என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஓ.என்.ஜி.சி. நிறுவன எரிவாயு குழாயில் கசிவு - பொதுமக்கள் சாலைமறியல்
    X

    ஓ.என்.ஜி.சி. நிறுவன எரிவாயு குழாயில் கசிவு - பொதுமக்கள் சாலைமறியல்

    • சேத்திரபாலபுரம் காந்திநகர் கீழகாலனி பகுதியில் வயல்வெளி பகுதியில் ஓ.என்.ஜி.சி. எரிவாயு குழாயில் லேசான வாயு கசிவு ஏற்பட்டுள்ளது.
    • காந்திநகர் பகுதி மக்கள் கும்பகோணம்-மயிலாடுதுறை பிரதான சாலையில் சேத்திரபாலபுரத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே சேத்திரபாலபுரத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் எரிவாயு சேகரிப்பு மையம் மற்றும் எரிவாயு கிணறு அமைந்துள்ளது.

    இந்நிலையில், சேத்திரபாலபுரம் காந்திநகர் கீழகாலனி பகுதியில் வயல்வெளி பகுதியில் ஓ.என்.ஜி.சி. எரிவாயு குழாயில் லேசான வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தீ விபத்து ஏற்படலாம் என கிராம மக்கள் அச்சமடைந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனை ஓ.என்.ஜி.சி. நிர்வாகம் உடனடியாக சரி செய்யாததை கண்டித்து காந்திநகர் பகுதி மக்கள் 30-க்கு மேற்பட்டோர் கும்பகோணம்-மயிலாடுதுறை பிரதான சாலையில் சேத்திரபாலபுரத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதன் காரணமாக பிரதான சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதனிடையே ஓஎன்ஜிசி நிர்வாகத்தினர் அப்பகுதியை ஆய்வு செய்து அவ்வழியாக செல்லும் கேஸ் இணைப்பை தற்காலிகமாக துண்டித்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டு கலைந்து சென்றனர்.

    Next Story
    ×