என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    வருகின்ற பாராளுமன்ற தேர்தல் குறித்து விளவங்கோடு சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி நிர்வாகிகள் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார்.

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளரும் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினருமான ராஜ்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    இந்த கூட்டத்தில் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார், மாவட்ட தலைவர் பினுலால் சிங், வட்டார நகர தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.

    • பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் ரூ. 2 கோடியே 32 லட்சம் வாடகை பாக்கி செலுத்தாமல் பாக்கி வைத்து இருந்தது.
    • இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் பல தடவை நோட்டீசு அனுப்பியும் எந்தவித பலனும் இல்லாமல் இருந்தது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 12 ஆயிரத்து 431 சதுர அடி காலிமனையில் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து நடத்தி வரும் தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்துக்கு 1984-ம் ஆண்டில் இருந்து வாடகைக்கு வழங்கப்பட்டது.

    இந்த வகையில் கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி வரை 34 ஆண்டு காலத்துக்கு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் ரூ. 2 கோடியே 32 லட்சம் வாடகை பாக்கி செலுத்தாமல் பாக்கி வைத்து இருந்தது. இந்த வாடகை பாக்கி வசூலிக்க குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகத்தின் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் பல தடவை நோட்டீசு அனுப்பியும் எந்தவித பலனும் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் இந்த வாடகை பாக்கியை வட்டியுடன் வசூலிக்கு உத்தரவிட வேண்டும் என்று திருத்தொண்டர் சபை ராதாகிருஷ்ணன் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துஇருந்தார். இந்த மனுவை விசாரித்து நீதிபதி புகழேந்தி, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்திடம் இருந்து வாடகை பாக்கியை வசூலிக்க இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார்.

    இதற்கிடையில் அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின் காரணமாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு செலுத்த வேண்டிய வாடகை பாக்கியில் ஒரு தவணையாக முதல் கட்டமாக ரூ.84 லட்சத்து 70 ஆயிரத்து 46-க்கு காசோலையை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகத்தினருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    • புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ஒதுக்கப்பட்டது.
    • நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மருங்கூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பத்மனாபன்புதூரில் புதிய அங்கன்வாடி கட்டிடம் தேவை என்று மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

    அவர்களின் கோரிக்கை ஏற்று புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.14.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு புதிய அங்கன்வாடி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.

    இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • குமரி மாவட்டம் கல்வி அறிவு மிகுந்த மாவட்டமாகும்.
    • பாராளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணிக்கு நீங்கள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் ஓ.பி.எஸ். அணி சார்பில் பாராளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. மாவட்ட செயலாளர்கள் பி.டி.செல்லப்பன், எஸ்.ஏ. விக்ரமன் ஆகியோர் தலைமை தாங்கினர். துணை ஒருங்கிணைப்பாளர் மனோஜ் பாண்டியன் வாழ்த்துரை வழங்கினார்.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    1972-ம் ஆண்டு அ.தி.மு.க. இயக்கம் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டது. தொண்டர்கள் இயக்கமாக இந்த இயக்கம் உருவாக்கப்பட்ட பிறகு புரட்சித்தலைவி அம்மா மக்கள் இயக்கமாக இந்த இயக்கத்தை மாற்றி காட்டினார். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு தொடங்கப்பட்ட போது 16 லட்சம் தொண்டர்களை கொண்ட இயக்கமாக இருந்த இந்த இயக்கம், ஜெயலலிதா பொதுச் செயலாளரான பிறகு ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட இயக்கமாக மாறியது.

    எந்த கொம்பனாலும் அசைக்க முடியாத மாபெரும் இயக்கமாக இந்த இயக்கம் உருவாக்கப்பட்டது. குமரி மாவட்டம் கல்வி அறிவு மிகுந்த மாவட்டமாகும். கல்வியில் முத்திரை பதித்த மாவட்டமாக இந்த மாவட்டம் விளங்கி வருகிறது. யாரும் உங்களை பேச்சு மூலமாக ஏமாற்ற முடியாது என்பதை தேர்தல் மூலமாக நிரூபித்து வருகிறீர்கள்.

    பொதுச் செயலாளரை தேர்வு செய்வதற்கு சட்ட விதிகளை மாற்ற முடியாது என்று எம்ஜிஆர் கூறினார். தொண்டர்கள் மூலமாகத் தான் பொதுச்செயலாளரை நியமனம் செய்ய முடியும் என்ற நிலை இருந்தது. அதை தற்போது எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மாற்றிக் காட்டி உள்ளார்.

    எடப்பாடி பழனிச்சாமி கொஞ்சம் கொஞ்சமாக தனது நயவஞ்சகத்தால் இயக்கத்தை அழித்து வருகிறார். அம்மா மறைவிற்கு பிறகு கழக ஒருங்கிணைப்பாளர் என்று பதவி உருவாக்கப்பட்டது. 2021-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த பதவி 2026 வரை சட்ட விதிப்படி செல்ல வேண்டும்.


    ஆனால் எடப்பாடி பழனிச்சாமி ஒற்றை தலைமை வேண்டும் என்று கூறி பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கினார். அம்மா அவர்களுக்கு மரியாதை செய்யும் வகையில் நிரந்தர பொதுச் செயலாளர் என்ற பதவி யாருக்கும் வழங்கப்படவில்லை. சர்வாதிகாரமாக தான் தோன்றித்தனமாக எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டார்.

    அம்மா மறைவிற்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி எப்படி முதலமைச்சர் ஆன ஆனார் என்று எல்லோருக்கும் தெரியும். தவழ்ந்து தவழ்ந்து சென்று பதவியை பெற்றுக் கொண்டார். சின்னமாவை இழிவாக பேசினார். எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற பிறகு ஊராட்சி தேர்தல், உள்ளாட்சி தேர்தல் , பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தல் மட்டும் இன்றி இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. படுதோல்வி அடைந்துள்ளது.

    ஈரோட்டில் நடந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தோல்விக்கு எடப்பாடி பழனிச்சாமி தான் முக்கிய காரணமாக இருந்தார். அவர் பொது செயலாளர் பதவியை தற்காலிக தீர்ப்பின் மூலம் தான் பெற்றுள்ளார்.

    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். என்ன சட்ட திருத்தத்தை கொண்டு வந்தாரோ, அதேபோல் மீண்டும் தொண்டர்களே பொதுச் செயலாளரை தேர்வு செய்ய முடியும் என்பதை கொண்டு வருவதற்காக தான் தர்ம யுத்தம் நடத்தப்பட்டு வருகிறது.

    அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது. அதை காப்பாற்ற தான் போராடி வருகிறோம். தேர்தல் நேரங்களில் அம்மா இருக்கும்போது பல கட்சிகள் அவரைத் தேடி வருவார்கள். ஆனால் தற்பொழுது தலைமை கழகத்தில் 6 பேர் உட்கார்ந்து இருக்கிறார்கள். யாரும் அவர்களை தேடி வரவில்லை.


    அ.தி.மு.க. என்னும் கட்சியை எடப்பாடி பழனிசாமி தாத்தாவோ பன்னீர்செல்வத்தின் தாத்தாவோ உருவாக்கவில்லை. எம்.ஜி.ஆர். உருவாக்கிய கட்சி என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தொண்டர்கள் கூட முதலமைச்சராக வர வாய்ப்புள்ளது.

    விருதுநகரில் நடந்த தேர்தலில் பெருந்தலைவர் காமராஜர் வெற்றி வாய்ப்பு இழந்தார். பின்னர் அவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். காமராஜரை வெற்றி பெற வைத்த மண் இந்த மண்ணாகும். அ.தி.மு.க. தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி தீங்கு செய்து வருகிறார். பொதுச்செயலாளர் பதவிக்கு 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய வேண்டும். 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழிய வேண்டும் என்று கூறியுள்ளார்கள்.

    அப்படி என்றால் வேலு மணியும் தங்கமணியும் தான் பொதுச் செயலாளராக வர முடியும். கழகத்தை சிதைத்து சின்னாபின்னமாக்கி கொண்டிருக்கிறார்கள். பாராளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணிக்கு நீங்கள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.

    9 முறை தோல்வியை சந்தித்த அவர்களுக்கு பத்தாவது முறையும் தோல்வியை நீங்கள் வழங்க வேண்டும். நாம் தேர்தலை சந்திக்க முழு பலத்துடன் தயாராகி வருகிறோம். பூத் கமிட்டி அமைக்க வேண்டும். தமிழகத்தில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பூத்துகள் உள்ளது. ஒரு பூத்துக்கு 18 முதல் 25 பேரை அமர வைக்க வேண்டும். மீண்டும் அம்மா ஆட்சியை கொண்டுவர நான் போராட வேண்டும்.

    இவ்வாறு பேசினார்.

    கூட்டத்தில் கலந்து கொண்ட பன்னீர்செல்வத்திற்கு ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டது. நிர்வாகிகள் வீரவாள் பரிசு வழங்கினார்கள் .

    • சசிகலாவை மரியாதை நிமித்தமாக தான் சந்தித்தேன்.
    • பிரதமர் மோடி 2 முறை பிரதமராக வந்துள்ளார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் இன்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். உருவாக்கியபோது அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினராக இருக்கும் எவர் வேண்டுமானாலும் பொதுச்செயலாளர் ஆகலாம் என்று விதியை உருவாக்கி இருந்தார்.

    பொதுச்செயலாளரை உறுப்பினர்கள் தான் தேர்வு செய்ய வேண்டும் என்ற அந்த நிபந்தனையை எடப்பாடி பழனிசாமி மாற்றி 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய வேண்டும். 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழிய வேண்டும். 5 பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று மாற்றினார்.

    அப்படி என்றால் பணம் படைத்தவர்களால் மட்டும் தான் பொது செயலாளராக முடியும். இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காக தான் தர்ம யுத்தம் நடத்தி வருகிறோம். அதற்காக தான் இந்த உரிமை மீட்பு கூட்டமும் நடைபெறுகிறது.

    அண்ணா நினைவு நாளன்று சசிகலாவை சந்தித்தோம். மரியாதை நிமித்தமாக தான் சந்தித்தேன். அரசியல் பற்றி பேசவில்லை.

    பிரதமர் மோடி 2 முறை பிரதமராக வந்துள்ளார். அவரை 3-வது முறையும் பிரதமராக்க வேண்டும் என்று அந்த கூட்டணியில் உள்ளோம். அ.தி.மு.க.வின் பெயருக்கு பங்கம் விளைவிக்கும் யாராக இருந்தாலும், எந்த பதவியில் இருந்தாலும் அதை எதிர்த்து தர்ம யுத்தம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை முகாம்.
    • வேலை வாய்ப்பு முகாமில் கல்லூரி முதல்வர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்க வசந்த் அன் கோ சார்பில் வேலை வாய்ப்பு முகாமை பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தொடங்கி வைத்தார்.

    நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்கும் இந்த முகாமில் பொன் ஜெஸ்லி கல்லூரி தாளாளர் மற்றும் கல்லூரி முதல்வர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • ரோகிணியின் குடும்பத்தார் மகளின் உடலை கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டனர்.
    • குமரி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளும் தொடர்பு கொண்டு பேசினர்.

    அருமனை:

    கன்னியாகுமரி மாவட்டம் தேவிகோடு ஊராட்சி பகுதியான புல்லந்தேரி பகுதியை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன், ஜவுளி வியாபாரி. இவரது மகள் ரோகிணி (27) சீனா நாட்டில் மருத்துவ படிப்பிற்காக சென்றிருந்தார். படிப்பை முடித்து சொந்த ஊருக்கு திரும்ப தயாராக இருந்துள்ளார். பெற்றோரும் மகளுக்காக காத்திருந்தனர். ஆனால் சீனாவில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ரோகிணி மருத்துவமனையில் இறந்து விட்டதாக கோபால கிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்தது. அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்தார்.

    ரோகிணியின் குடும்பத்தார் மகளின் உடலை கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது வெளிநாடு உறவினர்களி டம் பேசி கொண்டு வருவதற்கான ஏற்பாடு நடந்தாலும், இந்தியன் தூதரகத்தில் தொடர்பு கொண்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

    குமரி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளும் தொடர்பு கொண்டு பேசினர். இந்த நிலையில் 51 நாட்களுக்கு பிறகு ரோகிணி உடல் சொந்த ஊர் கொண்டு வரப்பட்டது.

    புல்லந்தேரியில் வீட்டிற்கு கொண்டு வந்த மாணவியின் உடலுக்கு ஊர் மக்கள் மற்றும் பல்வேறு தரப்பினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தினார்கள். பின்பு மாணவியின் உடலை கண்ணுமாமூட்டில் அவரது குடும்ப கல்லறை தோட்டத்தில் தகனம் செய்யப்பட்டது.

    • சரணடைந்த பாதிரியார் ராபின்சனை போலீசார் காவல் எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.
    • இரணியல் போலீசார் ரமேஷ்பாபுவை ரகசிய இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

    நாகர்கோவில்:

    திங்கள் சந்தை அருகே மைலோடு மடத்துவிளை பகுதியை சேர்ந்தவர் சேவியர் குமார் (வயது 42). இவர் கன்னியாகுமரி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் மெக்கானிக்காக பணியாற்றி வந்தார். நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றிய தலைவராகவும் பதவி வகித்தார். சேவியர் குமாருக்கும், மைலோடு ஆலய பங்குபேரவை தரப்பிற்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கடந்த 20-ந்தேதி ஆலய வளாகத்தில் உள்ள பாதிரியார் இல்லத்தில் கொலை செய்யப்பட்டார்.

    இது தொடர்பாக இரணியல் போலீசார் பாதிரியார் ராபின்சன் முன்னாள் தி.மு.க. ஒன்றிய செயலாளர் ரமேஷ் பாபு உள்பட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பாதிரியார் ராபின்சன் திருச்செந்தூர் கோர்ட்டிலும், ரமேஷ்பாபு நாகப்பட்டினம் கோர்ட்டி லும் சரணடைந்தனர்.

    சரணடைந்த பாதிரியார் ராபின்சனை போலீசார் காவல் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். அவரிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் நேரில் விசாரணை மேற்கொண்டார்.

    விசாரணைக்கு பிறகு அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் ரமேஷ்பாபுவை காவல் எடுத்து விசாரிக்க இரணியல் போலீசார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து ரமேஷ் பாபு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 2 நாள் காவலில் விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

    இரணியல் போலீசார் ரமேஷ்பாபுவை ரகசிய இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு உள்ளனர். ரமேஷ் பாபுவிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்கு பிறகு மீண்டும் ரமேஷ் பாபுவை கோர்ட்டில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்த வழக்கில் தலைமறைவாகியுள்ள மற்றவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை திருவனந்தபுரத்திற்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.

    • அதுமட்டுமின்றி நீர்மட்டம் தாழ்வாகி கடல் உள்வாங்கும்போது இந்த படகுகள் தரை தட்டி நிற்கின்றன.
    • ராட்சத பொக்லைன் எந்திரம் மூலம் சுமார் 5 டன் மணல்கள் கடலில் இருந்து தூர்வாரப்பட்டு கரையில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டுள்ளது. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள். இதற்கான 5 படகுகளும் கன்னியாகுமரியில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த படகு துறையில் கடும் இடநெருக்கடிக்கு இடையே இந்த படகுகளும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதால் கடல் சீற்றம், கடல் கொந்தளிப்பு, கடல் நீர்மட்டம் உயர்வு போன்ற இயற்கை சீற்றங்களின்போது இந்த படகுகள் ஒன்றோடு ஒன்று இடித்து சேதமடைந்து வருகின்றன.

    அதுமட்டுமின்றி நீர்மட்டம் தாழ்வாகி கடல் உள்வாங்கும்போது இந்த படகுகள் தரை தட்டி நிற்கின்றன. படகுத்துறையில் குவிந்து கிடக்கும் மணல் குவியல்களை அவ்வப்போது அகற்றாததன் காரணமாக இந்த படகுகள் கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள்வாங்கும்போது தரை தட்டி நிற்பதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து இந்த பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறையில் குவிந்து கிடக்கும் மணல் குவியல்களை அகற்ற பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன் பயனாக 2 மாதங்களுக்கு பிறகு கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறையில் ரூ.1 லட்சம் செலவில் தூர்வாரும் பணி தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ராட்சத பொக்லைன் எந்திரம் மூலம் சுமார் 5 டன் மணல்கள் கடலில் இருந்து தூர்வாரப்பட்டு கரையில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது.

    • ஒரு சில இடங்களை கட்டளைதாரர்கள் பெயரில் சிலர் உள்குத்தகைக்கு விட்டு ஆக்கிரமித்து வைத்திருந்தனர்.
    • மீட்கப்பட்ட நிலங்களின் மதிப்பு சுமார் ரூ.8 கோடியாகும்.

    நாகர்கோவில்:

    இந்து சமய அறநிலையத்துறை குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமான விவசாய நிலங்கள் தென்காசி மாவட்டத்தில் இருக்கின்றன. அந்த நிலங்களுக்கு கட்டளைதாரர்கள், மாலைக்கட்டு வரிதாரர்கள் முறையாக கட்டளை செய்யாமல் இருந்து வந்தனர்.

    இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட நபர்களிடம் நேரில் தகவல் தெரிவித்தும் கட்டளை செய்யாமல் இருந்து வந்தனர். ஒரு சில இடங்களை கட்டளைதாரர்கள் பெயரில் சிலர் உள்குத்தகைக்கு விட்டு ஆக்கிரமித்து வைத்திருந்தனர்.

    இந்நிலையில் கட்டளை செய்யப்படாத கிளாங்காடு ஜமதக்னீஸ்வரர், இலத்தூர் மதுநாதசுவாமி, புளியரை கிருஷ்ணசாமி ஆகிய கோவிலுக்கு சொந்தமான கட்டளை நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்த 5 நபர்களிடம் இருந்து சுமார் 4 ஏக்கர் இடம் அளவீடு முடிந்து அறிவிப்பு பலகை குமரி மாவட்ட கோவில்கள் நிர்வாக அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராம கிருஷ்ணன் தலைமையில் நிறுவப்பட்டது.

    மீட்கப்பட்ட நிலங்களின் மதிப்பு சுமார் ரூ.8 கோடியாகும். அப்போது சூப்பிரண்டு ஆனந்த், பொறியாளர் அய்யப்பன், ஸ்ரீகாரியம் ரத்தினவேலு, கோபாலகிருஷ்ணன், நவீன், தொழில்துட்ப உதவியாளர் பிரேம், தி.மு.க.கிளை செயலாளர் கிளாங்காடு ராமர், தங்கராஜ், நில அளவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • கலெக்டரை சந்தித்தும் ஊராட்சி தலைவர்கள் மனு அளித்தனர்.
    • ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் 95 ஊராட்சிகள் உள்ளன. இதில் 25 ஊராட்சிகள், பேரூராட்சிகளுடன் இணைக்கப்படுவதாக தகவல் வெளியானது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஊராட்சிகளை பேரூராட்சிகளுடன் இணைக்கும்போது வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படும். 100 நாள் வேலைத்திட்ட பணிகள் பாதிக்கப்படும். எனவே ஊராட்சிகளை, பேரூராட்சிகளுடன் இணைக்க கூடாது என்று கூறினார்கள்.

    இது தொடர்பாக மாவட்டம் முழுவதும் போராட்டங்களும் நடத்தப்பட்டது. ஊராட்சிகளை பேரூராட்சிகளுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் அமைச்சரை சந்தித்தும் மனு அளிக்கப்பட்டுள்ளது. கலெக்டரை சந்தித்தும் ஊராட்சி தலைவர்கள் மனு அளித்தனர்.

    இந்த நிலையில் ஊராட்சிகளை பேரூராட்சியுடன் இணைப்பதற்கான எந்த அறிவிப்பும் வரவில்லை என்று கலெக்டர் ஸ்ரீதர் கூறியிருந்தார். இருப்பினும் ஊராட்சி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இன்று காலை கொட்டாரம் பெருமாள்புரத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று 10 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டத்தில் லீபுரம், கோவளம், பஞ்சலிங்கபுரம், சாமிதோப்பு, கரும்பாட்டூர், குலசேகரபுரம், நல்லூர், ராமபுரம், இரவிப்புதூர் உள்பட 10 ஊராட்சிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். போராட்டத்திற்கு சாமிதோப்பு ஊராட்சி தலைவர் மதிவாணன் தலைமை தாங்கினார்.

    பஞ்சாயத்து தலைவர்கள் ஜெயக்குமாரி லீன், ஸ்டெனி சேவியர், சிந்து செந்தில், தங்கமலர் சிவபெருமான், தேவி, சுடலையாண்டி நிலா, இந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • அந்தோணியார் தெரு மற்றும் சகாயமாதா தெரு மீனவர்களின் வள்ளங்கள் சீரமைக்க கோரிக்கை.
    • மீன்பிடி வள்ளங்கள் கரையில் நமது அலுவலக ஜே.சி.பி இயந்திரம் மூலம் சீரமைப்பு பணி நடைபெற்றது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சிக்கு, உட்பட்ட ஜோசப் தெரு, அந்தோணியார் தெரு மற்றும் சகாயமாதா தெரு மீனவர்களின் கோரிக்கையை ஏற்று கடற்கரையில் மீன்பிடி வள்ளங்கள் கரையில் நமது அலுவலக ஜே.சி.பி இயந்திரம் மூலம் சீரமைப்பு பணி நடைபெற்றது.

    ×