ட சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    காவிரி படுகை பகுதியில் இருந்து எரிவாயு நிறுவனங்களை வெளியேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேராசிரியர் ஜெயராமன் கூறியுள்ளார். #professorjayaraman #ongc
    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மீத்தேன், ஷேல் கேஸ் எடுக்கும் திட்டங்கள் எதுவும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திடம் இல்லை என்று மேலாளர் மிஸ்ரா  தெரிவிப்பது உண்மைக்கு புறம்பான செயல். அதுபோன்றே எண்ணெய் எரிவாயு எடுப்பதால் எந்த பாதிப்பும் இல்லை என்று அவர் கூறியுள்ளதும் தவறானது.

    தமிழ்நாட்டில் 9 பிளாக்குகளில் ஷேல் கேஸ் எடுக்க ஓ.என்.ஜி.சி. அனுமதி பெற்றது. முதற்கட்ட கிணறுகள் அமைப்பு அனுமதியை 2015 -ம் ஆண்டிலேயே  மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வழங்கியது ஹைட்ரோ கார்பன் திட்டம் என்பது ஷேல் மீத்தேன், ஷேல் ஆயில் உள்ளிட்ட அனைத்து வகை எண்ணை எரிவாயுவை எடுக்கும் திட்டம் ஆகும் . அபாயகர நீரியல் விரிசல் முறையை பயன் படுத்தித்தான் ஹைட்ரோ கார்பன்களை எடுக்க முடியும்.

    முதல் சுற்று ஏலத்தில் காவிரிப் படுகையில் 5094 சதுர கிலோ மீட்டர் பரப்புடைய பெரிய நிலப்பரப்பை மரக்காணம் முதல் வேளாங்கண்ணி வரை ஓ.என்.ஜி.சி. மற்றும்  வேதாந்தா நிறுவனங்கள் ஏலத்தில் எடுத்துள்ளன.  நிலப்பரப்பில் 731 சதுர கிலோ மீட்டர் பரப்பை ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓ.என்.ஜி.சி.யும் மீதியுள்ள ஆழமற்ற கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனமும் உரிமம் பெற்றுள்ளன. இந்த உண்மையை ஓ.என்.ஜி.சி. மறைக்கின்றது. 

    காவிரிப்படுகையில் பெரும் நிலப்பரப்பில் ஷேல் கேஸ் எடுக்க முயற்சி செய்யும் ஓ.என்.ஜி.சி. யை எதிர்த்தும், உள்ளே நுழைய முயற்சிக்கும் தனியார் நிறுவனங்களை எதிர்த்தும் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தொடர்ந்து போராடி வருகிறது. இந்நிலையில் மக்களிடம் கருத்துக் கேட்பே இல்லாமல் எரிவாயுக் கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி. முயற்சிக்கிறது. இதை மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. 

    தமிழக அரசு காவிரிப் படுகையைப் பாதுகாக்கப்பட்ட  வேளாண் மண்டலமாக அறிவித்து, எண்ணை எரிவாயு நிறுவனங்களை வெளியேற்ற வேண்டும். தமிழகத்தின் காவிரிப் படுகை முதல் ராமநாதபுரம் வரை நீரையும் நிலத்தையும் சுற்றுச் சூழலையும் தமிழகத்தின் உணவு உறுதிப் பாட்டையும் காக்க, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #professorjayaraman #ongc
    பிரதமர் மோடியின் மதுரை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரை பேஸ்புக்கில் அவதூறாக சித்தரித்த ம.தி.மு.க. பிரமுகரை போலீசார் கைது செய்தனர். #pmmodi #mdmk

    சீர்காழி:

    மதுரை வரும் பிரதமர் மோடிக்கு ம.தி.மு.க. சார்பில் கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் என வைகோ ஏற்கனவே அறிவித்திருந்தார்.

    இதற்கிடையே பிரதமர் மோடியின் தமிழகம் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேஸ் புக்கில் அவதூறாக கருத்துகளை வெளியிட்ட ம.தி.மு.க. பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த சம்பவம் பற்றி விவரம் வருமாறு:-

    நாகை மாவட்டம் சீர்காழி ஞானசம்பந்தர் தெருவை சேர்ந்தவர் சத்தியராஜ் பாலு (வயது 48). இவர் ம.தி.மு.க. நகர செயலாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில் இவர் பிரதமர் மோடி இன்று மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேக் புக்கில் அவதூறாக கருத்துகளை நேற்று வெளியிட்டு இருந்தார். இதுபற்றி அறிந்த சீர்காழி பா.ஜனதா நகர தலைவர் செல்வம் தலைமையில் இந்து மக்கள் கட்சி, விசுவ இந்து பரிசத் , இந்து முன்னணி அமைப்புகளை சேர்ந்தவர்கள் சீர்காழி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இதையடுத்து சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து ம.தி.மு.க. நகர செயலாளர் சத்தியராஜ் பாலுவை கைது செய்தனர். மேலும் அவர் மீது அவதூறு தகவல் பரப்புவது உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

    பிரதமர் மோடியை விமர்சித்த ம.தி.மு.க. பிரமுகர் கைதான சம்பவம் சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வேதாரண்யம் ஆசிரியர் கொலை வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா புஷ்பவனத்தை சேர்ந்தவர் சண்முகம் மகன் சிவகுமார் (வயது35). திருமணம் ஆகவில்லை. இவர் வெள்ளப்பள்ளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தால் நியமிக்கப்பட்டு ஆசிரியர் பணியாற்றி வந்தார்.

    இவர் கடந்த ஆண்டு ஜனவரி 24-ந்தேதி பள்ளி அருகே உள்ள குளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    இதுபற்றி வேட்டைக்காரனிருப்பு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆசிரியர் சிவகுமாரின் செல்போனில் இருந்த நம்பர்களையும் தொடர்பு கொண்டு விசாரணை செய்தனர். இந்நிலையில் ஆசிரியர் சிவகுமார் கொடுக்கல் வாங்கல் தகராறில் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

    இதையடுத்து இதில் தொடர்புடைய வேதாரண்யம் தாலுக்கா வெள்ளப்பள்ளத்தை சேர்ந்த அகிலன்(40), கார்த்தி(29), கத்தரிப்புலத்தை சேர்ந்த அடைக்கல ராஜ்(23), அய்யப்பன்(22), நாகக் குடையான் ரகுபதி(24) ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி பின்னர் வேதாரண்யம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    குத்தாலத்தில் இன்று காலை நடந்து சென்ற பெண் மீது லாரி மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
    குத்தாலம்:

    குத்தாலம் தாலுக்கா பாலையூர் போலீஸ் சரகம் கங்காதரபுரம் ஊராட்சி திருமங்கலம் பகுதி காளியம்மன் கோவில் அம்மன் தெருவை சேர்ந்தவர் கருணாநிதி. விவசாயி. இவரது மனைவி சுஜாதா (வயது 36) இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இன்று காலை 6.30 மணிக்கு சுஜாதா பால் வாங்குவதற்காக திருமங்கலம் மெயின் ரோட்டில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியே வந்த ஒருலாரி அவர் மீது மோதியதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். 

    ஆனால் மயிலாடுதுறையில் இருந்து 108 ஆம்புலன்ஸ் வர தாமதம் ஆனதால் சுஜாதா சம்பவ இடத்திலேயே பலியானார். 

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 300-க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குத்தாலம் தாசில்தார் சபீதாபீவி, மயிலாடுதுறை டி.எஸ்.பி. அருள்செல்வன், இன்ஸ்பெக்டர்கள் நாகலட்சுமி, நடராஜன், ஹேமாவதி மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
    அப்போது அவர்கள் இப்பகுதியில் வேக தடை அமைக்காததால் விபத்துகளும், உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. மேலும் விபத்து நேரங்களில் மயிலாடுதுறை 108 ஆம்புலன்ஸ் வர தாமதமாவதால் பலர் உயிரிழந்து வருகின்றனர். எனவே உடனடியாக அப்பகுதியில் வேக தடை அமைக்க வேண்டும். இதே பகுதியில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து தாசில்தார் மற்றும் போலீசார் இப்பகுதியில் உடனடியாக வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் அருகில் உள்ள நத்தம்பாடி அரசு சுகாதார மையத்தில் ஒரு 108 ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த  நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததன் பேரில் மறியல் கைவிடப்பட்டது. இந்த மறியல் போராட்டத்தால் கும்பகோணம்- காரைக்கால் வழிதடத்தில் சுமார் 1 1/2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மேலும் பாலையூர் போலீசார் விபத்துக்குறித்து வழக்குப்பதிவு செய்து திருவாரூர் மாவட்டம் சன்னாநல்லூர் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் ராஜேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கஜா புயல் நிவாரணம் வழங்கக்கோரி வேதாரண்யம் அருகே அரசியல் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    வேதாரண்யம்:

    கடந்த நவம்பர் மாதம் 15-ந் தேதி வீசிய கஜா புயலால் நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கடுமையாக பாதிக்கப்பட்டது. பல்வேறு வீடுகள் சேதம் அடைந்தன. புயலால் பாதிக்கப்பட்ட வீடுகள், கால்நடைகளுக்கு இழப்பீடு தொகை மற்றும் நிவாரண பொருட்கள் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட கரியாப்பட்டினம், செட்டிபுலம் கிராமங்களில் சுமார் ஆயிரம் குடும்பத்தினருக்கு அரசு அறிவித்த இழப்பீடு தொகை மற்றும் நிவாரண பொருட்களை இதுவரை வழங்கவில்லை. இதை கண்டித்தும், உடனே புயல் நிவாரணம் வழங்கக்கோரியும் கரியாப்பட்டினம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு பல்வேறு அரசியல் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் வேதாரண்யம் தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் கவிஞர் மாசி, ஒன்றிய அவைத்தலைவர் கிருஷ்ணன், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் சரவணமுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை அமைப்பாளர் நந்தன், தி.மு.க. ஊராட்சி செயலாளர் ஏகாம்பரம் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த வேதாரண்யம் தாசில்தார் இளங்கோவன், வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீகாந்த், வருவாய் ஆய்வாளர் ரமேஷ், கிராம நிர்வாக அலுவலர் ரவிக்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஒருவாரத்துக்குள் விடுப்பட்ட அனைவருக்கும் இழப்பீடு தொகை மற்றும் நிவாரண பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் அனைவரும் கலைந்து சென்றனர். #tamilnews
    செம்பனார்கோவிலில் வேன் கவிழ்ந்த விபத்தில் 20 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தரங்கம்பாடி:

    நாகை மாவட்டம் திருக்கடையூர் கோவிலில் நேற்று திருச்சியை சேர்ந்த மதிவாணன்-ரஞ்சனி ஆகியோரின் 60-ம் கல்யாணம் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக அவரது உறவினர்கள் 19 பேர் ஒரு வேனில் வந்தனர். வேனை திருச்சியை சேர்ந்த டிரைவர் செபஸ்டின்ராஜி என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

    பின்னர் திருமணம் முடிந்து அனைவரும் திருச்சிக்கு வேனில் திரும்பினர். அப்போது செம்பனார் கோவில் பகுதியில் வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த ஒரு வீட்டின் சுவற்றில் மோதி கவிழ்ந்தது. இதில் வேனில் வந்த கரூரை சேர்ந்த கதிர்வேல், இவரது மனைவி கோமதி, திருச்சி காட்டூரை சேர்ந்த பழனிசாமி, இவரது மனைவி சரோஜா, அதே ஊரை சேர்ந்த பழனிவேல், இவரது மனைவி நாகேஸ்வரி, திண்டுக்கல்லை சேர்ந்த உமாதேவி(60), இவரது கணவர் ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டு சுரேஷ், டிரைவர் செபஸ்டின்ராஜி உள்பட 20 பேரும் படுகாயமடைந்தனர்.

    தகவலறிந்து வந்த பொறையார் போலீசார் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த உமாதேவியை(60) திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வைத்தனர்.

    இச்சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
    ×