என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது- கே.பி.முனுசாமி
- மத்திய அரசு, மாநில அரசை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது.
- நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் விவரங்களை புத்தகமாக அச்சிட்டு வெளியிட வேண்டும்.
கிருஷ்ணகிரி:
அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. கிருஷ்ணகிரி அருகே கரடி அள்ளியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மும்மொழி கொள்கையை அமல்படுத்தினால் தான், நிதியுதவி கிடைக்கும் என மத்திய மந்திரி கூறுவது, சர்வாதிகார மனப்பான்மையை காட்டுகிறது. மும்மொழி கல்வி கொள்கைகயை அ.தி.மு.க. எந்த சூழ்நிலையி லும் ஏற்காது. அ.தி.மு.க. பொருத்தவரை அண்ணாவின் கொள்கைகளை பின்பற்றுகிறோம். அண்ணா எதிர்த்த கொள்கைகளை நாங்களும் எதிர்க்கிறோம்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்காக பல்வேறு கருத்துகளை சொல்லி வருகிறார். மத்திய அரசும், மாநில அரசும் இணக்கமாக செயல்பட வேண்டும். அரசியல் வேறு, ஆட்சி வேறு. அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மத்திய அரசுடன் இணக்கமாக சென்றதால் தான், தமிழகத்திற்கு அரசு மருத்துவக் கல்லூரிகள், மெட்ரோ ரெயில் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டது.
மத்திய அரசு, மாநில அரசை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது. மேலும், மத்திய அரசு பணிகளில் ஏற்கனவே, தென்மாநில மக்களின் வேலைவாய்ப்புகள் பறிப்போகிறது. தற்போது மொழியை திணிப்பதன் மூலம் எதிர்காலத்தில், வேறு திட்டங்களை புகுத்தி மாநில அரசை அடிமையாக கொண்டு வந்துவிடும்.
மேலும், மாநில அரசுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை உடனடியாக மத்திய அரசு விடுவிக்க வேண்டும். சட்டப்பேரவை தேர்தலின்போது தி.மு.க. அறிவித்த வாக்குறுதிகள் 90 சதவீதத்திற்கு மேல் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். தேர்தல் வாக்குறுதிகள் புத்தகமாக அச்சிட்டு வழங்கியதை போல், நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் விவரங்களையும் புத்தகமாக அச்சிட்டு வெளியிட வேண்டும் என முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன். தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல்நிலை காணப்படுகிறது. இதற்கு காரணம் கஞ்சா புழக்கம் அதிகரித்து காணப்படுவது தான். முதலமைச்சர் இதன் மீது கவனம் செலுத்தி கடுமையான எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






