என் மலர்
கன்னியாகுமரி
- அயோத்தி விவகாரத்தில் நான் தனிப்பட்ட கருத்து எதுவும் சொல்லவில்லை.
- சங்கராச்சாரியார்களே ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நிகழ்வுகளுக்கு எதிராக கருத்துகள் கூறுகிறார்கள்.
நாகர்கோவில்:
தமிழக பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நாகர்கோவிலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சாதாரணமாக ஒரு குற்றச்செயலில் ஈடுபட்டவரை ஊக்குவிக்கும் விதத்தில் எந்த பொதுத்துறையின் தலைவரும் அரசு பொறுப்பில் இருப்பவர்களும் நடக்கக்கூடாது.
அது சிறந்த முன் உதாரணமாக இருக்காது. ஆனால் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக்கப்பட்டு கைது செய்யப்பட்டு இடைநீக்கம் செய்யப்பட்ட ஒருவரை ஒரு கவர்னர் சந்தித்திருப்பது தவறான எண்ணத்தை மக்கள் மத்தியில் உருவாக்கும். நாடு முழுவதும் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கட்சியில் இணைத்துக்கொண்டு பொறுப்புகளை வழங்குவது போன்ற செயல்களில் பாரதிய ஜனதா ஈடுபட்டு வருகிறது.
இது ஒரு தவறான அணுகுமுறை ஆகும். இதைத்தான் ஒரு பாசிச அணுகுமுறை என்று நாம் சொல்கிறோம். தாங்கள் சொல்வது தான் முடிவு. நாங்கள் சொல்வதுதான் சட்டம் என்று பாரதிய ஜனதா செய்து வருகிறது. தங்களுடன் இருப்பவர்கள் எது செய்தாலும் தவறு இல்லை என்றும் தங்களை சார்ந்து இருப்பவர்களை நாங்கள் ஆதரிக்கிறோம் என்ற மனநிலையில் தான் பா.ஜ.க.வினர் உள்ளனர்.
அயோத்தி விவகாரத்தில் நான் தனிப்பட்ட கருத்து எதுவும் சொல்லவில்லை. சங்கராச்சாரியார்கள் 2 பேர் முக்கியமான கருத்தை வலியுறுத்தியுள்ளனர். ஒன்று அவர்கள் தர்ம ஆச்சாரப்படி அது நடைபெறவில்லை.
இன்னொன்று ஒரு கட்டி முடிக்கப்படாத கோவிலை திறந்து வைப்பது என்று கூறியுள்ளனர். ஆச்சார விதிமுறைகளுக்கு எதிராக ஏன் அதை செய்ய வேண்டும் என்று அவர்கள் கேட்கிறார்கள். அதற்கு என்ன காரணம் என்றும் கேட்டிருக்கிறார்கள். இதற்கு என்ன காரணம் இருக்க முடியும் என்பது எல்லாருக்கும் தெரியும். பாரதிய ஜனதா அவர்களது நிலையை தெளிவுபடுத்த வேண்டும்.
எல்லா விஷயங்களிலும் சங்கராச்சாரியார்களிடமும் மத குருக்களையும் கருத்துகள் கேட்கும் அவர்கள் சங்கராச்சாரியார்களே ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நிகழ்வுகளுக்கு எதிராக கருத்துகள் கூறுகிறார்கள். இதற்கு பாரதிய ஜனதா கட்சி பதில் சொல்ல வேண்டும். சங்கராச்சாரியார்கள் சொல்வதை பார்த்தால் தேர்தலுக்காக இந்த பிரச்சனையை அவர் கள் கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது. அதில் எந்த சந்தேகமும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- வாழ்வச்சகோஷ்டம் வட்டாரத்தில் நியாய விலை கடை வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.
- காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
வாழ்வச்சகோஷ்டம் வட்டாரத்தில் நியாய விலை கடை வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 12 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதன்படி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட நியாய விலை கடை கட்டிடத்தை பாராளுமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.டி. உதயம், வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொன். சாலமன், வாழ்வச்சகோஷ்டம் பேரூராட்சி தலைவர் ஜான் டென்சிங், பேரூர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராபர்ட் கிளைவ் உட்பட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்
- சாலைகள் செப்பனிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என விஜய் வசந்த் எம்.பி. உறுதி அளித்தார்.
- இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு பகுதி மலைகளால் சூழப்பட்டு மலைவாழ் கிராமங்களில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். மலைவாழ் மக்களின் மேம்பாட்டுக்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு நல திட்டங்களை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் செய்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த தினங்களாக பேச்சிப்பாறை ஊராட்சிக்கு உட்பட்ட மலைவாழ் கிராமங்களான கோதையார், குற்றியார், தோட்டமலை, தச்சமலை ஆகிய கிராமங்களுக்கு சென்று அங்குள்ள மக்களை சந்தித்து அவர்கள் குறைகளை கேட்டு அறிந்தார்.
குறிப்பாக சாலைகள் மிகவும் பழுதடைந்த நிலைமையில் காணப்படுவதால் போக்குவரத்திற்கு மக்கள் சிரமப்படுவதாக தெரிவித்தனர். சாலைகள் மிக மோசமான நிலையில் இருப்பதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்ததை தொடர்ந்து அவரே தனது வாகனத்தை சாலைகளில் ஓட்டி அவர்களின் இன்னல்களை தெரிந்து கொண்டார்.

சாலைகள் செப்பனிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார். மேலும் இங்கு இயங்கிக் கொண்டிருந்த பேருந்துகள் திடீர் என்று நிறுத்தி வைக்கப்பட்டதை மக்களிடம் இருந்து தெரிந்து கொண்டு உடனடியாக போக்குவரத்து துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு இந்த பகுதிகளில் மீண்டும் பேருந்து போக்குவரத்தை ஆரம்பிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இந்த பகுதிகளில் பல வீடுகளுக்கு மின்சார இணைப்பு வழங்க முயற்சிகள் எடுத்து வருகிறார். சில தொழில்நுட்ப சிக்கல்கள் நிலவி வருவதால் மின்சாரம் வழங்க சிரமம் இருப்பதை மக்களுக்கு எடுத்துக் கூறி அந்த சிக்கல்களுக்கு தீர்வு காண முயற்சிகள் எடுக்கப்படும் என விளக்கினார்.

இந்த சந்திப்பின் போது வட்டார காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் வினுட்ராய், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ரத்தினகுமார், கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் டைசன், பேச்சிப்பாறை ஊராட்சி கமிட்டி தலைவர் குமார் மற்றும் ஏராளமான காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
- பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 22 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
- காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கேசவன் புத்தன்துறை கடற்கரை கிராமத்தில் அமைந்துள்ள புனித மரிய அன்னை மேல்நிலை பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் தேவை என்ற கோரிக்கையை ஏற்று பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 22 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதற்கான பணிகளுக்கு பாரளுமான்ற உறுப்பினர் விஜய் வசந்த் அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கு தந்தை பென்சிகர், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.டி. உதயம், காங்கிரஸ் கமிட்டி வட்டார தலைவர் அசோக் ராஜ், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் இதில் கலந்து கொண்டனர்.
- மலை வாழ் மக்கள் தங்கள் பகுதியில் நியாய விலை கடை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
- இந்நிகழ்வில் காங்கிரஸ் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பேச்சிப்பாறை ஊராட்சிக்கு உட்பட்ட மலைவாழ் கிராமமான தச்சமலை பகுதியில் உள்ள குற்றியார், தச்சமலை, தோட்டமலை உட்பட பல மலை வாழ் மக்கள் தங்கள் பகுதியில் நியாய விலை கடை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தச்சமலையில் நியாய விலை கடை கட்டுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ13.00 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதன்படி கட்டி முடிக்கப்பட்ட நியாய விலை கடை கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் திருவட்டார் மேற்கு வட்டாரத் தலைவர் வினுட்ராய், பேச்சிப்பாறை ஊராட்சி கமிட்டி தலைவர் குமார், காங்கிரஸ் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- வீட்டிற்குள் சென்று பார்த்த போது, அங்கு பீரோ பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
- போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் பார்வதிபுரம் அருகே உள்ள பிளசண்ட் நகரை சேர்ந்தவர் டாக்டர் கலைக்குமார் (வயது 52). இவர் நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி டாக்டர் புனிதவதி, சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் வெளியூரில் படித்து வருகிறார்.
மனைவி மற்றும் மகள் வாரத்திற்கு ஒரு முறை தான் வீட்டுக்கு வருவார்களாம். கலைக்குமார் தான் வீட்டில் இருந்து வந்துள்ளார். அவரும் தினமும் காலை 7.30 மணிக்கு பணிக்காக நெல்லை மருத்துவக் கல்லூரிக்கு கிளம்பி சென்று விடுவாராம். அதன்பிறகு மாலை அல்லது இரவு நேரத்தில் தான் அவர் வீடு திரும்புவார்.
நேற்று காலையும் வழக்கம் போல் வேலைக்குச் சென்ற கலைக்குமார், இரவில் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டிற்குள் சென்று பார்த்த போது, அங்கு பீரோ பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
அதில் இருந்த பொருட்கள் மற்றும் துணிகள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. இதனால் கொள்ளை சம்பவம் நடந்திருப்பதை உணர்ந்த அவர், நேசமணி நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்த்தனர். வீட்டில் ஆள் இல்லாததை அறிந்து யாரோ மர்ம நபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. பீரோவில் இருந்த 87 பவுன் நகைகள் மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கம் கொள்ளை போயிருப்பதாக போலீசாரிடம் கலைக்குமார் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் சேகரிக்கப்பட்டன.
அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். கொள்ளை நடந்த பிளசண்ட் நகர் பகுதி வசதி படைத்தவர்கள் வாழும் பகுதியாகும். இங்கு வீடுகளும் நெருக்கமாகவே உள்ளன. அப்படியிருந்தும் ஆள் இல்லாத வீட்டை நோட்டமிட்டு கொள்ளையர்கள் லாவகமாக வீட்டுக்குள் புகுந்து நகை-பணத்தை அள்ளிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குமரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே ஆள் இல்லாத வீட்டில் இதுபோன்று கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன. போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
ஆனாலும் கொள்ளை யர்கள், போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு தொடர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே இதனை தடுக்க கொள்ளையர்களை போலீசார் விரைந்து கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- சாலையில் இருந்து மிக உயரத்தில் ரெயில் தடம் தற்பொழுது அமைந்துள்ளது.
- ரெயில்வே மேம்பாலம் ஒன்று அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தார்.
கன்னியாகுமரி, அகஸ்தீஸ்வரம் சுக்குபாறை தேரிவிளை மற்றும் கொட்டாரம், அகஸ்தீஸ்வரம் சாலையில் உள்ள வடுகன்பற்று ஆகிய இடங்களில் ரெயில்வே கீழ்பாலம் (சுரங்க பாதை) அமைக்க வேண்டும் என்று தென்னக ரெயில்வே பொது மேலாளரை பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சந்தித்து கோரிக்கை வைத்தார்.
கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரம் கல்லூரி சாலையில் ரெயில்வே கேட் LC18 அமைந்துள்ளது. இந்த சாலை மிகவும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலை. மேலும் இந்த வழியாக செல்லும் ரெயில் தடம், இரட்டிப்பு பாதை பணிகள் காரணமாக உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆகையால் சாலையில் இருந்து மிக உயரத்தில் ரெயில் தடம் தற்பொழுது அமைந்துள்ளது.
ஆகவே போக்குவரத்துக்கு சிரமமாக இருக்கும் இந்த பகுதியில் ரெயில்வே பாதையின் கீழ்பாலம் அமைக்க வேண்டும். அது போன்று கொட்டாரம் அகஸ்தீஸ்வரம் சாலையில் உள்ள வடுகப்பற்றில்; உள்ள ரெயில்வே கேட் LC16 சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்துவதால் இங்கும் ஒரு ரெயில்வே பாதையின் கீழ்பாலம் அமைக்க வேண்டும் என கேட்டுகொண்டார்.
மேலும் நெடுநாட்களாக கிடப்பில் கிடக்கும் கோரிக்கையான கொரோனா காலத்திற்கு முன்பிருந்த ரெயில் நிறுத்தங்களில் மீண்டும் ரெயில்களை நிறுத்த வேண்டும் எனவும், கன்னியாகுமரி திப்ருகார் விவேக் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான ராணுவ வீரர்கள் பயணம் செய்வதை கருத்தில் கொண்டு மாவட்டத்தில் இன்னுமொரு நிறுத்தம் (குழித்துறை) அனுமதிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
- மீன் பிடி இறங்கு தளத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொலி மூலம் திறந்து வைத்தார்.
- நாகர்கோவில் மாநகர மேயர் ரெ.மகேஷ், துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கீழ மணக்குடி கிராமத்தில் மீனவர் மற்றும் மீன்வளத்துறை சார்பில் 29.5 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட மீன் பிடி இறங்கு தளத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், மாவட்ட ஆட்சியர், நாகர்கோவில் மாநகர மேயர் ரெ.மகேஷ், துறை அதிகாரிகள் மற்றும் ஊர் பெரியோர்கள் கலந்து கொண்டனர்.
- முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் நீராடுகிறார்கள்.
- கடற்கரையை ஒட்டி கடல் நடுவே உள்ள ஆபத்தான பாறைகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டில் பாலம், பத்ம நாபபுரம் அரண்மனை, வட்டக்கோட்டை, சங்கு துறை-சொத்தவிளை, கணபதிபுரம் உள்ளிட்ட கடற்கரைகள் என ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை, காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணி மண்டபம், முக்கடல் சங்கமிக்கும் சங்கிலித்துறை கடற்கரை என பல இடங்கள் இருக்கும் கன்னியாகுமரி சர்வதேச சுற்றுலா தலமாக திகழ்கிறது. இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, பல மாநிலங்களை சேர்ந்த வர்கள், வெளிநாட்டினர் சுற்றுலாவாக வருகிறார்கள்.
சூரிய உதயம், அஸ்தமனம் இரண்டையுமே கன்னியாகுமரியில் பார்க்கலாம். குமரி மாவட்டத்துக்கு சுற்றுலா வருபவர்கள் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தை பார்க்க தவறுவதில்லை. அவர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் நீராடுகிறார்கள்.
மேலும் கடலுக்கு நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்த்து மகிழ்வார்கள். அது மட்டுமல்லாமல் சிறந்த ஆன்மீக தலமாகவும் கன்னியாகுமரி திகழ்கிறது. இங்குள்ள பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கும் சுற்றுலா பயணி கள் செல்கின்றனர். கன்னியாகுமரியில் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்கள் சீசன் காலமாக கருதப்படுகிறது. இதற்கு காரணம் இந்த மாதங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் மிக அதிக அளவில் இருக்கும். அதோடு சபரிமலை அய்யப்ப பக்தர்கள் வருகையும் இந்த மாதங்களில் அதிகமாக இருக்கும்.
இந்த ஆண்டும் சீசன் காலமான தற்போது கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாகவே உள்ளது. அதுவும் சபரிமலைக்கு செல்லக்கூடிய அய்யப்ப பக்தர்கள் கன்னியாகுமரியில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் கன்னியாகுமரியில் திரும்பிய இடமெல்லாம் சுற்றுலா பயணிகள் கூட்டமாகவே காணப்படுகிறது.
அவர்கள் விவேகானந்தர் மண்டபத்தை காண படகு போக்குவரத்து தொடங்கு வதற்கு முன்பே படகு குழாம் முன்பு நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றனர். பராமரிப்பு மற்றும் பாலம் பணிகள் காரணமாக திருவள்ளுவர் சிலையை பார்க்க சுற்றுலா பயணிகள் தற்போது அனுமதிக்கப்படுவதில்லை.
சுற்றுலாவை ஆனந்தமாக கொண்டாடும் நோக்கத்தில் கன்னியாகுமரிக்கு வருபவர்களில் சிலர் ஆபத்தை உணராமல் செயல்படுவது தான் அதிர்ச்சிகரமான விஷயமாக உள்ளது. கன்னியாகுமரி கடலில் அவ்வப்போது ராட்சத அலைகள் எழும். காற்றின் வேகமும் அதிகமாகும்.
இதனால் கடற்கரையை ஒட்டி கடல் நடுவே உள்ள ஆபத்தான பாறைகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த பாறைகளுக்கு யாரும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனை மீறி சிலர் அங்கு சென்று விடுகிறார்கள்.
அவ்வாறு தடையை மீறி செல்பவர்கள் பாறைகளில் அமர்ந்தும், நின்று கொண்டும் செல்போனில் செல்பி எடுக்கின்றனர். மேலும் சிலர் குரூப்பாக நின்று போட்டோ எடுக்கிறார்கள். அவர்கள் பாறைகளுக்கு செல்லும் வழியும், பாறைகள் மீது நிற்பதும் ஆபத்தானது என போலீசார் எச்சரித்துள்ள போதிலும் பலர் கண்டு கொள்வதில்லை.
தற்போது கன்னியாகுமரி கடல் பகுதியில் காற்று அதிகமாக அடித்து வரும் நிலையிலும் இளங்கன்று பயமறியாது என்பதற்கேற்ப, இளைஞர்கள் பலரும் ஆபத்தான பகுதிகளுக்கு சர்வசாதாரணமாக சென்று வருகின்றனர். அதனை தடுக்க அந்த பகுதிகளில் கூடுதல் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு கண்காணிப்பை தீவிரப் படுத்த வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
இந்த விஷயத்தில் போலீசார் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்பது ஒரு புறம் இருந்தாலும், ஆபத்து என தெரிந்தும் அந்த பகுதிகளுக்கு செல்வோர் தங்களின் எதிர்காலம், குடும்பம் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு கவனமாக செயல்படவேண்டும் என்பது பொதுவான கருத்தாக இருக்கிறது.
- ஓவியர் தனது மனைவியிடம் வரதட்சணையாக பணம், நகை கேட்டு சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
- ஓவியர் மனைவியை காரில் இருந்து கீழே தள்ளிவிட்டு வேகமாக தப்பிச் சென்றார்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள முதலார் பகுதியை சேர்ந்த 27 வயதுடைய வாலிபர் ஓவியராக உள்ளார். இவர் வீடுகளில் அலங்கார ஓவியம் வரையும் வேலை செய்து வருகிறார். இவரும் அணைக்கரையை சேர்ந்த 23 வயதுடைய பட்டதாரி இளம்பெண்ணும் கடந்த 2021-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு 1½ வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் ஓவியர் தனது மனைவியிடம் வரதட்சணையாக பணம், நகை கேட்டு சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த இளம்பெண் கடந்த ஆண்டு தொடக்கத்தில் கணவரை விட்டு பிரிந்து குழந்தையுடன் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். மேலும் அவர் ஆற்றூர் பகுதியில் உள்ள ஒரு கல்வியியல் கல்லூரியில் பி.எட். படித்து வருகிறார். தினமும் கல்லூரிக்கும் ஸ்கூட்டரில் சென்று வருவது வழக்கம்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் அந்த இளம்பெண் கல்லூரியில் இருந்து ஸ்கூட்டரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வீட்டின் முன்பு உள்ள சாலையில் ஓவியர் காருடன் நின்று கொண்டிருந்தார். அவர் மனைவி வந்ததும் அவரை வழிமறித்து நிறுத்தி தகராறு செய்தார்.
தகராறு முற்றிய நிலையில் மனைவியின் ஸ்கூட்டர் சாவியை பிடுங்கி கொண்டு காரில் ஏறினார். அவரை இளம்பெண் தடுக்க முயன்றபோது காரில் கிடந்த கம்பியால் அவரை தாக்கிவிட்டு காரில் புறப்பட தயாரானார். உடனே அந்த இளம்பெண் கார் ஜன்னல் வழியாக தனது ஸ்கூட்டர் சாவியை வாங்க முயன்றார்.
அப்போது ஓவியர் காரை இயக்கி மனைவியை தரதரவென இழுத்துச்சென்றார். இதனால் அந்த பெண் அலறினார். இதை பார்த்து அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அத்துடன் சில இளைஞர்கள் காரைத் துரத்தி சென்றனர். உடனே ஓவியர் மனைவியை காரில் இருந்து கீழே தள்ளிவிட்டு வேகமாக தப்பிச் சென்றார். இதில் அந்த இளம்பெண் கீழே விழுந்து காயம் அடைந்தார். அவரை பொதுமக்கள் மீட்டு குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து திருவட்டார் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி ஓவியரை தேடி வருகின்றனர். இதற்கிடையே ஓவியர் மனைவியை காரில் தரதரவென இழுத்து சென்ற பதைபதைக்க வைக்கும் காட்சி அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது. அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சென்னை- திருநெல்வேலி வந்தே பாரத் ரெயில் அறிவிக்கப்பட்ட தருணத்திலேயே இந்த ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தேன்.
- மத்திய ரெயில்வே துறை அமைச்சர் மற்றும் ரெயில்வே உயர் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கையை வலியுறுத்தினேன்.
கன்னியாகுமரி:
குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
நாகர்கோவில் நகருக்கு முதன் முறையாக வருகை தந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலை இன்று ரெயில் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினருடன் இணைந்து வரவேற்றேன்.
சென்னை- திருநெல்வேலி வந்தே பாரத் ரெயில் அறிவிக்கப்பட்ட தருணத்திலேயே இந்த ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தேன்.
மத்திய ரெயில்வே துறை அமைச்சர் மற்றும் ரெயில்வே உயர் அதிகாரிகளை சந்தித்து இந்த கோரிக்கையை வலியுறுத்தினேன். தொடர் முயற்சிகளின் பலனாக இன்று வந்தே பாரத் ரெயில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்தடைந்தது.
கன்னியாகுமரி மாவட்ட மக்கள் சார்பாக அனைவருக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
- கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட 5,77,803 குடும்ப அட்டைத்தாரர்களுக்கு வெள்ள நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
- விடுபட்ட குடும்ப அட்டைத்தாரர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள கூட்டுறவு கடன் சங்கங்கள், நியாய விலைக்கடைகளுக்கு சென்று தங்களது நிவாரண உதவித்தொகையினை பெற்று கொள்ளலாம்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 17.12.2023 மற்றும் 18.12.2023 ஆகிய இரண்டு நாட்கள் பெய்த வடகிழக்கு பருவமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் முதலமைச்சர் வெள்ள நிவாராணத் தொகையாக தலா ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்ததை தொடர்ந்து, உதவித்தொகை வழங்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட 5,77,803 குடும்ப அட்டைத்தாரர்களுக்கு வெள்ள நிவாரண உதவித்தொகை கடந்த 29.12.2023 அன்று முதல் அனைத்து கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நியாயவிலைக்கடைகள் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் இதுநாள் வரை நிவாரணத்தொகை வாங்காத விடுப்பட்ட குடும்ப அட்டைத்தாரர்களுக்கு நாளை (03.01.2024) வழங்கப்படும். எனவே விடுபட்ட குடும்ப அட்டைத்தாரர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நியாயவிலைக்கடைகளுக்கு சென்று தங்களது நிவாரண உதவித்தொகையினை பெற்று கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.






