search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சுற்றியுள்ளவர்கள் என்னை எப்படி பார்ப்பார்கள் என்று கவலைப்பட்டேன்- டிக்கெட் பரிசோதகராக பணியாற்றும் திருநங்கை
    X

    சுற்றியுள்ளவர்கள் என்னை எப்படி பார்ப்பார்கள் என்று கவலைப்பட்டேன்- டிக்கெட் பரிசோதகராக பணியாற்றும் திருநங்கை

    • ஆண்-பெண்களை போன்று அனைத்து துறைகளிலும், திருநங்கைகளும் தடம் பதிக்க தொடங்கி இருக்கின்றனர்.
    • பெரும்பாலான மக்கள் எங்களை மிகவும் ஏற்றுக் கொள்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.

    நாகர்கோவில்:

    ஆண்-பெண் என்ற இருபாலத்தினருக்கு மத்தியில் மூன்றாம் பாலினத்தவர்களாக திருநங்கைகள் அங்கீகரிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்திலும் அரசு வாய்ப்பு வழங்கி வருகிறது.

    மேலும் சாதாரண மக்களுக்கு வழங்கக் கூடிய அனைத்து நலத்திட்டங்களும் இவர்களுக்கும் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக ஆண்-பெண்களை போன்று அனைத்து துறைகளிலும், திருநங்கைகளும் தடம் பதிக்க தொடங்கி இருக்கின்றனர்.

    அவர்கள் சுயதொழிலில் ஈடுபடுவது மட்டுமின்றி, மத்திய-மாநில அரசு துறைகள் மற்றும் தனியார் அலுவலகங்களில் பணியாற்றுகிறார்கள். இந்நிலையில் குமரி மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை ஒருவர், ரெயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

    இதன்மூலம் தென்னக ரெயில்வேயின் முதல் திருநங்கை டிக்கெட் பரிசோதகர் என்ற சிறப்பையும் அவர் பெற்றிருக்கிறார். நாகர்கோவிலை சேர்ந்த அவரது பெயர் சிந்து. வாழ்க்கையில் உயர கல்வியே முக்கியம் என்பதை உறுயியாக நம்பிய சிந்து, பி.லிட் தமிழ் இலக்கியம் படித்தார்.

    பின்னர் கடந்த 2003-ம் ஆண்டு தெற்கு ரெயில்வேயில் பணியில் சேர்ந்தார். கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் ரெயில்வே பணியாற்றிய அவர், கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்திற்கு பணி மாறுதலாகி வந்தார். மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட திண்டுக்கல் ரெயில் நிலையத்தின் ரெயில்வே மின்சார பிரிவில் பணியாற்றினார்.

    இந்நிலையில் ஒரு சிறிய விபத்தில் அவரது கையில் காயம் ஏற்பட்டது. இதனால் தொழில்நுட்ப பிரிவில் சிந்துவால் பணியாற்ற முடியவில்லை. தொழில்நுட்பம் இல்லாத பணியில் தொடர முடியுமா என்று அவரிடம் ரெயில்வே துறையினர் கேட்டனர்.

    அதற்கு அவர் சம்மதித்தது மட்டுமின்றி, டிக்கெட் பரிசோதகராக பணிபுரிய விரும்புவதாக தெரிவித்தார். அதன்பேரில் திருநங்கை சிந்து, திண்டுக்கல் ரெயில் நிலையத்திலேயே டிக்கெட் பரிசோதகராக நியமிக்கப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு டிக்கெட் பரிசோதகராக அவர் பணியில் சேர்ந்தார்.

    ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மத்தியில் மூன்றாம் பாலினத்தை சேர்ந்த தான், டிக்கெட் பரிசோதகராகி இருப்பது சிந்துவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து சிந்து கூறியதாவது:-

    டிக்கெட் பரிசோதகராக பணியில் சேர்ந்திருப்பது எனது வாழ்நாளில் மறக்க முடியாக நிகழ்வு. நான் டிக்கெட் பரிசோதகராக பணியாற்ற சில சவால்கள் இருந்தன. ஆனால் அது எனது கனவாக இருந்தது. தற்போது அந்த கனவு நனவாகிவிட்டது.

    இது எனக்கு மட்டுமல்ல. திருநங்கைகளுக்கு கிடைத்த வெற்றியாகவே நான் பார்க்கிறேன். மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர் என்பதால் என்னை சுற்றியிருந்தவர்கள் என்னை எப்படி பார்ப்பார்கள் என்று நான் மிகவும் கவலைப் பட்டேன். இருப்பினும் தெற்கு ரெயில்வே மஸ்தூர் யூனியனும், அதன் அலுவலக பணியாளர்களும் எனக்கு ஆதரவளித்தனர்.

    என்னால் முடிந்ததை செய்ய வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். திருநங்கையான எனது சாதனைக்கு பொதுமக்கள் உறுதுணையாக இருந்ததை கண்டு நான் மகிழ்ச்சியடைந்தேன். தற்போது பெரும்பாலான மக்கள் எங்களை மிகவும் ஏற்றுக் கொள்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×