search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    சத்தியமங்கலம் அருகே செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் திடீர் சாலை மறியல்

    சத்தியமங்கலம் அருகே செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    ஈரோடு:

    சத்தியமங்கலம் அருகே கொட்டு வீராம்பாளையம் அடுத்த தேவாங்குபுரம் என்ற ஊர் உள்ளது. இந்த பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பகுதியில் உள்ள குடியிருப்பு அருகே செல்போன் கோபுரம் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் முதலமைச்சருக்கும், கலெக்டர் தாசில்தார் ஆகியோருக்கும் தனித் தனியாக மனு அளித்தனர்.

    இந்நிலையில் நேற்றிரவு மீண்டும் இந்தப்பகுதியில் செல்போன் கோபுரம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டு ஜெனரேட்டர் பொருத்தப்பட்டது. இதனை கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் இன்று காலை 11. 30 மணி அளவில் சக்தி- பண்ணாரி செல்லும் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சாலையின் இரு புறங்களிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை ஈடுபட்டார்.

    அப்போது உங்கள் பகுதிகளில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடைபெறாது என்று உறுதி அளித்தார். இதனை ஏற்று பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் சுமார் 30 நிமிடம் நடந்து வந்த சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.
    Next Story
    ×