search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எரிவாயு நிறுவனங்களை வெளியேற்ற அரசு நடவடிக்கை வேண்டும்- பேராசிரியர் ஜெயராமன் பேட்டி
    X

    எரிவாயு நிறுவனங்களை வெளியேற்ற அரசு நடவடிக்கை வேண்டும்- பேராசிரியர் ஜெயராமன் பேட்டி

    காவிரி படுகை பகுதியில் இருந்து எரிவாயு நிறுவனங்களை வெளியேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேராசிரியர் ஜெயராமன் கூறியுள்ளார். #professorjayaraman #ongc
    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மீத்தேன், ஷேல் கேஸ் எடுக்கும் திட்டங்கள் எதுவும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திடம் இல்லை என்று மேலாளர் மிஸ்ரா  தெரிவிப்பது உண்மைக்கு புறம்பான செயல். அதுபோன்றே எண்ணெய் எரிவாயு எடுப்பதால் எந்த பாதிப்பும் இல்லை என்று அவர் கூறியுள்ளதும் தவறானது.

    தமிழ்நாட்டில் 9 பிளாக்குகளில் ஷேல் கேஸ் எடுக்க ஓ.என்.ஜி.சி. அனுமதி பெற்றது. முதற்கட்ட கிணறுகள் அமைப்பு அனுமதியை 2015 -ம் ஆண்டிலேயே  மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வழங்கியது ஹைட்ரோ கார்பன் திட்டம் என்பது ஷேல் மீத்தேன், ஷேல் ஆயில் உள்ளிட்ட அனைத்து வகை எண்ணை எரிவாயுவை எடுக்கும் திட்டம் ஆகும் . அபாயகர நீரியல் விரிசல் முறையை பயன் படுத்தித்தான் ஹைட்ரோ கார்பன்களை எடுக்க முடியும்.

    முதல் சுற்று ஏலத்தில் காவிரிப் படுகையில் 5094 சதுர கிலோ மீட்டர் பரப்புடைய பெரிய நிலப்பரப்பை மரக்காணம் முதல் வேளாங்கண்ணி வரை ஓ.என்.ஜி.சி. மற்றும்  வேதாந்தா நிறுவனங்கள் ஏலத்தில் எடுத்துள்ளன.  நிலப்பரப்பில் 731 சதுர கிலோ மீட்டர் பரப்பை ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓ.என்.ஜி.சி.யும் மீதியுள்ள ஆழமற்ற கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனமும் உரிமம் பெற்றுள்ளன. இந்த உண்மையை ஓ.என்.ஜி.சி. மறைக்கின்றது. 

    காவிரிப்படுகையில் பெரும் நிலப்பரப்பில் ஷேல் கேஸ் எடுக்க முயற்சி செய்யும் ஓ.என்.ஜி.சி. யை எதிர்த்தும், உள்ளே நுழைய முயற்சிக்கும் தனியார் நிறுவனங்களை எதிர்த்தும் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தொடர்ந்து போராடி வருகிறது. இந்நிலையில் மக்களிடம் கருத்துக் கேட்பே இல்லாமல் எரிவாயுக் கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி. முயற்சிக்கிறது. இதை மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. 

    தமிழக அரசு காவிரிப் படுகையைப் பாதுகாக்கப்பட்ட  வேளாண் மண்டலமாக அறிவித்து, எண்ணை எரிவாயு நிறுவனங்களை வெளியேற்ற வேண்டும். தமிழகத்தின் காவிரிப் படுகை முதல் ராமநாதபுரம் வரை நீரையும் நிலத்தையும் சுற்றுச் சூழலையும் தமிழகத்தின் உணவு உறுதிப் பாட்டையும் காக்க, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #professorjayaraman #ongc
    Next Story
    ×