என் மலர்tooltip icon

    மதுரை

    • கும்பம் கொட்டுதல், காத்தவராயன் பூஜை நடக்கிறது.
    • 108 கலச அபிஷேகம் நடக்கிறது.

    மும்பையில் உள்ள முருகன் கோவில்களில் வருகிற 2-ந் தேதி வைகாசி விசாகம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

    கோரேகாவ் டீன் டோங்கிரி பகுதியில் உள்ள முருகன் கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமை கால்நாட்டு, காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் வைகாசி விசாகம் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்து வந்தது. இன்று (புதன்கிழமை) காலை முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடக்கிறது. நாளை (வியாழக்கிழமை) 108 கலச அபிஷேகம் நடக்கிறது. இரவு 8 மணிக்கு குழந்தைகள் கலை நிகழ்ச்சி, பரிசு வழங்குதல் நடைபெறுகிறது.

    வரும் வெள்ளிக்கிழமை (2-ந் தேதி) வைகாசி விசாக தினத்தில் காலை 6 மணிக்கு சாமிக்கு மூலமந்திர ஜெப ஹோமம் நடக்கிறது. காலை 7 மணிக்கு பக்தர்கள் அலகு, வேல்குத்தி, பால்குடம், காவடி எடுத்து ராமர் கோவில் வழியாக முருகன் கோவிலுக்கு ஊர்வலம் வருகின்றனர். மதியம் 12 மணிக்கு பிறகு மகா அபிஷேகமும், மகா தீபாராதனை மற்றும் அன்னதானம் நடக்கிறது.

    இரவு சந்தனகாப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடக்கிறது. சனிக்கிழமை (3-ந் தேதி) மாலை 6.45 முதல் 8.30 மணிக்குள் வள்ளி தேவசேனா சுப்பிரமணியசுவாமி திருகல்யாணம் நடைபெறுகிறது. அதன்பிறகு வீதி உலா, அன்னதானம் நடக்கிறது.

    செம்பூர் திலக்நகரில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் சார்பில் 65-வது ஆண்டு வைகாசி விசாக திருவிழா விமரிசையாக நடைபெற உள்ளது. வருகிற 2-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வைகாசி விசாகத்தன்று காலை 11 மணிக்கு தீபாராதனை நடக்கிறது. பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து, அலகு குத்தி, சக்தி கிரகம், அக்னி சட்டி எடுத்து ஸ்ரீபுலங்கேஷ்வர் சிவன் கோவிலில் இருந்து, கோவிலுக்கு ஊர்வலமாக வருகின்றனர். மாலை 6 மணிக்கு பக்தர்கள் பொங்கல் வைத்து பூஜை செய்கின்றனர். இரவு 8 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடக்கிறது.

    3-ந் தேதி (சனிக்கிழமை) இரவு முத்துமாரியம்மன் திருவீதி உலா நடைபெறுகிறது. 4-ந் தேதி இரவு நித்திய பூஜை நடந்து கோவில் நடை சாத்தப்படுகிறது. கும்பம் கொட்டுதல், காத்தவராயன் பூஜையும் நடக்கிறது.

    • இலவச பஸ் பயணம் மூலம் 33 கோடியே 38 லட்சம் பெண்கள் பயன் அடைந்துள்ளனர்.
    • மகளிருக்கு கட்டணமில்லா பஸ் பயண திட்டத்தால் அவர்களது பொருளாதார நிலை உயர்ந்துள்ளதாக அமைச்சர் பேசினார்.

    மதுரை

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் மதுரை புதூர் பணிமனையில் டிரைவர், கண்டக்டர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வறை கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது.

    அமைச்சர் மூர்த்தி குத்துவிளக்கு ஏற்றி ஓய்வறையை திறந்து வைத்தார். ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஓய்வுகால பலன்கள் மற்றும் விபத்தில்லாமல் பணியாற்றிய டிரைவர், கண்டக்டர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    விழாவில் அமைச்சர் மூர்த்தி பேசியதாவது:-

    கிராமப்புற வளர்ச்சியை கருத்தில் கொண்டு 1972-ம் ஆண்டு அரசு போக்குவரத்து கழகத்தை முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்தார். தி.மு.க. ஆட்சி காலத்தில் அதிகளவில் அரசு பஸ்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. பஸ் வசதி இல்லாத பகுதிக்கு புதிய வழித்தடங்கள் அமைக்கப்பட்டு பஸ்கள் விடப்பட்டன.

    தமிழகத்தில் கட்டணமில்லா பஸ் பயண திட்டத்தின் கீழ் இதுவரை 33 கோடியே 38 லட்சம் பெண்கள் பயனடைந்துள்ள னர். கட்டணமில்லா பஸ்சில் சராசரியாக ஒரு நாளைக்கு 5 லட்சத்து 56 ஆயிரம் பெண்கள் பயனடைந்து வருகிறார்கள்.

    மதுரைக்கு 251 மாசு இல்லாத பஸ்கள் மற்றும் 100 மின்சார பஸ்கள் கொள்முதல் செய்ய திட்டம் உள்ளது. மதுரை மாவட்டத்தில் இயக்கப்படும் பழைய பஸ்களுக்கு பதிலாக புதிய பஸ்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன.

    மகளிருக்கு கட்டணமில்லா பஸ் பயண திட்டத்தால் அவர்களது பொருளாதார நிலை உயர்ந்துள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மதுரை அருகே வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    அவனியாபுரம் வெள்ளைக்கல் கிழக்கு தெருவை சேர்ந்த கணேசன் மகன் இளங்கோவன் (வயது36). இவருக்கு மது பழக்கம் உண்டு. சில தினங்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த அவர், சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மனைவி பரமேசுவரி கொடுத்த புகாரின்பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    வில்லாபுரம் சித்தி விநாயகர் கோவில் தெரு துளசிராம் தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜன் (42). இவர் சில தினங்களாக மன அழுத்தத்தில் இருந்தார்.இவருக்கும் மது பழக்கம் இருந்தது.

    இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த பாண்டி யராஜன் மனைவியின் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மனைவி ஜெயலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தொழில் அதிபர் காரில் ரூ. 3.75 லட்சம் திருடப்பட்டது.
    • திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரை

    திருநகர் சொக்கநாதர் தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது46).இவர் சிலைமான் பகுதியில் பிளாஸ்டிக் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.

    இவர் காரில் மதுரைக்கு வந்தார். அதில் தொழிற்சா லைக்கு தேவை யான உபகரணங்களை வாங்கு வதற்காக ரூ 3 லட்சத்து 75 ஆயிரத்தை வைத்திருந்தார்.

    விரகனூர்-திருப்புவனம் செல்லும் வழியில் காரை நிறுத்திவிட்டு டீ குடிக்க சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது காரில் இருந்தபணம் திருடு போனது தெரியவந்தது.

    இதுகுறித்த புகாரின்பேரில் சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வீட்டை உடைத்து நகை-பணம் திருட்டு

    மதுரை கண்ணனேந்தல் ஜி.ஆர்.நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் மதிமாறன் (46). சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றார்.

    அப்போது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர் பீரோவில் இருந்த ¾ பவுன் நகை மற்றும் ரூ.99 ஆயிரத்தை திருடிக்கொண்டு தப்பினார். இதுகுறித்த புகாரின்பேரில் திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஆதிதிராவிடர்-பழங்குடியினர் தொழில் முனைவோர்களுக்கான சிறப்புத் திட்டத்தில் பயன்பெறலாம்.
    • பயனாளர்களுக்குத் தம் பங்காக நிதி செலுத்த வேண்டிய தேவை இருக்காது.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அரசு செயல்படுத்தி வரும் தொழில் முனைவோர் ஊக்குவிப்பு திட்டங்களின் கீழ் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவு தொழில் முனைவோரின் பங்கு குறைவாக இருப்பதை உணர்ந்து தமிழ்நாடு அரசு, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவு தொழில் முனைவோர்களுக்கென பிரத்தியேக சிறப்பு திட்டமாக அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

    இந்த திட்டத்தின்கீழ் ஆர்வமுள்ள புதிய தொழில் முனைவோர் முன்மொழி யும், நேரடி வேளாண்மை தவிர்த்த, உற்பத்தி, வணிகம் மற்றும் சேவை சார்ந்த எந்த தொழில் திட்டத்துக்கும் கடனுதவியோடு இணைந்த மானியம் வழங்கப்படும்.

    ஆடு, மாடு, பன்றி, கோழி, மீன், இறால் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு மற்றும் பட்டுபுழு வளர்ப்பு போன்ற தொழில்கள் தொடங்கலாம். ஆனால் அதிகபட்ச கடன் தொகை ரூ.10 லட்சம் ஆகும்.

    மேலும் அறுவடை எந்திரம் மற்றும் விவசாய உபகரணங்கள் வாடகைக்கு விடுதல் மற்றும் கல்யாண மண்டபம், தங்கும் விடுதி, சேமிப்பு கிடங்கு, எரி பொருள் விற்பனை நிலையம் போன்றவை அமைக்கலாம்.

    உணவு பதப்படுத்துதல், ஆயத்த ஆடைகள் தயாரித் தல், மளிகை கடை, வணிக பொருட்களின் மொத்த மற்றும் சில்லறை விற்பனை, அழகு நிலையம், உடற்பயிற்சி கூடம், நகரும் அலகுகள் கொண்ட சுற்றுலா ஊர்திகள், கலவை எந்திரங்கள், மருத்துவ அவசர ஊர்தி, குளிர்சாதனம் பொருத்திய ஊர்தி உள்ளிட்ட எந்த திட்டமா கவும் இருக்கலாம். இயங்கி கொண்டிருக்கும் தொழில் அலகுகளின் விரி வாக்கம், பல்துறையாக்கம், நவீன மாக்கல், தொழில் நுட்ப மேம்பாட்டு முன்மொழிவு களுக்கும் உதவி வழங்கப்படும்.

    மானியம் மொத்த திட்டத் தொகையில் 35 விழுக்காடு ஆகும். மானிய உச்ச வரம்பு ரூ.1.50 கோடி. இத்துடன் கடன் திரும்பச் செலுத்தும் காலம் முழுவதும் 6 விழுக்காடு வட்டி, மானிய மும் வழங்கப்படும். தொழில் முனைவோர் தம் சொந்த நிதியில் செயல்படுத்தும் திட்டங்களுக்கும் மானியம் உண்டு.

    ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவை சேர்ந்த தனி நபர், பங்குதாரர் நிறுவனம், ஒரு நபர் கம்பெனி, தனியார் வரைய றுக்கப்பட்ட நிறுவனங்களும் (பிரைவேட் லிமிடெட்) இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.

    இந்த திட்டத்தின்கீழ் பயன்பெற 18 வயது முடிந்து அதிகபட்சம் வயது 55 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களுக்கு கல்வி தகுதி தேவையில்லை. மொத்த திட்டத் தொகையில் 65 விழுக்காடு வங்கி கடனாக பெறுவதற்கு 35 விழுக்காடு அரசின் பங்காக முன்முனை மானியமாக வழங்கப்படும். எனவே, பயனாளர்களுக்குத் தம் பங்காக நிதி செலுத்த வேண்டிய தேவை இருக்காது.

    தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி மற்றும் குறிப்பிட்ட திட்டம் தொடர்பான சிறப்பு பயிற்சி அல்லது திறன் மேம்பாட்டு பயிற்சி தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலமாக இலவசமாக வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • அவனியாபுரத்தில் அடிப்படை வசதி கேட்டு பொதுமக்கள் மறியல் செய்தனர்.
    • அவனியாபுரம் 100-வது வார்டு ஜே.ஜே. நகர் பகுதியில் சாக்கடை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை.

    மதுரை

    மதுரை மாநகராட்சி அவனியாபுரம் 100-வது வார்டு ஜே.ஜே. நகர் பகுதியில் சாக்கடை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதை செய்து தரக்கோரி பலமுறை அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்காததால் விரக்தியடைந்த அந்த பகுதி பொதுமக்கள் இன்று 100-க்கும் மேற்பட்டோர் மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் அரசு பஸ்சை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த அவனியாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், கவுன்சிலர் முத்துலட்சுமி அய்யனார், மாநகராட்சி பொறியாளர் செல்வ விநாயகம் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கைகளை முறையாக நிறைவேற்றுவோம் என்று அதிகாரிகள் வாக்குறுதி அளித்தனர். அதன் பின்னர் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா 2-ந் தேதி நடக்கிறது.
    • விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 3-ந்தேதி மொட்டையரசு திருவிழா நடைபெறும்.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் பிரசித்தி பெற்றது வைகாசி விசாக திருவிழா. ஆண்டு தோறும் வைகாசி மாதம் 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா, கடந்த 24-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

    விழாவையொட்டி தினமும் உற்சவர் சன்னதி யில் இருந்து சுப்பிரமணிய சுவாமி-தெய்வானையுடன் புஷ்பஅங்கி அலங்காரத்தில் கோவில் வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு மண்டபத்தை 3 முறை சுற்றி வந்து அலங்கரித்து வைக்கப் பட்டிருந்த ஊஞ்சலில் எழுந்தருளிய சுப்பிரமணிய சுவாமி-தெய்வானைக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, சிறப்பு தீபாராதனை காட்டினர்.

    இதேபோல வருகிற 1-ந் தேதி வரை இந்த வைபவம் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஜூன் 2-ந் தேதி(வெள்ளிக்கிழமை) வைகாசி விசாகம் நடக்கிறது.இதையொட்டி அன்று அதிகாலை 4.30 மணியள வில் சண்முகர் சன்னதியில் சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு தங்க குடத்தில் சிறப்பு பாலா பிஷேகம் நடைபெறும்.

    அதனைத்தொடர்ந்து சண்முகர் வள்ளி, தெய்வானையுடன் கோவில் கம்பத்தடி மண்டபத்தின் அருகே உள்ள விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருளுவார். அங்கு பக்தர்கள் நேர்த்திக்கடனாக கொண்டு வரும் பால்குடங்கள் கொண்டு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெறும்.

    இந்த விழாவில் மதுரை மாவட்டம் மட்டுமின்றி சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தும் வகையில் பால் காவடி, பன்னீர் காவடி, பறவை காவடி, பால்குடம் எடுத்து வருவார்கள். மேலும் அன்றைய தினம் காலை முதல் மாலை வரை தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வரும் பாலால் சண்முகருக்கு அபிஷேகம் செய்யப்படும்.

    பக்தர்களுக்காக கோவில் நிர்வாகம் சார்பில் ஆங்காங்கே மின்விசிறிகளும் ஏர்கூலரும் வைக்கப் பட்டுள்ளன. ஆங்காங்கே குடிநீர் மற்றும் நீர்-மோர் வழங்கவும் கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 3-ந்தேதி மொட்டையரசு திருவிழா நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.

    • வாடிப்பட்டியில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • இதில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் பங்கேற்று பேசினார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள தாதம்பட்டி நீரேத்தான் மந்தை திடலில் தமிழக அரசை கண்டித்து மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    பேரூர் செயலா ளர் டாக்டர் கே.எஸ். அசோக்குமார் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் எம்.வீ. கருப்பையா, எஸ்.எஸ். சரவணன், ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், காளிதாஸ், கணேச ன், அரியூர் ராதா கிருஷ்ணன், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் சோனை, மாவட்டத் துணைச் செயலாளர் லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். யூனியன் சேர்மன் மகா லட்சுமி ராஜேஷ் கண்ணா வரவேற்றார். கவுன்சிலர் கே.எஸ்.இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தை முன்னாள் அமைச்சர் உதயகுமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கொலை, கொள்ளை, வழிப்பறி போன்றவை நடந்து வருகிறது. இந்த விடியா அரசு அ.தி.மு.க. கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் முடக்கி விட்டது.

    கள்ளச்சாராய சாவுக்கு காரணமான அமைச்சர் செந்தில்பாலாஜி பதவி விலக வேண்டும். அவரை நீக்கும் வரை அ.தி.மு.க.வில் போராட்டம் தொடரும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அவைத் தலைவர் ராமசாமி, பேரூர் பேரவை செயலாளர் தனசேகரன், மருதையா, ரவி செல்வராஜ், பொன்ராம், ஊராட்சி மன்ற தலைவர்கள், பேரூராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், கூட்டுறவு சங்க தலைவர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பேரூர் துணை செயலாளர் சந்தன துரை நன்றி கூறினார்.

    • வாடிப்பட்டி அருகே விவசாயிகளின் அடிப்படை விவர பதிவேற்ற முகாம் நடந்தது.
    • இந்த முகாமை வேளாண் ஆணையர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டார வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் விராலிப் பட்டி பஞ்சா யத்தில் வேளாண்மை அடுக்கு என்ற விவசாயிகள் அடிப்படை விவரங்களை பதிவேற்றும் முகாம் நடந்து வருகிறது. இந்த முகாமை வேளாண்மை உற்பத்தி ஆணையர்-அரசு செயலாளர் சமயமூர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    விராலிப்பட்டி ஊராட்சி யில் மொத்தம் 804 புலஎண்களில் 517 புல எண்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.மீதமுள்ள புல எண்கள் விரைந்து பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. நில விவரங்கள் இணைக்கப் பட்ட விவசாயிகளின் விவரங்களை வேளாண் சார்ந்த 13 துறைகளின் திட்டங்களை ஒற்றை சாளர வலைதளம் மூலம் விவசாயிகள் ஒரே இடத்தில் பதிவு செய்து அரசின் உதவிகளை பெற்றுக் கொள்ளலாம்.

    நிதி திட்ட பலன் ஆதார் எண் அடிப்படையில் வங்கிக் கணக்கிற்கு நேரடி பண பரிமாற்றம் மூலம் அனுப்பப் படும். இந்த வலைதளம் பதிவேற்றம் செய்வதன் மூலம் அரசு வழங்கும் நலத்திட்டங்கள் சரியான பயனாளிகளுக்கு சென்றடைய முடியும். விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் திட்ட பலன் பெறலாம்.

    கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப் படும் திட்டங்கள், 300 குடும்பங்களுக்கு 2 தென்னங் கன்று வழங்குதல், திரவ உயிர் உரம், தெளிப்பான்கள் மற்றும் மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் தார்பாலின், ஜிப்சம், ஜிங் சல்பேட், பண்ணை கருவிகள், வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் வழங்கப் படும் பவர் டிரில்லர், பண்ணை குட்டை அமைத்தல் மற்றும் ஆதிதிராவிடர் விவசாயி களுக்கு ஆழ்துளை கிணறு ஆகியவை மானியத்தில் வழங்கப்படும்

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது கலெக்டர் சங்கீதா, வேளாண்மை இணை இயக்குநர் சுப்புராஜ், துணை இயக்குநர் (மத்திய திட்டம்) அமுதன் மற்றும் அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவர் காளியம்மாள் ஜெயபாலன், துணைத்தலை வர் மணிகண்டன், ஊராட்சி செயலாளர் செந்தாமரை மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • ஜெனகை மாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் கடந்த 22-ந் தேதி வைகாசி பெருந் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் அம்மன் புறப்பாடு நடை பெற்றது.

    இதில் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான பால்குடம், அக்னிச்சட்டி எடுக்கும் திருவிழா ேநற்று நடந்தது.இதில் பக்தர்கள் வைகையாற்றுக்கு சென்று பூஜை செய்து பால்குடம் மற்றும் அக்னி சட்டி எடுத்து ஊர்வலமாக வந்தனர். அவர்கள் கோவில் முன்புள்ள கொடி கம்பத்தைச் சுற்றி 4 ரத வீதிகளை வலம் வந்தனர்.

    நேர்த்திக்கடனுக்காக உருவ பொம்மை, ஆயிரங்கண்பானை, 21அக்னிச்சட்டி, கரும்புதொட்டிலில் குழந்தை எடுத்துவருதல், கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி வருதல், அலகு குத்தி வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • பள்ளி வளாகத்தில் புகுந்த புள்ளி மான் மீட்கப்பட்டது.
    • மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட நகரப் பகுதியில் மான் வந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

    மதுரை

    மதுரை அவனியாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்துக்குள் வந்த 4 வயதுடைய புள்ளி மான் பொதுமக்கள் நடமாட்டத்திற்கு பயந்து அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் புகுந்தது. அங்கிருந்து தப்பி செல்ல முயன்ற மான், தடுப்பு சுவரில் மோதி காயத்துடன் மயங்கி விழுந்தது. இதனைக் கண்ட பொதுமக்கள் அவனியாபுரம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். வனத்துறையினர் வரும் வரை மான்களின் கால்கள் கட்டப்பட்டு தனியார் நிறுவனத்தில் போலீசார் பாதுகாப்புடன் வைத்திருந்தனர்.

    தொடர்ந்து வனத்துறையினர் மானை மீட்டு முதலுதவி அளித்து வாகனத்தில் எடுத்து சென்றனர். இதுபோன்று மான்கள் காடுகள் நிறைந்த பகுதியில் தான் இருக்கும். மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட நகரப் பகுதியில் மான் வந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

    • சிகிச்சை பலனின்றி கார்த்திக், அவரது தாயார் லட்சுமி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    • படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நாகலட்சுமி, பிரவீன்குமார், வினோத் ஆகியோர் மேல்சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    திருமங்கலம்:

    திருப்பூர் ராசய்யா காலனியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் கார்த்திக் என்ற கருப்பசாமி. மாரிமுத்து மனைவி லட்சுமி(43). மற்றொரு மகன் வினோத்(24). உறவினர்கள் ஆனந்த் மனைவி நாகலட்சுமி (37), கருப்பசாமி மகன் பிரவின்குமார்(16).

    விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணை கோவில் திரு விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவு மாரிமுத்து குடும்பத்தினர் காரில் புறப்பட்டனர். காரை கார்த்திக் ஓட்டினார். இன்று அதிகாலை திருமங்கலம்-விருதுநகர் 4 வழிச்சாலையில் உள்ள கரிசல்பட்டி மேம்பாலத்தில் சென்ற போது எதிர்பாராத விதமாக பக்கவாட்டு சுவரில் கார் மோதியது.

    இந்த விபத்தில் காரில் இருந்த 5 பேரும் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்த திருமங்கலம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு திருமங்கலம் அரசுமருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திக், அவரது தாயார் லட்சுமி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நாகலட்சுமி, பிரவீன்குமார், வினோத் ஆகியோர் மேல்சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    ×