என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    • மயிலாடுதுறையின் மருமகனாக வந்திருந்து நலத்திட்ட உதவிகளை வழங்குவதில் பெருமை.
    • அனைத்து மாவட்டத்திற்கும் சீரான, சமமான திட்டங்களை பார்த்து பார்த்து வழங்கி வருகிறோம்.

    ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் மயிலாடுதுறையில் வீடு வீடாக சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.

    இதையடுத்து மயிலாடுதுறையில் ரூ.48 கோடியில் 47 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கிய வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.113.51 கோடியில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து அவர் பேசியதாவது:

    * மயிலாடுதுறையின் மருமகனாக வந்திருந்து நலத்திட்ட உதவிகளை வழங்குவதில் பெருமை.

    * நேற்று கொட்டும் மழையிலும் மக்கள் என் மீது அன்பு மழை பொழிந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

    * மயிலாடுதுறை மாவட்டத்திற்கு தி.மு.க. ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

    * அனைத்து மாவட்டத்திற்கும் சீரான, சமமான திட்டங்களை பார்த்து பார்த்து வழங்கி வருகிறோம்.

    * மக்களை நேரில் சந்தித்து தேவைகளை உணர்ந்து செயல்படும் அரசாக 4 ஆண்டு திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பா.ம.க. மகளிர் மாநாட்டு பணிகளை ராமதாஸ் ஆய்வு செய்தார்.
    • கோவில் நிதியில் கல்லூரி கட்டுவதில் தவறில்லை.

    மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் நடைபெறும் பா.ம.க. மகளிர் மாநாட்டு பணிகளை ராமதாஸ் ஆய்வு செய்தார். இதன்பின் செய்தியாளர்களிடம் ராமதாஸ் கூறியதாவது:-

    பாட்டாளி மக்கள் கட்சி யாருடன் கூட்டணி வைக்கிறதோ அந்த அணி சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெறும். கோவில் நிதியில் கல்லூரி கட்டுவதில் தவறில்லை என்றார்.

    இதனிடையே, அன்புமணி அப்பா பிள்ளையா? அம்மா பிள்ளையா? என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு இரண்டும் என ராமதாஸ் பதில் அளித்தார்.

    • சிவனை மனித உருவில் பார்க்கும் ஒரே தலமாக இக்கோவில் விளங்குகிறது.
    • இன்று காலை 8-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று, பூர்ணாஹூதி முடிவடைந்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே திருவெண்காடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற பிரம்ம வித்யாம்பிகை உடனுறை சுவேதாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இத்தலம் தேவார பாடல் பெற்ற காவிரி வடகரை தலங்களில் ஒன்றாகும். இங்கு நவகிரகங்களில் ஒன்றான புதன் பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.

    மேலும், இங்கு சிவனின் 5 முகங்களில் ஒன்றான அகோர முகத்தில் இருந்து, தோன்றிய அகோர மூர்த்தி மனித உருவில் அருள்பாலிக்கிறார். சிவனை மனித உருவில் பார்க்கும் ஒரே தலமாக இக்கோவில் விளங்குவது குறிப்பிடத்தக்கது.

    இக்கோவிலில் விநாயகர், முருகர், நடராஜர், அகோர மூர்த்தி, புதன், சுவேத மகாகாளி மற்றும் சவுபாக்கிய துர்க்கை உள்ளிட்ட சன்னதிகள் அமைந்துள்ளன. இங்கு சந்திர, சூரிய மற்றும் அக்னி ஆகிய பெயர்களில் 3 குளங்களும் உள்ளன. மேலும் பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன. தற்போது பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று காலை கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.

    முன்னதாக கடந்த 3-ந் தேதி பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றது. பின்னர், கோவில் வளாகத்தில் 109 குண்டங்களுடன் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்த யாகசாலை மண்டபத்தில் முதற்கால யாகசாலை பூஜை தொடங்கியது. சோமசுந்தர சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்ற யாகசாலை பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து, 4-ந்தேதி 2 மற்றும் 3-ம் கால யாகசாலை பூஜையும், 5-ந்தேதி 4 மற்றும் 5-ம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்று, பூர்ணாஹூதி நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. முறையே நேற்று 6 மற்றும் 7-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

    பின்னர், இன்று காலை 8-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று, பூர்ணாஹூதி முடிவடைந்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்கள் மேளதாளம் முழங்க கோவிலை சுற்றி வலம் வந்து காலை 5.30 மணிக்கு கோவிலில் உள்ள அனைத்து பரிவார சன்னதி விமான கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு, பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.

    அதனைத் தொடர்ந்து, காலை 9 மணிக்கு ராஜகோபுரம் உள்ளிட்ட 4 கோபுரங்கள் சுவேதராண்யேஸ்வரர் சுவாமி, பிரம்ம வித்யாம்பிகை அம்பாள், புதன் பகவான், அகோர மூர்த்தி உள்ளிட்ட சுவாமி சன்னதி விமான கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், சுதா எம்.பி., எம்.எல்.ஏக்கள் பன்னீர்செல்வம், நிவேதா முருகன், ராஜகுமார், தமிழ் சங்க தலைவர் மார்கோனி இமயவரம்பன், தி.மு.க. பிரமுகர் முத்து. தேவேந்திரன், மாருதி பில்டர்ஸ் அகோரம் உள்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு 'ஓம் நமசிவாய.. ஓம் நமசிவாய...' எனும் பக்தி கோஷம் முழங்க தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்கள் மீது ட்ரோன் மூலம் புனிதநீர் தெளிக்கப்பட்டது.

    பாதுகாப்பு பணியில் மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் மேற்பார்வையில், 3 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 5 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு இருந்தனர். மேலும், திருவெண்காடு ஊராட்சி சார்பில் 4 வீதிகளிலும் மினி குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. அதேபோல், தற்காலிக கழிவறை வசதியும், சுகாதார துறை சார்பில் மருத்துவ குழுவினர்கள் முகாமும் அமைக்கப்பட்டு இருந்தது. பக்தர்கள் வசதிக்காக கோவிலுக்கு சிறப்பு பஸ்களும் விடப்பட்டு இருந்தன.

    கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் நகரமே விழாக்கோலம் பூண்டது.

    • மலைக்கோவிலில் உள்ள சட்டநாதர் சுவாமிக்கு புனுகு சாந்தி நடைபெற்ற வழிபாடு ஆகியவற்றில் பங்கேற்று தரிசனம் செய்தார்.
    • அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிவாச்சாரியார்கள் சட்டநாதர்சுவாமி புனுகு விபூதி, உளுந்து வடை, பயிர் பாயசம் உள்ளிட்ட பிரசாதங்களை வழங்கினர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டநாதர் சுவாமி கோவில் உள்ளது.

    பிரசித்தி பெற்ற இக்கோவிலில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இரவு சுக்கிர வார வழிபாடு பூஜை நடைபெறுவது வழக்கம். நள்ளிரவு வரை தொடரும் இப்பூஜையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் அதிக அளவு வருகை புரிந்து கண்விழித்து சுக்ரவார வழிபாட்டில் பங்கேற்று தரிசனம் செய்து வருகின்றனர். சட்ட சிக்கல், சத்துருக்களின் தொல்லைகள், பில்லி சூனியம், அச்சம் ஆகியவைகள் நீங்கி ஏராளமான நன்மைகள் உடனடியாக வந்து சேரும் என்பதால் சுக்ரவார வழிபாட்டில் பக்தர்கள் தொடர்ந்து பங்கேற்று தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று இரவு நடைபெற்ற சுக்கிர வார வழிபாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ஜெயப்பிரதீப் பங்கேற்று தரிசனம் செய்தார். பலிபீடத்திற்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகம் மற்றும் முத்து சட்டநாதர் சுவாமிக்கு நடைபெற்ற வழிபாடு, மலைக்கோவிலில் உள்ள சட்டநாதர் சுவாமிக்கு புனுகு சாந்தி நடைபெற்ற வழிபாடு ஆகியவற்றில் பங்கேற்று தரிசனம் செய்தார்.

    அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிவாச்சாரியார்கள் சட்டநாதர்சுவாமி புனுகு விபூதி, உளுந்து வடை, பயிர் பாயசம் உள்ளிட்ட பிரசாதங்களை வழங்கினர். 

    • சேத்திரபாலபுரம் காந்திநகர் கீழகாலனி பகுதியில் வயல்வெளி பகுதியில் ஓ.என்.ஜி.சி. எரிவாயு குழாயில் லேசான வாயு கசிவு ஏற்பட்டுள்ளது.
    • காந்திநகர் பகுதி மக்கள் கும்பகோணம்-மயிலாடுதுறை பிரதான சாலையில் சேத்திரபாலபுரத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே சேத்திரபாலபுரத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் எரிவாயு சேகரிப்பு மையம் மற்றும் எரிவாயு கிணறு அமைந்துள்ளது.

    இந்நிலையில், சேத்திரபாலபுரம் காந்திநகர் கீழகாலனி பகுதியில் வயல்வெளி பகுதியில் ஓ.என்.ஜி.சி. எரிவாயு குழாயில் லேசான வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தீ விபத்து ஏற்படலாம் என கிராம மக்கள் அச்சமடைந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனை ஓ.என்.ஜி.சி. நிர்வாகம் உடனடியாக சரி செய்யாததை கண்டித்து காந்திநகர் பகுதி மக்கள் 30-க்கு மேற்பட்டோர் கும்பகோணம்-மயிலாடுதுறை பிரதான சாலையில் சேத்திரபாலபுரத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதன் காரணமாக பிரதான சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதனிடையே ஓஎன்ஜிசி நிர்வாகத்தினர் அப்பகுதியை ஆய்வு செய்து அவ்வழியாக செல்லும் கேஸ் இணைப்பை தற்காலிகமாக துண்டித்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டு கலைந்து சென்றனர். 

    • சிவனின் 5 முகங்களில் ஒன்றான அகோர முகத்தில் இருந்து தோன்றிய அகோரமூர்த்தி தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.
    • கொடிமரத்திற்கு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டன.

    சீர்காழி:

    சீர்காழி அருகே பிரசித்தி பெற்ற திருவெண்காட்டில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட சுவேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது.

    இந்த கோவில் காசிக்கு இணையான கோவில்களில் ஒன்றாகும். நவகிரகங்களில் ஒன்றான புதனின் பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது. சிவனின் 5 முகங்களில் ஒன்றான அகோர முகத்தில் இருந்து தோன்றிய அகோரமூர்த்தி தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த கோவிலில் உள்ள கொடிமரம் பழுதடைந்து காணப்பட்டது.

    இதை அடுத்து புதிய கொடிமரம் பிரதிஷ்டை இன்று (வெள்ளிக்கிழமை) காலை நடந்தது. முன்னதாக கொடிமரத்திற்கு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டன.

    இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் கலந்து கொண்டு கொடிமரத்தை வழிபட்டார். இதைத் தொடர்ந்து கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    இதில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சுவாமிநாதன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ரவி, தஷ்ணாமூர்த்தி சிவாச்சாரியார், கந்தசாமி சிவாச்சாரியார் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • பொதுக் கூட்டத்தில், கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் கலந்துக் கொண்டனர்.
    • பொதுக்கூட்டத்திற்காக கட்டப்பட்டிருந்த ஹாலோஜன் விளக்கு கம்பம் பலத்த காற்றால் சரிந்து விழுந்தது.

    மயிலாடுதுறையில் திமுக சார்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் திமுக எம்.பி. ஆ.ராசா பங்கேற்றார்.

    அக்கூட்டத்தில், கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் கலந்துக் கொண்டனர்.

    இந்நிலையில், பொதுக் கூட்டத்திற்கான மேடையில் அமைக்கப்பட்டிருந்த மைக் மேஜை அருகே ஆ.ராசா பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது, யாரும் எதிர்பாராத நேரத்தில் மேடையின் எதிரே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மின்விளக்கு தூண் திடீரென சாய்ந்தது.

    பொதுக்கூட்டத்திற்காக கட்டப்பட்டிருந்த ஹாலோஜன் விளக்கு கம்பம் பலத்த காற்றால் சரிந்து விழுந்தது.

    விளக்குத்தூண் விழுவதைக் கண்டு சுதாரித்துக் கொண்ட ஆ.ராசா அங்கிருந்த உடனடியாக விலகி ஓடி உயிர் தப்பினார்.

    மேடையில் இருந்த திமுக நிர்வாகிகள் இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

    • திருச்சாந்துருண்டை பிரசாதத்தை உட்கொண்டால் 4,448 வியாதிகள் குணமாகும்.
    • வேண்டுதல்கள் நிறைவேற வீட்டில் மஞ்சள் தடவிய குச்சியை வைத்து பூஜிப்பர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயிலில் பிரசித்தி பெற்ற தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது.

    இக்கோவிலில் நவகிரகங்களில் முதன்மையான செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன், செல்வமுத்துக்குமார சுவாமி, தன்வந்திரி சித்தர் ஆகிய சுவாமிகள் தனி சன்னிதியில் அருள்பாலித்து வருகின்றனர்.

    இங்குள்ள சித்தாமிர்த தீர்த்தத்தில் நீராடி கோவிலில் வழங்கப்படும் 'திருச்சாந்துருண்டை' எனும் பிரசாதத்தை உட்கொண்டால் 4,448 வியாதிகள் குணமாகும் என்பது ஐதீகம்.

    மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நகரத்தார் மக்களின் குலதெய்வ வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

    அதாவது, பண்டைய காலத்தில் பூம்புகார் பகுதியில் இருந்து பல்வேறு பகுதிகளில் குடியேறிய நகரத்தார் மக்கள் பல தலைமுறைகளாக ஆண்டுதோறும் சித்திரை மாதம் 2-வது செவ்வாய்க்கிழமை பாத யாத்திரையாக கோவிலுக்கு வந்து தங்கள் குலதெய்வமான தையல் நாயகியை வழிபடுவது வழக்கம்.

    இதற்காக அவர்கள் சித்திரை மாத முதல் செவ்வாய்க்கிழமை தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற வீட்டில் மஞ்சள் தடவிய குச்சியை வைத்து பூஜிப்பர். பின்னர், பாதயாத்திரை தொடங்கும் மக்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியதற்கு காணிக்கையாக அந்த குச்சியை கோவிலின் கொடிமரம் முன்பு செலுத்துகின்றனர்.

    பின்னர், அம்பாள் மற்றும் சுவாமியை தரிசனம் செய்து விட்டு தங்களது புதிய வேண்டுதலுக்காக கொடிமரத்தில் இருந்து மாற்று குச்சியை எடுத்து செல்வது வழக்கம்.

    அதன்படி, இன்று சித்திரை மாத 2-வது செவ்வாய்க் கிழமையை யொட்டி காரைக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், பரமக்குடி, திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான நகரத்தார் மக்கள் கோவிலில் குவிந்தனர். பின்னர், அவர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி விட்டு குலதெய்வ வழிபாடு மேற்கொண்டனர்.

    இந்நிகழ்வை யொட்டி பாதுகாப்பு பணிக்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் மேற்பார்வையில், துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை, இன்ஸ்பெக்டர்கள் புயல் பாலசந்திரன், செல்வி, ராஜா, விசித்திரா மேரி உள்பட 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    பக்தர்கள் வசதிக்காக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் 4 வீதிகளிலும் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்டவைகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

    பக்தர்கள் சிரமமின்றி கோவிலுக்கு வருவதற்காக சீர்காழி, மயிலாடுதுறை, சிதம்பரம், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வைத்தீஸ்வரன் கோவிலில் குவிந்ததால் அப்பகுதியே விழாக்கோலம் பூண்டது.

    • காயத்துடன் கரை திரும்பிய 4 மீனவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
    • வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே உள்ள புதுப்பேட்டையில் இருந்து கவிதாஸ் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் ஜெகன் (வயது 36), ராமகிருஷ்ணன் (67), செந்தில் (46), சாமுவேல் (31) ஆகியோர் நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    அப்போது, நாகை மாவட்டம், கோடியக்கரை தென்கிழக்கே சுமார் 5 கடல்மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்த போது இலங்கை கடற்கொள்ளையர்கள் 3 பேர் புதுப்பேட்டை மீனவர்களை வழிமறித்து கத்தி மற்றும் கட்டையால் தாக்கி மீனவர்கள் வைத்திருந்த ஜி.பி.எஸ்.கருவி, செல்போன், வாக்கி டாக்கி உள்ளிட்ட ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து அங்கிருந்து தப்பி சென்றனர்.

    பின்னர், காயத்துடன் கரை திரும்பிய 4 மீனவர்களுக்கும் வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    இச்சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் விசாரணை நடத்தி, தமிழக எல்லை பகுதிக்கு வந்து புதுப்பேட்டை மீனவர்களை ஆயுதம் கொண்டு தாக்கி பொருட்களை கொள்ளையடித்து சென்ற இலங்கை கடற்கொள்ளையர்கள் 3 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.

    • பஸ் சுமார் ½ மணி நேரம் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.
    • மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை பழைய பஸ் நிலையத்தில் இருந்து நீடூர் வழியாக பந்தநல்லூர் செல்லும் அரசு பஸ் புறப்பட்டது. அந்த பஸ்சில் உள்ள ஒரு இருக்கையில் 2½ வயது பெண் குழந்தை மட்டும் தனியாக இருந்துள்ளது. அதை தவிர மற்ற இருக்கைகளில் பயணிகள் ஏறி இடம் பிடித்து அமர்ந்து கொண்டனர்.

    அந்த பஸ்சிற்கு ஒதுக்கப்பட்ட நேரம் வந்ததும் நிலையத்தில் இருந்து பஸ் புறப்பட்டது. சிறிது தூரம் சென்றதும் குழந்தை தனியாக இருப்பதை கண்ட சக பயணிகள் குழந்தை யாருடையது? என தெரியாமல் குழம்பினர். பின்னர், உடனடியாக கண்டக்டர் மாதவனிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்தனர்.

    இதனால் பதறிப்போன அவர் டிரைவரிடம் தெரிவித்து, பஸ்சை உடனடியாக பழைய பஸ் நிலையத்திற்கு திருப்பினர். அதனை தொடர்ந்து, பஸ் சுமார் ½ மணி நேரம் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. பஸ்சில் இருந்த கல்லூரி மாணவிகள் மற்றும் பயணிகள் சிலர் குழந்தை அழாமல் இருப்பதற்காக சாக்லெட் கொடுத்து கொஞ்சி மகிழ்ந்தனர்.

    இதுகுறித்து, பணிமனை அலுவலர்கள் கொடுத்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    இது ஒருபுறம் இருக்க மற்றொருபுறம் குழந்தையை அமர வைத்திருந்த பஸ்சை காணவில்லை என பதறிப்போன பெற்றோர்கள் ஆட்டோவில் ஏறி பஸ் செல்லும் பாதையை நோக்கி சென்றுள்ளனர். ஒரு கட்டத்தில் அவர்கள் மறுபடியும் பஸ் நிலையத்தையே வந்தடைந்தனர்.

    அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பஸ்சில் இடம் பிடிப்பதற்காக குழந்தையுடன் ஏறிய தந்தை குழந்தையை அமர வைத்து விட்டு, தனது கர்ப்பிணி மனைவியை அழைத்து வருவதற்காக பஸ்சில் இருந்து இறங்கியதும், அதற்குள் பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றதும் தெரியவந்தது.

    மேலும், பஸ்சின் பாதையை பின்தொடர்ந்து, சுமார் 5 கி.மீ. வரை சென்றுவிட்டு, மறுபடியும் பஸ் நிலையத்திற்கு வந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து, நன்கு விசாரித்த போலீசார் குழந்தையை அவர்களிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் மயிலாடுதுறை பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

    • 2 பேரின் உடல்களும் பிரேதபரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே கொள்ளிடம் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த ரங்கநாதன் மகன் புவனேஷ் (வயது23). இவரது நண்பர் சிதம்பரம் கவரப்பட்டு வீரன் கோவில் திட்டு பகுதியை சேர்ந்த பாலமுருகன் மகன் செல்வம் (20).

    இவர்கள் 2 பேரும் புத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தனர். இந்த நிலையில் புவனேஷ் மற்றும் செல்வம் ஆகிய இருவரும் கல்லூரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது புத்தூர் அரசு தொழில்நுட்ப கல்லூரி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது மோட்டார் சைக்கிள் மீது எதிரே வேகமாக வந்த லாரி மோதியது.

    இதில் செல்வம் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த புவனேஷ் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதையடுத்து 2 பேரின் உடல்களும் பிரேதபரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறுமிக்கு நேர்ந்த இந்த விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் மயிலாடுதுறை ஆட்சியர் பேசினார்.
    • பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது கண்டனத்தை பதிவு செய்தார்.

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அங்கன்வாடிக்கு சென்ற மூன்றரை வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு- கொலை முயற்சி சம்பவம் நடந்துள்ளது.

    கடந்த 24ம் தேதி அங்கன்வாடிக்கு சென்ற சிறுமி 16 வயது சிறுவனால் வன்கொடுமை செய்யப்பட்டு தலை மற்றும் கண் சிதைக்கப்பட்டுள்ளது.

    சிறுமி கத்தியதால் கல்லை எடுத்து தலையிலும் முகத்திலும் தாக்கியதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த நிலையில் சிறுவன் தப்பியுள்ளான்.

    பாதிக்கப்பட்ட சிறுமி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறும் நிலையில் 16 வயது சிறுவன் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டான்.

    இந்த நிலையில், சிறுமிக்கு நேர்ந்த இந்த விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் மயிலாடுதுறை ஆட்சியர் பேசினார்.

    குழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஒருநாள் திறன் வளர்ப்பு பயிற்சி முகாமில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, "16 வயது சிறுவனின் முகத்தில் 3 வயது சிறுமி எச்சில் துப்பியது தான் வன்கொடுமைக்கு காரணம்" என மாவட்ட ஆட்சியர் பேசிய பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியருக்கு கண்டனம் தெரிவித்து கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் அறிவித்துள்ளது. மேலும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது கண்டனத்தை பதிவு செய்தார்.

    இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    மேலும், மயிலாடுதுறை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக ஸ்ரீகாந்த் ஐஏஎஸ் நியமனம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

    ×