என் மலர்
கன்னியாகுமரி
- வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து சாமி தரிசனம்.
- ஆஞ்சநேயருக்கு வெள்ளி அங்கி சாத்தப்பட்டு சிறப்பு வழிபாடு.
சுசீந்திரம்:
குமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இங்கு 18 அடி உயரமுள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர்சாமி சிலை உள்ளது.
ஆஞ்சநேயர் சாமிக்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தன்று ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். மேலும் மாதந்தோறும் மூலம் நட்சத்திரத்தன்று ஆஞ்சநேயர் சாமிக்கு வெள்ளி அங்கி சாத்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.
அது போல் நேற்றும் மூலம் நட்சத்திரத்தையொட்டி ஆஞ்சநேயர் சாமிக்கு வெள்ளி அங்கி சார்த்தி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகம் செய்திருந்தது.
- வியாபாரம் நடத்துவதில் ஏற்பட்ட பிரச்சனையால் வியாபாரிகள் போராட்டம்.
- சுமூக தீர்வு காண வேண்டும் என்று அதிகாரிகளிடம் விஜய் வசந்த் கேட்டுக் கொண்டார்.
மார்த்தாண்டத்தில் புதிய சந்தை கட்டப்பட்டு வரும் நிலையில் வியாபாரிகளுக்கு தற்காலிகமாக ஒதுக்கப்பட்ட இடத்தில் வியாபாரம் நடத்துவதில் ஏற்பட்ட பிரச்சனையால் வியாபாரிகள் போராட்டம் நடத்தினர்.

அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கேட்டுக் கொண்டார்.
- மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினார்.
- மேயர், மருத்துவ துறை துணை இயக்குநர், கல்லூரி டீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்கள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரியில் ரூபாய் 6.02 கோடி மதிப்பீட்டில் 32 படுக்கை வசதியுடன் இரண்டு அறுவை சிகிச்சை கட்டிடத்தை திறந்து வைத்து, மருத்துவக் கல்லூரியில் ரூபாய் 20 கோடி மதிப்பீட்டில் தேசிய சுகாதார திட்ட நிதியிலிருந்து அதிதீவிர சிகிச்சை பிரிவு கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

மேலும் மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர் மனோ தங்கராஜ், பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், மாவட்ட ஆட்சியர், நாகர்கோவில் மாநகர மேயர், மருத்துவ துறை துணை இயக்குநர், கல்லூரி டீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- தேர்தல் அறிக்கை என்பது நம்முடைய உரிமைகளை மீட்பதற்கான ஒரு தேர்தல் அறிக்கை.
- நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாத்து மக்களை ஒற்றுமையாக முன்னேற்ற பாதையில் அழைத்துச்செல்வோம்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் நடந்த தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் கருத்து கேட்பு கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-
தி.மு.க. தேர்தல் அறிக்கை குழு சந்திப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருக்கக்கூடிய பல துறைகளை சார்ந்த சங்கங்களை சார்ந்த அத்தனை பேருக்கும் எங்களுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மக்களை சந்தித்து மக்களுடைய கருத்துக்களை, கோரிக்கைகளை கேட்டு எழுதப்படக்கூடிய மக்களுடைய தேர்தல் அறிக்கையாகத்தான் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை இருக்கும்.
இப்போது அந்த வழியில் தொழிலாளர்கள், நம்முடைய முதலமைச்சர் கழக தலைவர் தளபதி அவர்களுடைய கட்டளைக்கு இணங்க தேர்தல் சார்ந்து தொழிலாளர், விவசாயிகள், மீனவர்களை சந்தித்து அவர்களுக்கு இருக்கக்கூடிய கோரிக்கைகளை எல்லாம் தேர்தல் அறிக்கையாக உருவாக்கக்கூடிய வாய்ப்பை நாங்கள் பெற்று இருக்கிறோம்.
இந்த தேர்தல் அறிக்கை என்பது நம்முடைய உரிமைகளை மீட்பதற்கான ஒரு தேர்தல் அறிக்கை. மத்தியில் இருக்கக்கூடிய அரசாங்கம் கொஞ்சம் கொஞ்சமாக மாநில உரிமைகளை சிதைத்து கொண்டிருக்கிறது.
அதேபோல் மக்களை பிரித்தாளக்கூடிய ஒரு மனப்பான்மையோடு நம்முடைய ஒற்றுமையை சிதைத்து, ஒவ்வொரு மாநிலத்தின் அடையாளங்களை எல்லாம் அழித்து, மக்களுக்கு இடையே பிரச்சனைகளை உருவாக்கி, வேறு பிரச்சனைகளை கொண்டு வந்து அதை முன்வைத்து, மக்கள் அன்றாடம் சந்திக்கும் வேலைவாய்ப்பு இல்லாமை, விவசாய பிரச்சனை, மீனவர்களுடைய உரிமைகளை பறிக்கப்படுவதை மறக்கடிக்க செய்து வேறு ஒரு புதிய மதக்கலவரத்தையோ ஜாதி பிரச்சனைகளையோ தூண்டி அதில் அரசியல் செய்யலாம் என்ற நிலைப்பாடு உடையவர்கள் தான்.
அதனால் இதை நாம் சரியாக புரிந்து கொண்டு மக்கள் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு தீர்வுகளை காண நம்முடைய முதலமைச்சர் கட்டளைதான் இந்த தேர்தல் குழு. உங்களுக்கு இருக்கக்கூடிய கோரிக்கை, அது மாநில அரசு சார்ந்ததாகவும் இருக்கலாம். மத்தியில் ஆட்சி நிச்சயமாக மாறும் என்ற நம்பிக்கையோடு, நாம் அந்த ஆட்சி மாற்றத்திற்கான உழைப்பை முதலில் செய்து கொண்டிருக்கிறோம்.
அந்த ஆட்சி மாற்றம் வந்த பிறகு நம்முடைய உரிமைகளை மீட்பதற்காக நம்முடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக அதையும் நீங்கள் எங்களிடம் வழங்க வேண்டும். நிச்சயமாக நம்முடைய முதலமைச்சரால் உங்களுடைய வழிகாட்டுதலின் வழியே ஒரு ஆட்சி மாற்றம் இந்த நாட்டிலே உருவாகும். அந்த ஆட்சி மாற்றம் மூலம் இந்த நாட்டை மீட்டெடுப்போம். நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாத்து மக்களை ஒற்றுமையாக முன்னேற்ற பாதையில் அழைத்துச்செல்வோம்.
இவ்வாறு கனிமொழி எம்.பி. பேசினார்.
- இன்று 2-வது நாளாக நாகர்கோவிலில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
- ஜி.எஸ்.டி. பதிவு செய்துள்ள வணிகர்களுக்கு வணிகர்களின் நிலைமை காப்பதற்கு 2 சதவீத வரி ஒதுக்கீடு செய்திட முன் மொழிய வேண்டும்.
நாகர்கோவில்:
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். அதன்படி இந்த குழுவினர் நேற்று தூத்துக்குடியில் இருந்து கருத்து கேட்பு கூட்டத்தை தொடங்கி உள்ளனர்.
இன்று 2-வது நாளாக நாகர்கோவிலில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் உறுப்பினர்கள் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், முன்னாள் எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே. எஸ்.விஜயன், தமிழ்நாடு அரசின் தலைமை கொறடா கோ.வி.செழியன் எம்.எல்.ஏ., எழிலரசன் எம்.எல்.ஏ., ராஜேஷ்குமார் எம்.பி., டாக்டர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ, மற்றும் அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டு அறிந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உட்பட்ட பொதுமக்கள், மீனவர்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், மலைவாழ் மக்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். மீனவர்களை கண்டுபிடிக்க ஹெலிகாப்டர் தளம் அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கை மனுக்களை மீனவர்கள் வழங்கினார்கள். விவசாய சங்க பிரதிகளும் கலந்து கொண்டனர்.
வின்ஸ்ஆன்றோ, புலவர் செல்லப்பா ஆகியோர் கலந்து கொண்டு பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏ.வி.எம். சானலை தூர்வார வேண்டும், குளங்களை தூர்வார விவசாயிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை கனிமொழி எம்.பி.யிடம் வழங்கினார்கள்.
இதே போல் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பிலும் மனு வழங்கப்பட்டது. வணிகர்களை அரசு ஊழியர்களுக்கு இணையாக நடத்துவதற்கான சட்ட முன் வடிவை முன்மொழிந்திட வேண்டும். அரசு ஊழியர்களுக்கு இணையாக ஓய்வூதிய பணபலன்களும், குடும்ப பாதுகாப்பு நலநிதி காப்பீடு பெறுவதற்கு வழிவகை செய்ய வேண்டும். தனிநபர் வருமான வரி உச்சவரம்பை குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் ஆக உயர்த்தி அறிவிக்க முன்மொழிந்திட வேண்டும்.
ஜி.எஸ்.டி. பதிவு செய்துள்ள வணிகர்களுக்கு வணிகர்களின் நிலைமை காப்பதற்கு 2 சதவீத வரி ஒதுக்கீடு செய்திட முன் மொழிய வேண்டும். ஏழை, நடுத்தர மக்கள் மற்றும் நோயாளிகள் மாணவர்கள் நலன் கருதி ரூ.1000-த்துக்கு குறைவான விடுதி கட்டிடங்களுக்கு ஜி.எஸ்.டி. வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்கள்.
மீன் வலை தயாரிப்பாளர் சங்கம் சார்பில் செயலாளர் நாகூர்கான் மற்றும் நிர்வாகிகள் மனு அளித்தனர். மனுவில், கொல்கத்தா, மும்பை துறைமுகங்கள் வழியாக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில் இறக்குமதியாகும் வலைகளை தடுப்பதுடன் மலிவுவிலை சீனப் பொருட்களுடன் மறைத்து இறக்குமதி செய்யப்படுகின்ற சீன வலைகளை முற்றிலுமாக தடுக்க வேண்டும். விவசாய பொருள்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து வரி விலக்கு இருப்பது போன்று மீனவர்களுக்கும் நிவாரணம் கிடைக்கும் வகையில் மீன் வகைகளுக்கும் பூஜ்ஜியம் சதவீத வரி மட்டுமே நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இதைத் தொடர்ந்து சின்னமுட்டம் விசைப்படகு மீனவர் சங்கம், தமிழ்நாடு மக்கள் நல பணியாளர்கள், குடியிருப்போர் நலசங்க நிர்வாகிகள், ஜனநாயக கிறிஸ்தவ பேரவை நிர்வாகிகள், கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி குழு நிர்வாகிகளும், கனிமொழி எம்.பி.யிடம் மனு அளித்தனர்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், அவைத் தலைவர் எப்.எம் ராஜரத்தினம் பொருளாளர் கேட்சன், தலைமை செயற்குழு உறுப்பினர் தாமரை பாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து நெல்லை, தென்காசி மாவட்ட பொதுமக்களிடமும் கனிமொழி எம்.பி. கருத்துக்களை கேட்டு அறிந்தார்.
- அமைச்சர் மா.சுப்பிரமணியன் கன்னியாகுமரி வந்தார்.
- தனிநபர் மினி மாரத்தானில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று ஓடினார்.
கன்னியாகுமரி:
தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று இரவு கன்னியாகுமரி வந்தார். அங்கு வந்து அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இரவு அங்குள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான புதிய அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினார்.
இன்று அதிகாலை 4 மணிக்கு கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் இருந்து காணிமடம் வரை உள்ள 21.4 கிலோ மீட்டர் தூரம் நடந்த தனிநபர் மினி மாரத்தானில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பங்கேற்று ஓடினார். அவருடன் அமைச்சர் மனோதங்கராஜ் கலந்து கொண்டு ஓடினார்.
கன்னியாகுமரியில் நடந்த இந்த மினி மாரத்தானில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் 148-வது முறையாக ஓடி சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
வருகின்ற பாராளுமன்ற தேர்தல் குறித்து விளவங்கோடு சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி நிர்வாகிகள் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார்.
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளரும் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினருமான ராஜ்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார், மாவட்ட தலைவர் பினுலால் சிங், வட்டார நகர தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.
- பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் ரூ. 2 கோடியே 32 லட்சம் வாடகை பாக்கி செலுத்தாமல் பாக்கி வைத்து இருந்தது.
- இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் பல தடவை நோட்டீசு அனுப்பியும் எந்தவித பலனும் இல்லாமல் இருந்தது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 12 ஆயிரத்து 431 சதுர அடி காலிமனையில் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து நடத்தி வரும் தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்துக்கு 1984-ம் ஆண்டில் இருந்து வாடகைக்கு வழங்கப்பட்டது.
இந்த வகையில் கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி வரை 34 ஆண்டு காலத்துக்கு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் ரூ. 2 கோடியே 32 லட்சம் வாடகை பாக்கி செலுத்தாமல் பாக்கி வைத்து இருந்தது. இந்த வாடகை பாக்கி வசூலிக்க குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகத்தின் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் பல தடவை நோட்டீசு அனுப்பியும் எந்தவித பலனும் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் இந்த வாடகை பாக்கியை வட்டியுடன் வசூலிக்கு உத்தரவிட வேண்டும் என்று திருத்தொண்டர் சபை ராதாகிருஷ்ணன் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துஇருந்தார். இந்த மனுவை விசாரித்து நீதிபதி புகழேந்தி, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்திடம் இருந்து வாடகை பாக்கியை வசூலிக்க இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார்.
இதற்கிடையில் அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின் காரணமாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு செலுத்த வேண்டிய வாடகை பாக்கியில் ஒரு தவணையாக முதல் கட்டமாக ரூ.84 லட்சத்து 70 ஆயிரத்து 46-க்கு காசோலையை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகத்தினருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
- புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ஒதுக்கப்பட்டது.
- நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மருங்கூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பத்மனாபன்புதூரில் புதிய அங்கன்வாடி கட்டிடம் தேவை என்று மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
அவர்களின் கோரிக்கை ஏற்று புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.14.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு புதிய அங்கன்வாடி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- குமரி மாவட்டம் கல்வி அறிவு மிகுந்த மாவட்டமாகும்.
- பாராளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணிக்கு நீங்கள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் ஓ.பி.எஸ். அணி சார்பில் பாராளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. மாவட்ட செயலாளர்கள் பி.டி.செல்லப்பன், எஸ்.ஏ. விக்ரமன் ஆகியோர் தலைமை தாங்கினர். துணை ஒருங்கிணைப்பாளர் மனோஜ் பாண்டியன் வாழ்த்துரை வழங்கினார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
1972-ம் ஆண்டு அ.தி.மு.க. இயக்கம் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டது. தொண்டர்கள் இயக்கமாக இந்த இயக்கம் உருவாக்கப்பட்ட பிறகு புரட்சித்தலைவி அம்மா மக்கள் இயக்கமாக இந்த இயக்கத்தை மாற்றி காட்டினார். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு தொடங்கப்பட்ட போது 16 லட்சம் தொண்டர்களை கொண்ட இயக்கமாக இருந்த இந்த இயக்கம், ஜெயலலிதா பொதுச் செயலாளரான பிறகு ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட இயக்கமாக மாறியது.
எந்த கொம்பனாலும் அசைக்க முடியாத மாபெரும் இயக்கமாக இந்த இயக்கம் உருவாக்கப்பட்டது. குமரி மாவட்டம் கல்வி அறிவு மிகுந்த மாவட்டமாகும். கல்வியில் முத்திரை பதித்த மாவட்டமாக இந்த மாவட்டம் விளங்கி வருகிறது. யாரும் உங்களை பேச்சு மூலமாக ஏமாற்ற முடியாது என்பதை தேர்தல் மூலமாக நிரூபித்து வருகிறீர்கள்.
பொதுச் செயலாளரை தேர்வு செய்வதற்கு சட்ட விதிகளை மாற்ற முடியாது என்று எம்ஜிஆர் கூறினார். தொண்டர்கள் மூலமாகத் தான் பொதுச்செயலாளரை நியமனம் செய்ய முடியும் என்ற நிலை இருந்தது. அதை தற்போது எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மாற்றிக் காட்டி உள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி கொஞ்சம் கொஞ்சமாக தனது நயவஞ்சகத்தால் இயக்கத்தை அழித்து வருகிறார். அம்மா மறைவிற்கு பிறகு கழக ஒருங்கிணைப்பாளர் என்று பதவி உருவாக்கப்பட்டது. 2021-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த பதவி 2026 வரை சட்ட விதிப்படி செல்ல வேண்டும்.

ஆனால் எடப்பாடி பழனிச்சாமி ஒற்றை தலைமை வேண்டும் என்று கூறி பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கினார். அம்மா அவர்களுக்கு மரியாதை செய்யும் வகையில் நிரந்தர பொதுச் செயலாளர் என்ற பதவி யாருக்கும் வழங்கப்படவில்லை. சர்வாதிகாரமாக தான் தோன்றித்தனமாக எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டார்.
அம்மா மறைவிற்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி எப்படி முதலமைச்சர் ஆன ஆனார் என்று எல்லோருக்கும் தெரியும். தவழ்ந்து தவழ்ந்து சென்று பதவியை பெற்றுக் கொண்டார். சின்னமாவை இழிவாக பேசினார். எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற பிறகு ஊராட்சி தேர்தல், உள்ளாட்சி தேர்தல் , பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தல் மட்டும் இன்றி இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. படுதோல்வி அடைந்துள்ளது.
ஈரோட்டில் நடந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தோல்விக்கு எடப்பாடி பழனிச்சாமி தான் முக்கிய காரணமாக இருந்தார். அவர் பொது செயலாளர் பதவியை தற்காலிக தீர்ப்பின் மூலம் தான் பெற்றுள்ளார்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். என்ன சட்ட திருத்தத்தை கொண்டு வந்தாரோ, அதேபோல் மீண்டும் தொண்டர்களே பொதுச் செயலாளரை தேர்வு செய்ய முடியும் என்பதை கொண்டு வருவதற்காக தான் தர்ம யுத்தம் நடத்தப்பட்டு வருகிறது.
அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது. அதை காப்பாற்ற தான் போராடி வருகிறோம். தேர்தல் நேரங்களில் அம்மா இருக்கும்போது பல கட்சிகள் அவரைத் தேடி வருவார்கள். ஆனால் தற்பொழுது தலைமை கழகத்தில் 6 பேர் உட்கார்ந்து இருக்கிறார்கள். யாரும் அவர்களை தேடி வரவில்லை.
கன்னியாகுமரி மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்! (04-02-2024) - நேரலை
— O Panneerselvam (@OfficeOfOPS) February 4, 2024
https://t.co/fvuC2T9ZX5
அ.தி.மு.க. என்னும் கட்சியை எடப்பாடி பழனிசாமி தாத்தாவோ பன்னீர்செல்வத்தின் தாத்தாவோ உருவாக்கவில்லை. எம்.ஜி.ஆர். உருவாக்கிய கட்சி என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தொண்டர்கள் கூட முதலமைச்சராக வர வாய்ப்புள்ளது.
விருதுநகரில் நடந்த தேர்தலில் பெருந்தலைவர் காமராஜர் வெற்றி வாய்ப்பு இழந்தார். பின்னர் அவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். காமராஜரை வெற்றி பெற வைத்த மண் இந்த மண்ணாகும். அ.தி.மு.க. தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி தீங்கு செய்து வருகிறார். பொதுச்செயலாளர் பதவிக்கு 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய வேண்டும். 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழிய வேண்டும் என்று கூறியுள்ளார்கள்.
அப்படி என்றால் வேலு மணியும் தங்கமணியும் தான் பொதுச் செயலாளராக வர முடியும். கழகத்தை சிதைத்து சின்னாபின்னமாக்கி கொண்டிருக்கிறார்கள். பாராளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணிக்கு நீங்கள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.
9 முறை தோல்வியை சந்தித்த அவர்களுக்கு பத்தாவது முறையும் தோல்வியை நீங்கள் வழங்க வேண்டும். நாம் தேர்தலை சந்திக்க முழு பலத்துடன் தயாராகி வருகிறோம். பூத் கமிட்டி அமைக்க வேண்டும். தமிழகத்தில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பூத்துகள் உள்ளது. ஒரு பூத்துக்கு 18 முதல் 25 பேரை அமர வைக்க வேண்டும். மீண்டும் அம்மா ஆட்சியை கொண்டுவர நான் போராட வேண்டும்.
இவ்வாறு பேசினார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட பன்னீர்செல்வத்திற்கு ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டது. நிர்வாகிகள் வீரவாள் பரிசு வழங்கினார்கள் .
- சசிகலாவை மரியாதை நிமித்தமாக தான் சந்தித்தேன்.
- பிரதமர் மோடி 2 முறை பிரதமராக வந்துள்ளார்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் இன்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். உருவாக்கியபோது அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினராக இருக்கும் எவர் வேண்டுமானாலும் பொதுச்செயலாளர் ஆகலாம் என்று விதியை உருவாக்கி இருந்தார்.
பொதுச்செயலாளரை உறுப்பினர்கள் தான் தேர்வு செய்ய வேண்டும் என்ற அந்த நிபந்தனையை எடப்பாடி பழனிசாமி மாற்றி 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய வேண்டும். 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழிய வேண்டும். 5 பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று மாற்றினார்.
அப்படி என்றால் பணம் படைத்தவர்களால் மட்டும் தான் பொது செயலாளராக முடியும். இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காக தான் தர்ம யுத்தம் நடத்தி வருகிறோம். அதற்காக தான் இந்த உரிமை மீட்பு கூட்டமும் நடைபெறுகிறது.
அண்ணா நினைவு நாளன்று சசிகலாவை சந்தித்தோம். மரியாதை நிமித்தமாக தான் சந்தித்தேன். அரசியல் பற்றி பேசவில்லை.
பிரதமர் மோடி 2 முறை பிரதமராக வந்துள்ளார். அவரை 3-வது முறையும் பிரதமராக்க வேண்டும் என்று அந்த கூட்டணியில் உள்ளோம். அ.தி.மு.க.வின் பெயருக்கு பங்கம் விளைவிக்கும் யாராக இருந்தாலும், எந்த பதவியில் இருந்தாலும் அதை எதிர்த்து தர்ம யுத்தம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை முகாம்.
- வேலை வாய்ப்பு முகாமில் கல்லூரி முதல்வர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்க வசந்த் அன் கோ சார்பில் வேலை வாய்ப்பு முகாமை பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தொடங்கி வைத்தார்.
நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்கும் இந்த முகாமில் பொன் ஜெஸ்லி கல்லூரி தாளாளர் மற்றும் கல்லூரி முதல்வர் ஆகியோர் கலந்து கொண்டனர்.






