என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கைது செய்யப்பட்டவர்களை படத்தில் காணலாம்.
ஓசூரில் தங்க புதையல் எடுத்து தருவதாக கூறி தம்பதியிடம் ரூ.8 லட்சம் மோசடி: 10 பேர் கும்பல் நூதன கைவரிசை
- பூஜைக்காக வந்தவர்களை தினந்தோறும் காரில் அழைத்து வந்த கார் டிரைவர், தனக்கு வாடகை வேண்டும் என கேட்டுள்ளார்.
- புதையல் பூஜை விவகாரத்தில் தலைமறைவான மேலும் 3 பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஓசூர்:
கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த லட்சுமி காந்த் (வயது54). இவர் ஓசூர் அருகே சாந்தபுரம் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் பூஜைகள் செய்வதற்காக திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அடுத்துள்ள கனியூரை சேர்ந்த சசிகுமார் (61), சங்கர் கணேஷ் (43), செல்வராஜ் (61), உடுமலைப்பேட்டை நக்கீரர் தெருவை சேர்ந்த சசிகுமார் (48), திண்டுக்கல் மாவட்டம் பழனி இந்திரா நகரை சேர்ந்த பிரபாகர் (37), சேலம் குகை முங்கபாடி தெருவை சேர்ந்த ராஜ்குமார் (45), கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் ஆலடி ரோட்டை சேர்ந்த நடராஜன் (48), சுந்தர்ராஜ் நகரை சேர்ந்த முத்து குமாரவேல் (48), விஜயவாடா கொத்தப்பேட்டை சையத்குலாம் தெருவை சேர்ந்த பிரகாஷ் குப்தா (68) மற்றும் அவர்களுடன் சில பெண்கள் உள்ளிட்டோரை ஓசூருக்கு அழைத்து வந்து ஒரு தனியார் விடுதியில் தங்க வைத்தார்.
இந்த பூஜைகள் குறித்து லட்சுமி காந்த், சாந்தபுரம் செந்தமிழ் நகரை சேர்ந்த கிஷோருக்கு கூறியுள்ளார். கிஷோர் மூலம் பூஜைகள் குறித்து அவரது சகோதரரான குள்ளப்பாவிற்கும் குள்ளப்பாவின் மனைவி ராதாம்மாவிற்கும் (46) தெரியவந்தது.
சாந்தபுரம் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்ற அவர்கள் கோவிலில் பூஜைகளை நடத்தியுள்ளனர். தொடர்ந்து தாங்கள் பல்வேறு பூஜைகளை செய்து புதையல் எடுத்து தருவதாக குள்ளப்பா மற்றும் அவரது மனைவி ராதாம்மா ஆகியோரிடம் ஆசை வார்த்தை கூறினர்.
தொடர்ந்து அந்த பகுதியில் சிறியதாக புதையல் பூஜை ஒன்றை நடத்தியவர்கள். இந்த புதையல் பூஜையில் ஒரு பானையில் சிறிய அளவில் தங்க காசுகள் கிடைத்ததாக ராதாம்மாவையும் அவரது கணவர் குள்ளப்பாவையும் அனைவரும் நம்ப வைத்துள்ளனர். தங்க காசுகளை கணவன், மனைவி இருவரும் கடைக்கு கொண்டு சென்று சோதித்து பார்த்து உண்மை என நம்பினர்.
அதனை தொடர்ந்து அந்த கும்பல் ராதாம்மா மற்றும் குள்ளப்பா ஆகியோரிடம் இந்த பகுதியில் பெரிய அளவில் புதையல் ஒன்று உள்ளது. அதனை பல்வேறு தீய சக்திகள் தடுத்து வருகின்றன.
பெரிய அளவில் பணம் கொடுத்தால் அந்த சக்திகளை விரட்டி புதையலை எடுக்கலாம். அதன் மூலம் கோடீஸ்வரராக மாறலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதற்கான செலவுக்காக ரூ.8 லட்சம் அளவில் பணம் வாங்கியுள்ளனர்.
பூஜைகளை செய்த அவர்கள் ஒரு பானையில் தங்கம், வைரம், வைடூரியம் இருப்பதாக கூறி அதனை பத்திரமாக வீட்டில் வைத்து பூஜைகள் செய்ய வேண்டும் எனக் கூறி பானையை கொடுத்தனர்.
அதனை பெற்றுக்கொண்ட ராதாம்மா தன்னுடைய வீட்டில் வைத்து அந்த பானையை பூஜை செய்து வந்துள்ளார். அதே நேரத்தில் இதுகுறித்து யாரிடமும் கூறக்கூடாது, புதையலை வாங்குவதற்கு ஒரு கும்பல் வந்தனர்.
அவர்களிடம் ரூ.2½ கோடி பணம் அட்வான்ஸ் வாங்கி ராதாம்மாவிடம் கொடுத்து புதையல் பானை அருகே வைத்துள்ளனர். இரண்டையும் ஒரே நேரத்தில் தான் திறக்க வேண்டும் எனவும் கூறி நம்ப வைத்துள்ளனர். புதையல் வீட்டில் இருப்பதை கண்டு மகிழ்ச்சியில் திளைத்த ராதாம்மா, குள்ளப்பா தம்பதியினரிடம் பூஜை நடத்துபவர்கள் தொடர்ந்து பணத்தை கேட்டுள்ளனர்.
இதனிடையே ராதாம்மாவின் மகனுக்கு இந்த விஷயத்தில் சந்தேகம் ஏற்படவே வீட்டிலிருந்த பானை மற்றும் ரூ.2½ கோடி பணம் இருந்த பெட்டியை அவர் உடைத்துப் பார்த்தார்.
அப்போது இரண்டிலும் பழைய காகிதங்கள் தான் இருந்துள்ளது. இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டோம் என அவர்கள் உணர்ந்தனர்.
அதே நேரத்தில், பூஜைக்காக வந்தவர்களை தினந்தோறும் காரில் அழைத்து வந்த கார் டிரைவர், தனக்கு வாடகை வேண்டும் என கேட்டுள்ளார்.
வாடகை பணத்தை அவர்கள் கொடுக்காததால் அவர்கள் பேசுவதில் பல்வேறு புதையல் சார்ந்த விஷயங்கள் இருப்பதை அறிந்த அவர், 100 எண் மூலம் போலீசாருக்கு தகவல் அளித்து விட்டார்.
இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை கவனத்திற்கு தகவல்சென்றது. அவரது உத்தரவின் பேரில் நல்லூர் போலீசார் அந்த கும்பல் தங்கி இருந்த விடுதியில் சுற்றி வளைத்து அவர்கள் அனைவரையும் கைது செய்தனர்.
இந்த புதையல் பூஜை விவகாரத்தில் தலைமறைவான மேலும் 3 பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.