என் மலர்tooltip icon

    ஈரோடு

    சத்தியமங்கலம் வன பகுதியில் 3 மணி நேரம் பெய்த சாரல் மழையால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் மிகவும் அவதிப்பட்டனர்.
    சத்தியமங்கலம்:

    தமிழகத்தில் 5 நாட்கள் மழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதையொட்டி நேற்று இரவு முதல் தமிழகம் முழுவதும் மீண்டும் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. நேற்று இரவு ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, சென்னிமலை, எலந்தகுட்டை மேடு, பெருந்துறை, பவானி, கோபி ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்தது.

    இந்த நிலையில் இன்று காலை ஈரோடு மாவட்டம் முழுவதும் மழை மேகக்கூட்டங்கள் சூழ்ந்திருந்தது. அதிகாலை 5 மணி முதல் 8 மணி வரை சத்தியமங்கலம் புளியங்கோம்பை, ஒட்ட குட்டை, சிக்கரசம்பாளையம், வடவள்ளி, ராஜன்நகர், பண்ணாரி மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் 3 மணி நேரம் சாரல் மழை பெய்தது. இதனால் இன்று காலை பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் அவதிப்பட்டனர்.

    தங்களது குழந்தைகளை பெற்றோர் குடைகள் பிடித்தபடி பாதுகாப்புடன் பள்ளிக்கூடங்களுக்கு அழைத்து சென்றனர். மேலும் பல்வேறு அலுவலகங்களுக்கு வேலைக்கு போவோர்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.

    இதேபோல் சத்தியமங்கலம் வனப்பகுதிகளான திம்பம், தலமலை, ஆசனூர், மாவநத்தம், அரேப்பாளையம், தாளவாடி, புலியாடா, தொட்டகாஜனூர் ஆகிய பகுதிகளிலும் இன்று காலை 6 மணி முதல் 8 மணி வரை சாரல் மழை பெய்தது. இந்த சாரல் மழையால் சத்தியமங்கலம் வனப்பகுதியில் கடும் குளிர் ஏற்பட்டது.

    சாரல் மழையுடன் பனிப்பொழிவும் காணப்பட்டது. இதனால் திம்பம்-ஆசனூர் மலைப்பாதையில் (தமிழக-கர்நாடகா சாலையில்) வாகனங்கள் முகப்பு விளக்குகளை போட்டப்படி சென்றன. ரோடு முழுவதும் வெண்புகை போல் பனி படர்ந்திருந்தது. இதை காண மிகவும் ரம்மியமாக காணப்பட்டது.
    ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே சாமியார் ஒருவர் 13 நாட்களாக தண்ணீர் மட்டும் பருகி மவுன விரதம் இருந்து சிறப்பு பூஜைகள் நடத்தி வருகிறார்.
    ஆப்பக்கூடல்:

    ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் நல்லிகவுண்டன் புதூரை சேர்ந்தவர் விஸ்வநாதன்.

    யோகா ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட இவர் ஆப்பக்கூடல் நல்லி கவுண்டன் புதூரில் அவரது சொந்த இடத்தில் பத்தடி ஆழம் 10 அடி சுற்றளவு கொண்ட குழியை வெட்டி பாதாள லிங்கத்தை பிரதிஷ்டை செய்து கடந்த 12 நாட்களாக  குழிக்குள் தண்ணீர் மற்றும் நீர் ஆகாரம் மட்டும் அருந்தி மவுன விரதம் இருந்து வருகிறார்.

    நிஜ ஆனந்த காசி விஸ்வநாத சுவாமிகள் என்று சொல்லப்படும் இவர் 48 நாட்கள் மவுன விரதம் இருப்பதாக சொல்லப்படுகிறது.
    இந்நிலையில் இன்று 13-வது நாளாக பாதாள லிங்கேஸ்வரருக்கு பால், பன்னீர், இளநீர்,  பஞ்சாமிர்தம், நவதானியங்கள் மற்றும் மூலிகைகள் கொண்டும் லிங்கத்தை மலர்களால் அலங்கரித்தும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    யாக பூஜையில் கலந்து கொள்ள ஈரோடு, அந்தியூர், கோபி, ஆப்பக்கூடல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    5, 8, வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுவது ஏன் என்பது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
    நம்பியூர்:

    நம்பியூர் வட்டாரத்தில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    நம்பியூர், திருப்பூர் ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை பின்பு ரூ. 2 கோடியில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் மூலம் அமைய உள்ளது.

    விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடத்திற்கு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-

    இந்திய அளவில் சட்டம் ஒழுங்கை காப்பதிலும், தூய்மையான மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

    12-ம் வகுப்பு முடித்த 20 ஆயிரம் மாணவர்களை தேர்வு செய்து ஆடிட்டர் படிப்பிற்காக 500 ஆடிட்டர்களை கொண்டு இலவச பயிற்சி அளிக்கப்படும்.

    பிளஸ் 2 மாணவர்களுக்கு தொழில்கல்வி கற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டில் 10 ஆயிரம் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்படும். அடுத்த ஆண்டு ஒரு லட்சம் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்.

    நீட் தேர்வு

    நீட்தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பது மாநில அரசின் கொள்கை. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. வழக்கு முடிந்த பிறகு தான் அது குறித்து பேச முடியும்.

    கடந்த ஆண்டு ஒரு மாணவர் கூட சேரவில்லை. 5, 8, வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு வைக்க எதிர்ப்பு உள்ளது. 8-ம் வகுப்பு வரை அனைவரையும் தேர்ச்சி பெற வைப்பதால் மாணவர்களின் கல்வி, அறிவுத்திறன், தகுதி, திறமையை கண்டறிய முடிவில்லை. அதே நேரத்தில் மாணவர்கள் பயப்பட தேவை இல்லை.

    வேலை நேரத்தில் ஆசிரியர்கள் சமூக வலைதளங்களில் நேரத்தை செலவிடுகின்றனரா என்ற புகார் குறித்து ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு வார காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஈரோட்டில் மோட்டார்சைக்கிள் திருடியது தொடர்பாக 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மாதாபுரம் பகுதியை சேர்ந்த முருகேசன்(55). இவர் சம்பவத்தன்று இரவு ஈரோடு காவேரி ரோட்டில் உள்ள கடையில் மீன் சாப்பிடுவதற்காக, தனது மோட்டார் சைக்கிளை ரோட்டோரம் நிறுத்தி விட்டு சென்றார்.

    பின்னர் மீண்டும் வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் காணவில்லை. அக்கம்பக்கம் தேடிப்பார்த்தும் கிடைக்காததால், மர்மநபர்கள் திருடி சென்றதை உணர்ந்து, ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இந்த புகாரின்பேரில் போலீசார் பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், வாகன எண்ணை சோதனை செய்த போது, அது முருகேசனின் பைக் என்பது தெரியவந்தது. இதையடுத்து பைக்கை பறிமுதல் செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த சையது இப்ராகிம்(28), ஈரோடு வீரப்பன் சத்திரம் பகுதியை கார்த்தி(25) ஆகிய 2பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல், ஈரோடு முனிசிபல்காலனி மாணிக்கம் தெருவை சேர்ந்த குருநாதன்(36) என்பவர் கடந்த 23-ந் தேதி வ.உ.சி. பார்க் அருகில் உள்ள ஓட்டல் முன்பு நிறுத்தி விட்டு சென்றார். பின்னர் மீண்டும் வந்து பார்த்தபோது அவரது பைக்கை காணவில்லை. இந்நிலையில், ஈரோடு வீரப்பன் சத்திரம் பகுதியில் குருநாதன் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த ஒரு நபர், குருநாதனின் பைக்கினை ஓட்டி வந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்து, அந்த மர்மநபரை மடக்கி பிடித்து ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில், அந்த நபர், ஈரோடு ஆர்.என். புதூரை சேர்ந்த கிருஷ்ணன்(40) என்பது தெரியவந்தது. இதையடுத்து கிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர்.
    கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற வேண்டிய உள்ளாட்சி தேர்தலை தி.மு.க.தான் நிறுத்தியது என்று அமைச்சர் கருப்பணன் கூறியுள்ளார்.

    ஈரோடு:

    பவானியில் முதல் அமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார்.

    இதில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்து கொண்டு ரூ.11ž கோடி மதிப்பிலலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

    தொடர்ந்து அவர் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மறைந்த ஜெயலலிதா வழியில் தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார். தமிழகத்தில் இன்று அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    மாணவ-மாணவிகள், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் போற்றும் வகையில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. இந்த அரசை கலைத்து விடலாம் என கற்பனை கோட்டை கட்டியவர்களின் கனவு கோட்டை உடைந்து விட்டது.

    தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதி மக்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. எனினும் எதிர்கட்சியினர் தமிழக அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறார்கள்.

     

    திமுக

    கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற வேண்டிய உள்ளாட்சி தேர்தலை தி.மு.க.தான் நிறுத்தியது. அதேபோல இந்த முறையும் காங்கிரசை ஏவி விட்டு உள்ளாட்சி தேர்தலை நிறுத்த தி.மு.க. சதி செய்கிறது.

    அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் 5 ஆண்டுகள் உறுப்பினர் இல்லாதவர்களுக்கு பதவிகள் இல்லை என்பது இப்போது இல்லை. எம்.ஜி.ஆர் காலத்திலேயே அ.தி.மு.க.வில் கொண்டு வரப்பட்டது.

    அரசு 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து உள்ளது. பிளாஸ்டிக் பைகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து அரசு விரைவில் அறிவிப்பு வெளியிடும்.

    உள்ளாட்சி தேர்தல் மட்டுமல்ல எந்த தேர்தல் வந்தாலும் மக்களின் அமோக ஆதரவுடன அ.தி.மு.க. வெற்றி பெறும்.

    இவ்வாறு அமைச்சர் கருப்பணன் கூறினார்.

    பு.புளியம்பட்டி அருகே வட மாநில வாலிபர் தனக்கு தானே பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பு.புளியம்பட்டி:

    புஞ்சைபுளியம்பட்டி அடுத்த விண்ணபள்ளியில் உள்ள தனியார் நூற்பாலையில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த வாலிபர் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.

    புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள விண்ண பள்ளியில் உள்ள ஒரு தனியார் மில்லில் மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த பிட்டு பவுரி என்பவர் கடந்த 5 வருடமாக தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். மில்லில் உள்ள விடுதியில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் இரவு 9 மணியளவில் விடுதியில் அவர் தனக்கு தானே பிளேடால் கழுத்தை அறுத்து கொண்டதாக கூறப்படுகிறது.

    இதில் ரத்தம் கொட்டிய நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து புளியம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரனை செய்து வருகின்றார்.

    தற்கொலை செய்து கொண்ட பிட்டு பவுரி உடல் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    வட மாநில வாலிபர் பவுரி எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    டி.என்.பாளையம் அருகே கோவில் பூட்டை உடைத்து சாமி நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே உள்ள ஏழுரில் காமாட்சியம்மன் கோவில் உள்ளது.

    நேற்று இரவு வழக்கம் போல் கோவில் நடையை பூட்டி விட்டு சென்று விட்டனர்.

    இன்று காலை வந்து பார்த்த போத கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள் சாமி கழுத்தில் கிடந்த நகையை திருடி சென்று உள்ளனர்.

    இந்த துணிகர சம்பவம் குறித்து பங்களாபுதூர் போலீசார் விசாரணை நடத்தி மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.

    ஈரோடு தொகுதி கிடைக்காததால் தேனி தொகுதியில் போட்டியிட்டேன் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    மத்திய அரசை கண்டித்து ஈரோட்டில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    மக்களவைத் தேர்தலின்போது, ஈரோடு தொகுதி கிடைக்கவில்லை என்றதும் நான் அமைதியாக இருந்து இருக்க வேண்டும். பதவி ஆசையால் தேனி தொகுதியில் சென்று போட்டியிட்டேன். அங்கு வாக்குக்கு ரூ.2,000 கொடுத்து ரூ.200 கோடி செலவு செய்து, அவர்கள் வெற்றி பெற்று விட்டனர். ஈரோடு மக்களை விட்டுச் சென்றதை தவறு என்று உணர்கிறேன்.

    நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைத்த பிரதமர் மோடி, தற்போது மகாராஷ்டிராவின் ஜனநாயகத்தை சீர்குலைக்கிறார். மகாராஷ்டிராவில் ஆட்சி அமைந்து விட்டது என்று பிரதமர் மோடியும், அமித்ஷாவும் மகிழ்ச்சியாக இருக்கலாம். ஆனால், அம்மாநில மக்களால்தான் இருவருக்கும் முடிவு வரும்.

    ஜனநாயகத்தைக் கொலை செய்து மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. நாட்டில் ஜனநாயகம் இருக்கக் கூடாது என்று அவர்கள் நினைக்கின்றனர். நாட்டின் முடிசூடா மன்னனாக மோடி வர வேண்டும் என நினைக்கின்றனர்.

    பிரதமர் மோடி.

    ஹிட்லரைப் போன்ற நிலை பிரதமர் மோடிக்கு வரும் என்று நான் சொல்ல வில்லை. அதேநேரத்தில் ஹிட்லரின் வரலாறை அவர் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்லவே விரும்புகிறேன். காஷ்மீரில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. காங்கிரஸ் தவிர வேறு யாரும் பேசுவதில்லை. எல்லோருக்கும் மோடி என்றால் பயம். எல்லா நாட்களிலும் அவர்கள் மக்களை ஏமாற்ற முடியாது.

    இறுதிவரை தொண்டர்களாகிய உங்களோடுதான் இருப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    கொடிவேரி அணையில் மூழ்கி 2 மாணவர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் கோபி அருகே கொடிவேரி அணை உள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் இந்த கொடிவேரி அணைக்கு வந்து பவானி ஆற்றுக்கு செல்கிறது.

    கடந்த ஒரு வாரமாக பவானி சாகர் அணையில் இருந்து ஆற்றுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    ஒரு வாரத்துக்கு பிறகு பவானிசாகர் அணையில் இருந்து ஆற்றுக்கு தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டது.

    இதையொட்டி கடந்த ஒரு வாரத்துக்கு பிறகு கொடிவேரி அணையில் குளிக்க தடை நீங்கியது. இதனால் நேற்று விடுமுறையையொட்டி கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    ஈரோடு, கோவை, திருப்பூர், குன்னூர் மாவட்ட சுற்றுலா பயணிகளும் அதிகளவில் வந்திருந்தனர். அணையில் இருந்து விழும் தண்ணீரை ரசித்த பயணிகள் பலர் அணையில் இறங்கி குளித்தனர்.

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வண்ணார்பேட்டையை சேர்ந்த விக்னேஷ் (20), சுதீப் (15) ஆகியோர் அதே பகுதியை சேர்ந்த மேலும் சிலருடன் கொடிவேரி அணைக்கு வந்தனர்.

    விக்னேஷ் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டும், சதீஸ் 10-ம் வகுப்பும் படித்து வந்தனர். இவர்களும், சக நண்பர்களும் கொடிவேரி அணையில் இறங்கி குளித்தனர். அப்போது சுழல் நிறைந்த பகுதிக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

    இதில் விக்னேஷ், சுதீப் ஆகியோர் சிக்கி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்து விட்டனர். சுமார் 1 மணி நேரத்துக்கு பிறகு இருவரது உடல்களையும் சத்தியமங்கலம் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

    மாணவர்களின் உடல்கள் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    அங்கு இன்று உடல்கள் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டது.

    கொடிவேரி அணையில் மூழ்கி 2 மாணவர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில் கொடிவேரி அணைக்கு இன்று தண்ணீர் வரத்து குறைந்து உள்ளது. எனினும் பாதுகாப்பு கருதி அணையில் போலீசார் பாதுனகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    கடத்தூர், டி.என். பாளையம் போலீசார் அணை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர். இவர்கள் ஆழமான பகுதிக்கும் சுழல் நிறைந்த பகுதிக்கும் சுற்றுலா பயணிகள் சென்று விடாத வகையில் பாது காப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் போலீசார் ஒலிபெருக்கி மூலமும் எச்சரித்தப்படி உள்ளனர்.

    அரசு பள்ளி மாணவர்களுக்கு பட்டயக்கணக்காளர் பயிற்சி அளிக்க 500 ஆடிட்டர்கள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காசியூர் அலிங்கியம் பூசாரியூர் கோட்டுப் புள்ளாம்பாளையம் ஆகிய பகுதிகளில் நியாய விலைக்கடை திறப்பு சாலைப்பணிகள் குடிநீர் மேல்நிலைத்தொட்டி உட்பட ரூ.58 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜையுடன் அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார்.

    அதனை தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சீன அதிபர் பிரதமர் மோடி சந்திப்பின்போது நமது அரசின் செயல்பாடுகளை பார்த்து வியந்து போய் இரு தலைவர்களும் பாராட்டு கடிதங்கள் எழுதும் அளவிற்கு நமது தமிழ் மண் விளங்கியுள்ளது.

    குடிமராமத்து பணிகள் மூலம் ஏரி குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது என நமது முதல்வர் அறிவித்த திட்டத்தை இந்தியா முழுவதும் செயல்படுத்தி வருகிறார்கள். அரசு பள்ளி மாணவர்களுக்கு பட்டயக்கணக்காளர் பயிற்சி அளிக்க 500 ஆடிட்டர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

    எடப்பாடி பழனிசாமி

    மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு தொழில்கல்வியை கற்றுத்தரவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. விடுமுறை நாட்களில் அருகில் உள்ள தொழிற்சாலைகளில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

    தனியார் பள்ளிகளில் தனியாக கட்டணம் வசூலித்துக்கொண்டு நீச்சல் பயிற்சி கற்றுக்கொடுக்கின்றனர். நமது அரசை பொறுத்தவரை தற்காப்பு கலை கற்றுத்தருவதற்கும் சாலை பாதுகாப்பு குறித்தும் கற்றுத்தரவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    மாணவர்கள் அறிவுரைகளை கேட்டு நடக்கவேண்டும். நீச்சல் தெரியாதவர்கள் எவ்வாறு தண்ணீரில் விளையாடுவது என்று பயிற்சி அளிக்கலாம். அந்த காலத்தில் பெற்றோர்கள் கிணற்றில் குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக்கொடுத்தனர் அவையெல்லாம் மறைந்து போயியுள்ளன. பெற்றோர்கள் ஒத்துழைத்தால் அப்பணிகள் நிறைவேறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஒவ்வொருவரும் உலகம் போற்றும் மாணவர்களாக உருவாக வேண்டுமென்றால் செல்போனை தவிர்த்து கல்வியை கற்க வேண்டும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவுறுத்தியுள்ளார்.
    ஈரோடு:

    பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலையரங்கம் திறப்பு விழா நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா தலைமை தாங்கினார்.

    இதில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய திறந்தவெளி கலையரங்கத்தை திறந்து வைத்தனர்.

    விழாவில் அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் கூறியதாவது:-

    கோப்புப்படம்

    ஒவ்வொரு மாணவர்களும் உலகம் போற்றும் மாணவர்களாக உருவாக வேண்டும். அதற்கு நீங்கள் செல்போனை தவிர்த்து கல்வியை கற்க வேண்டும். கைபேசியை மாணவர்கள் தேவைக்கு மட்டும் தான் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் உங்களின் எதிர்காலம் உங்கள் கையில் தான் உள்ளது.

    தேசத்தை பேணிக் காப்பதற்கும் பெற்றோரை காப்பதற்கும் மாணவ மாணவிகள் ஆசிரியர்களை குருவாக நேசிக்கவேண்டும். பல்வேறு திறமைகளுடன் உள்ள மாணவ மாணவிகள் நமது தமிழ்நாட்டில் தான் அதிகமாக உள்ளனர்.

    நீட் தேர்வை பொருத்தவரை 413 மையங்களில் 21 ஆயிரம் மாணவர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள். மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு 12-ம் வகுப்பு தேர்வு முடிந்த உடனேயே அந்தந்த பகுதியில் உள்ள தேர்வு செய்யப்பட்ட கல்லூரிகளில் 15 நாட்கள் வரை உணவு தங்கும் வசதியுடன் பட்டய கணக்காளர் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

    மேலும் பள்ளிகளில் வாரம் ஒரு முறை இலவசமாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

    இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
    சத்தியமங்கலம் அருகே செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    ஈரோடு:

    சத்தியமங்கலம் அருகே கொட்டு வீராம்பாளையம் அடுத்த தேவாங்குபுரம் என்ற ஊர் உள்ளது. இந்த பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பகுதியில் உள்ள குடியிருப்பு அருகே செல்போன் கோபுரம் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் முதலமைச்சருக்கும், கலெக்டர் தாசில்தார் ஆகியோருக்கும் தனித் தனியாக மனு அளித்தனர்.

    இந்நிலையில் நேற்றிரவு மீண்டும் இந்தப்பகுதியில் செல்போன் கோபுரம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டு ஜெனரேட்டர் பொருத்தப்பட்டது. இதனை கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் இன்று காலை 11. 30 மணி அளவில் சக்தி- பண்ணாரி செல்லும் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சாலையின் இரு புறங்களிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை ஈடுபட்டார்.

    அப்போது உங்கள் பகுதிகளில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடைபெறாது என்று உறுதி அளித்தார். இதனை ஏற்று பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் சுமார் 30 நிமிடம் நடந்து வந்த சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.
    ×