search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மயிலாடுதுறையில் காரில் கடத்தப்பட்ட டிராவல்ஸ் ஏஜெண்டு படுகொலை
    X

    மயிலாடுதுறையில் காரில் கடத்தப்பட்ட டிராவல்ஸ் ஏஜெண்டு படுகொலை

    மயிலாடுதுறையில் காரில் கடத்தப்பட்ட டிராவல்ஸ் ஏஜெண்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் கிளியனூரை சேர்ந்தவர் முகமது ரபீக் (வயது 55). இவர் வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பும் டிராவல்ஸ் ஏஜெண்டாக இருந்து வந்தார். முகமது ரபீக் பலரிடம் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக பணம் வாங்கியிருந்ததால் பாதிக்கப்பட்ட சிலர் அவரை அடிக்கடி சிறைபிடித்து அவரிடம் கொடுத்த பணத்தை பெற்று செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி கிளியனூரை சேர்ந்த நடராஜன் என்பவருடன் முகமது ரபீக் பஸ்சில் சென்றுள்ளார். அப்போது காரில் வந்த 3 நபர்கள் பஸ்சில் இருந்த முகமது ரபீக்கை கட்டாயப்படுத்தி அழைத்து சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த நடராஜன் இதுபற்றி முகமது ரபீக்கின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

    இதைத் தொடர்ந்து மாயமான முகமது ரபீக்கை அவரது குடும்பத்தினர் பல இடங்களில தேடியும் அவர் எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை. இதற்கிடையே மயிலாடுதுறை அருகே உள்ள கடுவங்குடி மாரியம்மன் கோவில் அருகில் உள்ள குளத்தில் ஒரு ஆண் உடல் அழுகிய நிலையில் கிடப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் மயிலாடுதுறை போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுபற்றிய தகவல் அறிந்த குடும்பத்தினர் குளத்தில் இருந்து மீட்கப்பட்ட உடலை பார்வையிட்டபோது அது முகமது ரபீக் உடல் என்பது தெரியவந்தது. எனவே அவரை காரில் கடத்தி சென்ற மர்ம நபர்கள் அவரை கொலை செய்து மயிலாடுதுறை- மணல்மேடு சாலையோரம் உள்ள கடுவங்குடி மாரியம்மன் கோவில் குளத்தில் வீசி சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    முகமது ரபீக்கிடம் வெளிநாடு செல்ல பணம் கொடுத்து ஏமாந்த நபர்கள் இந்த கொலையை செய்து இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

    டிராவல்ஸ் ஏஜெண்ட் கொலை செய்யப்பட்ட சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×