என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • பிளஸ்-2 தேர்வில் மாணவிகள் 96.70 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 437 மதிப்பெண்கள் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கிருஷ்ணகிரி:

    தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தேர்வு எழுதிய 7 லட்சத்து 92 ஆயிரத்து 494 மாணவ-மாணவிகளில் 7 லட்சத்து 53 ஆயிரத்து 142 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 95.03 சதவீதம் ஆகும்.

    தேர்வு எழுதிய 3 லட்சத்து 73 ஆயிரத்து 178 மாணவர்களில் 3 லட்சத்து 47 ஆயிரத்து 670 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அது போல தேர்வு எழுதிய 4 லட்சத்து 19 ஆயிரத்து 316 மாணவிகளில் 4 லட்சத்து 5 ஆயிரத்து 472 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    பிளஸ்-2 தேர்வில் மாணவிகள் 96.70 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 93.16 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகள் தான் அதிகம் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு மாணவர்களை விட மாணவிகள் 3.54 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள்.

    திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த மாணவி ஓவியஞ்சலி 600-க்கு 599 மதிப்பெண் பெற்றுள்ளார்.

    கிருஷ்ணகிரி அரசு பள்ளியில் பயின்ற மாற்றுத்திறனாளி மாணவர் கீர்த்தி வர்மா 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 471 மதிப்பெண்கள் பெற்று அசத்தி உள்ளார். இரு கைகளையும் இழந்த இவர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 437 மதிப்பெண்கள் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • பூஜைக்காக வந்தவர்களை தினந்தோறும் காரில் அழைத்து வந்த கார் டிரைவர், தனக்கு வாடகை வேண்டும் என கேட்டுள்ளார்.
    • புதையல் பூஜை விவகாரத்தில் தலைமறைவான மேலும் 3 பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஓசூர்:

    கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த லட்சுமி காந்த் (வயது54). இவர் ஓசூர் அருகே சாந்தபுரம் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் பூஜைகள் செய்வதற்காக திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அடுத்துள்ள கனியூரை சேர்ந்த சசிகுமார் (61), சங்கர் கணேஷ் (43), செல்வராஜ் (61), உடுமலைப்பேட்டை நக்கீரர் தெருவை சேர்ந்த சசிகுமார் (48), திண்டுக்கல் மாவட்டம் பழனி இந்திரா நகரை சேர்ந்த பிரபாகர் (37), சேலம் குகை முங்கபாடி தெருவை சேர்ந்த ராஜ்குமார் (45), கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் ஆலடி ரோட்டை சேர்ந்த நடராஜன் (48), சுந்தர்ராஜ் நகரை சேர்ந்த முத்து குமாரவேல் (48), விஜயவாடா கொத்தப்பேட்டை சையத்குலாம் தெருவை சேர்ந்த பிரகாஷ் குப்தா (68) மற்றும் அவர்களுடன் சில பெண்கள் உள்ளிட்டோரை ஓசூருக்கு அழைத்து வந்து ஒரு தனியார் விடுதியில் தங்க வைத்தார்.

    இந்த பூஜைகள் குறித்து லட்சுமி காந்த், சாந்தபுரம் செந்தமிழ் நகரை சேர்ந்த கிஷோருக்கு கூறியுள்ளார். கிஷோர் மூலம் பூஜைகள் குறித்து அவரது சகோதரரான குள்ளப்பாவிற்கும் குள்ளப்பாவின் மனைவி ராதாம்மாவிற்கும் (46) தெரியவந்தது.

    சாந்தபுரம் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்ற அவர்கள் கோவிலில் பூஜைகளை நடத்தியுள்ளனர். தொடர்ந்து தாங்கள் பல்வேறு பூஜைகளை செய்து புதையல் எடுத்து தருவதாக குள்ளப்பா மற்றும் அவரது மனைவி ராதாம்மா ஆகியோரிடம் ஆசை வார்த்தை கூறினர்.

    தொடர்ந்து அந்த பகுதியில் சிறியதாக புதையல் பூஜை ஒன்றை நடத்தியவர்கள். இந்த புதையல் பூஜையில் ஒரு பானையில் சிறிய அளவில் தங்க காசுகள் கிடைத்ததாக ராதாம்மாவையும் அவரது கணவர் குள்ளப்பாவையும் அனைவரும் நம்ப வைத்துள்ளனர். தங்க காசுகளை கணவன், மனைவி இருவரும் கடைக்கு கொண்டு சென்று சோதித்து பார்த்து உண்மை என நம்பினர்.

    அதனை தொடர்ந்து அந்த கும்பல் ராதாம்மா மற்றும் குள்ளப்பா ஆகியோரிடம் இந்த பகுதியில் பெரிய அளவில் புதையல் ஒன்று உள்ளது. அதனை பல்வேறு தீய சக்திகள் தடுத்து வருகின்றன.

    பெரிய அளவில் பணம் கொடுத்தால் அந்த சக்திகளை விரட்டி புதையலை எடுக்கலாம். அதன் மூலம் கோடீஸ்வரராக மாறலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதற்கான செலவுக்காக ரூ.8 லட்சம் அளவில் பணம் வாங்கியுள்ளனர்.

    பூஜைகளை செய்த அவர்கள் ஒரு பானையில் தங்கம், வைரம், வைடூரியம் இருப்பதாக கூறி அதனை பத்திரமாக வீட்டில் வைத்து பூஜைகள் செய்ய வேண்டும் எனக் கூறி பானையை கொடுத்தனர்.

    அதனை பெற்றுக்கொண்ட ராதாம்மா தன்னுடைய வீட்டில் வைத்து அந்த பானையை பூஜை செய்து வந்துள்ளார். அதே நேரத்தில் இதுகுறித்து யாரிடமும் கூறக்கூடாது, புதையலை வாங்குவதற்கு ஒரு கும்பல் வந்தனர்.

    அவர்களிடம் ரூ.2½ கோடி பணம் அட்வான்ஸ் வாங்கி ராதாம்மாவிடம் கொடுத்து புதையல் பானை அருகே வைத்துள்ளனர். இரண்டையும் ஒரே நேரத்தில் தான் திறக்க வேண்டும் எனவும் கூறி நம்ப வைத்துள்ளனர். புதையல் வீட்டில் இருப்பதை கண்டு மகிழ்ச்சியில் திளைத்த ராதாம்மா, குள்ளப்பா தம்பதியினரிடம் பூஜை நடத்துபவர்கள் தொடர்ந்து பணத்தை கேட்டுள்ளனர்.

    இதனிடையே ராதாம்மாவின் மகனுக்கு இந்த விஷயத்தில் சந்தேகம் ஏற்படவே வீட்டிலிருந்த பானை மற்றும் ரூ.2½ கோடி பணம் இருந்த பெட்டியை அவர் உடைத்துப் பார்த்தார்.

    அப்போது இரண்டிலும் பழைய காகிதங்கள் தான் இருந்துள்ளது. இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டோம் என அவர்கள் உணர்ந்தனர்.

    அதே நேரத்தில், பூஜைக்காக வந்தவர்களை தினந்தோறும் காரில் அழைத்து வந்த கார் டிரைவர், தனக்கு வாடகை வேண்டும் என கேட்டுள்ளார்.

    வாடகை பணத்தை அவர்கள் கொடுக்காததால் அவர்கள் பேசுவதில் பல்வேறு புதையல் சார்ந்த விஷயங்கள் இருப்பதை அறிந்த அவர், 100 எண் மூலம் போலீசாருக்கு தகவல் அளித்து விட்டார்.

    இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை கவனத்திற்கு தகவல்சென்றது. அவரது உத்தரவின் பேரில் நல்லூர் போலீசார் அந்த கும்பல் தங்கி இருந்த விடுதியில் சுற்றி வளைத்து அவர்கள் அனைவரையும் கைது செய்தனர்.

    இந்த புதையல் பூஜை விவகாரத்தில் தலைமறைவான மேலும் 3 பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    • மாடுகளை ஓட்டி வர மீண்டும் காட்டுப்பகுதிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.
    • அஞ்செட்டி வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

    தளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே அஞ்செட்டி அடுத்துள்ள ஜேசுராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மதலை முத்து (வயது60). இவர் நேற்று தனது மாடுகளை அருகில் உள்ள சின்னமலை காட்டுப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு ஓட்டி சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார்.

    பின்னர் மாலையில் மாடுகளை ஓட்டி வர மீண்டும் காட்டுப்பகுதிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவரது உறவினர்கள் இன்று காலை அவரை தேடி காட்டு பகுதிக்கு சென்றபோது அங்கு மதலை முத்து யானை தாக்கி உயிரிழந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து அவர்கள் அஞ்செட்டி வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற அஞ்செட்டி வனத்துறையினர் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

    • இறந்து கிடந்தவர் சுமார் 40 முதல் 45 வயது மதிக்கத்தக்கவர் என தெரியவந்தது.
    • உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள காரண்டப்பள்ளி ஊராட்சி தொட்டபிலி முத்திரை கட்சுவாடி செல்லும் சாலை அருகே தனியார் கிரானைட் கல்குவாரி ஒன்று கடந்த 10 வருடங்களாக செயல்படாத நிலையில் உள்ளது.

    இந்த கல்குவாரியில் பாறை வெட்டி எடுக்கப்பட்டு தண்ணீர் தேங்கியுள்ள குட்டையில் நேற்று இரவு ஆண் பிணம் ஒன்று அழுகிய நிலையில் கிடந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே அவர்கள் காரண்டப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் சிலம்பரசனுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி ஆனந்தராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது இறந்து கிடந்தவர் சுமார் 40 முதல் 45 வயது மதிக்கத்தக்கவர் என தெரியவந்தது. உடலை சுற்றி கயிறு சுற்றி இருந்தது. இறந்து கிடந்த நபரை வேறு எங்கேயே கொலை செய்து விட்டு கல்லை கயிற்றால் கட்டி சடலத்தை மர்ம கும்பல் வீசி சென்றுள்ளது தெரிய வந்தது. உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து கொலை செய்யப்பட்டு கிடந்தவர் யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • மக்கள் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • தண்டவாள பகுதிகள், பயணிகள் இருக்கைகளிலும் ரெயில்வே போலீசார் முழு அளவில் சோதனையிட்டனர்.

    ஓசூர்:

    காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்ற சம்பவம் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

    இதையடுத்து தமிழகத்திலும் முக்கிய சுற்றுலாத்தலங்கள், மாநில எல்லைகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ரெயில் நிலையத்தில் ரெயில் பெட்டிகள், பயணிகளின் உடைமைகள் மற்றும் பயணிகளின் பொருட்கள் ஆகியவற்றை மெட்டல் டிடெக்டர் மூலம் ரெயில்வே போலீசார் முழுமையாக சோதனையிட்டனர். மேலும் தண்டவாள பகுதிகள், பயணிகள் இருக்கைகளிலும் ரெயில்வே போலீசார் முழு அளவில் சோதனையிட்டனர்.

    இதே போல், ஓசூர் அருகே தமிழக எல்லையான ஜூஜூவாடி சோதனைச் சாவடி பகுதியில் வெளி மாநிலங்களிலிருந்து ஓசூர் நோக்கி வந்த கார்கள், வேன்கள் ஆம்னி பஸ்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களை சிப்காட் போலீசார் முழுமையாக சோதனை செய்த பிறகே, மேற் கொண்டு பயணிக்க அனுமதித்தனர்.

    • இந்த விமான நிலையம் அமைந்தால் பெங்களூரு மற்றும் ஓசூர் ஆகிய 2 நகரங்களுக்கு வர்த்தக ரீதியாக பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.
    • ஓசூர் கிழக்கில் ஒன்று, தெற்கில் ஒன்று என இரு இடங்கள் தேர்வு செய்யப்பட்டது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரமானது தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறது. சர்வதேச நிறுவனங்கள் பலவும் கால்தடம் பதித்து வருகின்றன. இதற்கேற்ப ஓசூரின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

    குறிப்பாக ஓசூரில் பிரம்மாண்ட தொழில் நகரை கட்டமைக்க டாடா குழுமம் முன்வந்துள்ளது. மேலும் 2,000 ஏக்கர் பரப்பளவில் ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்த விமான நிலையம் அமைந்தால் பெங்களூரு மற்றும் ஓசூர் ஆகிய 2 நகரங்களுக்கு வர்த்தக ரீதியாக பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.

    இதனை தொடர்ந்து விமான நிலையத்திற்கு இரண்டு இடங்களை தேர்வு செய்து தரும்படி டிட்கோ கேட்டுக்கொண்டது. அதன் அடிப்படையில், ஆய்வுகள் நடத்தப்பட்ட நிலையில் ஓசூர் கிழக்கில் ஒன்று, தெற்கில் ஒன்று என இரு இடங்களை தேர்வு செய்து டிட்கோவிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

    இந்த இரு இடங்களில் ஏதேனும் ஒன்றில் விமான நிலையம் அமைக்க சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் தமிழக அரசு அனுமதி கேட்டு இருந்தது.

    இந்த நிலையில், ஓசூரில் புதிய விமான நிலையம் அமைப்பது தொடர்பான இறுதி சாத்தியக்கூறு ஆய்வறிக்கையை தமிழக அரசிடம், விமான போக்குவரத்து ஆணையம் தாக்கல் செய்துள்ளது. அதில் அரசு தேர்வு செய்த 2 இடங்களில் விமான நிலையம் அமைப்பதில் எந்த சிக்கலும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • விபத்தில் இறந்த உமாராணியை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை கல்லாவி ரோடு பகுதியை சேர்ந்தவர் உமாராணி (வயது65). இவரது மகன் கோபிநாத் (வயது40). இவரது மனைவி ஜீவிதா (35). கோபிநாத் சகோதரிகள் 2 பேர் மற்றும் இரு குழந்தைகள் என மொத்தம் 7 பேர் காரில் கர்நாடகாவில் பல்வேறு வழிபாட்டுத்தலங்கள், சுற்றுலா சென்றனர். பின்னர் அவர்கள் சுற்றுலா முடித்து விட்டு இன்று அதிகாலை வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது மத்தூர் அடுத்த கண்ணண்டஹள்ளி என்ற இடத்தில் வந்த போது தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரியை நோக்கி சென்ற மினிலாரி எதிர் பாராதவிதமாக கார் மீது மோதியது.

    இதில் காரில் இருந்த உமாராணி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காரை ஓட்டி வந்த கோபிநாத் உடன் இருந்த குழந்தைகள் உள்பட 6 பேர் பலத்த காயம் அடைந்தனர். இந்த விபத்தை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்து இடிபாடுகளில் சிக்கிய சூழலில் போலீசார், பொதுமக்கள் உதவியுடன் அருகே இருந்த ஜே.சி.பி. எந்திரத்தை கொண்டு சுமார் அரை மணி நேரம் போராடி அவரை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

    பின்னர் அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    மேலும் விபத்தில் இறந்த உமாராணியை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்தால் கிருஷ்ணகிரி-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலை என்பதால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

    • குழந்தையின் உறவினர்கள் அஞ்செட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் ஆம்புன்சில் இருந்த குழந்தையின் உடலுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    தளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே கடுகுநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மனைவி பிரீத்தா, இவர்களுக்கு 4 வயதில் பிரசாந்த் என்ற ஆண் குழந்தை இருந்தது.

    இந்நிலையில், கடந்த 30-ந் தேதி வீட்டின் படியிலிருந்து பிரசாந்த் தவறி கீழே விழுந்ததாக அஞ்செட்டி அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்து சென்றனர்.

    அங்கு மருத்துவர்கள் குழந்தைக்கு காலில் அடிப்பட்டுள்ளதாக கூறி கட்டு போட்டு அனுப்பி உள்ளனர். பின்னர் மீண்டும் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் நேற்று முன்தினம் ரண ஜன்னியால் பாதிக்கப்பட்டு குழந்தை பிரசாந்த் உயிரிழந்தது.

    அதனால் மருத்துவர்கள் தனி ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் ஊருக்குள் செல்லாமல் நேரடியாக குழந்தையின் சடலத்தை மயானத்திற்கு கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

    மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளிக்காமல் அலட்சியமாக இருந்ததால் குழந்தை இறந்ததாகவும், மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தையின் உறவினர்கள் அஞ்செட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் ஆம்புன்சில் இருந்த குழந்தையின் உடலுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து சென்ற அஞ்செட்டி வட்டாட்சியர் கோகுல், தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி ஆனந்தராஜ், மாவட்ட சுகாதார அலுவலர் ரமேஷ் குமார், அஞ்செட்டி இன்ஸ்பெக்டர் பங்கஜம் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதையடுத்து உறவினர்கள் சாலை மறியலை கைவிட்டு குழந்தையின் உடல் நல்லடக்கம் செய்ய கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • பக்தர்கள் பக்தி கோஷங்கள் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    • விழாவில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் பழமையான மற்றும் பிரசித்தி பெற்ற சவுந்தரவல்லி சமேத ஸ்ரீ பேட்டராய சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் தேர்த்திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

    இந்த ஆண்டு தேர்த்திருவிழா நேற்று வெகு விமரிசையாக தொடங்கியது. இதையொட்டி நேற்று இரவு ராமபாண நிகழ்ச்சி நடந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று தேரோட்டம் நடைபெற்றது. விழாவில் மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், தேன்கனிக்கோட்டை பேரூராட்சி தலைவர் சீனிாவசன், ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., ஓசூர் மேயர் சத்யா, அ.தி.மு.க. நிர்வாகி ஜெயபிரகாஷ், தேன்கனிக்கோட்டை பேரூராட்சி முன்னாள் தலைவர் நாகேஷ், 17-வது வார்டு கவுன்சிலர் மாது, பழனிசாமி, செயல் அலுவலர் மஞ்சுநாத், ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.

    இதில் பக்தர்கள் பக்தி கோஷங்கள் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்த விழாவில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து செண்டை மேள இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தேர்த்திருவிழாவையொட்டி இன்று அன்னதானம், நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது. இரவு 9 மணிக்கு மேல் சம்பூர்ண ராமாயண நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (வெள்ளிக்கிழமை) இன்னிசை கச்சேரியும், வாணவேடிக்கை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

    விழாவையொட்டி கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தலைமையில், தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தராஜ், இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் மற்றும் தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, தளி, கெலமங்கலம், ராயக்கோட்டை, உத்தனப்பள்ளி ஆகிய போலீஸ் நிலையங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    தொடர்ந்து போலீசார் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணித்து வருகின்றனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

    தேர்த்திருவிழாவையொட்டி தேன்கனிக்கோட்டை நகரமே விழாக்கோலம் பூண்டது.

    • ஊத்தங்கரையை அடுத்த அனுமன் தீர்த்தம் மேம்பாலத்திற்கு கீழே சடலம் ஒன்று கிடந்தது.
    • போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த அனுமன் தீர்த்தம் மேம்பாலத்திற்கு கீழே சடலம் ஒன்று கிடந்தது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் ஊத்தங்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    சடலத்தை மீட்டு விசாரணை நடத்தியதில் தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி கூட்ரோடு பகுதியை சேர்ந்த சந்திரன்-கோவிந்தம்மாள் தம்பதியின் 22 வயதான அஞ்சலி என்கின்ற திருநம்பி சஞ்சய் என்பதும், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பெண்ணாக இருந்தவள் ஆணாக மாறி வீட்டை விட்டு வெளியேறி ஆங்காங்கே சுற்றி திரிந்து வந்தது தெரியவந்தது. ஆடைகள் கலைந்து இருந்தது.

    இதையடுத்து போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் திருநம்பி அஞ்சலி கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • குட்டையில் இருந்து வெளியேற முடியாமல் யானை பிளிறி உள்ளது.
    • வனத்துறையினர் அந்த யானையை அய்யூர் வனப்பகுதிக்கு விரட்டி சென்றனர்.

    தளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட அய்யூர் வனப்பகுதியில் காட்டு யானைகள் அதிக அளவில் வாழ்கின்றன. தற்போது கோடை காலம் என்பதால் காட்டு யானைகள், காட்டு எருமைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் தாகத்தை தணிக்க நீர்நிலைகளை தேடி சுற்றித்திரிகின்றன.

    அந்த வகையில் அய்யூர் வனப்பகுதியில் இருந்து 35 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் காட்டு யானை தாகத்திற்கு தண்ணீர் குடிக்க அருகிலுள்ள மூர்க் கண்கரை கிராமத்திற்குள் புகுந்துள்ளது.

    அப்போது அந்த கிராமத்தின் அருகே விவசாய தோட்டத்தில் 10 அடி ஆழமுள்ள குட்டையில் தண்ணீர் குடிக்க சென்றபோது யானை எதிர்பாராதவிதமாக தவறி விழுந்துள்ளது.

    அந்த குட்டையில் இருந்து வெளியேற முடியாமல் யானை பிளிறி உள்ளது. நீண்ட நேரம் போராடியும் யானையால் குட்டையில் இருந்து வெளியேற முடியவில்லை.இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக தேன்கனிக்கோட்டை வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

    இதனையடுத்து வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர் அப்பகுதிக்கு ஜே.சி.பி. வாகனத்தோடு சென்று குட்டையில் தவறி விழுந்த யானையை மீட்டனர்.

    அதனைத்தொடர்ந்து குட்டையில் இருந்து வெளியேறிய யானை அந்த பகுதி வழியாக நடந்து சென்றது. அப்போது ஜே.சி.பி. வாகனத்தின் மீதும் அப்பகுதி பொதுமக்கள் மீதும் யானை ஆக்ரோசத்துடன் கத்தியது.

    தொடர்ந்து வனத்துறையினர் அந்த யானையை அய்யூர் வனப்பகுதிக்கு விரட்டி சென்றனர். இதனால் அப்பகுதியில் நீண்ட நேரம் பரபரப்பு காணப்பட்டது.

    • 215 கேன்களில் 7525 லிட்டர் எரிசாராயம் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
    • எரிசாராயத்தை கடத்தி வந்த 2 பேரை கைது செய்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கர்நாடக மாநிலத்திலிருந்து ஓசூர் வழியாக சென்ற லாரியை சோதனை செய்தபோது அதில் தர்பூசணி பழங்களுக்கு நடுவே எரிசாராயம் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. 215 கேன்களில் 7525 லிட்டர் எரிசாராயம் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    தர்பூசணி பழங்களுக்கு இடையே எரிசாராயம் மறைத்து வைக்கப்பட்டு கேரளாவிற்கு கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    எரிசாராயத்தை கடத்தி வந்த 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×