என் மலர்
ஈரோடு
- மேட்டூரில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் பவானியில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டது.
- இதையடுத்து வெள்ள த்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் முத்துச்சாமி அரிசி, பெட்ஷீட், வேஷ்டி, சர்ட், சேலை உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.
பவானி:
மேட்டூரில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் பவானியில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசு பெண்கள் மேல்நிலை ப்பள்ளி, பசுவேஸ்வரர் வீதி, கந்தன் பட்டறை,| குருப்பநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து வெள்ள த்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் முத்துச்சாமி அரிசி, பெட்ஷீட், வேஷ்டி, சர்ட், சேலை உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தி.மு.க. நகர தி.மு.க. செயலாளர் ப.சீ.நாகராசன்,ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம், பவானி நகரமன்றத் நலைவர் சிந்தூரி இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- டி.என்.பாளையம் அருகே சந்தன மரம் வெட்டி கடத்த முயன்ற சிறுவன் உள்பட 2 பேர் கைது 4 பேர் கும்பல் தப்பி ஓடினர்.
- தப்பியோடிய 4-நபர்களும் பிடிபட்டால், சட்ட விரோதமாக சந்தன மரங்களை கடத்தி யாருக்கு? இந்த கும்பல் விற்பனை செய்கின்றனர் என்பது போன்ற தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கணக்கம்பாளையம் கிராமம் வேதபாறை பள்ளம் கத்தாழைமடுவு என்ற இடத்தில் சந்தன மரங்களை ஒரு கும்பல் வெட்டி கடத்துவதாக டி.என்.பாளையம் வனத்துறையினருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.
வனச்சரகர் கணேஷ் பாண்டியன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடமான கத்தாழை மடுவு என்ற இடத்தில் சென்று பார்த்த போது 6-பேர் கொண்ட கும்பல் சந்தன மரங்களை வெட்டி கட்டைகளை எடுத்து வைத்து கொண்டு இருந்தனர்.
வனத்துறையினர் வருவதை பார்த்த கடத்தல் கும்பல் தப்பியோட முயன்ற போது 2-பேரை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர், இதில் 4-பேர் தப்பியோடினர்.
பிடிபட்ட 2- நபரிடம் டி.என்.பாளையம் வனத்துறையினர் விசாரணை நடத்தியதில், கள்ளிப்பட்டி பகவதி நகர் பகுதியைச் சேர்ந்த சடையன் என்பவரது மகன் பெரியசாமி (24), நாகராஜ் (47), முத்து (45), சடையன் (55), மாருச்சாமி (40) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 6- பேர் கொண்ட கும்பல் சந்தன மரங்களை வெட்டி எடுத்து விற்பனை ஈடுபட முயன்றது தெரியவந்தது.
சம்பவ இடத்தில் பிடிபட்ட பெரியசாமி மற்றும் 17-வயது சிறுவன் என இருவரிடம் இருந்து சுமார் 8 கிலோ அளவுள்ள சந்தன மரக்கட்டைகளை பறிமுதல் செய்த வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், சந்தன மரங்களை வெட்டி கடத்த முயன்ற சம்பவத்தில் தப்பியோடிய நாகராஜ், முத்து, சடையன், மாருச்சாமி ஆகிய 4- நபர்களை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
வனத்துறையினர் கூறுகையில், இந்த 6 பேர் கொண்ட கும்பல் சந்தன மரங்களை வெட்டி டி.என்.பாளையம் அடுத்த கே.என்.பாளையம் பகுதியில் மொத்த விற்பனையில் ஈடுபட இருந்ததாக தெரிவித்தனர்.
தப்பியோடிய 4-நபர்களும் பிடிபட்டால், சட்ட விரோதமாக சந்தன மரங்களை கடத்தி யாருக்கு? இந்த கும்பல் விற்பனை செய்கின்றனர் என்பது போன்ற தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- சிறுத்தை தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டு இருந்த கால்நடைகளை வேட்டையாடி வந்தது.
- சிறுத்தையை வேடிக்கை பார்க்க ஏராளமானபேர் திரண்டனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி, புதுபீர்கடவு, ராஜன் நகர் ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு மாதத்துக்கும்மேலாக சிறுத்தை ஒன்று அந்த பகுதிகளில் சுற்றி வந்தது. இரவு நேரங்களில் அந்த சிறுத்தை தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டு இருந்த கால்நடைகளை வேட்டையாடி வந்தது.
மேலும் அதிகாலை நேரத்தில் சிறுத்தையை பார்த்த சிலர் அச்சம் அடைந்தனர். இதையடுத்து கால்நடைகளை வேட்டையாடி வரும் சிறுத்தையை பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து பவானி சாகர் வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க புதுபீர் கடவு பகுதியில் குப்புசாமி என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு கூண்டு அமைத்து கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவில் மீண்டும் இந்த பகுதிக்கு வந்த சிறுத்தை கூண்டில்இருந்த ஆட்டை சாப்பிட வந்த போது வசமாக கூண்டில் சிக்கியது.
இன்று காலை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிறுத்தை சிக்கிய தகவல் கிடைத்ததும் வனத்துறையினர் விரைந்து வந்தனர். அப்போது கூண்டில் சிக்கிய சிறுத்தை 5 வயது ஆண் சிறுத்தை என்று தெரியவந்தது. சிறுத்தை கூண்டில் சிக்கியதையடுத்து சிறுத்தையை வேடிக்கை பார்க்க ஏராளமானபேர் திரண்டனர். அவர்களை சிறுத்தையின் அருகே செல்ல விடாமல் வனத்துறையினர் தடுத்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தாளவாடியில் சிக்கிய கூண்டில்இருந்து தப்பியது. பின்னர் வனத்துறையினர் போராடி ஒரு வழியாக சிறுத்தையை பிடித்து தெங்குமரஹடா வனப்பகுதியில் விட்டனர். எனவே இந்த முறை சிறுத்தையை கவனமாக வனத்துறையினர் கையாண்டு வருகின்றனர்.
கடந்த ஒரு மாதமாக கால்நடைகளை வேட்டையாடி வந்த சிறுத்தை பிடிபட்டதால் புதபீர்கடவு, ராஜன் நகர்,பண்ணாரி பகுதியை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். பிடிபட்ட சிறுத்தையை தெங்குமரகஹடா அடர்ந்த வனப்பகுதியில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- இரவில் நடந்த கலப்பு இரட்டையர் டேபிள் டென்னிஸ் போட்டி மூலம் நேற்று இந்தியாவுக்கு 5- வது தங்கம் கிடைத்தது.
- நேற்று ஒரே நாளில் இந்தியாவுக்கு 5 தங்கம், 4 வெள்ளி, 6 வெண்கலம் ஆக மொத்தம் 15 பதக்கம் கிடைத்தது.
பர்மிங்காம்:
22-வது காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது. 9-வது நாள் போட்டி முடிவில் இந்தியா 13 தங்கம், 11 வெள்ளி, 16 வெண்கலம் ஆக மொத்தம் 40 பதக்கம் பெற்று இருந்தது.
நேற்றைய 10-வது நாள் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் 5 தங்கப்பதக்கம் கிடைத்தது.
பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் 48 கிலோ பிரிவில் பங்கேற்ற நிதுன் கங்காஸ் முதல் தங்கத்தை வென்றார். ஆண்களுக்கான குத்துச்சண்டையில் 51 கிலோ பிரிவில் அமித் பங்கால் தங்கப்பதக்கத்தை பெற்றார்.
ஆண்களுக்கான டிரிபிள் ஜம்ப் பந்தயத்தில் எல்டோஸ் பவுல் தங்கம் வென்று முத்திரை பதித்தார். அதைத் தொடர்ந்து குத்துச்சண்டை மூலம் இந்தியாவுக்கு 4-வது தங்கம் கிடைத்தது. பெண்களுக்கான 50 கிலோ பிரிவில் நிகாத் ஜரீன் தங்கப்பதக்கம் பெற்று கொடுத்தார்.
இரவில் நடந்த கலப்பு இரட்டையர் டேபிள் டென்னிஸ் போட்டி மூலம் நேற்று இந்தியாவுக்கு 5- வது தங்கம் கிடைத்தது.
கலப்பு இரட்டையர் இறுதிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த சரத்கமல்- ஸ்ரீஜா அகுலா ( தெலுங்கானா ) ஜோடி மலேசியாவைச் சேர்ந்த சூங்-லியன் ஜோடியை எதிர் கொண்டது. இதில் சரத்கமல் ஜோடி 3-1 என்ற கணக்கில் வென்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் சரத்கமல் மற்றொரு தமிழக வீரர் சத்யனுடன் இணைந்து வெள்ளிப்பதக்கம் பெற்றார். மேலும் சரத்கமல் ஒற்றை பிரிவில் இறுதிப்போட்டிக்கும் தகுதி பெற்றார். சத்யன் அரைஇறுதியில் தோற்றதால் வெண்கல பதக்கத்துக்கு மோதுகிறார்.
மகளிர் கிரிக்கெட்டிலும், குத்துச்சண்டையிலும் எதிர்பார்த்த தங்கம் வாய்ப்பு கிடைக்காமல் போனது. பெண்கள் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோற்றதால் வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
ஆண்களுக்கான 92 கிலோவுக்கு மேற்பட்ட பிரிவு குத்துச்சண்டையில் சாகர் அக்லாவாத் வெள்ளிப் பதக்கம் பெற்றார். அவர் இறுதிப் போட்டியில் 0-5 என்ற கணக்கில் இங்கிலாந்து வீரரிடம் தோற்றார்.
ஆண்களுக்கான டிரிபிள் ஜம்ப் பந்தயத்தில் அப்துல்லா அபுபக்கர் வெள்ளி பதக்கம் பெற்றார்.
இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு வெண்கல பதக்கம் கிடைத்தது. ஆண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் நடைபந்தயத்தில் சந்தீப் குமாரும், பெண்களுக்கான ஈட்டி எறிதலில் அன்னு ராணியும் வெண்கல பதக்கம் பெற்றனர்.
ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் தீபிகா பல்லிகல் -சவுரவ் கோஷல் ஜோடி வெண்கல பதக்கம் பெற்றது. இந்த ஜோடி ஆஸ்திரேலிய ஜோடியை 2-0 என்ற கணக்கில் தோற்கடித்தது.
பேட்மின்டன் ஆண்கள் ஒற்றையர் போட்டியில் ஸ்ரீகாந்த் கிடாம்பி வெண்கலம் வென்றார். அவர் 21-15, 21-18 என்ற கணக்கில் சிங்கப்பூர் வீரர் ஹெங்கை தோற்கடித்தார்.
இதே போல பெண்களுக்கான பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் காயத்ரி கோபிசந்த்-திரிஷா ஜோலி ஜோடியும் வெண்கல பதக்கம் பெற்றது. ஒற்றையர் பிரிவில் பி.வி. சிந்து மற்றும் லக்சயா சென் ஆகியோர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று உள்ளனர்.
நேற்று ஒரே நாளில் இந்தியாவுக்கு 5 தங்கம், 4 வெள்ளி, 6 வெண்கலம் ஆக மொத்தம் 15 பதக்கம் கிடைத்தது.
நேற்றைய போட்டி முடிவில் இந்தியா 18 தங்கம், 15 வெள்ளி, 22 வெண்கலம் ஆக மொத்தம் 55 பதக்கம் பெற்று தொடர்ந்து 5-வது இடத்தில் உள்ளது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு மாவட்டத்துக்கு 2 நாள் சுற்றுப்பயணமாக வருகிற 25-ந் தேதி வருகிறார்.
- மு.க.ஸ்டாலின் ஈரோட்டில் உள்ள காளிங்கராயன் அரசினர் விருந்தினர் மாளிகையில் இரவில் தங்கி ஓய்வெடுக்கிறார்.
ஈரோடு:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு மாவட்டத்துக்கு 2 நாள் சுற்றுப்பயணமாக வருகிற 25-ந் தேதி வருகிறார். அன்று மாலை 5 மணியளவில் திருப்பூரில் நடைபெறும் நிகழ்ச்சியை முடித்து கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமாநல்லூர், குன்னத்தூர், கெட்டிசெவியூர், கொளப்பலூர், மொடச்சூர், கோபி, நஞ்சகவுண்டன் பாளையம் வழியாக டி. என். பாளையம் ஒன்றியத்தில் உள்ள கள்ளிப்பட்டிக்கு வருகிறார்.
அங்கு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். அதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோட்டில் உள்ள காளிங்கராயன் அரசினர் விருந்தினர் மாளிகையில் இரவில் தங்கி ஓய்வெடுக்கிறார்.
பின்னர் மறுநாள் 26-ந் தேதி காலை காளிங்கராயன் விருந்தினர் மாளிகையில் இருந்து கிளம்பி சோலார் அருகே உள்ள புதிய பஸ் நிலையம் அமைந்துள்ள திடலுக்கு செல்கிறார். அங்கு அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். பின்னர் அங்கிருந்து மீண்டும் மதியம் ஈரோடு காளிங்கராயன் அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்து உணவு அருந்தி சிறிது நேரம் ஓய்வெடுத்த பின் பெருந்துறை விஜயமங்கலம் டோல்கேட் வழியாக கோவைக்கு செல்கிறார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான முத்துசாமி, வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் ஆகியோர் செய்து வருகின்றனர்.
- நூலின் கொள்முதலுக்கான டெண்டர்களை கொடுக்காமல் அரசு இழுத்தடிக்கிறது.
- இலவச வேட்டி, சேலை டெண்டர் தாமதமானால் பா.ஜ.க. போராட்டம் நடத்தும்.
பாஜக நெசவாளர் பிரிவு சார்பில் தேசிய கைத்தறி தினவிழா ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சிறந்த நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நாட்டின் வளர்ச்சியில் கைத்தறி நெசவாளர்களின் பங்களிப்பை கவுரவிக்கும் விதத்தில் 2015-ம் ஆண்டு முதல் ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி தேசிய கைத்தறி தினமாக நம் தேசம் கொண்டாடி வருகிறது. கைத்தறியின் ஒருங்கிணைந்த மற்றும் முழுமையான வளர்ச்சி மற்றும் கைத்தறி நெசவாளர்களின் நலனை உருவாக்க தேசிய கைத்தறி மேம்பாட்டு திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
கைத்தறி உரிமையாளர்கள் பயன்பெறும் வகையில் நூல் வாங்கும்போது அதற்கு விதிக்கப்படும் சரக்கு கட்டணத்தை மத்திய அரசு முழுமையாக ஏற்றுக் கொள்கிறது. மேலும் பருத்தி, பட்டு, கம்பளி போன்ற நூல் வகைகளுக்கு 15 சதவீத மானியத்தை மத்திய அரசு வழங்குகிறது.
கைத்தறி மற்றும் விசைத்தறி உரிமையாளர்கள் தங்களது உற்பத்தியை உயர்த்த தேவையான உட்கட்டமைப்பை மேம்படுத்திட மத்திய அரசு கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.7 கோடியே 54 லட்சம் வழங்கி உள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த நாள் முதல் நெசவு தொழிலாளர்களை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.
கோவை மற்றும் திருப்பூர் விசைத்தறி உரிமையாளர்கள் 59 நாட்கள் போராட்டம் நடத்திய பின்னர்தான் நெசவுக்கு கூலி உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. நெசவாளர்கள் வாழ்வுரிமையான இலவச, வேட்டி சேலை திட்டத்தை மூடு விழா நடத்த இந்த அரசு திட்டமிட்டுள்ளது.
ரூ.1 கோடி 80 லட்சம் சேலைகளும், 1 கோடி 80 லட்சம் வேட்டிகளையும் நெய்வதற்கு விசைத்தறி உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் நூலின் கொள்முதலுக்கான டெண்டர்களை கொடுக்காமல் இழுத்தடிக்கிறது. டெண்டர் கொடுப்பதில் தாமதம் ஆவதால் நெசவாளர்களுக்கு ரூ.486 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே இந்த டெண்டரை வழங்கவில்லை என்றால் நெசவாளர்களின் சார்பாக தமிழக பா.ஜ.க. மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- அண்ணாமலை தலைமை தாங்கி நெசவாளர்களை கவுரவித்து அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வாங்குகிறார்
- ஈரோடு டீச்சர்ஸ் காலனியில் தொடங்கி பெருந்துறை ரோடு வழியாக சக்தி துரைசாமி திருமண மண்டபத்தில் நிறைவடைகிறது.
ஈரோடு:
பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க இன்று மதியம் ஈரோட்டுக்கு வருகை தர உள்ளார். மதியம் இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி பாரதிய ஜனதா கட்சி சார்பில் பேரணி நடைபெற உள்ளது.
இந்த பேரணியை பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தொடங்கி வைத்து தேசிய கொடியை கையில் ஏந்தியபடி ஊர்வலமாக நிர்வாகிகளுடன் செல்கிறார்.
இந்த ஊர்வலம் ஈரோடு டீச்சர்ஸ் காலனியில் தொடங்கி பெருந்துறை ரோடு வழியாக சக்தி துரைசாமி திருமண மண்டபத்தில் நிறைவடைகிறது.
பின்னர் அதைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியின் நெசவாளர் பிரிவு சார்பில் தேசிய கைத்தறி தினவிழாவை ஒட்டி சிறந்த நெசவாளர்களை கவுரவித்தும் அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும், நடை பெற உள்ளது.
இந்த விழாவுக்கு அண்ணாமலை தலைமை தாங்கி நெசவாளர்களை கவுரவித்து அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வாங்குகிறார்.
- ஈரோடு சூரம்பட்டி போலீசார் காந்திஜி வீதி, தீயணைப்பு நிலையை சந்து பகுதியில் ரோந்து மேற்கொண்டனர்.
- அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் சட்ட விரோத விற்பனையை தடுக்கும் விதமாக போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, ஈரோடு சூரம்பட்டி போலீசார் காந்திஜி வீதி, தீயணைப்பு நிலையை சந்து பகுதியில் ரோந்து மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் (29) கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து, அவரிட மிருந்து 100 கிராம் கஞ்சாவை மீட்டனர். தொடர்ந்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இதேபோல, பவானி போலீசார் மேற்கொண்ட சோதனையில், ஜம்பை, மின்வாரிய அலுவலகம் அருகில் கஞ்சா விற்பனை நடைபெறுவது தெரிய வந்தது.
அதைத் தொடர்ந்து, அங்கு கஞ்சா விற்பனை செய்ததாக ஜம்பையைச் சேர்ந்த சுமதி (40) ஒரிச்சேரிப் புதூரைச் சேர்ந்த ஆறுமுகம் (60) ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் அவர்களிட மிருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
- கணவன் இறந்த துக்கம் தாங்க முடியாமல் அவருடைய உடல் அருகே அழுது கொண்டிருந்த ஐயம்மாள் ஒரு மணி நேரத்தில் கணவன் உடல் மீது மயங்கி விழுந்தார்.
- கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவியும் உயிரை விட்ட சம்பவம் தர்மாபுரி சுற்று வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.
கவுந்தப்பாடி:
கவுந்தப்பாடி அடுத்துள்ள சலங்கபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட தர்மாபுரி புதுகாட்டு வீதியை சேர்ந்தவர் முத்துசாமி (90). இவரது மனைவி ஐயம்மாள் (85).
இருவருக்கும் திருமணம் ஆகி 60 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ராஜேந்திரன் என்ற மகனும், மாரியம்மாள் என்ற மகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது.
முத்துசாமி, ஐயம்மாள் தம்பதியினர் இருவரும் தனியாக வசித்து வந்தனர். முத்துசாமி நெசவுத்தொழில் செய்து வந்தார். ஐயம்மாள் கணவனுக்கு வேண்டிய உதவிகளை செய்து அவரை கவனித்து வந்தார்.
வெளியிடங்களுக்கு போகும் போதும், திருமணம் மற்றும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் செல்லும் போது இருவரும் ஒன்றாகவே சென்று வந்தனர்.
இந்நிலையில் வயது முதிர்வின் காரணமாக இருவரும் வீட்டிலேயே இருந்து வந்தனர். அவர்களை மகனும், மருமகளும் பராமரித்து வந்தனர். சம்பவத்தன்று மதியம் முத்துசாமி உயிரிழந்தார்.
கணவன் இறந்த துக்கம் தாங்க முடியாமல் அவருடைய உடல் அருகே அழுது கொண்டிருந்த ஐயம்மாள் ஒரு மணி நேரத்தில் கணவன் உடல் மீது மயங்கி விழுந்தார்.
உடனே உறவினர்கள் ஐயம்மாளை தூக்கி தண்ணீர் தெளித்தனர். ஆனால் எழுந்திரிக்காம லேயே கணவன் உடல் மீது உயிரைவிட்டார். கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி உயிரை விட்ட சம்பவம் உறவினர்கள், ஊர்மக்களிடம் துக்கத்தை மேலும் அதிகரித்தது.
இதனையடுத்து இறந்தவர்கள் உடலை அருகருகே வைத்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் இருவரையும் ஒரே ஆம்புலன்சில் ஏற்றி சலங்கபாளையம் மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்து சென்று ஒரே மேடையில் வைத்து தகனம் செய்யப்பட்டது.
கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவியும் உயிரை விட்ட சம்பவம் தர்மாபுரி சுற்று வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.
- வெள்ளோடு பறவைகள் சரணாலய பகுதிகளில் வனத்துறை சமூகநலக் காடுகள் கோட்டத்தின் மூலமாக நாட்டு கருவேல மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது.
- இந்த பகுதியானது உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு பறவைகளுக்கான இனப்பெருக்க தளமாகவும் விளங்குகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் வடமுகம் கிராமத்திலுள்ள வெள்ளோடு பறவைகள் சரணாலய (பெரிய குளம் ஏரி) பகுதிகளில் 1980-ம் ஆண்டு முதல் வனத்துறை சமூகநலக் காடுகள் கோட்டத்தின் மூலமாக நாட்டு கருவேல மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் பெரிய குளம் ஏரியில் கட்லா, ரோகு, கெண்டை, விரால் போன்ற மீன் வகைகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த பகுதியானது அடர்ந்த நாட்டு கருவேல மரங்களால் சூழப்பட்டு உள்ளது.
இதனால் சாம்பல் நாரை, இராக்கொக்கு, பாம்பு தாரா, வெள்ளை அரிவாள் மூக்கன், கரண்டி வாயன், புள்ளி மூக்கு வாத்து, தட்டை வாயன், வெண்புருவ வாத்து, புள்ளிஅலகு கூழைக்கடா போன்ற வெளி நாட்டு மற்றும் உள்நாட்டு பறவைகள் வாழ்வதற்கு ஏற்ற இடமாக மாறியது.
இனி வரும் ஆண்டுகளில் பறவைகளின் எண்ணிக்கைஅதிகரித்து இந்த பகுதியானது உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு பறவைகளுக்கான இனப்பெருக்க தளமாகவும் விளங்குகிறது.
இதன் தொடர்ச்சியாக பெரிய குளம் ஏரி பகுதியானது 2000-ம் ஆண்டு வெள்ளோடு பறவைகள் சரணாலயம் என வனஉயிரின பாதுகாப்பு சட்டம் 1972-ன் படி அறிவிப்பு வெளியிடப்பட்டு இன்று வரை மாவட்ட வன அலுவலர், ஈரோடு வனக்கோட்டத்தின் கட்டுபாட்டில் இயங்கி வருகிறது. 2018-2019-ம் ஆண்டு முதல் 2019-2020-ம் ஆண்டு வரை சூழல் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டதன் நீட்சியாக சரணாலயம் மேலும் பொழிவு பெற்று கூடுதல் பறவைகளின் கவனத்தையும் ஈர்த்தது.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட பறவைகள் கணக்கெடுப்பில் 121 இனங்களுக்குட்பட்ட 23,427 பறவைகள் வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் வசித்து வருவது கண்டறியப்பட்டது.
தனித்துவமான ஈரநில வகைகளின் பிரதிநிதி, உயிரியல் பன்முகத்தன்மை, அறிய இனங்களை கொண்டு சுற்றுச்சூழல் சமூகம் மற்றும் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நீர்வாழ் பறவைகளும் வசித்து வரும் ஈரநிலம் என பல காரணங்களால் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள பெரிய குளம் ஏரியானது ஈரநில பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈர நிலமாக அங்கீகாரம் பெற்று இந்த ஆண்டு அரசால் ராம்சார் அமைப்பிற்கு முன்மொழியப்பட்டது.
தற்போது ராம்சார் அமைப்பால் வெள்ளோடு பறவைகள் சரணாலயத்திற்கு சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலம் என கடந்த 3-ந் தேதியன்று அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பானது வெள்ளோடு பறவைகள் சரணாலயம் பல வகை உயிரினங்களின் வாழ்விடமாக விளங்குவதை பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது.
- கைத்தறியின் கேந்திரமாக விளங்கும் சென்னிமலையில் இன்று கைத்தறியாளர் கள் தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
- விழாவில் கைத்தறி நெசவாளர்களுக்கு கைத்தறி ஆடை அணிவிக்கப்பட்டு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
சென்னிமலை:
இன்று நாடு முழுவதும் கைத்தறி யாளர்கள் தினம் அரசால் அறிவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.கைத்தறியின் கேந்திரமாக விளங்கும் சென்னிமலையிலும் இன்று கைத்தறியாளர் கள் தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
சென்னிமலை இந்திரா நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற கைத்தறியாளர் கள் தின விழாவில் கைத்தறி நெசவாளர்களுக்கு கைத்தறி ஆடை அணிவிக்கப்பட்டு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு இந்திரா டெக்ஸ் தலைவர் ஏ. ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மேலாளர் சுகுமார் ரவி வரவேற்று பேசினார்.
இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சென்னிமலை கிழக்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் சி. பிரபு கைத்தறி நெசவாளர்களுக்கு கைத்தறி ஆடை அணிவித்து இனிப்பு வழங்கினார்.
இந்த விழாவில் முகாசிபிடாரியூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சதீஷ் என்கிற சுப்ரமணியம், முன்னாள் யூனியன் கவுன்சிலர் சி.கே ஆறுமுகம், தி.மு.க. நிர்வாகிகள் தோப்புக்காடு முருகேஷ், பிரஸ் ஆனந்த், கோயில் பாளையம் ஜம்பு , உட்பட கைத்தறி நெசவா–ளர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் அல்லி முருகன் நன்றி கூறினார்.
- ஈரோடு மாவட்டத்தில் இன்று 1,597 மையங்களில் காலை தடுப்பூசி முகாம் தொடங்கியது.
- இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
ஈரோடு:
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 4 -ம் அலையை தடுக்கும் வகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் , அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்பட 1,597 மையங்களில் காலை 7 மணிக்கு தடுப்பூசி முகாம் தொடங்கியது.
12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இதே போல் 18 வயதுக்கு மேற்பட்ட இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டது.
இன்று மட்டும் மாவட்டத்தில் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணியில் மாவட்டம் முழுவதும் 3,196 பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 70 வாகனங்கள் முகாமிற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் சிரமம் இன்றி தடுப்பூசி செலுத்தி கொள்ள பொதுமக்கள் அதிக கூடும் இடங்களான ஈரோடு பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டிருந்தன.
இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி கொண்டனர். குறிப்பாக தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது.
இதனால் இன்று பூஸ்டர் தடுப்பூசியை ஏராளமானோர் ஆர்வத்துடன் போட்டுக்கொண்டனர்.






