என் மலர்
கிருஷ்ணகிரி
- ஆசிரியர் ஒருவரின் மகன் திருமண விழா கடந்த 1-ந் தேதி நடந்தது.
- ஆசிரியர் உசேனை பிடித்து கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்றில் 15 வயது மாணவன் 10-ம் வகுப்பு படித்து வருகிறான். அந்த பள்ளியை சேர்ந்த ஆசிரியர் ஒருவரின் மகன் திருமண விழா கடந்த 1-ந் தேதி நடந்தது. இந்த திருமணத்திற்கு அந்த மாணவன் இரவில் சென்று உள்ளான்.
அப்போது அதே பள்ளியில் ஆங்கில ஆசிரியராக உள்ள உசேன் (வயது 42) என்பவர் திருமண மண்டபத்தில் உள்ள கழிப்பறையில் வைத்து அந்த மாணவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவன் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தான். அவர் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதாகவும், யாரிடமும் நடந்த சம்பவம் குறித்து கூற வேண்டாம் எனவும் கூறியதாக தெரிகிறது. இதில் விரக்தி அடைந்த மாணவன் தனது பெற்றோரிடம் இந்த சம்பவம் குறித்து தெரிவித்தான். அவர்கள் தலைமை ஆசிரியரிடம் முறையிட்டனர்.
இந்த நிலையில் பள்ளிக்கு சென்ற மாணவனை சக மாணவர்கள் சிலர் கேலி,கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பாதிக்கப்பட்ட மாணவன் நேற்று முன்தினம் வீட்டின் அருகில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றான். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உறவினர்கள் மாணவனை காப்பாற்றினர். இதனால் பள்ளி முன்பு அப்பகுதி பொதுமக்கள் நேற்று திரண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து போலீசார் விரைந்து சென்று ஆசிரியர் உசேனை பிடித்து கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு ஆசிரியரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் இரவு ஆசிரியர் உசேன் கைது செய்யப்பட்டார். அவர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனிராஜ் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர்கள் மாணவன் மற்றும் ஆசிரியர், தலைமை ஆசிரியர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
இதனிடையே கைதான ஆசிரியர் உசேனை பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்து முதன்மை கல்வி அலுவலர் முனிராஜ் உத்தரவிட்டார். இதுகுறித்து அவர் மேலும் கூறும் போது, 'கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தொடர்ந்து விசாரணை நடத்தி இது போன்ற குற்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
கிருஷ்ணகிரி அருகே மாணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கோபாலன் இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
- போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தளி:
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி பகுதியில் வசிப்பவர் கோபாலன் (வயது70). ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர். இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் 13-ந் தேதி தன்னுடைய சேமிப்பு கணக்கில் வைத்துள்ள பணத்தை தேன்கனிக்கோட்டை ஒசூர் சாலையில் உள்ள தனியார் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க சென்ற போது 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் பணம் எடுத்து தருவதாக கூறி ஏ.டி.எம். கார்டை வாங்கியுள்ளார்.
ஆனால் பணம் வர வில்லை என கூறி வேறு ஒரு கார்டை கொடுத்து அனுப்பி உள்ளார். அவர் சென்ற பின் கோபாலன் கார்டை பயன்படுத்தி ரூ.18,300 பணம் எடுத்து உள்ளார். தன்னுடைய செல்போனுக்கு தகவல் வந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த கோபாலன் இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ், கண்ணன், தனிபரிவு தலைமை காவலர் ரமேஷ் ஆகியோர் ஏ.டி.எம். மில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அதில் பதிவாகி இருந்த வாலிபரின் உருவத்தை வைத்து தேடி வந்தனர்.
தொடர்ந்து தேன்கனிக்கோட்டை பகுதியில் இதே போல் புகார்கள் வந்து உள்ளது. இந்நிலையில் நேற்று சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது தேன்கனிக்கோட்டை-ஒசூர் சாலையில் உள்ள ஏ.டி.எம். அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்து வாலிபரை பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர்.
அப்போது அஞ்செட்டி அருகே உள்ள எருமுத்தனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ஸ்ரீதர் (20) என்பதும், 10-ம் வகுப்பு படித்து விட்டு, ஓட்டலில் சர்வர் வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது. அவரிடம் இருந்த 20 ஏ.டி.எம். கார்டுகள், ரூ.58 ஆயிரம் பணம் பறிமுதல் செய்தனர்.
பின்னர் இது குறித்து தேனிகனிக்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை செய்ததில் ஸ்ரீதர் கடந்த 1 வருடங்களாக பணம் எடுக்க வரும் வயதான நபர்களை குறி வைத்து அவர்களுக்கு உதவி செய்வது போல் நடித்து தன்னிடம் உள்ள போலி ஏ.டி.எம். கார்டை எந்திரத்தில் நுழைத்து அவர்கள் கூறும் பாஸ் வேர்டை அடித்து பணம் வரவில்லை என கூறி அனுப்பி விட்டு, பின்னர் அவர்கள் கொடுத்த அசல் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பணம் எடுத்து திருடியதாகவும், மேலும் திருடிய பணத்தை சூதாடியும், ஒரு மோட்டர் சைக்கிளையும் வாங்கியதாக ஸ்ரீதர் வாக்கு மூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் ஸ்ரீதர் இது போன்று பலரிடம் மோசடியில் ஈடுப்பட்டுள்ளாரா?
தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- செங்கோட்டையன் அரசியலில் மிகப்பெரிய அனுபவம் கொண்டவர்.
- முத்துசாமிக்கு சில சோதனைகள் வந்தபோது இந்த இயக்கத்தை காட்டிக்கொடுத்துவிட்டு எதிரணிக்கு சென்று இன்று அமைச்சராக இருக்கிறார்.
கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அண்ணன் செங்கோட்டையன் அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவர்.
புரட்சித் தலைவர் மறைவிற்கு பின்பாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இந்த இயக்கத்தை தலைமை ஏற்று வழிநடத்தியபோது, இயக்கத்திற்கு ஒரு தளபதியாக செயலாற்றியவர். அரசியலில் மிகப்பெரிய அனுபவம் கொண்டவர். அரசியலில் ஏற்றத்தாழ்வுகளை சந்தித்தவர். அவர் உழைப்பிற்கு ஏற்ப புரட்சித் தலைவி உயர்ந்த பதவிகளை கொடுத்து அழகு பார்த்தார்.
புரட்சித் தலைவி அவரை எந்தளவிற்கு மதிப்போடும், மரியாதையோடும் வழி நடத்தினார்களோ அதேபோல் இன்றளவில் கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார், மூத்த தலைவராக இருக்கக்கூடிய செங்கோட்டையன் அவர்களை மதித்து அழைத்து செல்கிறார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
அண்ணன் செங்கோட்டையனை பொறுத்தவரை இந்த இயக்கத்தோடு ஒன்றிணைந்து இருப்பவர். அவரோடு அந்த மாவட்டத்தில் இருந்த முத்துசாமிக்கு சில சோதனைகள் வந்தபோது இந்த இயக்கத்தை காட்டிக்கொடுத்துவிட்டு எதிரணிக்கு சென்று இன்று அமைச்சராக இருக்கிறார்.
ஆனால் அதே மாவட்டத்தில் இருக்கின்ற தலைவர் செங்கோட்டையன், பல்வேறு சோதனைகளை சந்தித்தாலும் நம்முடைய உழைப்பால் இந்த இயக்கம் வளர்ந்திருக்கிறது என்ற சிந்தனையோடு இந்த இயக்கத்திற்கு கடைசி வரை உறுதுணையாக இருப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
அ.தி.மு.க. என்ற இயக்கம் முழுமையாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பின்னால் உள்ளது. அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட எந்த உரிமையும் இல்லை.
பொதுச்செயலாளர் இ.பி.எஸ். குறித்து பேசுவதற்கு எந்தவித தகுதியும் தார்மீக உரிமையும் டிடிவி தினகரனுக்கு இல்லை. அரசியல் ரீதியாக, எதிர்க்கட்சியாக விமர்சிக்கலாம். எங்களுடன் இணைவோம் என சொல்வதற்கு டி.டி.வி. தினகரனுக்கு உரிமையில்லை.
நடிகரும் த.வெ.க. தலைவருமான விஜய் பாதுகாப்புக்காக Y பிரிவு பாதுகாப்பு தரப்பட்டிருந்தால் மகிழ்ச்சி. அரசியல் ரீதியாக த.வெ.க. தலைவர் விஜயை தன்பக்கம் இழுப்பதற்காக Y பிரிவு பாதுகாப்பு தரக்கூடாது என்று கூறினார்.
- தாலி உள்பட 20 பவுன் நகைகளை பறித்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பர்கூர்:
பர்கூர் அருகே வீடு புகுந்து கணவன்-மனைவியை கத்தி முனையில் மிரட்டி மூகமூடி கொள்ளையர்கள் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து பர்கூர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே சிகரலபள்ளி கல்லேத்துப்பட்டி கிராமத்தில் திருப்பத்தூர் சாலையில் சுந்தரேசன் (வயது65) என்பவர் வசித்து வருகிறார்.
விவசாயியான இவருக்கு மஞ்சுளா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு குழந்தை யாரும் இல்லை.
இந்த நிலையில் கணவன்-மனைவி இருவரும் அவர்களது நிலத்தில் விவசாயம் செய்து தனியாக வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை சுந்தரேசன் வீட்டின் அருகில் நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டது. அப்போது தூங்கி கொண்டிருந்த சுந்தரேசன் எழுந்து வந்து கதவை திறந்து பார்க்க முயன்றார். அப்போது அங்கு முகமூடி அணிந்து மறைந்து இருந்து 3 நபர்கள் கதவின் அருகே வந்து சுந்தரேசனை வீட்டிற்குள் தள்ளி கதவை சாத்தி கொண்டனர்.
இதைத்தொடர்ந்து மர்ம நபர்கள் 3 பேரும் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுந்தரேசனை மிரட்டினர். அப்போது அவர் சத்தம்போடவே அவரை வெட்டுவது போல் மர்ம நபர் ஒருவர் கத்தியை வீசும்போது சுந்தரேசனின் கையில் வெட்டியது. இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
தனது கணவரின் சத்தம் கேட்டு மற்றொரு அறையில் தூங்கி கொண்டிருந்த மஞ்சுளாவும் அங்கு வந்தார். அப்போது இருவரையும் கத்தி முனையில் மர்ம நபர்கள் மிரட்டி பீரோவில் இருந்த நகைகளும், மஞ்சுளா அணிந்திருந்த தாலி உள்பட 20 பவுன் நகைகளை பறித்தனர்.
மேலும், பீரோவில் இருந்த ரூ.50 ஆயிரம் பணத்தையும் கொள்ளையடித்து அங்கிருந்து அவர்கள் தப்பி ஓடினர். உடனே கணவன்-மனைவி இருவரும் திருடன், திருடன் என்று சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் ஓடிவருவதற்குள் அந்த 3 மர்ம நபர்கள் அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடிவிட்டனர்.
அப்போது அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் சுந்தரேசனை மீட்டு சிகிச்சைக்காக பர்கூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்றுவிட்டு உடனே அவர் வீடு திரும்பினார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த மாவட்ட எஸ்.பி. தங்கதுரை மற்றும் பர்கூர் போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இதில் கணவன்-மனைவி இருவரும் மட்டும் தோட்டத்திற்குள் வீட்டில் வசித்து வருவதை நோட்டமிட்டு 3 மர்ம நபர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சுந்தரேசன் வசித்து வந்த வீட்டின் அருகே உள்ள சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுந்தரேசனையும், அவரது மனைவியையும் மர்ம நபர்கள் கத்தி முனையில் மிரட்டி பணம், நகை கொள்ளையடித்த சம்பவம் காட்டுத்தீ போல்அந்த பகுதியில் பரவியதால், அவர்களது உறவினர்கள் உடனே சம்பவ நடத்த வீட்டிற்கு திரண்டு வந்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சிறிது நேரத்தில் தீ மள, மள என்று பரவி கொழுந்து விட்டு எரிந்தது.
- தீ விபத்து குறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சுண்ணாம்பு ஜீபி பகுதியை சேர்ந்தவர்கள் சம்பங்கி ராமையா மற்றும் ரமேஷ் பாபு. இவர்கள் உறவினர்கள் ஆவர். இவர்களுக்கு சொந்தமான ஸ்கிராப் குடோன் அதே பகுதியில் உள்ளது. இங்கு ஏராளமான பழைய இரும்பு சாமான்கள் பழைய பெயிண்ட் டப்பாக்கள், பேப்பர்கள், பிளாஸ்டிக் சாமான்கள் உள்ளிட்ட பழைய பொருட்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் இன்று அதிகாலை அந்த குடோனில் திடீரென தீ பிடித்தது. சிறிது நேரத்தில் தீ மள, மள என்று பரவி கொழுந்து விட்டு எரிந்தது. மேலும் அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் தீ நீண்ட நேரம் எரிந்தவாறே இருந்தது. இது குறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பில் சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- பள்ளியில் மாணவி தாலியை மறைத்தபடி வந்ததை ஆசிரியர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
- கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இது தொடர்பாக ஆசிரியர்கள் புகார் அளித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமிக்கும் காவேரிப்பட்டணம் பகுதியை சேர்ந்த 25 வயது நபருடன் அண்மையில் திருமணம் நடந்துள்ளது.
திருமணம் முடிந்த நிலையில், தாலியை ஆடைக்குள் மறைத்து வைத்தபடியே மாணவி பள்ளிக்கு வந்துள்ளார். ஆனால் மாணவி தாலியை மறைத்தபடி வந்ததை ஆசிரியர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இதனையடுத்து ஆசிரியர்கள் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இது தொடர்பாக ஆசிரியர்கள் புகார் அளித்தனர்.
வீட்டில் விஷேசம் எனக்கூறிய மாணவி 3 நாட்கள் திருமணத்திற்கு விடுப்பு எடுத்தது விசாரணையில் தெரியவந்த நிலையில் திருமணம் செய்த 25 வயது நபர் மற்றும் பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- கடந்த 5 நாட்களுக்கு பின்பு நேற்று வழக்கமாக பள்ளி தொடங்கப்பட்டது.
- மாணவிகளுக்கு மனநல ஆலோசனைகள் மருத்துவ குழுவினரால் வழங்கும் முகாம் நடைபெற்றது.
போச்சம்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே அரசு பள்ளி மாணவியை அதே பள்ளியில் பணியாற்றிய 3 ஆசிரியர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகாரின் பேரில் பர்கூர் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து அதில் தொடர்புடையதாக கூறப்பட்ட சின்னசாமி, பிரகாஷ், ஆறுமுகம் ஆகிய 3 ஆசிரியர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் இந்த 3 ஆசிரியர்களை பணியிடம் நீக்கம் செய்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் தாம்சன் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் பள்ளியில் கடந்த 5 நாட்களுக்கு பின்பு நேற்று வழக்கமாக பள்ளி தொடங்கப்பட்டது.
இதில் அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு வருகை தந்தனர். முன்னதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் கலெக்டர் தினேஷ்குமார் நேரில் சந்தித்தபோது கோரிக்கை வைத்தனர்.
அந்த கோரிக்கையில் பள்ளி வளாகத்தில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும். இதில் தொடர்புடைய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வைத்தனர்.
இந்நிலையில் பள்ளி வளாகம் முழுவதும் 12 சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கும் பணி தொடங்கியது. மேலும் மாணவிகளுக்கு மனநல ஆலோசனைகள் மருத்துவ குழுவினரால் வழங்கும் முகாம் நடைபெற்றது. கிராமத்தில் மற்றும் பள்ளி வளாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- இன்று வழக்கம் போல் பள்ளி திறக்கப்பட்டு தொடங்கியது.
- பள்ளி முழுவதும் சி.சி.டி.வி. கேமரா கொண்டு கண்காணிக்க வேண்டும்.
போச்சம்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் 13 வயது சிறுமி 3 ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்.
இதுதொடர்பாக பர்கூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி 3 ஆசிரியர்களை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தில் காரணமாக பள்ளிக்கு 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு இன்று வழக்கம் போல் பள்ளி திறக்கப்பட்டு தொடங்கியது.
முன்னதாக பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் மற்றும் அப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர் மாவட்ட கலெக்டரை நேற்று முன்தினம் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.
இதில் அந்தப் பள்ளியில் பணியாற்றிய தலைமை ஆசிரியர் உள்பட அனைத்து ஆசிரியர்களும் மாற்றம் செய்து புதிய ஆசிரியர்களை நியமிக்கப்பட வேண்டும்.
அதேபோல பள்ளி முழுவதும் சி.சி.டி.வி. கேமரா கொண்டு தொடர் கண்காணிப்பில் கண்காணிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்தனர்.
கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் உறுதி அளித்ததன் பேரில் இன்று மீண்டும் பள்ளி தொடங்கியுள்ளது. இதில் பலத்த போலீஸ் பாது காப்புடன் இன்று பள்ளி தொடங்கியது.
- நவாப்பின் மனைவி பரிதா நவாப் கிருஷ்ணகிரி நகராட்சி தலைவராக உள்ளார்.
- கடிகாரத்தில் ரகசிய கேமிராவை வைத்து யார் என்று விசாரணை.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் காந்தி சாலையில் நகராட்சி அலுவலகம் உள்ளது. இங்கு ஆணையாளராக கிருஷ்ண மூர்த்தி பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் ஆணையாளர் அறையில் கடந்த மாதம் 25-ந் தேதி துப்புரவு அலுவலர் ராமகிருஷ்ணனை, நகர தி.மு.க. செயலாளர் நவாப் தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது.
இந்த நிலையில் கடந்த 29-ந் தேதி மாநில மாநகராட்சி, நகராட்சி அலுவலர்கள் சங்கம் சார்பில் தி.மு.க. நகர செயலாளர் நவாப்பை கண்டித்து துப்புரவு அலுவலர் ராமகிருஷ்ணனுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதற்கிடையே நகராட்சியில் பணிபுரியும் டெங்கு தடுப்பு பணியாளர்கள் நகராட்சி தலைவர் பரிதா நவாப் மற்றும் ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தியுடம் ஒரு புகார் கொடுத்தனர். அதில் துப்புரவு அலுவலர் ராமகிருஷ்ணன் தங்களை தரக்குறைவாக பேசுவதாகவும், மன உளைச்சல் கொடுப்பதாகவும் கூறி இருந்தனர்.
நகராட்சி அலுவலகத்தில் பணிபுரிய கூடிய டெங்கு தடுப்பு பணியாளர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு திரண்டு துப்புரவு அலுவலர் ராம கிருஷ்ணனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
தொடர் போராட்டங்களால் பரபரப்பாக இருந்த கிருஷ்ணகிரி நகராட்சியில், தற்போது அமைதி திரும்பிய நிலையில், மீண்டும் மற்றொரு சூறாவளியாக ஆணையாளர் அறையில் கடிகாரத்தில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த வீடியோவில் ஆணையாளர் அறையில் கடந்த 25-ந்தேதி துப்புரவு அலுவலர் ராமகிருஷ்ணன், நகர தி.மு.க. செயலாளர் நவாப் ஆகியோர் அமர்ந்து காரசாரமாக பேசுவதும், நகராட்சி ஆணையாளர் அவர்களை சமாதானப் படுத்துவதுமான வீடியோ காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து கடிகாரத்தில் ரகசிய கேமிராவை வைத்து யார்? என்பது குறித்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி நகர செயலாளர் நவாப்பை தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டு அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.
இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. நகர செயலாளர் எஸ்.கே.நவாப் கழக கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட நவாப்பின் மனைவி பரிதா நவாப் கிருஷ்ணகிரி நகராட்சி தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
- போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:
உத்தனப்பள்ளி அருகே டிரைவர் தூக்க கலகத்தில் டேங்கர் லாரியை ஓட்டியதால் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் டிரைவர் உட்பட 2 பேர் பலியாகினர். ஆறாக ஓடிய பால் வீணானது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
கர்நாடக மாநிலத்தில் இருந்து கேரளாவுக்கு ஒரு டேங்கர் லாரியில் 28 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு பால் ஏற்றி சென்றார். இந்த லாரியை நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த டிரைவர் ராஜேஷ்குமார் என்பவர் ஓட்டி சென்றார். அவருடன் அந்த லாரியில் அருள் (வயது27) என்பவரும் பயணம் செய்துள்ளார்.
பால் ஏற்றி சென்ற டேங்கர் லாரி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கரடிகுட்டை என்ற இடத்தில் சென்றபோது தூக்க கலக்கத்தில் இருந்த டிரைவர் ராஜேஷ் குமாரின் கட்டுப்பாட்டை இழந்து டேங்கர் லாரி சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் டேங்கர் லாரி டிரைவர் ராஜேஷ் குமார் மற்றும் அவருடன் பயணம் செய்த அருள் ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்தனர். தொடர்ந்து இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து அறிந்த அப்பகுதி பொதுமக்கள் உத்தனப்பள்ளி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தால் டேங்கர் லாரியில் ஏற்றிச் செல்லப்பட்ட பால் சாலையில் கொட்டி அந்த பகுதி முழுவதும் ஆறாக ஓடி வீணானது.
இந்த விபத்து குறித்து உத்தனபள்ளி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- ஆசிரியர்கள் 3 பேரும் பணி சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.
- போலீசார் பெற்றோர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
போச்சம்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகாவில் ஒரு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. அந்த பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் 13 வயதுடைய மாணவி பள்ளி ஆசிரியர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார்.

இது தொடர்பாக பர்கூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி, ஆசிரியர்கள் ஆறுமுகம் (வயது48), சின்னசாமி (57), பிரகாஷ் (37) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.
பின்னர் நேற்று முன்தினம் இரவு அவர்களை போலீசார் கிருஷ்ணகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் தனி அறையில் அடைத்தனர். இதற்கிடையில் ஆசிரியர்கள் 3 பேரும் பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினரும், பள்ளி கல்வி துறையினரும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் காரணமாக பள்ளிக்கு நேற்று முன்தினம் விடுமுறை விடப்பட்டது.
இதற்கிடையே அரசு தொடக்கப்பள்ளி இணை இயக்குனர் சாந்தி தலைமையில் கல்வித்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியை, மற்றும் ஆசிரியைகளிடம் விசாரணை நடத்தினார்கள். இதையடுத்து நேற்று 2-வது நாளாக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
நேற்று 2-வது நாளாக பர்கூர் துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துகிருஷ்ணன் தலைமையில் 5 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் பள்ளி வளாகத்தில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். சம்பந்தப்பட்ட பள்ளியில் உள்ள மற்ற மாணவ, மாணவிகளுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கி பள்ளியை திறக்க அதிகாரிகள் முடிவு செய்து இன்று காலை பள்ளி திறக்கப்பட்டது.
அப்போது மாணவர் களின் பெற்றோர்கள் பள்ளி முன்பு இன்று காலை திரண்டு வந்து இனி தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று கூறி திடீரென்று ஆசிரியர்களு டனும், அதிகாரிகளுடனும் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட னர். அப்போது அங்கு பாது காப்பு பணியில் இருந்த போலீசார் பெற்றோர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து பள்ளி முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கைதான ஆசிரியர்கள், வேறு மாணவிகள் யாரிடமும் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனரா? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கைதான 3 பேருக்கு ஆதரவாக நீதிமன்ற வழக்கு களில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராக போவ தில்லை என்று கிருஷ்ணகிரி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
இதேபோல் மாணவி கூட்டு பலாத்காரத்தை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கிருஷ்ணகிரியில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார் என்று குறிப்பிடத்தக்கது.
- 8-ம் வகுப்பு மாணவி கர்ப்பம் அடைந்த சம்பவத்தில் அப்பள்ளியில் பணிபுரிந்த 3 ஆசிரியர்கள் கைது.
- 3 பேரையும் சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு.
கிருஷ்ணகிரி அருகே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 8-ம் வகுப்பு மாணவி கர்ப்பம் அடைந்த சம்பவத்தில் அப்பள்ளியில் பணிபுரிந்த 3 ஆசிரியர்கள் பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், 3 பேரையும் சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், "பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு பொறுப்பேற்று, பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய தனக்கு திராணியில்லை என்று பகிரங்கமாக அறிவித்து மு.க.ஸ்டாலின் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இபிஎஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் 13 வயது சிறுமி, அரசுப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மூவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
"அரசுப்பள்ளி மற்றும் கல்லூரிகளிலேயே பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை" என்று பெண் பாதுகாப்பு மீதான பொறுப்புடன் நான் சுட்டிக்காட்டிய போது, "எடப்பாடி பழனிசாமி பீதியைக் கிளப்புகிறார்" என்று சொன்ன ஸ்டாலின் மாடல் திமுக அரசின் அமைச்சர்கள், இப்போது என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?
அரசுப்பள்ளி மாணவிக்கு, தான் படிக்கும் பள்ளிகளிலேயே பாதுகாப்பு இல்லை என்பது வேலியே பயிரை மேய்கின்ற செயல்,
ஸ்டாலின் மாடல் திமுக அரசே இக்கொடுரமானச் செயலுக்கு முழு பொறுப்பேற்க வேண்டும்.
பெண்களுக்கு எங்குமே பாதுகாப்பு இல்லை என்ற நிலைக்கு தமிழ்நாட்டைத் தள்ளியதற்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும்.
கொஞ்சமேனும் மனசாட்சி இருப்பின், பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு பொறுப்பேற்று, பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய தனக்கு திராணியில்லை என்று பகிரங்கமாக அறிவித்து மு.க.ஸ்டாலின் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்!
போச்சம்பள்ளி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மூவர் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுத்து, உச்சபட்ச தண்டனை கிடைக்கப் பெறுவதை உறுதிசெய்ய வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.






