என் மலர்
மதுரை
- மதுரை அருகே மாடு முட்டி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
- இவருக்கு திருமணமாகி சினேகா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள திருவாதவூைர அடுத்துள்ள ஆண்டிபட்டியை சேர்ந்தவர் முனியசாமி (வயது33). இவர் கட்டிட தொழிலாளியான இவருக்கு திருமணமாகி சினேகா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவர் சொந்தமாக மஞ்சு விரட்டு காளை வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று இந்த காளை முனியசாமியை முட்டி குத்தியது.
இதில் படுகாயமடைந்த முனியசாமி சிகிச்சை பலனின்றி அரசு ஆஸ்பத்தி ரியில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மேலூர் இன்ஸ்பெக்டர் மன்னவன், சப்- இன்ஸ்பெக்டர் கேசவன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- பக்தர்கள் குடும்பம், குடும்பமாக வந்து சாமி தரிசனம் செய்தனர்.
- கள்ளழகருக்கு சக்கரை தீபம் ஏற்றி வழிபட்டனர்.
மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் அமைந்துள்ள சுந்தரராஜ பெருமாள் கோவிலில் கடந்த 1-ந்தேதி சித்திரை திருவிழா தொடங்கியது. அன்று முதல் 2 நாட்கள் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் காட்சியளித்தார்.
அதனைத்தொடர்ந்து 3-ந்தேதி மாலை பெருமாள் கள்ளழகர் வேடம் தரித்து அங்குள்ள பதினெட்டாம் படி கருப்பண்ணசாமி சன்னதி முன்பு உத்தரவு பெற்று கள்ளழகர் மதுரைக்கு புறப்பட்டார்.
கள்ளந்திரி, அப்பன் திருப்பதி என வழி நெடுகிலும் உள்ள மண்டகப் படிகளில் எழுந்தருளினார். அப்போது திரளான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.
மறுநாள்(4-ந்தேதி) மதுரை மூன்று மாவடிக்கு கள்ளழகர் வருகை தந்தார். அப்போது பக்தர்கள் அவரை எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் பல்லக்கில் கள்ளழகர் எழுந்தருளி தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலுக்கு சென்றடைந்தார்.
மறுநாள் (5-ந்தேதி) அதிகாலை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து ஆயிரம் பொன் சப்பரத்தில் புறப்பட்ட கள்ளழகர் அதிகாலை 6 மணிக்கு தங்க குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி வைகையாற்றில் இறங்கினார். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.
அதனைத்தொடர்ந்து ராமராயர் மண்டபத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. அன்று இரவு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலில் கள்ளழகர் எழுந்தருளினார். அங்கு இரவு விடிய விடிய திருவிழா நடந்தது.
மறுநாள் (6-ந்தேதி) வைகையாற்றில் உள்ள தேனூர் மண்டபத்தில் சேஷ வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளினார். பின்னர் அங்கு திருமஞ்சனமாகி தங்க கருட வாகனத்தில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
அன்று இரவு ராமராயர் மண்டபத்தில் விடிய, விடிய தசாவதார நிகழ்ச்சி நடந்தது. கள்ளழகர் முத்தங்கி சேவை, மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வாமன அவதாரம், ராமர் அவதாரம், கிருஷ்ணர் அவதாரம், மோகினி அலங்காரத்தில் எழுந்தருளினார். நேற்று (7-ந்தேதி) மோகினி அலங்காரத்தில் பல்வேறு மண்டகப்படி களில் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சிய ளித்தார்.
இன்று (8-ந்தேதி) அதிகாலை 2.30 மணிக்கு அனந்தராயர் பூப்பல்லக்கில் கள்ளழகர் தமுக்கத்தில் உள்ள கருப்பண்ணசாமி கோவிலில் எழுந்தருளினார். அங்கு அவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் வையாழியாக உருமாறிய கள்ளழகர் அழகர் மலைக்கு புறப்படும் வைபவம் நடந்தது.
தல்லாகுளம், அவுட்போஸ்ட் ஆகிய பகுதி களில் உள்ள ஒவ்வொரு மண்டகப்படிகளிலும் எழுந்தருளிய கள்ளழகர் காலை 6 மணிக்கு அவுட் போஸ்ட் மாரியம்மன் கோவிலிலும், 7 மணிக்கு அம்பலக்காரர் மண்டபத்திலும் எழுந்தருளினார்.
இதையொட்டி ரேஸ்கோர்ஸ், புதூர், தாமரைதொட்டி, ரிசர்வ்லைன், டி.ஆர்.ஓ. காலனி ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பம், குடும்பமாக வந்து சாமி தரிசனம் செய்தனர். அப்போது கள்ளழகருக்கு சக்கரை தீபம் ஏற்றி வழிபட்டனர். திரளான பக்தர்கள் "கோவிந்தா...கோவிந்தா..." கோஷமிட்டு கள்ளழகரை வழியனுப்பி வைத்தனர்.
அதனைத்தொடர்ந்து கள்ளழகர் இரவு 7 மணியளவில் மூன்று மாவடி, கடச்சனேந்தல் வழியாக அப்பன் திருப்பதிக்கு இரவு சென்றடைகிறார். அங்கு இன்று இரவு விடிய, விடிய திருவிழா நடைபெறுகிறது.
கடந்த 3-ந்தேதி கோவிலில் இருந்து புறப்பட்ட கள்ளழகர் மதுரை சித்திரை திருவிழாவை முடித்துக் கொண்டு நாளை காலை 11 மணியளவில் தனது இருப்பிடம் சேருகிறார்.
- தமிழகத்தில் எப்போதெல்லாம் தி.மு.க. ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் தமிழகம் வளர்ச்சி பெறுகிறது.
- புதுமைப்பெண் திட்டத்தை கொண்டு வந்து மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கியவர் மு.க.ஸ்டாலின்.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் கலைஞர் திடலில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது. தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு., பி.மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:-
தி.மு.க. அரசு யானை பலம் கொண்டது. தமிழகத்தில் எப்போதெல்லாம் தி.மு.க. ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் தமிழகம் வளர்ச்சி பெறுகிறது. தி.மு.க. ஆட்சியின் போது தான் தமிழகத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
மதுரை மாவட்டத்தில் மட்டும் மதுரை-திண்டுக்கல் புறவழிச்சாலை, வைகை ஆற்றில் குறுக்கு பாலம், ஆண்டாள்புரம் பகுதியில் ரெயில்வே மேம்பாலம், திருப்பரங்குன்றம் சாலையில் மேயர் முத்துபாலம், மதுரை மாநகராட்சி கட்டிடம் அறிஞர் அண்ணா மாளிகை, மேலூர் சாலையில் ஒருங்கிணைந்த ஐகோர்ட்டு வளாகம் கட்டியதும் தி.மு.க. ஆட்சியில் தான்.
அதேபோல முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை மட்டுமல்லாது தென்தமிழகமே பயன்படும் வகையில் ரூ.120 கோடியில் கலைஞர் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
திருமங்கலம் மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ள ரெயில்வே மேம்பாலம் அமைப்பதற்காக மாவட்ட செயலாளர் மணிமாறன் முயற்சியால் மேம்பாலம் அமைய உள்ள இடத்தினை கையகப்படுத்த ரூ.22.88 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் உத்தரவிட்டார்.
மேலும் மேம்பாலம் கட்ட ரூ.33.47 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. இந்த ஆண்டிலேயே ரெயில்வே மேம்பாலம் கட்டப்படும். தமிழகத்தில் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில் 1 கோடி பேர் பயனடைந்து உள்ளனர். மகளிர் சுய உதவிக்குழுவினர் கொரோனா காலத்தில் கடனை செலுத்த முடியாமல் பாதிக்கப்பட்டனர்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் ரூ.2400 கோடி மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. புதுமைப்பெண் திட்டத்தை கொண்டு வந்து மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கியவர் மு.க.ஸ்டாலின். இது மக்கள் ஆதரிக்கும் திராவிடமாடல் ஆட்சியாக உள்ளது.
தமிழக கவர்னர் விரும்புவது மனுதர்மம், மனுநீதி. ஆனால் தமிழக முதலமைச்சர் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும், அனைவரும் சமம் என்ற சமூக நீதியை விரும்புகிறார்.
தமிழகத்தில் பா.ஜனதா வளரவில்லை. மத்தியில் உள்ள ஆட்சியை வைத்துக்கொண்டு அதிகாரத்தை பயன்படுத்தி மிரட்டும் பணியை செய்கின்றனர். பா.ஜனதா வின் சலசலப்பு தமிழகத்தில் எடுபடாது.
இவ்வாறு அவர் பேசினார்.
- அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல் நடந்தது.
- சரமாரியாக தாக்கி விட்டு தப்பிச் சென்று விட்டனர்.
மதுரை
மதுரை அய்யப்பநாயக் கன்பட்டி ஊரணி தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 43), அரசு பஸ் டிரைவர். மகாலிங்கம் சித்திரை திருவிழாவை யொட்டி பணியில் இருந்தார். அப்போது திண்டுக்கல் ரோடு பஸ் நிறுத்தம் அருகில் 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்து பஸ்சை வழிமறித்தனர்.
இதனை மகாலிங்கம் கண்டித்தார். இதில் ஆத்திரம் அடைந்த 2 ேபரும் உருட்டு கட்டையால் அவரை சரமாரியாக தாக்கி விட்டு தப்பிச் சென்று விட்டனர். இது தொடர்பாக மகாலிங்கம் செல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- சி.சி.டி.வி. கேமராவில் விபூதியை அள்ளி வீசி கைவரிசை காட்டிய கொள்ளையர்கள் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் துணைக்கோவிலாக காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. திருப்பரங்குன்றம் மலை மேல் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு பக்தர்கள் அதிகளவில் சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த கோவிலுக்கு செல்ல பழைய படிக்கட்டு பாதை மற்றும் புதிய படிக்கட்டு பாதை என 2 வழிகள் உள்ளன. இங்கு நேற்று முன்தினம் சித்ரா பவுர்ணமியையொட்டி வழக்கத்துக்கு அதிகமாக பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து சென்றனர். இதைத்தொடர்ந்து இரவு கோவிலை பூட்டி சென்றனர்.
நேற்று காலை கோவிலை திறப்பதற்காக கோவில் குருக்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் சென்றனர். அப்போது கோவிலின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன.
மேலும் கோவிலுக்குள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பூஜை பொருட்கள், பித்தளை வேல் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கோவில் குருக்கள் மற்றும் பணியாளர்கள் உடனடியாக கோவில் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பில் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். யாரோ மர்மநபர்கள் கோவிலுக்குள் புகுந்து பொருட்களை திருடி உள்ளனர். அவர்கள் அங்கிருந்த சி.சி.டி.வி. காமிராவின் ஹார்டு டிஸ்க்கையும் திருடிச்ெசன்றி ருக்கிறார்கள்.
மேலும் சி.சி.டி.வி. காமிராவில் கொள்ளை சம்பவம் பதிவாகி விடக்கூடாது என்பதற்காக திருட்டில் ஈடுபட்ட கொள்ளையர்கள் காமிரா மீது விபூதியை அள்ளி வீசி கைவரிசை காட்டியுள்ளனர்.
கோவில் கதவை உடைத்து பூஜை பொருட்களை திருடிய சம்பவம் திருப்பரங் குன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மலைக்கு செல்லும் படிக்கட்டு பாதை பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களில் மர்ம நபர்களின் நடமாட்டம் எதுவும் பதிவாகி உள்ளதா? என்று ஆய்வு செய்து வருகின்றனர். காசி விசுவநாதர் கோவிலில் கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் கண்காணிப்பு காமிரா அமைக்கப்பட்டு ள்ளது. இந்தநிலையில் தான் கோவிலில் திருட்டு நடந்திருக்கிறது. திருட்டில் ஈடுபட்டவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
- மதுரையில் நாளை மின்தடை ஏற்படுகிறது.
- காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
மதுரை
மதுரை அரசரடி மற்றும் பசுமலை துணை மின் நிலையத்தில் உள்ள தொழிற்பேட்டை, பெருங்குடி உயர் அழுத்த மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக நாளை (8-ந் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
சொக்கலிங்க நகர் 1 முதல் 9-வது தெருக்கள், டி.எஸ்.பி. நகர், பொன்மேனி மெயின் ரோடு, எஸ்.எஸ்.காலனி வடக்குவாசல், பிள்ளையார் கோவில் தெரு, பொன்மேனி நாராயணன் தெரு, ஜானகி நாராயணன் தெரு, அருணாசலம் தெரு, திருவள்ளுவர் தெரு, வாழ்மீகி தெரு, சோலைமலை தியேட்டர் பின்புறம், மீனாட்சி நகர் 1 மற்றும் 2-வது தெருக்கள், ராமையா தெரு, பொன்பாண்டி தெரு, பொன்மேனி குடியானவர் கிழக்கு தெரு, குமரன் தெரு, ஜவகர் மெயின் ரோடு 1 முதல் 5 தெருக்கள், கண்ணதாசன் தெரு, சுப்பிரமணியர் தெரு, நாவலர் 1 முதல் 3-வது தெருக்கள், பை-பாஸ் ரோடு, பாரதியார் மெயின் ரோடு 1 மற்றும் 2-வது தெருக்கள்.
பெருங்குடி ஆர்.எம்.எஸ் காலனி, புதுக்குளம் 2 பிட், ஜென்னட் நகர், அவனியாபுரம் மெயின் ரோடு, முத்துப்பட்டி, பெருமாள் நகர், கோல்டன் சிட்டி, இந்தியன் நகர், சிவகாமியம்மன் நகர், பைக்காரா, அழகுசுந்தரம் நகர், பாலநாகம்மாள் கோவில் தெரு, மகாலட்சுமி நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
மேற்கண்ட தகவலை மதுரை மேற்கு கோட்ட மின்பகிர்மான செயற்பொறியாளர் பழனி தெரிவித்துள்ளார்.
- மதுரை மேற்கு மண்டலத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நாளை மறுநாள் நடக்கிறது.
- கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெறலாம்.
மதுரை
மதரை திருப்பரங்குன்றம் நகர்ப்புற சுகாதார நிலையம் அருகில் தியாகராசர் பொறியியல் கல்லூரி செல்லும் வழியில் உள்ள உள்ள மதுரை மாநக ராட்சியின் மேற்கு மண்டல அலுவலகத்தில் நாளை மறுநாள் (9-ந்தேதி) காலை 10 மணி முதல் 12.30 வரை பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.
மேயர் இந்திராணி தலைமை தாங்குகிறார். இந்த மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு பகுதிகளான மாடக்குளம், முத்துராமலிங்கபுரம், முத்துப்பட்டி அழகப்பன் நகர் மெயின் ரோடு, பழங்காநத்தம், கோவலன் நகர், டி.வி.எஸ்.நகர் மெயின் ரோடு, தென்னகரம், ஜெய்ஹிந்துபுரம் மெயின் ரோடு, வீரகாளியம்மன் கோவில் தெரு, ஜெய்ஹிந்துபுரம், சோலையழகுபுரம், எம்.கே.புரம், வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, மீனாட்சி நகர் அவனியாபுரம், பாம்பன் சுவாமி நகர், பசுமலை, திருநகர், சவுபாக்யாநகர், ஹார்விப்பட்டி, திருப்பரங்குன்றம் சன்னதி தெரு, திருப்பரங்குன்றம் பாலாஜி நகர், அவனியாபுரம் அருப்புக்கோட்டை மெயின் ரோடு ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன் பெறலாம்.
மேற்கண்ட தகவல் மதுரை மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
- மதுரை 20-வது வார்டு பகுதியில் சேதமடைந்த சாலையால் பொதுமக்கள் அவதியடைகின்றனர்.
- வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.
மதுரை
மதுரை 20-வது வார்டு பகுதியில் மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை, குடிநீர் போன்ற அடிப்படை தேவைகளுக்காக சாலைகளை ஜே.சி.பி. எந்திரம் மூலம் தோண்டுகின்றனர்.
அப்போது ஊழியர்களின் கவனக்குறைவால் குடிநீர் குழாய்கள் உடைக்கப்பட்டு சேதமடைகிறது. இதனால் கடந்த 45 நாட்களுக்கு மேலாக பொது மக்களுக்கு குடிநீர் கிடைக்காமல் உள்ளது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக தொடர் மழையின் காரணமாக தோண்டிய சாலைகளை சரி செய்யாமல் இருப்பதால் சேறும், சகதியுமாக காட்சிய ளிக்கிறது. இதனால் இந்த பகுதி மக்கள் இரு சக்கர வாகனத்தில் கூட செல்ல முடியாமல் சாகசங்கள் செய்து மெயின் ரோட்டுக்கு வர வேண்டியுள்ளது.
இதுகுறித்து கவுன்சிலர் நாகஜோதி சித்தன் மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் சரி செய்யப்படவில்லை. போராட்டங்கள் நடத்தியும் பிரச்சினை முடிவுக்கு வரவில்லை. இதனால் பொது மக்கள் சாலையில் வர முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.
- மதுரையில் ரெயில் பயணிகளிடம் செல்போன் பறித்த வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
- மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
மதுரை
மதுரை மேலப்பொன்ன கரம் 2-வது தெருவைச் சேர்ந்த சிவ பெருமாள் மகன் விக்னேஷ் (வயது24). இவர் நேற்று இரவு சென்னை செல்வதற்காக நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நண்பர் ரஞ்சித்துடன் சென்னை சென்று கொண்டிருந்தார்.
முன் பதிவில்லாத பெட்டியில் ஏறிய இருவரும் கூட்டம் அதிகமாக இருந்ததால் கழிவறை அருகில் உள்ள கதவு அருகே நின்று கொண்டிருந்தனர். நள்ளிரவில் மதுரா கோர்ட்ஸ் பாலத்தை கடந்து ரெயில் சென்று கொண்டிருந்தது. அப்போது விக்னேஷ் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.
ரெயில் மெதுவாக சென்று கொண்டிருந்த போது தண்டவாளம் அருகில் நின்று கொண்டிருந்த வாலிபர்கள் திடீரென்று ரெயில் பெட்டியில் ஏறி விக்னேஷ் மற்றும் மற்றொரு பயணி யான மணிகண்டனிடம் இருந்து செல்போன்களை பறித்து கொண்டு ரெயிலில் இருந்து இறங்கி தப்பி ஓடி விட்டனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் மதுரை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் குருசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். உதவி ஆய்வாளர் சையது குலாம், காவலர்கள் பழனிக்குமார், பாலகிருஷ்ணன், சஞ்சய், செந்தில், செந்தில்குமார், திருமுருகன் ஆகியோர் சம்பவஇடத்திற்கு சென்று விசாரித்துக் கொண்டிருந்த போது தத்தனேரி ரெயில்வே மேம்பாலத்திற்கு கீழ் தண்டவாள கிழக்கு பக்கமுள்ள ஆவின் பாலகம் அருகில் நின்று கொண்டிருந்த விக்னேஷ் என்ற குட்டி புலி (25) அஜய் குகன் (21), பரமேஸ்வரன் (29), சீனிவாசன் (19) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். செல்போன் களும் பறிமுதல் செய்யப் பட்டது. கோர்ட்டில் ஆஜர்ப்படுத்த பட்ட 4 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
- நர்சை அடித்து கொன்ற கணவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை முனியாண்டி புரத்தைச் சேர்ந்தவர் சதீஷ் குமார் (வயது 32), கட்டிட தொழிலாளி. இவரும், ரம்யா (22) என்ற பெண்ணும் காதலித்து கடந்த திருமணம் செய்து கொண்டனர். திருப்பரங் குன்றம் பகுதியில் செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனத்தில் ரம்யா நர்சாக வேலை பார்த்து வந்தார்.
நேற்று மாலை ரம்யா வீட்டில் இருந்தார். அப்போது அவருக்கும், கணவருக்கும் இடையில் குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அப்போது சதீஷ்குமார், கர்ப்பிணியாக இருந்த ரம்யா நடத்தை தொடர்பாக அவதூறாக பேசினார். மேலும் சாதியை குறிப்பிட்டு இழிவாக பேசிய தாகவும் கூறப்படுகிறது. இதனை ரம்யா தட்டி கேட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த சதீஷ்குமார், கர்ப்பிணி மனைவி என்றும் பாராமல் உருட்டு கட்டையால் ரம்யாவை சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த ரம்யா சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக ரம்யா வின் தந்தை செல்வம் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவர் சதீஷ்குமார், அவரது தந்தை செல்வம் (55), தாய் பஞ்சவர்ணம் (52) ஆகிய 3 பேரை கைது செய்தனர், அவர்களிடம் கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கர்நாடகா தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற முடியாது என திருமாவளவன் கூறினார்.
- பல பிரிவுகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மதுரை
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில் நிரு பர்களிடம் கூறியதாவது:-
கர்நாடகாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் டெல்லி யிலும் ஆட்சி மாற்றம் ஏற்படும். ஆந்திரா, தமிழ் நாடு, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் பா.ஜனதா ஒருபோதும் வெற்றி பெறாது.
புதுச்சேரி ஜிப்மர் மருத்து வமனை தனியாருக்கு தாரைவார்க்கப்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அங்கு பல பிரிவுகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படு கிறது. இதை கண்டித்து நான் கருத்து தெரிவித்தால் புதுச்சேரி கவர்னர், வேறு மாநிலத்திற்குள் உள்ள பிரச்சினைக்கு எப்படி கருத்து சொல்லலாம்? என்று கேட்கிறார்.
புதுச்சேரி மருத்துவமனை யில் புதுச்சேரி மக்கள் மட்டுமின்றி சிதம்பரம் தொகுதி மக்களும் சிகிச்சை பெறுகிறார்கள்.
பிரதமர் மோடி ஒரு சினிமா ரசிகரை போல் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை ஆதரித்து கருத்து சொல்வது அதிர்ச்சி யாக உள்ளது. இந்த திரைப் படம் வெறுப்பு அரசியலை உருவாக்கும். இதற்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மேலமடை குடியிருப்பு பகுதியில் மழை வெள்ளம் தேங்கியதால் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மதுரை
மதுரையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மதுரை அண்ணா பஸ் நிலையம், கே.கே. நகர், மேலமடை, தமுக்கம் மைதானம், கே.புதூர், பெரியார் பஸ் நிலையம், காளவாசல், பழங்காநத்தம் உள்ளிட்ட பல பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது.
சரியான வடிகால் வசதிகள் இல்லாததால் மழைநீர் வடியாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதேபோல் மதுரை 36-வது வார்டுக்கு உட்பட்ட மேலமடை பகுதியிலும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது. தண்ணீர் வடியா மல் தேங்கி உள்ளதால் சேறும், சகதியுமாக மாறி மக்கள் நடமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநகராட்சியில் புகார் செய்தனர். இருந்தபோதிலும் எந்த நட வடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் இன்று காலை விரகனூர் பிரதான சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இத னால் அந்த வழியாக செல்ல வேண்டிய வாகனங்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நீண்ட வரிசையில் நின்றன. அதன் காரணமாக அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதற்கிடையே பொது மக்களின் சாலை மறியல் போராட்டம் குறித்து தகவல் அறிந்த கருப்பாயூரணி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள் மேலமடை குடியிருப்பு களுக்குள் புகுந்த மழை நீரை அகற்றினால் தான் சாலை மறியலை கைவிடு வோம் என்று உறுதியாக கூறினர். இதை தொடர்ந்து 36-வது வார்டு மாநகராட்சி பொறியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குடியிருப்பு பகுதியில் தேங்கி உள்ள மழை நீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி னர். இதனைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்ற னர்.






