என் மலர்
ஈரோடு
- கோபிசெட்டிபாளையம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வாழைப்பழங்கள் ஏலம் நடைபெற்றது.
- தேங்காய் ரூ.8 முதல் ரூ.13.70 வரை விலை போனது. மொத்தம் 2,160 தேங்காய்கள் கொண்டு வரப்பட்டது.
கோபி:
கோபிசெட்டிபாளையம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வாழைப்பழங்கள் ஏலம் நடைபெற்றது.
இதில் கதலி கிலோ ரூ.42-க்கும், நேந்திரன் கிலோ ரூ.44-க்கும் ஏலம் போனது.
மொத்தம் 3090 தார் ஏலத்திற்கு வந்திருந்தது. இதில் பூவன்ஓருத்தார் 830-க்கும், பச்சை நாடன்ஒருத்தார்ரூ.500-க்கும், செவ்வாழை ஒருத்தார் 760-க்கும், தேன் வாழை ஒரு தார் 800-க்கும், ரஸ்தாலி ஒருத்தார் 640க்கும், மொந்தன் ஒரு தார் 540-க்கும், ரொபஸ்டா ஒருத்தார்ரூ.500க்கும்விலை போனது.
மொத்தம் ரூ.8 லட்சத்து 79 ஆயிரத்துக்கு வாழைகள் ஏலம் போனது.
தேங்காய் ரூ.8 முதல் ரூ.13.70 வரை விலை போனது. மொத்தம் 2,160 தேங்காய்கள் கொண்டு வரப்பட்டது. அதன் மதிப்பு ரூ.23 ஆயிரத்து 700 ஆகும்.
- ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த சித்தோட்டில் ஒரு வீட்டில் போதை மாத்திரைகள் பதுக்கி வைத்து விற்பனை.
- மாத்திரைகள் சேலத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு விற்பனை செய்ததும் தெரிய வந்தது.
சித்தோடு:
ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த சித்தோட்டில் ஒரு வீட்டில் போதை மாத்திரைகள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக சித்தோடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் சித்தோடு ராயப்பாளையம் புதூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் ஒரு பெட்டியில் ஏராளமான மாத்திரைகள் இருந்தது. இதைகைப்பற்றி விசாரித்த போது அவை போதை மாத்திரைகள் என்று தெரிய வந்தது.
இதையடுத்து அந்த வீட்டில் இருந்த 2 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள் சித்தோடு ராயப்பாளையம் புதூர் பகுதியைச் சேர்ந்த திலிப் குமார் (23), வினித் குமார் (22) என்பது தெரிய வந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஈரோட்டைச் சேர்ந்த ஒருவரிடம் போனில் தொடர்பு கொண்டு இந்த போதை மாத்திரைகளை வாங்கியதாக தெரிவித்தனர்.
மேலும் இந்த மாத்திரைகள் சேலத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு விற்பனை செய்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து சித்தோடு இன்ஸ்பெக்டர் முருகையன் வழக்குப்பதிவு செய்து வீட்டில பதுக்கி வைத்து போதை மாத்திரைகள் விற்பனை செய்த திலிப்குமார், வினித்குமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்களிடமிருந்து 28 போதை மாத்திரை பெட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக முக்கிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சிறுவலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்கென்னடி மற்றும் போலீசார் ரோந்து சென்று சோதனை செய்தனர்.
- அப்போது கலைமகள் வீதியில் உள்ள ஒரு வீட்டில் 4 பேர் சூதாடி கொண்டிருந்தனர்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கெட்டிசெவியூர் பகுதியில் சிலர் சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சிறுவலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்கென்னடி மற்றும் போலீசார் ரோந்து சென்று சோதனை செய்தனர். அப்போது கலைமகள் வீதியில் உள்ள ஒரு வீட்டில் 4 பேர் சூதாடி கொண்டிருந்தனர்.
அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள் கெட்டிசெவியூர் பகுதியை சேர்ந்த பாண்டியன் (60), கவுந்தப்பாடியை சேர்ந்த வெங்கடேசன் (40), விஜயகுமார் (64), மொடச்சூர் விஸ்வநாதன் (49) என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.16 ஆயிரத்து 810 பறிமுதல் செய்தனர்.
இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- அந்தியூர் தாலுகா அலுவலகத்துக்கு ஆதார் திருத்தம் செய்ய பொதுமக்கள் வந்தனர். இந்த சேவை சரியாக செயல்படாததால் அவர்கள் ஆதார் எடுக்க முடியாமல் திரும்பி ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.
- இதனை உடனடியாக சரி செய்து ஆதார் எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அந்தியூர், ஆக .7-
நாடு முழுவதும் அரசு தேவைகளுக்கும முக்கிய அடையாள அட்டையாக பயன்படுத்தக்கூடிய ஆதார் அட்டை ஒவ்வொரு இந்திய குடிமகனின் அடையாள அட்டையாகவும் பயன்படு கிறது.
அந்த வகையில் எடுக்கப்பட்ட ஆதார் அட்டையில் முகவரி மாற்றம், பெயர் திருத்தம் உள்ளிட்டவை திருத்தங்கள் செய்யவும் புதியதாக ஆதார் எடுப்பவர்களும் எடுத்து வருகிறார்கள். தமிழகத்தில் கடந்த 4 நாட்களாக இந்த சேவை (இணைய தளம்வேலை செய்யாததால்) சரிவர செயல்படவில்லை என கூறப்படுகின்றது.
இதன் தொடர்ச்சியாக ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகா அலுவலகத்திற்கு உட்பட்ட அந்தியூர் தவிட்டு பாளையம், வெள்ளை யம்பாளையம், சின்னத்தம்பி பாளையம், சங்கரா பாளையம், அண்ணாமடுவு, அம்மா பேட்டை, நெருஞ்சிப்பேட்டை, அத்தாணி, பர்கூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்ய புதியதாக எடுப்பதற்கும் வருகிறார்கள்.
அந்தியூர் தாலுகா அலுவலகத்துக்கு ஆதார் திருத்தம் செய்ய பொதுமக்கள் வந்தனர். இந்த சேவை சரியாக செயல்படாததால் அவர்கள் ஆதார் எடுக்க முடியாமல் திரும்பி ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.
எனவே இதனை உடனடியாக சரி செய்து ஆதார் எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பவானியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முன்னாள் முதல்-அமைச்சரும் எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- இதையடுத்து அவர் வெள்ளம் பாதித்த பகுதிகளை சேர்ந்த பொது மக்களுக்கு துணி, அரிசி, பருப்பு மற்றும் மளிகை பொருட்கள் உள்பட பொருட்களை வழங்கினார்.
பவானி:
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறந்து விட்டது.
இதனால் அம்மா பேட்டை, பவானி மற்றும் ஈரோடு உள்பட பல்வேறு இடங்களில் காவிரி ஆற்றில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பவானி, அம்மா பேட்டை பகுதி களில் காவிரி கரை யோரம் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்தது.
இதே போல் பவானி காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பவானி புதிய பஸ் நிலையம் பகுதி, மார்க்கெட்டு பகுதிகள் உள்பட பல இடங்களில் காவிரி கரையோரம் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது.
இதையடுத்து அந்த பகுதியில் உள்ள பொது மக்கள் மீட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் பவானியில் வெள்ளம் பாதித்த புதிய பஸ் நிலையம் பகுதி, மார்க்கெட் பகுதி உள்பட பல பகுதிகளை முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பவானி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கந்தன்பட்டறை பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளபொது மக்களை சந்தித்து பேசினார்.
இதையடுத்து அவர் வெள்ளம் பாதித்த பகுதிகளை சேர்ந்த பொது மக்களுக்கு துணி, அரிசி, பருப்பு மற்றும் மளிகை பொருட்கள் உள்பட பொருட்களை வழங்கினார்.
இதில் முன்னாள் அமைச்சர்கள் கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ., தங்கமணி எம்.எல்.ஏ. மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
+2
- சுதா ஆஸ்பத்திரி பல்துறை ஆஸ்பத்திரியாக செயல்படுவதால் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற 94 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.
- இவர்களில் 46 பேரை உறவினர்கள் ஆம்புலன்சுகள் மூலம் வேறு ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு சென்றனர்.
ஈரோடு:
ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம் கருமுட்டை எடுத்த விவகாரம் தொடர்பாக ஈரோடு சுதா ஆஸ்பத்திரிக்கு சீல்வைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளை 15 நாட்களுக்குள் வேறு இடங்களுக்கு மாற்றவும் உத்தரவிட்டது.
இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் சுதா ஆஸ்பத்திரி ஸ்கேன் மையத்துக்கு சீல் வைத்தனர். மேலும் ஆஸ்பத்திரிக்கும் சீல் வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரணை நடத்திய தனி நீதிபதி, சுதா ஆஸ்பத்திரி ஸ்கேன் மையத்துக்கு வைத்த சீலை உடனடியகை அகற்ற உத்தரவிட்டார்.
மேலும் புதிய நோயாளிகளை சேர்க்க விதித்த தடையையும் ரத்து செய்தார். அதன்படி சுகாதாரத்துறையினர் சுதா ஆஸ்பத்திரி ஸ்கேன் மையத்துக்கு வைத்த சீலை அகற்றினர்.
இதற்கிடையே இதை எதிர்த்து தமிழக சுகாதாரத்துறை துறை சார்பில் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்குநேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுதா ஆஸ்பத்திரி ஸ்கேன் மையத்துக்கு வைத்த சீலை அகற்ற பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தனர்.
இந்த உத்தரவால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி ஆஸ்பத்திரியில் பணியாற்றும் ஊழியர்கள் நேற்று முன்தினம் மாலை ஆஸ்பத்திரி முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர். மேலும் சுதா ஆஸ்பத்திரிக்கு சீல்வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள 250-க்கும் மேற்பட்ட தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் அங்கு பணியாற்றும் 800 டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை. அதே நேரம் உள்நோயாளிகள் மற்றும் அவசர சிகிச்சை, அவசர அறுவை சிகிச்சைகள் மட்டும் செய்யப்பட்டது.
இதற்கிடையே ஈரோடு மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பிரேமகுமாரி தலைலைமயிலான அதிகாரிகள் நேற்று மாலை சுதா ஆஸ்பத்திரிக்கு சென்றனர்.
பின்னர் அங்கு 4 அறைகளில் இருந்த 10 ஸ்கேன் எந்திரங்களுக்கும், அறைகளுக்கும் சீல் வைத்தனர். தொடர்ந்து ஸ்கேன் மையங்களுக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலையும் வழங்கினர். மேலும் ஆஸ்பத்திரிக்கு சீல் வைக்கும் நடவடிக்கையையும் சுகாதாரத்துறையினர் தொடங்கினர்.
சுதா ஆஸ்பத்திரி பல்துறை ஆஸ்பத்திரியாக செயல்படுவதால் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற 94 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இவர்களில் 46 பேரை உறவினர்கள் ஆம்புலன்சுகள் மூலம் வேறு ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு சென்றனர்.
மீதம் உள்ள நோயாளிகளும் வேறு ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு செல்லப்பட்டதும் இன்று மாலை அல்லது நாளைக்குள் சுதா ஆஸ்பத்திரிக்கு முற்றிலுமாக சீல் வைக்கப்படுகிறது.
இதுகுறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில தலைவர் அபுல்ஹாசன் கூறியதாவது:-
டாக்டர்கள் மீதோ, மருத்துவமனை மீதோ தவறு இருந்தால் அதற்கு என்று தனியாக விசாரணை நடத்தி தண்டனை வழங்கலாம். அதை விட்டு விட்டு ஒட்டுமொத்தமாக மருத்துவமனையை மூட சொல்வது நியாயம் இல்லை.
இந்த உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தி இந்திய மருத்துவ சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றம், மற்றும் டெல்லி உச்சநீதிமன்றத்தை அணுக உள்ளோம். இந்திய மருத்துவ சங்கம் அல்லாது பல்வேறு அமைப்புகள் சேர்ந்து இதுகுறித்து கடிதம் எழுத முடிவு செய்துஉள்ளனர். அந்த கடிதத்தை நாங்கள் பெற்று தமிழக அரசுக்கு அனுப்புவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இதையடுத்து மத்திய அரசை கண்டித்து பெருந்துறை புதிய பஸ் நிலையம் பகுதியில் பெருந்துறை வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
- இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்துறை வட்டார காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணி, பெருந்துறை பேரூராட்சி கவுன்சிலர் பஷிரியா பேகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
பெருந்துறை:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்க துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதையடுத்து மத்திய அரசை கண்டித்து பெருந்துறை புதிய பஸ் நிலையம் பகுதியில் பெருந்துறை வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பெருந்துறை தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணி தலைமை தாங்கினார்.
இதில் சுமார் 30க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் கையில் காங்கிரஸ் கொடியை ஏந்தி கோஷம் போட்டு போட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்துறை பேரூராட்சி கவுன்சிலர் பஷிரியா பேகம் உட்பட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோன்று சிவகிரி புதிய பஸ் நிலையம் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.எம்.பழனிச்சாமி தலைமை தாங்கினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்துறை வட்டார காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணி, பெருந்துறை பேரூராட்சி கவுன்சிலர் பஷிரியா பேகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
- சென்னிமலையில் புகழ்பெற்ற முருகன்கோயில் மலை மீது அமைந்துள்ளது. இந்த ஆண்டு 55 -வது ஆண்டு பாலாபிஷேக பெருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.
- இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக பெண்கள் அதிக அளவில் பால் குடம் எடுத்து வந்தனர். பால் அபிேஷகத்தினை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் மகா தீபாராதனையும் அதை அடுத்து உற்சவ மூர்த்தி பிரகார உலாக்கட்சி நடந்தது.
சென்னிமலை:
சென்னிமலையில் புகழ்பெற்ற முருகன்கோயில் மலை மீது அமைந்துள்ளது. இங்குள்ள முருகப்பெருமான் சுப்பிரமணியர் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறார்.
சென்னிமலை மலை மீதுள்ள சுப்பிரமணியருக்கு வருடந்தோறும் ஆடி மாதம் விசாக நட்சத்திரத்தில் சென்னிமலை கைத்தறி மற்றும் சாய சாலை உரிமையாளர்கள் சங்கம் சார்பாக பாலாபிஷேக பெருவிழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 வருடங்களாக கொரோனா பெரும் தொற்றல் எளிமையாக நடந்தது.
இந்த ஆண்டு 55 -வது ஆண்டு பாலாபிஷேக பெருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. காலை 7:40 மணிக்கு 1610 திருப்பால் குடங்களை ஏராளமான பெண்கள் எடுத்து சென்றனர். ஊர்வலம் சென்னிமலை டவுன், கிழக்கு ராஜ வீதியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் இருந்து புறப்பட்டு மேள, தாளம் முழங்க காவடி ஆட்டத்துடன் சென்னிமலை நகரில் நான்கு ரத வீதிகளிலும் திருவீதி வலம் வந்து மலைமீதுள்ள முருகன் கோவிலை படி வழியாக சென்றடைந்தது.
காலை 11 மணிக்கு மலை மேல் சுப்பிரமணியருக்கு பால் அபிஷேகம் தொடங்கியது தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாதசிவம் தலைமையில் சிவாச்சாரியார்கள் பால் குடங்களில் இருந்த பால்களை வேத மந்திரங்கள் ஓத சுப்பிரமணிய பெருமானுக்கு அபிஷேகம் செய்தனர். இதை ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பார்த்து தரிசித்தனர்.
இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக பெண்கள் அதிக அளவில் பால் குடம் எடுத்து வந்தனர். பால் அபிேஷகத்தினை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் மகா தீபாராதனையும் அதை அடுத்து உற்சவ மூர்த்தி பிரகார உலாக்கட்சி நடந்தது. பக்தர்கள் அனைவருக்கும் மலை மீது அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்சியால் இன்று அதிகாலை முதலே சென்னிமலை முருகன்கோவில் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி இருந்தது.
பாலாபிஷேக பெரு விழா ஏற்பாடுகளை கைத்தறி மற்றும் சாய சாலை உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
- வயிற்று வலி காரணமாக வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- இதுகுறித்து தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் தாளவாடி தொட்டகாஜனூர் நாயக்கர் வீதியை சேர்ந்த ரங்கநாயக்கர் மகன் சித்தராஜ்(19). லாரி கிளீனராக வேலை பார்த்து வந்தார். சித்தராஜ்க்கு கடந்த 3 மாதங்களாக கடுமையான வயிற்று வலி இருந்து வந்தது.
இதனால், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பார்த்தும் குணமாகவில்லை. கடந்த 4-ந் தேதி இரவு கடுமையான வயிற்று வலி காரணமாக வீட்டில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தாளவாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து, சித்தராஜ் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஈரோடு மாவட்டத்தில் நாளை 1,597 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்க உள்ளது.
- பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு அச்சமின்றியும், தயக்கமின்றியும் தடுப்பூசியை செலுத்திக் கொண்டு கொரோனா 4-ம் அலையை தடுத்து சமூகத்தையும் பாதுகாத்துக் கொள்ளுமாறு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கேட்டுக்கொண்டுள்ளார்.
ஈரோடு:
தமிழகத்தில் கொரோனா 4-ம் அலை பரவுதலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாபெரும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
இதில் 12 வயதிற்கு மேற்பட்ட மற்றும் 18 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள், 18 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் முதல் தவணை மற்றும் 2-ம் தவணை, இரு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட 18 வயது மேற்பட்ட வர்களுக்கு 2-வது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு 6 மாதங்கள் கடந்தவர்கள் அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக அனைத்து அரசு மருத்து வமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார மையங்களில் செலுத்தப்பட உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் இந்த மாபெரும் தடுப்பூசி முகாமையொட்டி நாளை அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்பட 1597 மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் 2-ம் தவணையாகவும், 18 வயதுக்கு மேற்பட்ட 2-ம் தவணை செலுத்தி 6 மாதம் கடந்தவர்கள் அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி என 1.50 லட்சம் பேருக்கு இலவசமாக செலுத்தப்பட உள்ளது.
மேலும் இந்த மாபெரும் தடுப்பூசி முகாமில் ஈரோடு மாவட்டம் முழுவதும் 3196 பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தும் பணி செய்திடவும், 70 வாகனங்கள் முகாமிற்காக பயன்படுத்தப்பட உள்ளது. தற்போது மிக வேகமாக பரவி வரும் ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பி லிருந்து பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி மிகவும் அவசியம்.
ஈரோடு மாவட்ட பொது மக்கள் அனைவரும் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு அச்சமின்றியும், தயக்கமின்றியும் தடுப்பூசியை செலுத்திக் கொண்டு கொரோனா 4-ம் அலையை தடுத்து சமூகத்தையும் பாதுகாத்துக் கொள்ளுமாறு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கேட்டுக்கொண்டுள்ளார்.
- இந்த விழாவை சென்னையில் இருந்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைத்து பேசினார்.
- இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன தலைவர் குறிஞ்சி சிவகுமார், மாநகராட்சி மேயர் நாகரத்தினம், திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. மக்கள் சிந்தனை பேரவை செயலாளர் அன்பரசு ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சூரம்பட்டி:
மக்கள் சிந்தனை பேரவை சார்பில் ஈரோட்டில் 18-வது ஆண்டு புத்தக திருவிழா ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மைதானத்தில் நேற்று மாலை நடந்தது.
விழாவுக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார்.அமைச்சர் முத்துசாமி, முன்னிலை வகித்தார். மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் வரவேற்று பேசினார்.
இந்த விழாவை சென்னையில் இருந்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது
அரசின் உதவியோடு புத்தக கண்காட்சி அனைத்து மாவட்டங்களிலும் நடக்க வேண்டும் என்பதற்காக இந்த ஆண்டு ரூ. 4 கோடியே 96 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உலகில் எந்த மொழிக்கும் இல்லாத பழமை சிறப்பும் இலக்கிய இலக்கண வளமையும் தமிழ் மொழிக்கு உண்டு.
இந்த தமிழ் மொழி தான் தமிழினத்தை காக்கும் காப்பானாக அமைந்திருக்கிறது. எத்தகைய படையெடுப்பு கள் வந்தாலும் அத்தனை படை எடுப்புகளையும் தாங்கி நிற்கும் வல்லமை நமது தாய் மொழிக்கு உண்டு. பட்டங்கள் வாங்கு–வதற்கு மட்டுமல்லாமல் அறிவின் கூர்மைக்காகவும் நம்முடைய சிந்தனையை வளர்த்து கொள்வதற்கா–கவும் நாம் கடந்து வந்த பாதையை அறிந்து கொள்வதற்காகவும் நாம் போக வேண்டிய திசையை சென்றடைவதற்காகவும் அறிவார்ந்த புத்தகங்களை அனைவரும் வாசிக்க வேண்டும்.
புத்தகம் வழங்குவது இன்றைக்கு ஒரு இயக்கமாகவே தமிழ் நாட்டில் மாறி இருக்கிறது. இந்த இயக்கம் விரிவடைய வேண்டும். வலுவடைய வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். அறியாமை என்னும் இருட்டில் தத்தளிப் பவர்களுக்கு ஒளி கொடுக்கும் அறிவுச்சுடர் தான் புத்தகங்கள்.
பொய்யும் புரட்டும் கலந்த பழமை வாதம் என்னும் கடலில் சிக்கித் தவிக்காமல் நாம் கரைசேர உதவு கிற பகுத்தறிவு கப்பல்கள் தான் புத்தகங்கள்.
தமிழ்நாட்டில் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது புத்தகங்களை பரிமாறிக் கொள்ளும் பண்பாடு வளர வேண்டும். வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அறிவார்ந்த நூல்களை நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள். இதனால் சிந்தனையில் தெளிவு ஏற்படும் புத்தகங்களை வாசிக்க தூண்டுங்கள் ஏன் எதற்கு எப்படி என்ற கேள்வியை இளைஞர்கள் கேட்க வேண்டும்.
ஒரு செய்தி உங்களை வந்தடைகிறது என்றால் அதனை முழுமையாக நம்பி விடாதீர்கள் அதன் உண்மை தன்மையை ஆராயுங்கள். எது உண்மை என்று அறிய வேண்டும் என்றால் நிறைய படிக்க வேண்டும்.
இட்டுக்கட்டி கட்டுக்கதைகளை அவிழ்த்து தேர்ந்தவர்கள். அந்தக் கலையில் தேர்ந்தவர்கள் ஆண்டாண்டு காலமாக கட்டுக் கதைகளை நம்ப வைக்கும் திறமையை பெற்றவர்கள். தமிழ் சமூகம் பகுத்தறிவு சமூகம் பொய்களையும் கட்டுக்கதைகளையும் வென்ற சமூகம். தமிழகம் அறிவு புரட்சி மாநிலமாக பகுத்தறிவு புரட்சி மாநிலமாக மாறுவதற்கு இதுபோன்ற புத்தகத் திருவிழாக்கள் அனைத்து நகரங்களிலும் நடைபெற வேண்டும். அறிவே அனைத்துக்கும் அரண். புத்தகங்களே புத்துணர்வு அமுதம். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன தலைவர் குறிஞ்சி சிவகுமார், மாநகராட்சி மேயர் நாகரத்தினம், திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. மக்கள் சிந்தனை பேரவை செயலாளர் அன்பரசு ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் நடக்கிறது.
- கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் 18 ஆயிரம் வீடுகளுக்கு இலவசமாக தேசிய கொடிஇன்று முதல் வழங்கப்படுகிறது.
- இக்கொடியினை அறிமுக–ப்படுத்தி ஆணையாளர் பிரேம் ஆனந்த் முன்னிலையில் நகர் மன்ற தலைவர் என் ஆர் நாகராஜ் அலுவலரிடம் கொடிகளை வழங்கினார்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் 75-வது சுதந்திர அமுதப் பெருவிழா கொண்டாட்டத்தின் போது அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியினை ஏற்றுவதற்காக இலவசமாக வீடு தோறும் கொடி வழங்கும் நிகழ்வுக்காக நிதி சேகரிக்கப்பட்டது.
நகரில் உள்ள பல்வேறு அமைப்புகள் மூலமாக ரூ.1 லட்சம் சேகரிக்கப்பட்டது. நகராட்சி அலுவலர்கள் தங்கள் பங்களிப்பாக ரூ 75 ஆயிரத்தை வழங்கினார்்கள். மேலும் நிதி சேகரிக்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் 18 ஆயிரம் கொடிகள் அச்சிடப்பட்டு நகராட்சி அலுவலகத்துக்கு வந்து சேர்ந்துள்ளது.
இக்கொடியினை அறிமுக–ப்படுத்தி ஆணையாளர் பிரேம் ஆனந்த் முன்னிலையில் நகர் மன்ற தலைவர் என் ஆர் நாகராஜ் அலுவலரிடம் கொடிகளை வழங்கினார்.
இன்று முதல் நகர் மன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் வீடுகள் தோறும் தேசியக்கொடியை இலவசமாக வழங்கும் நிகழ்வு நடைபெறுகிறது. நகராட்சி துப்புரவு அலுவலர் சோழராஜ், நகரமைப்பு அலுவலர் சேகரன், உதவி பொறியாளர்கள் கோமதி, ராஜேஷ், மேலாளர் ஜோதி–மணி ஆகியோர் மேற்பார்வை–யில் துப்புரவு ஆய்வாளர்கள் செந்தில்குமார், கார்த்திக், சவுந்தரராஜன், நகராட்சி வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார், நகரமைப்பு ஆய்வாளர் ஜானகிராமன் உள்ளிட்டவர்கள் தலைமையிலான குழுவினர் தேசிய கொடியினை வீடுகள் தோறும் வழங்க உள்ளனர்.






