என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • ஒரு நிகழ்ச்சி வாயிலாக நான் வெறும் 2 கோடி மட்டுமே செலவு செய்துள்ளதாக தவறான தகவல் வெளியிட்டுள்ளது.
    • நிறுவனத்திற்கு கடிதம் வாயிலாக அந்த தவறான செய்தியை திருத்தி உண்மையை சொல்ல வேண்டும்.

    கன்னியாகுமரி:

    நிதி தொடர்பாக தவறாக செய்தி வெளியிட்ட தனியார் தொலைக்காட்சிக்கு விஜய் வச்ந்த் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கன்னியாகுமரி தொகுதிக்கு கடந்த 5 ஆண்டுகளில் அரசு ஒதுக்கிய 17 கோடி ரூபாய் முழுவதும் (100%) மக்கள் நல திட்டங்களுக்காக செலவு செய்துள்ள நிலையில், சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒரு நிகழ்ச்சி வாயிலாக நான் வெறும் 2 கோடி மட்டுமே செலவு செய்துள்ளதாக தவறான தகவல் வெளியிட்டுள்ளது.

    இன்று அந்த நிறுவனத்திற்கு கடிதம் வாயிலாக அந்த தவறான செய்தியை திருத்தி உண்மையை சொல்ல வேண்டும் என கேட்டு கொண்டேன்.

    தவறும் பட்சத்தில் சட்டரீதியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.

    • பூங்கா அமைக்க பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 4 லட்சம் ஒதுக்கப்பட்டது.
    • நிகழ்ச்சியில் வெள்ளிமலை பேரூர் காங்கிரஸ் தலைவர் தயனேஷ் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    வெள்ளிமலை பேரூராட்சிக்குட்பட்ட சாத்தன்விளை முத்தாரம்மன் கோவில் அருகே சிறுவர் பூங்கா அமைக்க பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 4 லட்சம்  ஒதுக்கீடு செய்யப்பட்டது. அப்பணிகள் நிறைவு பெற்றதையடுத்து பூங்காவை பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் திறந்து வைத்தார்.


    இந்த நிகழ்ச்சியில் வெள்ளிமலை பேரூர் காங்கிரஸ் தலைவர் தயனேஷ் உட்பட காங்கிரஸ் நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கூட்டத்தில் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் முன்னிலை வகித்தார்.
    • காங்கிரஸ் கட்சியின் மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    மார்த்தாண்டம், ஞாறான்விளையில் நடைபெற்ற குமரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியிருப்பிதாவது:-

    வருகின்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற செய்ய இளைஞர்கள் அதிகமாக பங்களிப்பு அளிக்க வேண்டும். ராகுல் காந்தியை பிரதமராக்க உழைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டேன்.


    மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திபாகர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் முன்னிலை வகித்தார்.

    காங்கிரஸ் கட்சியின் மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    • குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 12 லட்சம் ஒதுக்கப்பட்டது.
    • தோவாளை காங்கிரஸ் வட்டார தலைவர் முருகானந்தம், ஊராட்சி தலைவர் திருமதி. சந்தியா சுப்ரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.

    கன்னியாகுமரி மாவட்டம் பீமநகரி ஊராட்சிக்கு உட்பட்ட CMC நகர் பகுதியில் குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

    அவர்கள் கோரிக்கை ஏற்று பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 12 லட்சம்  ஒதுக்கப்பட்டது.

    அதற்கான பூமி பூஜையில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார்.

    இந்நிகழ்ச்சியில் தோவாளை காங்கிரஸ் வட்டார தலைவர் முருகானந்தம், ஊராட்சி தலைவர் திருமதி. சந்தியா சுப்ரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.

    • ஆண்-பெண்களை போன்று அனைத்து துறைகளிலும், திருநங்கைகளும் தடம் பதிக்க தொடங்கி இருக்கின்றனர்.
    • பெரும்பாலான மக்கள் எங்களை மிகவும் ஏற்றுக் கொள்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.

    நாகர்கோவில்:

    ஆண்-பெண் என்ற இருபாலத்தினருக்கு மத்தியில் மூன்றாம் பாலினத்தவர்களாக திருநங்கைகள் அங்கீகரிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்திலும் அரசு வாய்ப்பு வழங்கி வருகிறது.

    மேலும் சாதாரண மக்களுக்கு வழங்கக் கூடிய அனைத்து நலத்திட்டங்களும் இவர்களுக்கும் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக ஆண்-பெண்களை போன்று அனைத்து துறைகளிலும், திருநங்கைகளும் தடம் பதிக்க தொடங்கி இருக்கின்றனர்.

    அவர்கள் சுயதொழிலில் ஈடுபடுவது மட்டுமின்றி, மத்திய-மாநில அரசு துறைகள் மற்றும் தனியார் அலுவலகங்களில் பணியாற்றுகிறார்கள். இந்நிலையில் குமரி மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை ஒருவர், ரெயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

    இதன்மூலம் தென்னக ரெயில்வேயின் முதல் திருநங்கை டிக்கெட் பரிசோதகர் என்ற சிறப்பையும் அவர் பெற்றிருக்கிறார். நாகர்கோவிலை சேர்ந்த அவரது பெயர் சிந்து. வாழ்க்கையில் உயர கல்வியே முக்கியம் என்பதை உறுயியாக நம்பிய சிந்து, பி.லிட் தமிழ் இலக்கியம் படித்தார்.

    பின்னர் கடந்த 2003-ம் ஆண்டு தெற்கு ரெயில்வேயில் பணியில் சேர்ந்தார். கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் ரெயில்வே பணியாற்றிய அவர், கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்திற்கு பணி மாறுதலாகி வந்தார். மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட திண்டுக்கல் ரெயில் நிலையத்தின் ரெயில்வே மின்சார பிரிவில் பணியாற்றினார்.

    இந்நிலையில் ஒரு சிறிய விபத்தில் அவரது கையில் காயம் ஏற்பட்டது. இதனால் தொழில்நுட்ப பிரிவில் சிந்துவால் பணியாற்ற முடியவில்லை. தொழில்நுட்பம் இல்லாத பணியில் தொடர முடியுமா என்று அவரிடம் ரெயில்வே துறையினர் கேட்டனர்.

    அதற்கு அவர் சம்மதித்தது மட்டுமின்றி, டிக்கெட் பரிசோதகராக பணிபுரிய விரும்புவதாக தெரிவித்தார். அதன்பேரில் திருநங்கை சிந்து, திண்டுக்கல் ரெயில் நிலையத்திலேயே டிக்கெட் பரிசோதகராக நியமிக்கப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு டிக்கெட் பரிசோதகராக அவர் பணியில் சேர்ந்தார்.

    ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மத்தியில் மூன்றாம் பாலினத்தை சேர்ந்த தான், டிக்கெட் பரிசோதகராகி இருப்பது சிந்துவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து சிந்து கூறியதாவது:-

    டிக்கெட் பரிசோதகராக பணியில் சேர்ந்திருப்பது எனது வாழ்நாளில் மறக்க முடியாக நிகழ்வு. நான் டிக்கெட் பரிசோதகராக பணியாற்ற சில சவால்கள் இருந்தன. ஆனால் அது எனது கனவாக இருந்தது. தற்போது அந்த கனவு நனவாகிவிட்டது.

    இது எனக்கு மட்டுமல்ல. திருநங்கைகளுக்கு கிடைத்த வெற்றியாகவே நான் பார்க்கிறேன். மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர் என்பதால் என்னை சுற்றியிருந்தவர்கள் என்னை எப்படி பார்ப்பார்கள் என்று நான் மிகவும் கவலைப் பட்டேன். இருப்பினும் தெற்கு ரெயில்வே மஸ்தூர் யூனியனும், அதன் அலுவலக பணியாளர்களும் எனக்கு ஆதரவளித்தனர்.

    என்னால் முடிந்ததை செய்ய வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். திருநங்கையான எனது சாதனைக்கு பொதுமக்கள் உறுதுணையாக இருந்ததை கண்டு நான் மகிழ்ச்சியடைந்தேன். தற்போது பெரும்பாலான மக்கள் எங்களை மிகவும் ஏற்றுக் கொள்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மற்றும் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட மீன்கள் ஆய்வு செய்யப்பட்டது.
    • மீன்கள் மீது பார்மலின் தடவப்பட்டிருக்கிறதா? மீன் விற்பனைக்கு தகுதியானதா? என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கணேசபுரம் மற்றும் வடசேரி பகுதி மீன் மார்க்கெட்களில் கெட்டுப்போன, பார்மலின் கலந்து கெட்டுப்போகாமல் பாதுகாக்கப்பட்ட பார்மலின் கெமிக்கல் மனம் கொண்ட மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தது.

    அந்த புகார் மீது ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க மாநகராட்சி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் நாகர்கோயில் மாநகர உணவு பாதுகாப்பு அலுவலர்கள் குமார பாண்டியன், சங்கரநாராயணன், மீன்வளத்துறை ஆய்வாளர் மரிய பிரான்ஸ்கோ விவின் மற்றும் மேற்பார்வையாளர் கார்த்தீபன், நாகர்கோவில் மாநகர மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் சத்யராஜ், மாதேவன் பிள்ளை ஆகியோர் கொண்ட குழுவினர் கணேசபுரம்-வடசேரி மீன் சந்தையில் விற்பனை செய்யப்படும் மீன்களை இன்று ஆய்வு செய்தனர்.

    விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மற்றும் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட மீன்கள் ஆய்வு செய்யப்பட்டது. மீன்கள் மீது பார்மலின் தடவப்பட்டிருக்கிறதா? மீன் விற்பனைக்கு தகுதியானதா? என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஒரு சில வியாபாரிகள் உணவு பயன்பாட்டிற்கு தகுதியற்ற மீன்களை விற்பனை செய்திருந்தது தெரியவந்தது.

    அந்த மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மீன்களை மினி டெம்போவில் ஏற்றி கொண்டு சென்றனர். உணவு பயன்பாட்டிற்கு தகுதியற்ற கெட்டுப்போன சுமார் 230 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    அந்த மீன்களை சுண்ணாம்பு தூள் மற்றும் பிளிச்சிங் பவுடர் தூவப்பட்டு மாநகராட்சி உரக்கிடங்கில் கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்பட்டது. சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட மீன்களில் பார்மலின் கெமிக்கல் தடவப்பட்ட மீன்கள் எதுவும் இல்லை என மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மார்த்தாண்டம் மற்றும் பார்வதிபுரம் மேம்பாலத்தில் உள்ள சாலை மிகவும் பழுதடைந்து மக்கள் பயணம் செய்ய சிரமப்படுகின்றனர்.
    • மத்திய அரசு இந்த சாலையை செப்பனிட போதிய நிதி ஒதுக்கி விரைவில் செப்பனிட வேண்டும் என கேட்டு கொண்டார்.

    கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரையிலான தேசிய நெடுஞ்சாலை பழுதடைந்து இருப்பதால் அவற்றை விரைவில் செப்பனிட நிதி ஒதுக்க வேண்டும் எனவும், நான்கு வழி சாலை பணிகளை விரைவில் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் எனவும் இன்று பாராளுமன்றத்தில் கோரிக்கை வைத்து அப்போது அவர் கூறியிருப்பதாவது:-

    கடும் மழை காரணமாக தற்போது மக்கள் பயன்பாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலை மிகவும் பழுதடைந்துள்ளது. மேலும் இந்த சாலை வழியாக அதிக பாரம் ஏற்றி கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுவதால் சாலையின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அன்றாடம் இந்த சாலையை ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்துகிறார்கள். கேரளா மாநிலத்திற்கு செல்ல இந்த சாலை மிகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த சாலை இப்பொழுது குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

    குறிப்பாக மார்த்தாண்டம் மற்றும் பார்வதிபுரம் மேம்பாலத்தில் உள்ள சாலை மிகவும் பழுதடைந்து மக்கள் பயணம் செய்ய சிரமப்படுகின்றனர். இந்த சாலை மிகவும் ஆபத்தானதாக மாறி பல உயிர்களை இழந்துள்ளோம். ஆகவே மத்திய அரசு இந்த சாலையை செப்பனிட போதிய நிதி ஒதுக்கி விரைவில் செப்பனிட வேண்டும் என கேட்டு கொண்டார்.

    அது போல் இந்த சாலைக்கு மாற்றாக பணி நடைபெற்று வரும் நான்கு வழி சாலை பல்வேறு காரணங்களால் பணிகள் மெதுவாக நகர்கிறது. இதனை வேகப்படுத்த வேண்டும். மேலும் நான்கு வழி சாலை பணிகளுக்கு நிலத்தை அளித்த நில உரிமையாளர்களுக்கு 12 கிராமங்களில் போதிய நிதி வழங்காத காரணத்தால் மக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். ஆகவே இந்த பிரச்சனைக்கும் மத்திய அரசு விரைந்து தீர்வு காண வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

    • முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்து தர்ப்பணம்.
    • திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடலில் புனித நீராடினார்கள்.

    கன்னியாகுமரி:

    இந்துக்களின்முக்கிய விசேஷ நாட்களில் தை அமாவாசையும் ஒன்று. இந்தநாளில் இந்துக்கள் அதிகாலையிலேயேஎழுந்து கடல், நதி, ஆறு போன்ற புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்து தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

    புண்ணிய ஸ்தலமான கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் ஆண்டுதோறும் தை அமாவாசை அன்று ஏராளமான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள். அதே போல இந்த ஆண்டும் தை அமாவாசை நாளான இன்று அதிகாலை 4 மணியில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கன்னியா குமரியில் குவியத் தொடங்கினார்கள். அவர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடலில் புனித நீராடினார்கள்.

     அதன் பிறகு ஈரத்துணியுடன் கரைக்கு வந்து கடற்கரையில் அமர்ந்து இருந்த புரோகிதர்கள் மற்றும் வேத மந்திரம் ஓதுவார்களிடம் தங்களது முன்னோர்களை நினைத்து பலி கர்ம பூஜை செய்தார்கள். அவ்வாறு பூஜை செய்த பச்சரிசி, எள்ளு, பூக்கள் மற்றும் தர்ப்பை புல் போன்றவற்றை ஒரு வாழை இலையில் வைத்து தலையில் சுமந்துகொண்டு சென்று கடலில் போட்டுவிட்டு மீண்டும் நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்தார்கள்.

    பின்னர் கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோவில், பகவதி அம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்கள்.

    தை அமாவாசையை யொட்டி பகவதி அம்மன் கோவிலில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு கோவில் மூலஸ்தான நடை மட்டும் திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும் நிர்மால்ய பூஜையும் நடந்தது. அதன்பிறகு அம்மனுக்கு பல வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.

    அதைத்தொடர்ந்து தீபாராதனையும் உஷ பூஜை, ஸ்ரீ பலி பூஜை, நிவேத்ய பூஜை உச்சிகால பூஜை உச்சிக்கால தீபாராதனை போன்ற அனைத்து பூஜைகளும் நடத்தி முடிக்கப்பட்டது.

    அதன்பிறகு 4.30 மணிக்கு வடக்கு பிரதான நுழைவு வாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் கோவிலுக்குள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டார்கள். தை அமாவாசையை யொட்டி பக்தர்களின் தரிசனத்துக்காக கோவிலில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

    • வடகிழக்கு பருவமழை காலத்தின்போது தமிழகத்தில் பூண்டு விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது.
    • இன்னும் 15 நாட்களுக்கு பூண்டு விலை குறையாது.

    நாகர்கோவில்:

    தமிழ்நாட்டில் நீலகிரி, மதுரை, திண்டுக்கல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பூண்டு பயிரிடப்பட்டு வருகிறது. குறிப்பாக, நீலகிரியில் விளைவிக்கப்படும் மலைப்பூண்டு அதிக காரத்தன்மை கொண்டதாலும், அளவில் சற்று பெரியது என்பதாலும் இல்லத்தரசிகள் அதிகம் விரும்புவார்கள்.

    இதுபோக, தமிழகத்தின் தேவைக்கு ஆந்திரா, கர்நாடகா, குஜராத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் பூண்டு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. வடகிழக்கு பருவமழை காலத்தின்போது தமிழகத்தில் பூண்டு விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. உற்பத்தி குறைந்த தால், அதன் விலையும் கிலோவுக்கு ரூ.150 அதிகரித்து, ரூ.350 வரை விற்பனை செய்யப் பட்டது. தற்போது வெளி மாநிலங்களில் இருந்து வரும் பூண்டின் வரத்தும் குறைந்துள்ளதால், அதன் விலை மேலும் அதிக ரித்துள்ளது. அந்த வகையில் நாகர்கோவில் கோட்டார் மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ பூண்டு ரூ.420 வரை விற்பனை செய்யப்பட்டது. அதாவது சிறிய பூண்டு கிலோ ரூ.250-க்கும், நடுத்தர பூண்டு கிலோ ரூ.350-க்கும், பெரிய பூண்டு கிலோ ரூ.420-க்கும் விற்பனையானது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    அதே சமயம் நாகர்கோவிலில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ பூண்டு ரூ.450-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்னும் 15 நாட்களுக்கு பூண்டு விலை குறையாது என்றும், அதன்பிறகு புதுப்பூண்டு வெளி மாநிலங்களில் இருந்து வர தொடங்கியதும் அதன் விலை குறையதட தொடங்கும் என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர். இதே போல சீரகம் ரூ.480, மல்லி-ரூ.99, மிளகு ரூ.660, கடலை பருப்பு ரூ.72 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் காய்கறி வரத்து சீராக இருப்பதால் காய்கறிகள் விலை கூடவோ குறையவோ இல்லை.

    • கடந்து வந்த பாதை என்ற புத்தகத்தை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டார்.
    • நாகர்கோவில் மேயர் மகேஷ், ஆயர்கள் மற்றும் பல்வேறு தலைவர்கள் பங்கேற்றனர்.

    குமரி மாவட்ட குளச்சல் விசைப்படகு மீன்பிடிப்பவர் நலச்சங்க 50 ஆம் ஆண்டு பொன்விழா, மாண்புமிகு லூர்தம்மாள் சைமன் முழு உருவ சிலை திறப்பு விழா மற்றும் மீன்பிடி சங்கம் கடந்து வந்த பாதை புத்தக வெளியீட்டு விழா குளச்சலில் நடைபெற்றது.


    சட்டபேரவை சபாநாயகர் அப்பாவு அவர்கள் லூர்தம்மாள் சைமன் அவர்களின் முழு உருவச் சிலையை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, கடந்து வந்த பாதை என்ற புத்தகத்தை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டார். புத்தக வெளியீட்டு விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியனும் பங்கேற்றார். 

    சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ், ராஜேஷ் குமார், நாகர்கோவில் மாநகர மேயர் மகேஷ், ஆயர்கள் மற்றும் பல்வேறு தலைவர்கள் பங்கேற்றனர்.


    இந்த நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு திருமதி. லூர்தம்மாள் சைமன் அவர்களுக்கு அரசு சார்பில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

    இதனை ஏற்று மணிமண்டபம் கட்டப்படும் என உறுதி அளித்த சபாநாயகருக்கு கன்னியாகுமரி மக்கள் சார்பில் நன்றியை விஜய் வசந்த் எம்.பி. தெரிவித்தார்.

    • வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் வந்து தரிசனம்.
    • `கியூ.ஆர்.’ கோடு மூலம் பணம் செலுத்தும் வசதி.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் பக்தர்களும் வந்து தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள்.

    கோவிலுக்கு வரும் பக்தர்கள் அம்மனுக்கு அபிஷேகம், நகை அலங்காரம், சந்தன காப்பு அலங்காரம், கன்னியா போஜனம், அரவணை நிவேத்தியம், பால் பாயாசம் நிவேத்தியம், பொங்கல் நிவேத்தியம் மற்றும் அன்னதானம் போன்றவைகளுக்கு பணம் செலுத்தி வழிபாடு நடத்து வது வழக்கம்.

    மேலும் அர்ச்சனை, குழந்தைகளுக்கு சோறு கொடுப்பு, புடவை சாத்துதல், அஷ்டோத்திரம், குங்குமம் அர்ச்சனை, கோடி அர்ச்சனை போன்ற வழிபாடுகளும் கட்டணம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.

    இது தவிர திருப்பணி களுக்கு பக்தர்கள் நன்கொடை வழங்குவதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. இந்த வழிபாடுகளுக்கும் நன்கொடைகளுக்கும் பக்தர்கள் நேரடியாக பணம் செலுத்தி வந்தனர். ஆனால் சில பக்தர்கள் பணப்பரிவர்த்தனை செய்யாமல் செல்போன் மூலம், போன் பே அல்லது கூகுள் பே வழியாக இந்த வழிபாடுகளுக்குரிய கட்டணங்களையும், நன்கொடைகளையும் செலுத்த முடியாத நிலை இருந்து வந்தது. இதனால் பெரும்பாலான பக்தர்கள் வழிபாடுகள் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற நிலை இருந்து வந்தது.

    எனவே இந்த கோவிலில் வழிபாடுகள் நடத்துவதற்கும், நன்கொடைகள் வழங்குவதற்கும் செல்போன் வழியாக `கியூ.ஆர்.' கோடு மூலம் பணம் செலுத்தும் முறையை அமல்படுத்த வேண்டும் என்று பக்தர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் பயனாக தற்போது கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் செல்போன் வழியாக `கியூ.ஆர்.' கோடு மூலம் பணம் செலுத்தி வழிபாடுகள் மற்றும் திருப்பணிகளுக்கு நன்கொடை வழங்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் ஏராளமான பக்தர்கள் `கியூ.ஆர்.' கோடு மூலம் வழிபாடு கட்டணம் செலுத்தி வருகிறார்கள். கோவிலுக்கு நன்கொடையும் குவிந்த வண்ணமாக உள்ளது.

    • ராமர் உருவம் பொறித்த காவி கொடி ஏற்றப்பட்டது.
    • கன்னியாகுமரி பகுதியில் பரபரப்பையும் பதட்டையும் ஏற்படுத்தி உள்ளது.

    கன்னியாகுமரி:

    அயோத்தியில் கடந்த ஜனவரி மாதம் 22-ந் தேதி ராமர் கோவிலில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதையொட்டி அன்றைய தினம் இரவு குமரி மாவட்ட பா.ஜ.க. சார்பில் கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடற்கரையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

    மேலும் கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறையில் கடல் நடுவில் உள்ள பாறையில் இரும்பு கம்பி நடப்பட்டு ராமர் உருவம் பொறித்த காவி கொடி ஏற்றப்பட்டது. அகஸ்தீஸ்வரம் ஒருங்கிணைந்த ஒன்றிய பார்வையாளர் சி.எஸ். சுபாஷ் தலைமையில் குமரி மாவட்ட பா.ஜ.க. தலைவர் தர்மராஜ் இந்த கொடியை ஏற்றி வைத்தார்.

    இந்த நிலையில் கன்னியாகுமரி கடல் நடுவில் உள்ள பாறையில் ஏற்றப்பட்ட ராமர்கொடி குறித்து சமூக வலைத் தளங்களில் சர்ச்சை கிளப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று இரவோடு இரவாக கடலில் உள்ள பாறையில் ஏற்றப்பட்ட ராமர் கொடி அகற்றப்பட்டது. அதையும் மீறி அந்த பகுதியில் மீண்டும் காவி கொடியேற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து இன்று காலை மீண்டும் அந்த காவி கொடி அகற்றப்பட்டது.

    இந்த சம்பவம் கன்னியாகுமரி பகுதியில் பரபரப்பையும் பதட்டையும் ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் ரோந்து சுற்றி தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    ×